![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’  | 
5 சில நாட்களுக்குப் பின் நண்பன் ஒரு பகல் வேளையில் கண்ணனின் அலுவலகத்துக்கே தேடி வந்து அவனிடம் ‘உண்மை விளம்பி’ என்ற பத்திரிகை ஒன்றைத் திணித்து விட்டுப் போய்ச் சேர்ந்தான். “ஆபீஸில் பிரித்துப் படிக்காதே! வீட்டுக்குப்போனதும் பிரித்துப் பார்... முடிந்தால் பக்கத்து வீட்டுப் பாகவதருக்கும் தெரியச் செய்...” என்று போகிற போக்கில் பரபரப்பாகவும் பதற்றமாகவும் சொல்லிவிட்டுப் போனான் அவன். தனது அலுவலகச் சந்தடியிலும் வேலைப் பரபரப்பிலும் கண்ணனுக்கு அதைப் பார்க்கவோ, படிக்கவோ நேரமும் இல்லை, மனநிலையும் இல்லை. அப்படியே வாங்கிப் பைக்குள் போட்டதுதான், அலுவலகம் முடிகிறவரை மறுபடி அதன் நினைவே வரவில்லை. மாலையில் அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்புவதற்குத் தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நியூஸ் பேப்பர் ஸ்டாலிலும் ‘உண்மை விளம்பி’ தொங்கியது. ‘உண்மை விளம்பி’யின் போஸ்டரை எழுத்தெண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனை யாராவது தப்பாக நினைக்கக்கூடும் என்ற கூச்சம் இருந்தும் அதில் தென்பட்ட தலைப்புப் பார்க்க வைத்தது. நின்று நிதானித்துப் படிக்கவும் வைத்தது. ‘இஞ்சிக் குடியாரின் மஞ்சள் வேலைகள். அம்மிணி அம்மாளிடம் பாகவதர் அம்மன் பூஜை’ என்ற தலைப்பைப் பார்த்ததும் நண்பன் தேடிக்கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போன பத்திரிகை பைக்குள் இருப்பது நினைவுக்கு வந்தது. கண்ணனுக்கு அதைப் படித்ததும் என்னவோ போலிருந்தது. இதபாஷப்ரவீண இஞ்சிக்குடி நாகசாமி பாகவதரை அவ்வளவு நீளமான பெயர் முழுவதையும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. சங்கீத உலகில் எப்படி ஊர்ப் பெயரை ஆரம்பித்தவுடனே ஆள் பெயர் தெரியுமோ அப்படியே இஞ்சிக்குடி என்று தொடங்கின உடனேயே அடையாளம் புரிந்துவிடக் கூடிய பெயர் பாகவதருடையது. ஏதோ நாலு இடத்திலே கதா காலட்சேபம் செய்து பிழைக்கிறவரை நண்பன் இப்படி எல்லாம் தாறுமாறாக எழுதி வயிற்றிலடிக்கலாமா என்று அவன் மனம் உள்ளுற வருந்தியது. பாகவதர் அம்மிணி அம்மாள் குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகியது கண்ணனுக்கும் பிடிக்கவில்லை என்றாலும் இப்படி எல்லாம் ‘உண்மை விளம்பி’ போன்ற ஏடாகூடமான பத்திரிகையில் அவரைப் பற்றித் தாறுமாறாக வருவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பாகவதருடைய மேதா விலாசம் பெரியது என்பது ஊரறிந்த விஷயம். இப்போது இது தானாக நடந்திருக்க முடியாது. பாகவதர் கடுமையான வார்த்தைகளில் பேசியதையடுத்து நண்பன் தன்னிடம் சவால் விடுவது போல் கோபமாகக் கூறிவிட்டுப் போனது, கண்ணனுக்கு நினைவு வந்தது. இதை நண்பன் செய்திருப்பானானால் அவன் இந்த அளவுக்கு மோசமாக இறங்கியிருக்க வேண்டியதில்லை என்றே கண்ணன் நினைத்தான். இந்த அளவு பாகவதரைக் கொச்சைப்படுத்தி விட்டிருக்கக் கூடாது என்பதே கண்ணனின் எண்ணமாயிருந்தது. நண்பன் மேல் சிறிது ஆத்திரம்கூட அப்போது அவனுக்கு ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரனாகிய