![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’  | 
14 கண்ணனுக்கு அது ஒரு ஃபோபியா ஆகிவிட்டது. அம்மிணி அம்மாளையும் பாகவதரையும் பதிலுக்கு அவமானப் படுத்திவிட அவன் முயன்ற எந்த வகை முயற்சியுமே வெற்றி பெறவில்லை. எல்லாம் தோல்விதான். அம்மிணி அம்மாள் லைசென்ஸ் இல்லாமல் இரட்டை நாய்கள் வளர்ப்பதாகவும் அவை போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டுக்காரனாகிய தான் இராப் பகல் தூக்கமின்றி அவஸ்தைப் படுவதாகவும், அந்த நாய்கள் தான் உட்படத் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கடிக்க முற்படுவதாகவும் அவன் எழுதிய புகாரை யாரும் பொருட்படுத்தவே இல்லை. நீண்ட நாட்களுக்குப்பின் அவன் புகாரில் உண்மையில்லை எனக் கூறி நாய்களுக்கு லைசென்ஸ் பெறப்பட்டிருப்பது - அவை கட்டிப் போடப்பட்டிருப்பது முதலிய விவரங்களைத் தெரிவித்து ஒரு பதில் மட்டும் கார்ப்பரேஷன் ஹெல்த் டிவிஷனிலிருந்து அவனுக்கு வந்தது. ஆகவே அந்த முயற்சியும் பலிக்கவில்லை, கண்ணனுக்குக் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. சாதாரணமாக வெறும் நாட்டியம், துணை நடிகை என்ற நிலைகளிலிருந்து அம்மினி அம்மாளின் பெண்கள் எல்லாருக்குமே கதாநாயகி அந்தஸ்து வந்து லகரக் கணக்கில் பணம் குவிய ஆரம்பித்திருந்தது. அடையாறிலும், போயஸ் கார்டனிலும் வேறு இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டிய பின்பும் முதலில் குடியேறிய இந்த ஐயப்பன் நகர் வீடுதான் தனக்கும் பெண்களுக்கும் ராசி என்பதனால் இதிலேயே தொடர்ந்து வசித்து வந்தாள் அம்மிணி அம்மாள். பாகவதருக்கு நிறைய உதவிகள். அவரைத் தன் குடும்பத்துக்கே குரு ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடினாள். இஞ்சிக்குடி பாகவதர்தான் அம்மிணி அம்மாளின் குழந்தைகளுக்கு அப்பா மாதிரி என்று குறும்பாகப் புலவர் மகிழ்மாறன், உண்மை விளம்பி போன்ற சில நண்பர்கள் ஒரு தினுசாகப் பொடி வைத்துப் பேசக்கூடச் செய்தார்கள். பாகவதரோ, அம்மிணி அம்மாளோ, அவள் அருமைப் பெண்களோ இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. யாராவது கேட்டால் அவளே, ‘ஆமாம் என்னுடைய குழந்தைகளுக்கு அவர் அச்சன் மாதிரின்னே வச்சுக்கலாம். அதாவது ஞான பிதாவாக்கும்’ என்று தைரியமாகப் பதில் சொன்னாள். அதைக் கேட்டுச் சிணுங்கிக் கூசவில்லை. அவள் பெண்கள் மிகமிக வசீகரமாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததினால் திரையுலகில் அதிவேகமாக முன்னேறினார்கள். ஒரே ஒருத்தி மட்டும் எப்படியோ ‘செக்ஸ் அணுகுண்டு’ என்று பெயர் வாங்கிவிட்டாள். இதுபற்றி அம்மிணி அம்மாளே யாரோ கேட்டபோது, ‘எல்லாம் இந்தத் தமிழ்ப் பத்திரிகைக்காரன்மார் வச்ச பேருதானே? இவங்க மன விகாரத்தை இப்பிடிப் பேரு