![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’  | 
6 அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளியும் அம்மிணி அம்மாள் வீட்டுப் பூஜையறையில் குருவாயூரப்பன், மூகாம்பிகை படங்களுக்குச் சிறப்பாக அலங்காரம் செய்து தேவி பாகவதம் சொல்லி வந்தார் பாகவதர். அன்றும் அதற்காக அவர் வழக்கம் போல அம்மிணி அம்மாளின் வீட்டுக்குப் போனார். அந்த வீட்டில் யாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் பழக்கம் காரணமாக நன்றாய்ப் பேசத் தெரியும். மலையாளமும், ஆங்கிலமுமே எழுதப் படிக்கப் பேச வரும். உள்ளே மனத்தில் வைத்துக்கொண்டு தவிப்பதை விட மறைத்து ஒளிப்பதை விட - அந்த மஞ்சள் பத்திரிகை உண்மை விளம்பியில் - வந்திருப்பதை எல்லாம் அந்த வீட்டார் எல்லாருக்கும் சொல்லி விடுவது என்று பாகவதரே அதை எடுத்துக்கொண்டு போய் இருந்தார். அதையெல்லாம் நேரடியாகச் சொன்னால் அவர்களே மிரண்டு போய் விடுவார்களோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. ‘தேவி பாகவதமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் இங்கே வந்து போவதால் தானே இந்த வம்பு எல்லாம்? கொஞ்ச நாளைக்கு நீங்கள் இங்கே வரவே வேண்டாம்’ என்று அவர்களே கூறினாலும் அதற்குத் தயாராயிருக்கும் துணிவோடுதான் அவர் சென்றிருந்தார். பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்கிற ஆளாயிருந்தால் அம்மிணி அம்மாளுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது என்ற ஒரே வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அந்த விவரமே அவர்களுக்குத் தெரியவிடாமல் மறைக்கவே அவர் முயன்றிருப்பார். ஆனால் பாகவதர் அப்படிச் செய்யவில்லை. ஆண் துணையற்ற அம்மிணியம்மாவின் குடும்ப நண்பர் என்ற தம் உரிமையை இம்மியும் தவறாகப் பயன்படுத்துகிற எண்ணம் அவருக்கு இல்லை. உலகத்துக்கு அவர் பயப்படவில்லை. அதே சமயம் உண்மையை மறைக்கவும் விரும்பவில்லை. தாம் செய்யாத தவற்றுக்காக வருந்தவோ கூசவோ அவர் தயாராயில்லை. தேவி பாகவதம், பூஜை எல்லாம் முடிந்தது. ஆரத்தி எடுத்து சம்பிரதாயமாகப் பூஜையை நிறைவு செய்தபின் தம்முடைய வழக்கமான கதா காலட்சேப பாணியிலேயே அதை விவரிக்க ஆரம்பித்தார் அவர்: “இன்றைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின் உபகதைகளிலே மிகவும் அருமையான கதை ஒன்றை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கதையைவிட அதன் உள்ளர்த்தம்தான் மிக முக்கியம். எல்லாரும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனியுங்கள். “இரண்டு சிநேகிதர்கள் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார்கள். மாலை நேரம். ஒரு சிநேகிதன் கோவில் முன் மண்டபத்தில் நடக்கும் இராமாயணப் பிரவசனத்தைக் கேட்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன் என்றான். மற்றொருவன் இன்பமாகப் பொழுதைக் கழித்து மகிழ்வதற்காகத் தாசி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகின்றேன் என்றான். “‘போகிற வழிக்குப் புண்ணியம் தேடி இராமாயணம் பாகவதம், என்று கேட்டுப் பயன் அடையாமல் இப்படிக் காமுகனாக அலைகிறாயே? நீ தேறுவாயா? உன்னை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்’ - என்று இரண்டாவது சிநேகிதனைப் பார்த்து முதல் சிநேகிதன் வருத்தப்பட்டான். அதைக் கேட்டு இரண்டாவது சிநேகிதனும் சும்மா இருந்துவிட வில்லை. தான் பங்கு உபதேசத்தை முதல் சிநேகிதனுக்கு உடனே பதிலுக்குச் செய்யத் தொடங்கினான்: “‘என்றைக்கோ எந்த உலகத்திலோ புண்ணியப் பயன் தரப்போகிறதென்று இன்றைக்கு இந்த உலகத்தில் என் சிரமப்பட வேண்டும்? கிடைக்கிற இன்பங்களைக் கிடைக்கு மட்டும் அநுபவிக்க வேண்டியதுதானே? அடுத்த உலகத்தையும் அடுத்த பிறவியையும் நினைத்துக்கொண்டு வீணாக அவஸ்தைப்படுவானேன்?’ “ஒருவர் மற்றவரை மாற்ற முயன்றாலும் அது பலிக்காமல் புறப்படும்போது திட்டமிட்டபடியே இருவரும் அவரவர் நினைத்த இடங்களுக்குப் போயிருந்தனர். அவரவர் நினைத்ததை அநுபவித்தனர். “ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இன்று இவர்கள் இருவரும் தத்தம் பாதைகளை நோக்கி விடை பெற்றுப் பிரியும்போது ஒருவர் மற்றவரைக் கேட்ட வினாவும் அதன் பாதிப்பும் அவரவர் மனத்தை ஊடுருவித் தைத்த நிலையில் பிரிந்திருந்தனர். “தாசி வீட்டுக்குப் போன நண்பன் சிந்தித்தான். “ஒருவேளை நம் நண்பன் சுட்டிக் காட்டிக் குறை கூறியது போல் நாம் செய்வது தவறுதானா? இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற சத்விஷயங்களைப் பற்றி எல்லாம் கேட்பதற்குப் பதில் தாசி வீட்டில் வீணே பொழுதைக் கழிக்கிறோமே? ஐயோ! வழிதவறிப் போனோமே?’ “இராமாயணம் கேட்கப் போன நண்பனின் மனம் அங்கே இராமாயணத்தில் லயிக்கவே இல்லை. தாசி வீட்டுக்குப் போனவன் எப்படி எப்படி எல்லாம் சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான் என்ற கற்பனையிலேயே முழுக்க முழுக்க ஈடுபட்டிருந்தது. “‘ஐயோ! இந்தப் பிறவியில் எந்தச் சுகத்தையும் அநுபவிக்காமல் பாவம் என்று ஒதுக்கிவிட்டு அடுத்த பிறவிக்குப் புண்ணியம் சேர்த்து ஆகப் போவதென்ன என்று நண்பன் கேட்டதில் என்ன தவறு? போகிற வழிக்குப் புண்ணியம் என்ற ஒரே குருட்டு நம்பிக்கையில் இந்த உலகில் இன்று இந்த விநாடியிலேயே அநுபவிக்கவேண்டிய அநுபவிக்க முடிந்த சுகங்களை உதறிவிட்டு அடுத்த பிறவிக்கு எதைச் சேர்த்து என்ன கிழிக்கப் போகிறோம்?’ “இப்படி இரண்டு பேருமே தாங்கள் போன மார்க்கங்களில் மனம் லயிக்காமல் அவநம்பிக்கைப் பட்டதன் மூலம் அவர்களது பாவ புண்ணியப் பலன்களே இருவருக்கும் முறை மாறிக் கிடைத்தன. தாசி வீட்டுக்குப் போனவன் இராமாயணத்தையே நினைத்துக் கொண்டிருந்ததால் அவனுக்குப் புண்ணியமும் இராமாயணம் கேட்கப் போனவன் தாசி வீட்டையே நினைத்துக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பாவமும் கிடைத்தன என்றார் இராம கிருஷ்ண பரமஹம்சர். இந்த இடத்தில் கதையையும் தாம் சொல்லி வந்ததையும் நிறுத்திவிட்டு மற்றவர்கள் முகங்களையும் ஏறிட்டுப் பார்த்தார் பாகவதர். சில நிமிட மெளனத்துக்குப் பின் அந்த மஞ்சள் பத்திரிகையை எடுத்துக் காண்பித்து அதில் எழுதியிருப்பதை ஒளிவு மறைவின்றி அவர்களுக்குச் சொன்னார் பாகவதர். அதைக் கேட்டு அம்மிணி அம்மாவும், அவளது பெண்களும் கலகலவென்று சிரித்தார்கள். “பாகவதரே! இதற்காகவா இவ்வளவு பெரிய அடிப்படையோடு கதை கிதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தீர்கள்? இது ரொம்பப் பழைய சங்கதி! இந்தப் பத்திரிகையிலேருந்து யாரோ ஒருத்தன் கே. சி. எம். ஸ்டுடியோவிலேயே என்ட மோளையைச் சந்திச்சுப் பயங்காட்டி ரெண்டாயிரம் குடுத்தா இதை நிறுத்திடறேன்னிருக்கான். அவள் மசியலே; முடியாதுன்னுட்டா. நானும் அவ செய்தது தான் சரின்னுட்டேன். இதைப் பார்த்து நீங்க ஒண்னும் கலங்கவேண்டாம். உங்களைப் போல ஒரு பாகவத சிரேஷ்டரோடு என்னைச் சம்பந்தப்படுத்தி இப்பிடி எழுதினதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும். எனிக்கு இதிலே கொஞ்சமும் வருத்தமில்லே. உங்களுக்கு ஒருவேளே யாரோ ஒரு கெட்ட பொண்னோட நம்மளை இப்படிச் சம்பந்தப்படுத்தி எழுதிக் களங்கப்படுத்திட்டானேன்னு வருத்தமிருக்கலாம்” என்றாள் அம்மிணி. “எனக்கு ஒரு வருத்தமுமில்லே! நான் இது மாதிரிப் பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படறவன் இல்லே” என்றார் பாகவதர். “பின்னே இதை ஒரு பொருட்டா மதிச்சு இவ்வளவு நேரம் வீணடிச்சிருக்க வேண்டாமே.” “உண்மையை உங்களிடம் மறைக்கப் படாது பாருங்கோ! அதான் கொண்டு வந்து அப்படியே படிச்சுக் காண்பிச்சேன்.” “எனக்கும் உங்களுக்கும் பால்யப் பிராயமா இருந்தா இதிலே சொல்லியிருக்கறதை ருசுப்பிச்சிருக்கணும்னு கூட எனக்குத் தோணும் சுவாமி” என்று அம்மிணி அம்மாள் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறியபோது திடீரென்று அவளது வயது குறைந்து பேரழகு யுவதியாகி விட்டாற் போலப் பாகவதரின் கண்களுக்குக் காட்சியளித்தாள். அதைக் கேட்டுப் பாகவதர் கூச்சப்பட்டார். அம்மிணி அம்மாவைப் பார்த்து முகத்தில் அசடு வழியச் சிரித்தார். அவர் இத்தனை வெளிப்படையான நெஞ்சுறுதியை அந்தப் பெண்களிடம் முதலிலேயே எதிர்பார்க்காததுதான் காரணம்.  |