3

     காரணமில்லாமல் ஒரு பெரிய வெறுப்பு உருவாக ஆரம்பித்து விட்டால் அதன்பின் சகஜமாக நடக்கும் ஒவ்வொரு சாதாரண நிகழ்ச்சியும் கூட அந்த வெறுப்பை வளர்க்கவே பயன்படும் என்பது அம்மிணி அம்மா விஷயத்தில் மெய்யாகிக் கொண்டு வந்தது.

     ஒரு நிலைமைக்கு மேல் இந்த வெறுப்பு, பொறாமையாக மாறியது. பெரும்பாலும் அந்தக் காலனியிலிருந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதிகப் பொருளாதார வசதி இல்லாதவர்கள். வீட்டுவசதி வாரியம் ஒதுக்கிக் கொடுத்த வீட்டுக்கு மறுபடி வெள்ளையடித்துத் துப்புரவாக வைத்துக் கொள்ளக் கூட வழியில்லாதவர்கள்.

     ஆனால் அம்மிணி அம்மாவோ அங்கு குடியேறிய ஒராண்டுக்குள்ளேயே வீட்டுக்கு மாடி, எடுத்துவிட்டாள். அந்த வரிசையிலே மாடியோடு கூடிய எடுப்பான ஒரே வீடாக அம்மிணி, அம்மாவினுடையதுதான் விளங்கியது. வீட்டில் சம்பாதிக்கிற ஆண்பிள்ளை என்று யாருமே இல்லாமல் நாலைந்து பெண்களைக் கட்டிக் காத்து வளர்க்கும் ஒரு முதிய பெண்மணியின் வருமானம், வளர்ச்சி, செழிப்பு எல்லாமே கண்ணனுடைய பொறாமையைக் கிளறச் செய்திருந்தன. சினிமா, நாட்டியக் கச்சேரி, பெரிய பெரிய கம்பெனிகளின் ‘லையஸான்’ பி. ஆர். ஒ. ஆட்களின் போக்கு வரவு எல்லாமாக அம்மிணி அம்மாவுக்கு ஒரு டெலிபோனின் அவசியத்தை வலியுறுத்தின. அந்தக் காலனிக்குள் நுழைந்த முதல் டெலிபோனே அம்மிணி அம்மாவுடையதுதான். இரவிலும், பகலிலும், சிறிதும் பெரிதுமாகக் கார்கள் வருவதும் போவதுமாக அந்த வீடு - வீட்டு முகப்பு எல்லாமே கலகலப்பாக இருந்தன. அந்தக் காலனியில் அந்த வீட்டுக்கு மட்டும் ஒரு மினி பங்களாவின் ஆடம்பரத் தோற்றம் வந்திருந்தது. மற்ற எல்லா வீடுகளுமே கோழிக் கூண்டுபோல் வீட்டுவசதி வாரியத்தின் சாதாரண ‘டி’ டைப் வீடுகளாகத்தான் இருந்தன. மாறுதலோ வளர்ச்சியோ மெருகோ பெறவில்லை.

     கண்ணன் அம்மிணி அம்மாவை அந்தக் காலனியே சமூக பகிஷ்காரம் செய்து ஒதுக்கித் தள்ளும்படி ஆக்கிவிட ஆசைப்பட்டான். ஆனால் அதற்கு நேர்மாறாக ஏங்கல் தாங்கல் - அவசர ஆத்திரத்திற்கு டெலிபோன் செய்ய அக்கம் பக்கத்தார் அம்மிணி அம்மாவின் தயவை நாட வேண்டியிருந்தது. அந்த வீட்டின் மேலும் அந்தக் குடும்பத்தின் மேலும் தனக்கு இருக்கும் அதே வெறுப்பை மற்றவர்கள்பால் திணிக்க முயன்றும் கண்ணனால் முடியவில்லை. அக்கம்பக்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அந்த அம்மாளின் தாட்சண்யம் தேவைப்பட்டது. கண்ணன் அந்த அம்மாள் என்ன செய்கிறாள் என்பதாகத் தான் கேள்விப் பட்டிருந்தானோ அதை வைத்தே வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்களோ அந்த அம்மாளின் உபகார குணம், இங்கிதம், பழகும் பண்பு இவற்றைக் கவனித்துப் பழகினார்கள்.

     இப்போது காலனியில் முன்பிருந்ததை விட வீடுகள் அதிகமாகி விட்டன. பக்கத்து வீட்டுப் பாகவதர் கூட வந்து குடியேறி விட்டார். காலனி நலன் நாடுவோர் சங்கத்தில் உறுப்பினர்களும் அதிகமாகி இருந்தனர். மறுபடியும் ஒரு நாள் பழைய திரையுலக நண்பன் கண்ணனைத் தேடி வந்தான். பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவைப் பற்றி மேலும் ஒரு கூடை வம்புகளையும், வதந்திகளையும் புதிதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

     “ஹை சர்க்கிள்லே வழுக்கைத் தலைகளுக்கு நடுவே நடக்கிற கிளப் பார்ட்டிகளிலே எண்டர்டெயின் பண்ணப் போறாளுவ. அதுலே வருமானம் பயங்கரமா இருக்கும்.”

