17

     இதெல்லாம் நடந்து சில மாதங்கள் ஒடிவிட்டன. ஐப்பசி மாதக் கடைசி. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

     ஒரு நாள் காலையில் பக்கத்து வீட்டு வாசலில் ‘எழிலரசி நந்தினி வாழ்க!’ என்ற பலமான கோஷங்கள் முழங்கியதைக் கேட்டு அதில் தனக்குப் பழக்கமான குரல் ஒன்றும் கேட்கவே வியப்போடு வாசலில் வந்து பார்த்தான் கண்ணன்.

     ‘எழிலரசி செல்வி நந்தினி இரசிகர் மன்றம்’ என்ற துணி பேனரைப் பிடித்தபடி ஒரு குட்டி ஊர்வலமே பக்கத்து அம்மிணியம்மாள் வீட்டு வாயிற்படியில் நின்று கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்தது. இரசிகர் மன்ற பேனரை இரு புறமும் தாங்கி நின்ற நபர்களைப் பார்த்தானோ இல்லையோ கண்ணனுக்கு அப்படியே மூர்ச்சை போட்டுவிடும் போலிருந்தது. ஒருபக்கம் புலவர் மகிழ்மாறனும், மறுபக்கம் உண்மை விளம்பியும் இரசிகர் மன்றத்தைத் தூக்கிப் பிடித்தபடி கோஷம் போட்டுக் கொண்டு நின்றார்கள். செல்வி நந்தினிக்கு அணிவிப்பதற்காக ஆளுயர ரோஜாப்பூ மாலையுடன் புலவரின் மனைவி தாயம்மாளும் ஊர்வலத்தில் நின்று கொண்டிருந்தாள். அதே பழைய தமிழர் பட்டாளத்து இளைஞர்கள், சில பெண்கள், என்று ஒரு நாற்பது ஐம்பது பேர் கோஷங்கள் போட்டு நந்தினியை வாழ்த்தியபடி பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் அட்டகாசமாக நுழைந்து கொண்டிருந்தார்கள்.

     கண்ணன் தன் வீட்டு முகப்பிலிருந்து தங்களைப் பார்ப்பதைப் புலவரும் உண்மை விளிம்பியும் கண்டுவிட்டனர். உடனே கண்ணன் புலவரைச் சைகை செய்து கூப்பிட்டான். ஆனால் புலவர் அதைக் கவனிக்காதது போல் இருந்து விட்டார். மீண்டும் மீண்டும் கண்ணன் புலவரின் கவனத்தைக் கவர முயன்றது வீணாாயிற்று.

     உண்மை விளம்பி பணத்துக்காக இப்படி என்றாவது ஒரு நாள் செய்யக்கூடும் என்று கண்ணன் அறிந்திருந்தான். தன்மானம் அது இது என்று பேசிப் ‘பெண் நாய்கள் ஜாக்கிரதை’ என்று இதே வீட்டுச் சுவரில் தாரால் எழுதிய புலவரின் இந்தத் திடீர் மாற்றம்தான் கண்ணனால் எந்தவகையிலும் ஜீரணிக்க முடியாதபடி இருந்தது.

     வீட்டுக்குத் தேடிப் போயாவது புலவர் மகிழ்மாறனிடம் இதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு விடவேண்டும் என்று கண்ணன் துறுதுறுப்புக் கொண்டான். அப்போது எழுந்த ஆவல் மட்டும் அவனால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. இப்படி ஆட்களை நம்பி அக்கம்பக்கத்தாரைத் தான் பகைத்துக் கொண்டதுதான் பைத்தியக்காரத்தனமோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமோ என்று எண்ணி மனம் நொந்தான். இந்த இரண்டு காரியக் கோமாளிகளும் சகல விஷயங்களையும் நந்தினியிடம் சொல்லித் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்றுகூடத் திடீரென்று அவனுக்கு ஒருவகைப் பயமும் பதற்றமும் தற்காப்பு உணர்ச்சியும் கூட ஏற்பட்டன.

     ஊர்வலம், மாலையணிவிப்பு, வாழ்த்தொலிகள் எல்லாம் ஒய்ந்து புலவர் வீடு திரும்பியிருப்பார் என்று கண்ணனுக்குத் தோன்றியபோது வெளியே தூறலாக இருந்த மழை பெரிதாகியிருந்தது. முதல் நாள் டெலிவிஷனில், ‘நாளை வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். சில இடங்களில் இலேசான துாற்றல் இருக்கலாம்’ என்று கூறியிருந்தபோதே மறுநாள் அதற்கு நேர்மாறாகப் பலத்த மழை பெய்யும் என்பதைக் கண்ணன் தீர்மானமாய் முடிவு செய்திருந்தான்.