தன்னை அம்மிணி அம்மாளே அறிவதற்கு முன்பே அறிந்திருந்தும் தன்னோடும் தன் வீட்டோடும் நெருங்கிப் பழகாமல் பாகவதர் திடீரென்று அங்கே குடி வந்தவுடன் அம்மிணி அம்மாள் வீட்டோடு புதிதாக இழைய ஆரம்பித்ததைக் கண்ணன் ரசிக்கவில்லை. தனது ஏழ்மையையும் அம்மிணி அம்மாளுடைய வசதியையும் சீர்தூக்கிப் பார்த்து அந்த முடிவைப் பாகவதர் செய்ததாக அவன் தனக்குத் தானே கற்பித்துக் கொண்டுவிட்டான். தாழ்வு மனப்பான்மைக்கும் இப்படி எதிர்மறையாகக் கற்பனை செய்துகொள்வதற்கும் நிறைய நெருக்கம் உண்டு. தன்னைத் தானே குறைவாய்க் கற்பித்துக் கொண்டு தாழ்வு உணர்வோடு இருக்கிற ஒருவனுக்குச் சுற்றி நடக்கிற சகலமும் தனக்கு எதிராகத்தான் நடக்கின்றனவோ என்ற எண்ணமே மிகுந்திருக்கும். இந்த எண்ணமே ஒருவகை நோய் மாதிரி. காரணமற்ற பொறாமையும் இதன் துணை உற்பத்தியாக வந்து சேர்ந்து கொள்ளும். ஒருவேளை பாகவதர் அம்மிணி அம்மாளைப் பற்றித் தெரியாமல் அந்த அம்மாள் குடும்பத்தோடு பழகாமல் கண்ணனோடும், கண்ணன் வீட்டோடும் மட்டுமே பழகிக் கொண்டிருக்க நேர்ந்திருந்தால் கண்ணனுக்குள் இந்தத் தாழ்வு மனப்பான்மையும் அதனடியாகக் கிளைத்துவிட்ட பொறாமையும் விரோதமும் ஏற்படாமலே போயிருக்கலாம். பாகவதரைப் பற்றிய நல்லெண்ணமே நீடித்திருக்கலாம். மனிதன் தன்னுடைய அபாரமான கற்பனை உணர்வினால் இல்லாத விரோதங்களையும் குரோதங்களையும் தனக்குத் தானே கற்பித்து அழிக்க முடியாதபடி வளர்த்துக் கொண்டு விடுகிறான். ஒரு நிலமைக்குப் பின்னால் அவனே விரும்பினால் கூட அவற்றை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாதபடி அவனைவிட அவை விசுவரூபமெடுத்துக் கொண்டு நின்றுவிடுகின்றன. நிலைமை கட்டுமீறிப் போய் விடுகிறது. கண்ணன் நிலையும் இப்போது அப்படித்தான் ஆயிற்று. பாகவதர் அம்மிணி அம்மாள் குடும்பத்தோடு நட்பாகப் பழகினாரே ஒழியக் கண்ணன் குடும்பத்தாரோடு விரோதமாகப் பழக முயலவில்லை. ஆனாலும் கண்ணனுக்கு அது மட்டுமே போதவில்லை. ‘இவர்தான் பக்கத்து வீட்டுக்குக் குடிவரப் போகிறார் என்று தெரிந்ததும், முன்பு இவர் குடியிருந்த இராமநாதன் தெரு ஒண்டிக் குடித்தனத்திற்கு இவரைத் தேடிப் போய்க் காலனி நலன் நாடுவோர் சங்கத்தில் இவரைச் சேர்த்து வந்தேன். இருந்தும் இவர் என்னை விட்டுவிட்டு இங்கே வந்ததும் இந்த ‘ரெக்கார்ட் டான்ஸ் அம்மாக்களி’டம் போய் ஒட்டிக் கொண்டு விட்டார்! பணமும் அழகும் இருந்தால் மற்ற எது இல்லாவிட்டாலும் காந்தத்தில் போய் ஒட்டிக் கொள்கிற இரும்பு மாதிரி மனிதர்கள் போய் மொய்க்கிறார்களே!’ என்று கண்ணன் தனக்குள்ளே நினைத்தான். இந்த நினைப்பெல்லாம் சேர்ந்து குமைந்து கொண்டிருந்தபோது தான் நண்பன் வந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்த மாதிரி அதைக் கிளறி ஊதி மேலும் கனலச் செய்துவிட்டான். இன்று இப்போது இந்த ரெளடித்தனமான மஞ்சள் பத்திரிகையைத் தேடி வந்து தன்னிடம் திணித்துப் பாகவதருக்கும் தகவல் தெரிவிக்கச் சொல்கிறான் நண்பன்! இதில் இவனுக்கு ஏன் இத்தனை குரூரமான சந்தோஷம்? பாகவதரிடம் பேசுவதையே ஏறக்குறைய நிறுத்திவிட்ட நான் போய் இதை எப்படி அவரிடம் எடுத்துக் கூட்டி