சூட்டினதிலேர்ந்து நீங்க புரிஞ்சுக்கணும். என்ட மோளை மேல எந்தத் தோஷமும் சொல்றத்துக்கில்லா’ என்று பதில் சொல்லியிருந்தாள். ஆனால் இந்த வம்பு இந்தக் குதர்க்க விசாரணை எல்லாம் சிறுபான்மைதான். பணத்திலும் புகழிலும் விரோதங்கள் மெல்ல மெல்லக் கரைந்து வந்தன. பாகவதருடைய யோசனையின் பேரிலும், தானாகவும் நிறையத் தான தருமங்கள் செய்ததால் அம்மிணி அம்மாளுக்கு நல்ல பெயர்தான் பெரும்பான்மையாக இருந்தது. ஐயப்பன் நகர் காலனியைத் தன் நன்கொடைகள் மூலம் அம்மிணியம்மாள் சுவர்க்கபுரி ஆக்கியிருந்தாள். காலனிவாசிகள் அவளைக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக மதித்தார்கள். அடையாறு, போயஸ் கார்டன் போன்ற ஆடம்பரப் பகுதிகளில் பிரமாதமாக அரண்மனை போன்ற புதுப் பங்களாக்களைக் கட்டியபின்பும் அம்மிணி அம்மாள் தங்களோடு தங்கள் காலனியிலேயே வசித்தது காலனிவாசிகளுக்குப் பெருமையாயிருந்தது. வீட்டில் பென்ஸ், டயோட்டா என்று ஏ.சி. செய்த கார்கள் இரண்டு மூன்று இருந்தும் அம்மிணி அம்மாள் இன்றும் அதிகாலையில் நெற்றியில் சந்தனக் கீற்றும் சிறிது கூட நரைக்காமல் கன்னங்கரெலென்று முதுகில் புரளும் ஈரக் கூந்தலும், கையகலச் சரிகைக் கரையுடன் கூடிய நேரியலுமாக நடந்தே காலனிக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவதை மக்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். ‘பகவான்தான் நம்மைப் போல ஜீவாத்மாக்களுக்கு எஜமானன். நம்ம ஆடம்பரத்தையோ, வசதிகளையோ அவனுக்கு முன்காட்டிச் செருக்கு அடையப்பிடாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாக முடியாது. ஆலய தரிசனத்துக்குப் போறப்போ பயபக்தியோடு போகணும். எளிமையாப் போகணும். மனசையே தாமரைப் பூவாக்கி அவனோட பாதார விந்தங்களிலே சமர்ப்பிச்சுடனும்கிற மாதிரிப் போய் வழிபடணும்’ என்று பாகவதர் அடிக்கடி தம் கதாகாலட்சேபங்களில் சொல்லும் உபதேசத்தை அம்மிணி அம்மாள் அப்படியே கடைப் பிடித்தாள். அம்மிணி அம்மாளின் பொன் குன்னம் வீட்டில் பாகவதருக்குத் தனி மரியாதை. அவர் உள்ளே நுழைந்து விட்டால் வேலைக்காரர்கள் முதல் வீட்டிலிருப்பவர்கள் வரை, “அ சாமி வந்திருக்கு” என்று பவ்யமாக ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொள்வார்கள். சாமிக்கு அத்தனை மரியாதை அந்த வீட்டில். ஒரு பிரபல மலையாள வாரப் பத்திரிகை ‘என் டெ அயல்கார்’ (எனது பக்கத்து வீட்டுக்காரர்) என்ற தலைப்பில் சினிமா நட்சத்திரங்கள், முக்கியக் கலைஞர்கள், பிரமுகர்களுடைய பேட்டிகளை வெளியிட்டு வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களையும் அவர்களையும் தனித்தனியே பேட்டி காண்பது ரசமாயிருந்தது. இதே வரிசையில் செக்ஸ் அணுகுண்டு நந்தினியின் பேட்டியும் வந்தது. இந்த மலையாளப் பத்திரிகை