     குடையோடு போனாலும் நனைந்து விடும் என்கிற அளவு காற்றும் மழையுமாகச் சுழற்றிச் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது. புலவர் வீடு சில கெஜ தூரத்தில் அடுத்த தெருவில்தான் இருந்தது. இந்த மழையில் அவர் எங்கேயும் போயிருக்கவும் முடியாது. அன்று ஏதோ பொது விடுமுறை நாள் வேறு. தேடிப் போவதா வேண்டாமா என்ற சில நிமிஷ மனப் போராட்டத்துக்குப் பின் குடையை எடுத்துக் கொண்டு கண்ணன் புலவர் வீட்டுக்குப் புறப்பட்டபோது, “இந்த அடை மழையிலே எங்கே கிளம்பிட்டிங்க? மழை நின்னப்புறம் போகலாமே?” என்றாள் கண்ணனின் மனைவி சுகன்யா.

     “இல்லை! பக்கத்துத் தெருவுக்குத்தான். அவசரமா ஒரு வேலை இருக்கு.பத்து நிமிஷத்திலே போயிட்டு வந்திடறேன்.”

     “மழை நின்னதும் போங்களேன். அதுக்குள்ளே அப்படி என்ன தலை போகிற காரியம்?” என்று அவள் கூறியதையும் பொருட்படுத்தாமல் கிளம்பினான் கண்ணன். பலத்த காற்று குடையை மேல் நோக்கி இழுத்தது. அந்த மழையிலும் காற்றிலும் குடை பிய்த்துக் கொண்டு போய் விடாமல் சமாளித்துக்கொண்டு நடப்பதே சிரமமாயிருந்தது. புலவர் வீட்டு வாசலில் புதுப் பெயிண்ட் பளபளக்க ஒரு பிரம்மாண்டமான போர்டு மழையில் குளித்துக் கொண்டு நின்றிருந்தது.

     ‘எழிலரசி செல்வி நந்தினி இரசிகர் மன்றம்’
     (தலைமை நிலையம்)
     கிளைகள் தமிழகம் முழுவதும்
     தலைவர் - புலவர் மகிழ்மாறனார்
     பொதுச் செயலாளர் - உண்மைவிளம்பி

     போர்டைக் கடந்து உள்ளே போனால் புலவர், உண்மை விளம்பி இருவருமே ஒரே சமயத்தில் அவனை எதிர்கொண்டு வந்தனர். புலவர் உடனே கண்ணனைக் கடிந்து கொள்ளத் தலைப்பட்டார்:

     “அதென்னங்க நீங்க அங்கேயே அவங்க விட்டு வாசல்லேயே என்னை ஜாடை பண்ணிக் கூப்பிடறீங்க? கொஞ்சங் கூடக் குறிப்பறிதல் இல்லாம நடந்துக்கறீங்களே? நீங்களும் அவங்களும் எதிரி. நான் அங்கேயே உங்களோட வந்து பேசினா, அவங்க என்னைப் பத்தி என்ன நெனப்பாங்க?”

     “அது சரி நீங்க எப்போது இப்படி நண்பரானிங்க? *மன்றம் ஒண்ணு ஸெட்அப் பண்றோம். கவனியுங்க’ன்னு போய் நீங்களே நந்தினி கிட்டப் போய் நின்னிங்களா?”

     “எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சது? கரெக்டா சொல்றீங்களே?” என்றான் உண்மைவிளம்பி.

     புலவர் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார் “தரணி ஸ்டுடியோவில் அவங்களைப் போய்ப் பார்த்தோம். ஆப்பிள் ஜூஸ் குடுத்து உபசரிச்சு ரொம்பப் பண்பா நடந்துக் கிட்டாங்க. ‘மன்றம்’னு நாங்க பேச்சை எடுத்ததுமே, ‘நல்லாச் செய்யுங்க! பணம் எவ்வளவு வேணும்?’னு நேரடியாவே வந்துட்டாங்க”

     “அடேடே! ரொம்ப லிபரலா இருக்கே? அப்புறம்?”

     “தமிழ்நாடு முழுவதும் கிளை அமைச்சு ஊரூரா உங்க படம் ரிலீஸாகிற தேதியிலே படப் பெட்டிக்குச் சூடம் காட்டி மாலை போட்டு ஊர்வலம் விடறோம். பேனர் கட்டறோம். மாமூலா உள்ள மத்ததும் செய்யறோம்ணோம்.”

     “பலே! ரொம்பத் தேறிட்டீங்க புலவரே! இந்தச் சூடம் காட்டறதுலே கூட இப்போ நம்பிக்கை வந்திடிச்சா உங்களுக்கு?”

     “வராமப் பின்னே? சாமி படத்துக்கா சூடம் காட்டறோம்? படப் பொட்டிக்குத்தானே காட்டப் போறோம்?”

     “சரி, மேலே சொல்லுங்க.”