     “வீட்டைப் பார்த்தாலே தெரியுதேப்பா! ஒரே வருஷத்திலே மாடி... தோட்டம், கார் டெலிபோன்... இதெல்லாம் சும்மா வந்துட முடியுமா?”

     “தொழிலதிபர்கள், வியாபாரிகளோட இரகசிய கிளப் பார்ட்டியிலே நிர்வாணமா டிரிங்ஸ் ஸெர்வ் பண்ணினா வருமானம் வராதா பின்னே?”

     “வருமானம் இருந்தா எங்கேயும் எதுவும் நடக்குதுப்பா! இந்த மாதிரி ஒரு வீடு எங்க காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன்ல மெம்பராகப்பிடாதுன்னு என்னாலே ஆனமட்டும் தடுத்துப் பார்த்தேன். முடியலே. பணத்தை வாங்கிட்டு யாரோ அம்மிணி அம்மாவையும் மெம்பராக்கி விட்டாச்சு. நான் எத்தனை தடுத்தும் யாரும் கேட்க மாட்டேன்னுட்டாங்க, போ!”

     “அம்மிணி அம்மாவோட வண்டவாளம் தெரிஞ்சா அப்புறம் தயங்குவாங்க. வேற ஆட்களை வெச்சு இவ மூலமா ரெண்டு மஸாஜ் பார்லர் கூட நடக்குது. அத்தனையும் காசு. நாய் வித்த காசு குரைக்கவா போகுது? அம்மிணி படு கெட்டிக்காரி.”

     “என்னமோ நீ சொல்றே... எத்தனே பேர் நாம சொல்றதெல்லாம் நம்பப் போறாங்க? எங்க வீட்டிலே இவளே, ‘பக்கத்து வீட்டு அம்மிணி அம்மா ரொம்ப நல்ல மாதிரி. தங்கமான மனசு’-ன்னு எனக்குச் சொல்றப்ப நான் மலைச்சுப் போய் நின்னேன். ‘அந்தப் பொம்பளை ஒருமாதிரி! ஜாக்கிரதை, பழக்கம் வச்சுக்காதே’ன்னு நாம சொல்லி எச்சரிக்க வேண்டியிருக்கு. இந்தப் பக்கத்து வீட்டிலே வேதங்களையும் உபநிஷதங்களையும் கரைச்சுக் குடிச்ச ஒரு பாகவதர் குடி வந்திருக்கிறர். நான் ஜாடைமாடையாகச் சொல்லியும் கேளாமே அவர் வெள்ளிக்கிழமை தவறாமே இந்த அம்மிணி அம்மா வீட்டிலே போய் நாராயணியம் சொல்றாரு.”

     “அது யாராப்பா அந்தப் புண்ணியாத்மா? பேரைச் சொல்லேன்?”

     “ஊரெல்லாம் தெரிஞ்ச ஆள்தான்! இஞ்சிக்குடி நாகசாமி பாகவதர்ம்பாங்க.”

     “அடேடே! அடிக்கடிக் கேள்விப்பட்ட பேரா இருக்கே? வயசானாலும் செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கா அம்மிணி. போதாக் குறைக்கு வீடு நிறைய வாளிப்பான இளம் பெண்கள். பாகவதர் சுவாமிகள் விசுவாமித்திரர் மேனகை கிட்ட மயங்கினாப்ல மயங்கிட்டார் போல இருக்கு...”

     “சே! சே! பாகவதரை எனக்கு நல்லாத் தெரியும்! நீ சொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணும் இருக்காது! பணத்துக்கு ஆசைப்பட்டு வேணாப் போயிருப்பாரு. வேற ஒண்ணும் இருக்காது...”

     “அப்படியா? இதோ இந்தப் படத்தைப் பாரு முதல்லே! இதை பார்த்தப்புறமாவது நான் சொல்றது சரியாயிருக்கும்னு ஒத்துப்பே” என்று கூறியபடியே பையிலிருந்து ஒரு சினிமாக் கவர்ச்சிப் பத்திரிகையை எடுத்துக் காட்டினான் நண்பன். கண்ணனுக்கு அதைப் பார்க்கக் கூச்சமாயிருந்தது.

     அதில் திரையுலகைக் கலக்க வந்திருக்கும் புது செக்ஸ் அணுகுண்டு என்ற தலைப்புடன் முக்கால் நிர்வாண நீச்சல் உடையில் ஒரு கட்டிளம் பெண்ணின் படம் பிரசுரமாகியிருந்தது. அந்தப் பெண்ணைப் பக்கத்து வீட்டில் பார்த்திருப்பது நினைவு வந்தது கண்ணனுக்கு. அம்மிணி அம்மாவின் இரண்டாவது மகள்தான் அந்த செக்ஸ் ராணி. வீட்டில் புடைவையும் தாவணியுமாகத் தென்படும் அந்தப் பெண் வெளியே இப்படி ஒரு கோலமும் கொள்ள முடியும் என்பதை நம்பக் கூடமுடியாமல் இருந்தது. தான் எவ்வளவு சொல்லியும் அந்த வீட்டைப் பற்றித் தவறாக நினைக்காத தன் மனைவிக்குச் சாட்சியம் காட்ட இதுதான் சரியான தடயம் என்று தீர்மானித்த கண்ணன் நண்பன் காட்டிய அந்தக் கவர்ச்சிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு அப்படியே மனைவியைக் காண உள்ளே சென்றான். அவளுக்குச் சரியான பாடம் புகட்ட இந்தப் படமே போதும் என்பது அப்போது அவன் எண்ணமாயிருந்தது.

     ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. கண்ணனின் மனைவி அந்தப் படத்தைப் பார்க்கவே முன் வரவில்லை. கோபத்தோடு பொரிந்து தள்ளினாள்:

     “எல்லாம் நீங்களே பார்த்துக்குங்க! இந்தக் கன்றாவி எல்லாம் நான் ஒண்ணும் பார்க்க வேண்டாம்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

     “நம்ம மேலே உள்ள அக்கறையாலே என் சிநேகிதன் இதை எல்லாம் சொல்லி எச்சரிக்கிறான். அவனுக்கு நான் ரொம்பக் கடமைப் பட்டிருக்கேன்.”

     “ஆமாம் பெரிய அக்கறை. தன்னந்தனியாச் சிரமப்பட்டுத் தவிச்சுக் கெட்டிக்காரத்தனமாக் குடும்பம் நடத்தற பொம்பளையைப் பத்தித் தேடி வந்து கோள் சொல்லிட்டுப் போறத்துக்கு முடியும். ஆம்பிளைகளுக்கு இதைவிட வேற வேலையே இல்லியோ?”

     “உங்க அம்மிணி அம்மா பெரிய பதிவிரதையா என்ன? இப்பிடிப்பட்ட பொம்பளையைப் பத்திக் கோள் சொல்லாமப் புகழாரமா சூட்டுவாங்க?”

     “அம்மிணி அம்மா பதிவிரதையோ இல்லையோ, உங்க சிநேகிதர் ஒண்ணும் யோக்கியமானவரில்லை. வேலை மெனக்கெட்டு இங்கே தேடி வந்து கோள் சொல்றதே உங்க சிநேகிதருக்குப் பொழைப்பாப் போச்சு! இதைத் தவிர அவருக்கு வேற வேலை கீலை எதுவுமே கிடையாதா?”

     நண்பன் அடிக்கடி வருவதும் பக்கத்து வீட்டைப் பற்றிச் சொல்லி எச்சரிப்பதும் தன் மனைவிக்கு அறவே பிடிக்கவில்லை என்பது கண்ணனுக்குப் புரிந்தது. என்ன இருந்தாலும், எப்படிப்பட்டவளாக இருந்தாலும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் பேசியதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் அவன்.

     அம்மிணி அம்மாவைப் பற்றிய வெறுப்புப் பிரசாரம் சொந்த வீட்டிலேயே எடுபடாமல் போய் முறியடிக்கப் பட்டதில் அவனுக்கு மிகவும் வருத்தம்தான்.

     பக்கத்து வீட்டுப் பாகவதரிடம் நண்பனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான். நண்பன் அந்தப் பத்திரிகைப் படத்தையும் அவரிடம் காண்பித்துக் குறை சொன்னபோது பாகவதர் காதைப் பொத்திக் கொண்டார்.

     “சிவசிவா! உங்களுக்குச் சம்ஸ்கிருதம் தெரியாட்டாலும் குறள் படிச்சிருப்பேள்னு நினேக்கிறேன். ‘புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்’னார் வள்ளுவர் பெருமான். அதாகப் பட்டது அர்த்தம் என்னன்னா, ‘மத்தவாளைப் பத்தி வம்பு பேசிக் கோள் சொல்லிண்டு அலையறதைக் காட்டிலும் தற்கொலை பண்ணிக்கிறது கூடச் சிரேஷ்டமான காரியமாயிருக்கும்’கிறார்” என்று மிகவும் கடுமையாகப் பதில் வந்தது நாகசாமி பாகவதரிடமிருந்து.

     பாகவதர் இப்படி முகத்தில் அறைந்த மாதிரிப் பதில் சொல்வாரென்று கண்ணன் எதிர்பார்க்கவில்லை. நண்பனுக்கு அது சுரீரென்று உறைத்துவிட்டது. இருவருமே திரும்பி விட்டனர்.

     “பார்த்துக்கிட்டே இரு கண்ணன்! சீக்கிரமே இப்படி எடுத்தெறிஞ்சு பேசினதோட பலனை இந்தப் பாகவதன் அநுபவிப்பான். அப்பவாவது இவனுக்குப் புத்தி வருதா இல்லையான்னு பார்க்கலாம்” என்று அடிபட்ட புலியாகக் கறுவிக் கொண்டு போனான் நண்பன். அவனுக்கு அவ்வளவு கோபம் வந்து கண்ணன் பார்த்ததே இல்லை.