![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’  | 
12 அய்யப்பன் நகர் நலன் நாடுவோர் சங்கத்திலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கும், தன் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் நேர்ந்திராவிட்டால் கண்ணனின் மனத்திற்குள் இவ்வளவு தீவிர வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. மற்றவற்றை எல்லாம் அவன் நாளடைவில் மறந்திருப்பான். மன்னித்திருப்பான். பழகிச் சகித்துக் கொண்டிருப்பான். ஆனால் சங்கத்திலிருந்து தன்னை வெளியேற்றியே தீருவதென்று பணத் திமிர் பிடித்த அம்மிணியம்மாளும், தன் விரோதியான பக்கத்து வீட்டுப் பாகவதரும் சதி செய்திருக்கிறார்கள் என்பதாகப் புலவர் வைத்திருந்த வத்தி நன்றாகப் புகைந்தது. பற்றி எரிந்தது. நல்லெண்ணத்தைக் கணிசமாக நாசம் பண்ணியது. மனத்தில் துவேஷத்தைத் தேங்கவிட்டது. ‘இந்தப் பேட்டையின் நன்மைக்காக இராப் பகலாக அலைந்து நான் தொடங்கி வளர்த்த ஒரு சங்கத்தில் நானே உறுப்பினராகத் தேடிப் போய்ச் சேர்த்த இந்தப் பாகவதர் என்னேயே வெளியேற்றி விட்டாரே?’ என்ற கசப்புக் கழுத்து முட்ட நிரம்பியிருந்தது கண்ணனிடம். செயற்குழுக் கூட்டத்திலும், பேரவையிலும் பாகவதர் தன்னை ஆதரித்தாற் போலக் காட்டிக் கொண்டதெல்லாம் சும்மா வெறும் நடிப்பு என்று புலவர் சொல்லியதுதான் சரி என்பதாகவும் நம்பினான் கண்ணன். யாரிடம் கோள் சொல்லுகிறோமோ அவருக்கு ஏற்கெனவே பிடிக்காமல் போய்விட்ட ஒருவரைப் பற்றிக் கோள் சொல்லுவது என்பது காய்ந்த பஞ்சுப் பொதியில் நெருப்பு மூட்டுவதைப் போல் மிகவும் இலகுவான காரியம். புலவர் அப்படித்தான் கண்ணனிடம் நெருப்பு மூட்டியிருந்தார். வகையாகப் பார்த்துப் பற்ற வைத்திருந்தார். கண்ணன் எதனாலாவது பாகவதருடனும், அம்மிணியம்மாளோடும் மறுபடி சிநேகிதமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று புலவருக்கு ஏற்பட்டிருத்தது. காரணம் புதுச் சங்கம். தான் புதிதாகக் கண்ணனை வைத்துத் தொடங்கியிருந்த அய்யப்பன் நகர் அன்பர் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் இறங்கினர் புலவர். அதற்குக் கண்ணனின் முழு ஆதரவும் அவருக்குத் தேவையாயிருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ஏழெட்டு ஆட்களுடனும், புதிதாக அச்சிட்ட ரசீதுப் புத்தகங்களுடனும் கண்ணனைத் தேடி வந்தார் புலவர். கண்ணன் புலவரைக் கேட்டான்! “என்ன சங்கதி? இப்படிக் குடி படைகளோட காலங்கார்த்தாலேயே வந்து நிக்கிறீங்க?” “அ. அ. க. வசூல் இன்று முதல் தொடங்குகிறோம். நிறைய உறுப்பினர் சேர்த்தாகணும். நாம ரெண்டு பேர் மட்டும் உறுப்பினரா இருந்தாப் போதாது.” “அதுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!” “ஒண்ணும் செய்யவேண்டாம்! சும்மா என் கூட வாங்க, போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். தலைவர் நீங்கதான்னு உங்களைக் காண்பித்தே வசூல் பண்ணிடுவேன்.” புலவரோடு தானும் சேர்ந்து பகிரங்கமாக மற்றவர்கள் முன் போய் நிற்பதில் கண்ணனுக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. தன் பக்கத்தில் கூட நிற்கிற ஆளை உடனே மரியாதை இழக்கச் செய்கிற மகத்தான திறமை புலவருக்கு