ஆரம்பித்துச் சொல்வது? நல்ல விஷயமாயிருந்தாலாவது பரவாயில்லை. இதைப் போய் அவரிடம் காண்பித்துப் பேசத் தொடங்கினாலே நான் அவரைப் ‘பிளாக் மெயில்’ செய்கிறேனோ என்பது போன்ற சந்தேகமும் கோபமும் என்மேல் அவருக்கு வராதா? நண்பன் ஏன் இத்தனை இங்கிதக் குறைவாக நடந்துகொள்கிறான்? நம் சொந்த அக்கம்பக்கத்து விவகாரத்தை இவனைப் போல ஒர் அரைவேக்காட்டு நண்பனிடம் நான் தெரிவித்திருக்கவே கூடாதோ? நான் செய்ததுதான் தவறோ? என்றெல்லாம் கண்ணனுக்குத் தோன்றியது. வீட்டுக்குத் திரும்பியதும் ‘உண்மை விளம்பி’யைப் பிரித்துப் படித்தால் பாகவதரையும் அம்மிணி அம்மாளையும் இரண்டாவது முறையாக நினைத்துப் பார்க்கவே கூசும் நரகல் மொழி நடையில் பச்சை பச்சையாகவும் தாறுமாறாகவும் எழுதியிருந்தது. வேறு யாரும் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும் அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துத் தெருக் குப்பைத்தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தான் கண்ணன். அப்படி மிகுந்த கவனத்தோடு அதை அவன் செய்திருந்தபோதும்கூட, “என்னது? எதையோ ரகசியமாய்ப் படிச்சுட்டுக் கிழிச்சுக் குப்பைத் தொட்டியிலே கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாப்ல இருக்கே?” - என்று அவன் மனைவி சுகன்யா கேட்டே விட்டாள். “அதெல்லாம் உனக்கு ஒண்ணுமில்லே! ஆபிஸ் விஷயம்” - என்று மழுப்பினான் கண்ணன். அவள் சிரித்துக் கொண்டே போய்விட்டாள். ஆனால் விஷயம் அதோடு முடிந்து போகவில்லை. இரவு ஏழு ஏழரை மணிக்குப் பாகவதரே கையிலே ‘உண்மை விளம்பி’யுடன் அவனைத் தேடி வந்தார். “உங்க கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்.” “இதோ வரேன்...” கண்ணன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பாகவதரோடு சேர்ந்து வெளியே கிளம்பினான். தெருக் கோடியில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாயிருந்த ஒரு மரத்தடிக்கு வந்ததும் பாகவதர் நின்றார். “உங்க சிநேகிதர் அன்னிக்கு மிரட்டிட்டுப் போனார்! இது இன்னிக்கித் தபால்லே வந்துது. கன்னாபின்னான்னு எழுதியிருக்கா...” “நானும் பார்த்தேன்! யாரோ கொண்டுவந்து காமிச்சா... வருத்தப்பட்டேன்.” “நீங்க எதுக்கு அநாவசியமா வருத்தப்படணும்? நானே இதற்காக வருத்தப்படலியே...?” “மனிதர்களின் வயிற்றிலடிக்கிறாப் போலப் பிழைப்பைக் கெடுக்கிற மாதிரி எழுதறதை நான் வெறுக்கிறேன்.” இதைக் கேட்டுப் பாகவதர் சிரித்தார். “மிஸ்டர் கண்ணன்! இப்படியெல்லாம் எழுதறதாலே ஒருத்தரோட பிழைப்புக் கெட்டுப் போகும்னு நீங்க நினைக்கிறதே ஹைதர் காலத்து உத்தி. இந்தக் காலத்து சைகாலஜியே வேற மாதிரி. ஒருத்தனைப் பத்தி அவன் பரம யோக்கியன், ஏகபத்தினி விரதன், ஒழுக்க சீலன், பரஸ்திரீகளை ஏறிட்டும் பார்க்காத பரிசுத்தவான் அப்படீன்னெல்லாம் எழுதினா அந்த யோக்கியன் யாருன்னு பார்க்க இன்னிக்கு நாலு பேர்கூட வரமாட்டா! அதே சமயத்தில் மூன்று பெண்டாட்டிக்காரன், குடிகாரன், கொலைகாரன், பெண் பித்தன், கஞ்சா அடிக்கிறவன், ஆள்மயக்கின்னு ஒருத்தனப் பத்தி எதிர் மறையா எழுதின அவன் யாருன்னும் எப்படியிருக்கான்னும் பார்க்க