     “பத்தாயிரம் ரொக்கமா நன்கொடை கொடுத்தாங்க. ரிலீஸ் படத்துக்கெல்லாம் எல்லா ஊர்லயும் எல்லா முதல் காட்சியிலியும் அம்பது டிக்கெட் மன்றத்துக்கு முன்னுரிமையாத் தரச் சொல்லி ஏற்பாடு செய்யறேனாங்க.”

     “ரொம்பப் பெரிய சாதனைதான்.”

     “உடனே நான் தலைவராயிட்டேன். உங்க நண்பரைச் செயலாளராக்கி இதை செட்அப் பண்ணியாச்சு. இன்னிக்குத்தான் மன்றத் தொடக்க விழா. அவங்க பிறந்த நாள் வேற. அதான் ஊர்வலமா வந்து ரசிகருங்க அவங்களுக்கு மாலை அணிவிக்கிறதுன்னு ஏற்பாடு பண்ணினோம்.”

     “ரொம்ப சந்தோஷம். அப்ப நான் வரட்டுமா புலவரே?”

     “சரி,போயிட்டு வாங்க. இனிமே நம்ம நட்புப் பழையபடி தொடர வழியே இல்லே. ஆனா உள்ளத்தளவிலே நாம இன்னும் சிநேகிதருங்கதான். மறந்துடாதீங்க.”

     “உதட்டளவிலே வேண்டாம்கிறீங்க அப்படித் தானே?”

     ஆற்றில் கரைந்து போகும் என்று கண்ணன் நினைத்த மண் குதிரைகள் பத்தாயிரம் ரூபாய்ப் பணத்தில் கரைந்து போயிருந்தன. குச்சுக்காரி, தேவிடியா, ரோட்ஸைட் கிராக்கி என்றெல்லாம் நந்தினி வகையராக்களைத் திட்டிக் கொண்டிருந்த புலவரும், உண்மை விளம்பியும் இப்போது அவள் பெயரை உச்சரிப்பது கூட மரியாதைக் குறைவு என்று தயங்கி வாய்க்கு வாய் அவங்க போடுவதைக் கண்டு கண்ணனுக்குத் தாங்க முடியாத வியப்பு.

     அவனுள் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மீதமிருந்தது. நீண்ட நாட்களுக்கு முன் அம்மிணி அம்மாளையும் பாகவதரையும் பற்றித் தாறுமாறாகச் செய்தி பிரசுரித்து விட்டு ஏதோ ஒரு ஸ்டுடியோவில் போய் அவள் பெண்களைச் சந்தித்து அதைக் காட்டிப் பணம் கேட்டபோது உண்மை விளம்பியிடம் துணிந்து பணம் தர முடியாது என்று அவள் மறுத்ததாகக் கண்ணன் மனைவி மூலமாகக் கேள்விப்பட்டி ருந்தான். அப்படிப்பட்டவளா இப்போது இப்படிப் பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து மன்றம் தொடங்கச் சொன்னாள் என்று நம்ப முடியாமல் இருந்தது கண்ணனுக்கு.

     வீடு திரும்பியதும் மனைவியிடம் இதைச் சொல்லி விசாரித்தான். சுகன்யா அவனுடைய சந்தேகத்தைத் தெளிவு செய்தாள். “அது இவ இல்லே! அம்மிணியம்மாவோட இன்னொரு பொண்ணிட்ட அந்த உண்மைவிளம்பி பிளாக்மெயில் பண்ணினப்போ அவள் அவன் கிட்டே போடா போன்னுட்டா! இது நந்தினி. பண விஷயத்திலே இவ போக்கு வேற மாதிரி. ‘மலிவாக் கிடைச்சா நம்ம விரோதியை விலக்கு வாங்கி நாய் மாதிரி நம்ம வீட்டு வாசற்படியிலேயே கட்டிப் போட்டு நம்மைப் பார்க்கிறப்பல்லாம் வாலைக் குழைக்கிற மாதிரிப் பண்ணிடனும் அக்கா!’ என்பாள் இவள், இந்தப் புலவர் விஷயம் கூட எங்கிட்டே சொன்னாள். எனக்கு முன்னலேயே தெரியும். உங்ககிட்டே நானாச் சொன்னா நீங்க கோபிச்சுப்பீங்களோன்னுதான் சொல்லலே” என்றாள் சுகன்யா.

     அதைக் கேட்டுக் கண்ணன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைகுனிந்தான்.

     அவனுக்கு வெட்கமாக இருந்தது. மனிதர்களை எடை போடுவதில் தன்னை விடத் தன் மனைவி கெட்டிக்காரியாயிருப்பதாய் மிகவும் காலதாமதமாக இப்போதுதான் புரிந்து கொண்டான் அவன்.