இருப்பதைக் கண்ணன் உள்ளூர அறிந்திருந்தான். ஏன், அநுபவித்தே இருந்தான். அவர் தொடங்கிய தமிழர் தன்மானப் படைக்கு ஒரு பத்து ரூபாய் நன்கொடை எழுதிக் கையெழுத்துப் போட்டதால் காலனி முழுவதும் தன் பெயரே ரிப்பேர் ஆகிப்போனதைக் கண்ணன் இன்னும் மறக்கவில்லை. மெல்லத் தட்டிக் கழிக்க முயன்றான் கண்ணன். “நான் எதுக்கு? நீங்களும் உங்க கூட வந்திருக்கிற இந்தத் தம்பிகளும் போனாலே போதுமே.” “இல்லீங்க! நீங்க கண்டிப்பா வரணுங்க! அதுனாலே நம்ம எதிரிங்க இரண்டு உண்மைகளைப் புரிஞ்சிப்பாங்க. ஒண்ணு, நீங்க வெளியேறினதாலே அவங்களுக்கு வந்த நஷ்டம். இரண்டு, புதுச் சங்கத்துக்கு லாபம். உங்களைப் போல ஒரு சிங்கத்தை வெளியேற்றிய சிறுநரிகளான அவங்க, நீங்க சும்மா இல்லே புதுச் சங்கம் தொடங்கியிருக்கிங்கன்னும் புரிஞ்சுப்பாங்க.” “இதென்ன புலி, நரி, பூனை அது இதுன்னு நாம மிருகக் காட்சி சாலையா நடத்தறோம்? நமக்குப் பிடிக்காதவங்கன்னாலும் அவங்களும் மனுசங்கதான் புலவரே!” “மக்களே போல்வர் கயவர்.” “அப்படின்னா என்ன அர்த்தம் புலவரே?” “நான் சொல்லலே. வள்ளுவர் சொல்லிட்டுப் போயிருக்கிறாரு.” “சரி, போகட்டும்! இப்பச் சுருக்கமா விஷயத்துக்கு வாங்க! அந்த அஸோஸியேஷன்ல இருக்கிற எல்லாரையுமே நம்ம அன்பர் கழகத்திலே சேர்க்க முயற்சி பண்ணப் போறோமா? அல்லது சில பேரை நாமே வேண்டாம்னு ஒதுக்கிடலாமா?” “கண்டிப்பா சில பேரை ஒதுக்கியே ஆகணுங்க. அம்மிணி அம்மாள் என்ற திரையுலக மின்மினியம்மாள்களின் தாய், பாகவதர் என்னும் ஆலகால விஷம், நீலகண்டன் என்னும் நச்சுப் பாம்பு, பழைய சங்கத்தின் தலைவர், இவங்களை எல்லாம் நம்ம அ. அ. க.விலே சேர்க்கவே கூடாது.” “அதுக்குள்ளே எல்லாருக்குமே இப்பிடி அடைமொழி தயார்ப் பண்ணிக் கேவலப்படுத்துகிறீரே...?” “பின்னே சும்மாவா? அவங்க உங்களை வெளியேத்திக் கேவலப்படுத்தினங்களா, இல்லீயா?” புலவர் வசூலுக்குக் கூட அழைத்துச் செல்லாமல் விட மாட்டார் போலிருந்தது. சில வகைகளில் பார்க்கப் போனால் பண வசூல் போன்ற காரியங்களில் அவரைத் தனியே விடுவதைக் காட்டிலும் தான் கூடப் போவது ஒருவகைத் தற்காப்பு என்றே கண்ணனும் நினைத்தான். அவரைத் தனியே விட்டு விட்டுப் போக அவர் தயாராயில்லே. அவரைத் தனியே அனுப்ப அவனும் தயங்கினான். கடைசியில் தவிர்க்க முடியாமல் வேண்டா வெறுப்பாகக் கண்ணனும் அவர்களோடு கிளம்ப வேண்டியதாயிற்று. போன முதல் வீடு, ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தருடையது. புலவர் அ. அ. க. என்று தொடங்கியதுமே, “நான் அரசியல் கட்சிங்க எதுலேயும் சேர்றதுக்கு இல்லீங்க! மன்னிக்கனும்” என்று வாசற்படியிலேயே கைகூப்பிவிட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார் அவர். அடுத்த வீட்டில் புலவரையும் அவருடைய தம்பியர் பட்டாளத்தையும் வெளியிலேயே நிறுத்திவிட்டு, “சார், நீங்க மட்டும் ஒரு நிமிஷம் உள்ளே வர்றீங்களா?” என்று கண்ணனை மட்டும் தனியாக உள்ளே கூப்பிட்டார் அந்த வீட்டுத் தலைவர். கண்ணன் மட்டும் உள்ளே சென்றதும், “ஏதாவது வேணும்னா நீங்க மட்டும் தனியா வரப்பிடாதா? இந்தப் புலவரோட கூட வந்திருக்கிற பையன்கள் எல்லாருமே பேட்டை ரவுடிங்க! அதிலே ஒருத்தன் நீல