லட்சக்கணக்கிலே ஜனங்க கூடும். அதுதான் இந்தக் கால வெகுஜன மனப்பான்மை. அந்த வகையிலே இதிலே எழுதியிருக்கிறதெல்லாம் நிஜமில்லைன்னாலும் இதனாலே ஏற்கெனவே பிரபலமான நான் அடையப் போற பப்ளிசிட்டி அதிகம்தான். என பிழைப்புக்கு விளம்பரமும் வருமானமும் அதிகமாகுமே ஒழியக் குறைஞ்சிடாது. ஒன்பது பேரை ஒரே இரவில் கொலை பண்ணின ஜெயப்ரகாஷைக் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தப்போ அவனப் பார்க்கக் கூட்டம் அலைமோதித்து தெரியுமோன்னோ?” “உங்களை ஏன் அவனோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?” “ஒப்பிடவும் இல்லை? உபமானமாகச் சொல்லவும் இல்லை. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். அவ்வளவுதான். அம்மிணி இந்த வயசிலேயும் லட்சுமீகரமா இருக்கா. நல்ல ரசிகை, சின்ன வயசிலே மலையாள இலக்கியமும் சம்ஸ்கிருதமும் நிறையப் படிச்சிருக்கா. அவ பொண்கள்லே ரெண்டு டான்ஸ் ஆடறது. மத்தது நடிக்கிறதுங்கறா... ஒண்ணு ரொம்ப ரொம்பக் கவர்ச்சி நடிப்பெல்லாம் நடிச்சு ‘ஸெக்ஸ் பாம்’னு கூடப் பேர் வாங்கியிருக்காம். ஆனா என் பழக்கம் வேற லெவல்னு நீங்க புரிஞ்சுக்கணும். மோர் ஆர் லெஸ் என்னுது ஒருவிதமான இண்டெலக்சுவல் கம்பானியன்ஷிப். இதுலே உடம்பைச் சம்பந்தப்படுத்தி எழுதறது கயவாளித் தனம் அல்லது பிளாக் மெயில்னே சொல்லுவேன். ரைஸிங் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் மானேஜிங் டைரக்டர் சிதம்பரம், அவரோடவீட்டிலே மஹிஷாசுரமர்த்தனி ஸ்லோகம் சொல்லி பூஜைக்கு அழைச்சா நான் போயிட்டுப் பூஜையைப் பண்ணிச் சம்பாவனை வாங்கிண்டு வரனோ இல்லையா? அவரோட மற்ற ஊழல், ஒழுக்கமின்மை, ஆபீஸ் லெளகீகம், இதை எல்லாம் நான் பார்த்துத் தயங்கறதில்லையே? அதைப்போல அம்மிணி அம்மா பயபக்தியோட நாராயணீயம் சொல்ல அழைச்சாலும் போறேன். மத்ததைப் பத்தி யோசிச்சுத் தயங்கலே... இதை மட்டும் ஏன் இப்பிடிக் கொச்சைப் படுத்தறான்னு தான் தெரியலே...” “உங்க தர்க்கத்திலே நியாயம் இருக்குப் பாகவதர்வாள்.” “ஏன், நியாயமில்லேன்னுதான் சொல்லிப் பாருங்களேன்! அதுக்காக நான் கவலைப்படவோ, பயப்படவோ போறதில்லை. ஐயாம் திக் ஸ்கின்ட்.” தன்னிடம் பாகவதர் கொஞ்சம் ஆத்திரத்துடனேயே பேசுவது கண்ணனுக்குப் புரிந்தது. அதைவிடப் பெரிய வியப்பு அவர் இந்த மாதிரிப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படாதவராக இருந்ததுதான். மிகவும் திடமாகவும் உறுதியாகவும் இருந்தார். “உங்க நண்பர் கிட்டச் சொல்லுங்கோ பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதுன்னு” என்று அந்த உரையாடலை முறித்துக் கொண்டு திடீரென்று திரும்பிச் சென்று விட்டார் பாகவதர். கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. கண்ணன் பாடு மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போலாயிற்று. நண்பனோ பாகவதரிடம் எச்சரித்து வை என்று தன்னிடம் வந்து மிரட்டுகிறான். பாகவதரோ ‘உன் நண்பனிடம் நான் பயப்பட மாட்டேன் என்று போய்ச் சொல்’ என்கிறார், வேடிக்கையாகத்தான் இருந்தது. தான் இருவருக்கும் நடுவே வகையாக மாட்டிக் கொண்டதை அவன் உணர்ந்தான்.  |