     “இந்த மாதிரி மன்றம் அது இதுன்னெல்லாம் தொடங்க அம்மிணி அம்மா எப்படிச் சம்மதம் கொடுத்திருக்க முடியும் சுகன்யா? அவளுக்குத்தான் இதெல்லாம் ஒண்ணும் பிடிக்காதே?”

     “பிடிக்காதுதான்! ஆனால் இது அம்மாவைக் கேட்காமல் நந்தினி தானாகப் பண்ணிக் கொண்ட ஏற்பாடு. அவளைக் கேட்டா ‘ஸேல்ஸ் பிரமோஷன்’னு சுலபமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறாள்.”

     “அம்மாக்காரி கூடாதுன்னு தடுக்க மாட்டாளா?”

     “அம்மிணி அம்மாவுக்கு வயசாச்சு. முன்னை மாதிரிப் பொண்கள் விஷயத் திலே அவ தலையிடறதில்லே. ஒதுங்கிக்கிறாள். மாலா கூட யாரோ பிரேம்குமார்னு ஒரு ஹீரோவாமே, அவனைக் காதலிக்கிறா. அவள் இஷ்டம்னு ஒண்னும் கண்டுக்காம விட்டுட்டா அம்மிணியம்மா. ஆனா ரொம்பத் தங்கமான மனுஷி. அடுத்தவங்களுக்குக் கெடுதலே நினைக்கிறதில்லே. நீங்க அவங்களைப் பத்தியும் பாகவதரைப் பத்தியும் அந்த மலையாளப் பத்திரிகையிலே கொடுத்த பேட்டியை வச்சே உங்க மேலேயும், பத்திரிகை மேலேயும் லட்ச ரூபாய்க்கு டாமேஜிங் சூட் போட்டு ஜெயிச்சுத் தர்றதுக்கு நானாச்சுன்னு ஒரு வக்கீல் முன்வந்து அவங்ககிட்ட வற்புறுத்தினராம். மாட்டேன்னுட்டாளாம். ‘சுகன்யா! உன்னேப் போல் ஒரு நல்ல சுமங்கலியோட குடும்ப வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்’னு இங்கே வந்து அந்தம்மாவும் பாகவதருமா இந்த விஷயத்தை எங்கிட்டச் சொல்லிட்டு உங்களைப் பத்தி ரொம்ப வருத்தப் பட்டுட்டுப் போனாங்க.”

     “என்னிக்கு?”

     “கொஞ்ச நாளைக்கு முன்னே நீங்க அந்த மலையாளப் பத்திரிகையிலே என் படம் வந்திருக்கிறதைக் காட்டிக் கூப்பாடு போட்டீங்களே அன்னிக்குத்தான்.”

     “ஏதோ போறாத வேளை! எல்லாரையும் அநாவசியமா விரோதிச்சுக்கிட்டாச்சு சுகன்யா.”

     “நீங்கதான் விரோதம் விரோதம்னு வாய்க்கு வாய் சொல்றீங்க. அவங்க யாரும் உங்களேயோ என்னையோ விரோதியாகவே நினைக்கல்லே.”

     “இந்த உண்மைவிளம்பியும் புலவரும் கோள் சொல்லிக் கோள் சொல்லியே என்னேப் பாழாக்கிட்டாங்க. என் புத்தியைச் செருப்பாலேதான் அடிக்கணும்.”

     “அவங்க ரெண்டு பேரும் நீங்க சிநேகிதம் பாராட்டிப் பழகற மாதிரிக் கெளரவமானவங்க இல்லை. ஏதோ உங்க கெட்ட காலம் அவங்க ரெண்டு பேரிட்டவும் ரொம்ப நம்பிப் பழகிட்டீங்க.”

     “இன்னிக்கோட அந்தப் பழக்கத்துக்குத் தலைமுழுகியாச்சு” என்றான் கண்ணன். பேசிக்கொண்டே இருந்தவன் இரண்டு மூன்று தடவை அடுத்தடுத்துத் தும்மினான்.

     “மழையிலே நனைஞ்சது உங்க உடம்புக்கு ஆகலே! பேசாம அமிர்தாஞ்சனத்தைத் தடவிட்டுத் தூங்கனும் நீங்க.”

     கண்ணன் மனைவி சொன்னபடியே செய்தான். வெளியே மழை இன்னும் விடவில்லை. முன்னே விட அதிகமாகியிருந்தது. காற்றும் புயலும் அதிகமாகவே மின்வாரியம் தானகவே மின்சார சப்ளையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துண்டித்து விட்டது. மாலையில் இாவில் - நள்ளிரவில் மழை விடவே இல்லை. வானமே பொத்துக் கொண்டுக் கொட்டுவது போலக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. மின்சாரமும் போனது போனதுதான்.

     அன்று இரவில் கண்ணனுக்கு நல்ல ஜுரமே வந்து விட்டது. உடம்பு அனலாய்க் கொதித்தது.