மிகவும் தந்திரமாகவும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் இரு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இப்படிச் செய்வதால் ஒருவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது இன்னொருவருக்குத் தெரியாது. அதனால் முற்றிலும் எதிர்பாராத அபிப்பிராயங்கள் கிடைப்பது உண்டு. இந்தப் பத்திரிகை அதன் சென்னை நிருபரிடம் இவ் வேலையை ஒப்படைத்திருந்தது. நிருபர் தனித் தனியே செக்ஸ் அணுகுண்டு நந்தினி, கண்ணன், பாகவதர் ஆகிய மூவரையும் சந்தித்திருந்தார். கண்ணனை வீட்டில் சந்திக்காமல் விவரம் விசாரித்து அலுவலகத்துக்குப் போய்ச் சந்தித்த நிருபர் பெருத்த ஏமாற்றமடைந்தார். கண்ணனுக்குத் தன் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி நல்லெண்ணம் இல்லை. திட்டினான். வசைமாரி பொழிந்தான். குறைகளைச் சொன்னான். குற்றங்கள் சாட்டினான். “சரிங்க! நீங்க இப்ப சொன்னதை எல்லாம் அப்படியே போட்டுக்கலாம் இல்லையா? இதுவரை யாரும் தங்க ‘நெய்பரை’ப் பற்றி ‘டோங்கா’ இப்படிச் சொன்னதில்லை. உங்க இது ரொம்பப் புதுமையாக் கூட இருக்கும்” - என்று நிருபர் கூறவே, கண்ணனுக்குத் தயக்கம் வந்து விட்டது. உடனே அதைப் பூசி மெழுகி மறுத்தான். “நீங்க எதுக்கும் நாளைக்கு வாங்களேன். நான் கொஞ்சம் யோசனை பண்ணி வைக்கறேன்! இப்பச் சொன்னதெல்லாம் ஆஃப் த ரெக்கார்டாக இருக்கட்டும்! நாளைக்குப் பேசலாம்” என்றான். கண்ணனைப் பார்ப்பதற்கு முன்பே நிருபர் மற்றவர்களையும் பார்த்து முடித்திருந்ததைக் கண்ணனிடம் சொல்லவில்லை. இதுவரை இருதரப்பாருமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நற்சான்றிதழ் கொடுத்துப் பாராட்டிக் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்களையே சந்தித்துத் தான் அலுத்துச் சலித்துப் போயிருந்ததற்கு மாறாகக் கண்ணனிடம் தன் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமான அபிப்பிராயம் கிடைக்கும் போல் இருக்கவே, நிருபர் அவன் பேட்டியை வாங்குவதில் இன்னொரு முறை அலையக் கூடத் தயாராயிருந்தார். இந்தப் பேட்டி விஷயத்தில் முதலில் பக்கத்து வீட்டாரைப் பற்றி மனத்தில் பட்டதை எல்லாம் பேசிவிட்டாலும் அப்புறம் கண்ணனுக்கே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எதற்கும் சினிமா உலகிலும் பத்திரிகை உலகிலும் அறிமுகம் உள்ள நண்பன் உண்மை விளம்பியையும் புலவர் மகிழ்மாறனையும் கலந்து பேசியபின் பேட்டி கொடுப்பது நல்லது என்று இப்போது இரண்டாம் எண்ணமாகக் கண்ணனுக்குத் தோன்றியது. அலுவலகம் முடிந்ததும் நேரே வடபழநி போய் உண்மை விளம்பியைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பிப் புலவருக்குச் சொல்லியனுப்பினான் கண்ணன். அவன் முன்பே நினைத்தது சரியாயிருந்தது. உண்மை