பனியன் போட்டிருக்கானே, அவன் முந்தா நாள் சுவரேறிக் குதிச்சு எங்க வீட்டுத் தென்னை மரத்திலே ஏறித் தேங்காய் திருடினவன். இவங்களோட எல்லாம் நீங்க வரலாமா மிஸ்டர் கண்ணன்?” என்று அவனைக் கண்டித்தார். ஒரே ஒரு வீட்டில் மட்டும் எதுவும் அட்டி சொல்லாமல், “நாங்க வெல்ஃபேர் அஸோஸியேஷன்லியும் மெம்பர்தான். இருந்தாலும் உங்களுதிலேயும் சேர்ந்துக்கறேன்” என்று பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள். இன்னொரு வீட்டில் புலவரைச் சுட்டிக் காட்டி, “இவர் அடிக்கடி நோட்புக்கும் கையுமா ஏதாவது வசூலுக்கு வந்துக்கிட்டே இருக்காரே சார்? எதுக்குன்னு குடுக்கிறது?” என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். வேறு சில வீடுகளில் உட்கார வைத்து நிதானமாகப் பேசிப் பழைய அஸோஸியேஷனை விட்டுக் கண்ணன் வெளியேறியிருக்கக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்கள். “இவர்தானே சுவர்களில் தாரினாலே பெரிது பெரிதாக எழுதற ஆள்?” என்று ஒரு தினுசாகச் சிரித்தபடி புலவரைக் காட்டிச் சிலர் கேட்டபோது கண்ணனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல இருந்தது. “பாகவதர் மாதிரிப் பெரியவங்களெல்லாம் இருக்கிறது நம்ம காலனிக்கே பெருமை சார்! நீங்க சொல்ற அஸோஸியேஷன்ல அவரும் இருக்காரில்லே...?” என்று கேட்டுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த சிலரிடம், “இல்லை சார்! இது வேற புதுச் சங்கம். இதுக்கு நான் பிரஸிடெண்ட். இவர் செகரெட்டரி” என்று கண்ணன் பதில் கூறியதும், “அப்பிடியா? வீ ஆர் நாட் இண்ட்ரஸ்ட்டட்” என்று கையை விரித்தார்கள் பலர். மிகக் குறைந்த காலத்திற்குள்ளேயே பாகவதர், அம்மிணியம்மாள் இருவரும் காலனிக்குள் மிகவும் மரியாதைக்குரியவர்களாகி இருப்பது கண்ணனுக்கே தெரிந்தது. உண்மை விளம்பியின் கட்டுரைகளோ, புலவரின் பிரசாரமோ யாரையுமே பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பாகவதர், அம்மிணியம்மாள் ஆகியோருடன் இயங்கும் பழைய வெல்ஃபேர் அஸோஸியேஷனேயே கொண்டாடினர்கள். சிலர் கொஞ்சம் துணிச்சலாகவே, “இந்தக் காலனிக்கு ரெண்டு சங்கம் எதுக்கு சார்? இருக்கிற நானூறு ஐந்நூறு வீடுகளும் ஒத்துமையா ஒரே சங்கத்திலே இருந்தாத்தான் ஏதாவது நாலு காரியம் சாதிக்க முடியும்? புதுப் புதுச் சங்கம் எல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது. இதெல்லாம் வீண் வேலை” என்றே கண்ணனைக் கண்டித்தார்கள். கண்ணனை அதுவரை நேரில் பார்த்திராத சில வீடுகளில், இவர்கள் தங்களை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்வதற்குள்ளேயே, “நீலகண்டன் செகரட்டரியா வந்தப்புறம் காலனி அஸோஸியேஷன் எவ்வளவோ நல்லாச் செயல்படுது. பல நல்ல காரியங்கள் வேகமா நிறைவேறியிருக்கு. பழைய செகரெட்டரி காலத்திலே சந்தா வசூலுக்குத்தான் வருவாங்க... ஒரு வேலையும் நடக்காது” என்று ஆரம்பித்து விடுவார்கள். கண்ணனுக்கும், புலவருக்கும் தர்மசங்கடமாகப் போய்த் தாங்கள் யாரென்று சொல்லிக் கொள்ளாமலே அப்படி இடங்களிலிருந்து நைஸாக வெளியேற நேர்ந்தது. “யாரோ ஒரு ரெளடி சில மாதங்களுக்கு முன்னே எல்லா வீட்டுச் சுவர்லியும் தார்ல எழுதி வம்பு பண்ணினானே; அவனைக் கண்டிச்சீங்களா? இனிமே அதுமாதிரி நடக்காமே உங்க அஸோஸியேஷன் என்ன செய்யப் போறது?” என்று ஆத்திரமாகக் கண்ணனை வினவிய சில வீடுகளில் அவன் புலவரை அறிமுகப்படுத்தாமலேயே திரும்ப வேண்டியதாயிற்று. “அந்தப் பழைய அஸோஸியேஷன் மாதிரிக் கோயில் குளம்னு மட்டுமே அலையாமே நாங்க அ. அ. க. விலே ரெக்ரியேஷன் கிளப் எல்லாம் ஏற்படுத்தப் போறோம். டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், ஃபுட் பால், இன்னும் இண்டோர் கேம்ஸ் அது இதுன்னு யூஸ்ஃபுல்லா இருக்கிறாப்பல” என்று புலவர் ஆரம்பித்ததுமே, “இந்த அவசர வாழ்க்கையிலே கேம்ஸுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?” என்று நைஸாகக் கழற்றிக் கொண்டார்கள் சிலர். காலனி முழுவதும் அலைந்துவிட்டுப் பகல் மூன்று மூன்றரை மணிக்குத் திரும்பியபோது மூன்றே மூன்று உறுப்பினர்களை மட்டும்தான் அ. அ. க. வில் சேர்க்க முடிந்திருந்தது. புலவர் கண்ணனிடம் குறைப்பட்டுக் கொண்டார். “இந்தக் காசு நம்ம பசங்களுக்கு டீ செலவுக்குக் கூடப் பாத்தாதுங்க.” “என்ன செய்யறது? யாரும் சேர மாட்டேங்கிறாங்களே? உம்ம ரெக்ரியேஷன் கிளப் ஐடியாகூட எடுபடலியே?” “மாசம் ரெண்டு சினிமா காட்றோம்ன்னு சொல்லிப் பார்க்கலாமா?” “அதெல்லாம் தியேட்டர்லியே போய்ப் பார்த்துப்பாங்க. போறாக்குறைக்கு டெலிவிஷன் வேற இருக்கு. அதுக்காக உங்க சங்கத்திலே வந்து சேரமாட்டாங்க.” “எப்பிடியாவது அந்த அஸோஸியேஷனைப் பழி வாங்கியே ஆகணுங்க! ஒண்ணும் இல்லேன்னாக் கடைசியிலே ‘கோயில் திருப்பணியில் ஊழல்! பாகவதர் வகையறா பணத்தில் திருவிளையாடல்’னு கிளப்பலாம்னு பார்க்கிறேன்.” “வீண் வேலை. பலிக்கும்னு எனக்குத் தோணலை. யாரும் நம்ப மாட்டாங்க.” “தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருந்தா எதையும் நம்ப வச்சிடலாம்னு நம்பறவன் நான்.” “நீர் தொடர்ந்து வசூல் பண்ணிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இதுவும் ஆகும்” என்று கூறிச் சிரித்தான் கண்ணன். வெளிப்படையாக இப்படிப் புலவரைக் கிண்டல் செய்தாலும் கண்ணனுடைய மனத்திற்குள்ளும் பழைய வெல்ஃபேர் அஸோஸியேஷனயும் தன்னை அவமானப் படுத்தியவர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பே மிகுந்திருந்தது. அதன் காரணமாக அவன் புலவரை ஊக்கப் படுத்தாவிட்டாலும் தளரச் செய்யவில்லை. பழைய சங்க நிர்வாகிகள் மேல் கணக்கு ஊழல் என்று புலவர் எதைக் கிளப்பினாலும் சரிதான் என்று எண்ணினான் அவன். உள்ளூர ஒரு சந்தேகமும் இருந்தது. புலவரைப் போன்ற பல கணக்குகளில் ஊழல் உள்ள ஒருவர் கிளப்புகிற ஊழல் புகாரை யாராவது நம்புவார்களா என்ற சந்தேகம் அவனுள் இருந்தாலும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராகவே இருந்தான். முதல்தரமான எதிரிகளை ஒழிக்க நாலாந்தரமான சுமாரான ஒரு நண்பன் கூடப் பயன் படலாம் என அவன் நம்பினான். அ. அ.க. பெரிதாக வளர்ந்து பழைய காலனி நலன் நாடுவோர் சங்கத்தை அழிக்க முடியாது என்று இப்போது அவனுக்கே தெளிவாகத் தெரிந்தாலும் தன்னை வெளியேற்றி அவமானப்படுத்திய பழைய சங்கத்தைகயும், அதன் ஆட்களையும் வெறுக்கும் வெறுப்புடன் கூடிய குரோதம் அவன் மனத்தின் ஆழத்திலே வேரூன்றித் தங்கி இருக்கத்தான் செய்தது.  |