விளம்பிக்குச் சரியான கிரிமினல் மூளை. புலவருக்குச் சரியான பொலிடிகல் பிரெய்ன். இரண்டையும் கலந்து யோசித்தபோது தற்காலத்துக்குத் தேவையான பக்கா அறிவு கண்ணனுக்குக் கிடைத்தது. “இது ரொம்பத் தந்திரமான முயற்சிங்க! அதிகம் பாப்புலரா இருக்கிற பக்கத்து வீட்டுக்காரங்களோட எந்த விதமான பாப்புலாரிட்டியும் இல்லாத உங்களையும் மாட்டி வைக்கிறாங்கன்னா இதிலே ஏதாவது சூழ்ச்சி இருக்கணும்! அதுனாலே நீங்க யோசிச்சு அவங்களை மாட்டி வைக்கிற மாதிரிப் பேட்டியைக் கொண்டு போகணும். அதே சமயத்திலே உங்க பேட்டியைப் படிச்சிட்டு லீகலா அவங்க உங்க மேலே ‘டேமேஜ்’ கிளெய்ம் அது இதுன்னு போறாப்லவும் பிடி குடுத்துடப்படாது” என்றான் உண்மை விளம்பி, அவன் குரலில் ஆவேசமே இருந்தது. “ஆமாங்க! அவரு சொல்றது நூறு விழுக்காடு சரியான கருத்துங்க! அவங்க நம்மைப் பத்தி மோசமான அபிப்ராயம் தான் சொல்லியிருக்கப் போறாங்க. நாம மட்டும் அவங்களை ஏன் விட்டு வைக்கணும்? மானம் போற மாதிரி விளாசித் தள்ளிப்புடனும். நான் தந்திரமான வாக்கியங்களிலே எழுதியே குடுத்துடறேன். அதை அப்படியே எடுத்திட்டுப் போயி, ‘இதுதான் பக்கத்து வீட்டுக்காரங்களைப் பத்தி என் அபிப்ராயம்னு குடுத்திடுங்க’ என்று பேட்டியை எழுதித் தருவதற்கே முன் வந்தார் புலவர். கண்ணனுக்கும் அவர்கள் இருவரும் சொல்வதுதான் சரி என்று பட்டது. இது மாதிரிப் பேட்டி கொடுக்கிற அளவு தான் பெரிய மனிதன் இல்லை என்று அவன் நினைத்தாலும், அவர்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனான தன்னைப் பற்றி அவர்கள் மோசமான கருத்துக்களைச் சொல்லியிருப்பார்களே யானால் அதற்குப் பதிலாகவாவது இந்தப் பேட்டி பயன்படட்டும் என்று புலவரையும் நண்பனையும் அதைத் தயாரிக்குமாறு அந்த வேலையை அவர்களிடம் ஒப்படைத் தான். நண்பன் தலையைச் சொறிந்தான்: “மன்னிக்கணும் கண்ணன்! இதுமாதிரி அஸைன்மெண்ட்டுக்கு எனக்குக் கொஞ்சம் ஒரு தினுசான இன்ஸ்பிரேஷன் தேவைப்படும்...” “அப்படீன்னா...?” “கொஞ்சம் ‘பட்டை’ அடிச்சிட்டு உட்கார்ந்தாத்தான் இதெல்லாம் எழுத வரும்.” “அதுக்கென்ன? அதோ அந்தப் பிறையிலே இருக்கு! வேணுங்கற மட்டும் எடுத்து அடிச்சிக்க. புலவர் ரேஷனலிஸ்ட்- அதெல்லாம் அடிக்கமாட்டார்” என்றான் கண்ணன். நண்பன் பிறையைத் தேடிச் சென்றான். “ஒகோ! நீ கூட இதெல்லாம் வீட்டிலேயே வைச்சிருக்கியா?” என்று கேட்டபடியே பிறையைப் போய்ப் பார்த்துவிட்டு, “அட போப்பா! நான் விபூதிப் பட்டை அடிக்க விபூதி கேட்கிறேன்னு நெனச்சிட்டியா? கேலிக் கூத்துத் தான்ப்பா... இந்தப் பட்டை அடிச்சா ‘ஆஸ்தீக தர்மவர்த்தினிக்கு’த் தான் எழுத முடியும்! உண்மை விளம்பிக்கு எழுத முடியாது. நான் கேட்கிறது வேற பட்டை. ஒரு ஐம்பது ரூபாய் எடு! புலவர் முன்னாடியே எங்கிட்டச் சொல்லிட்டாரு. அவருக்குப் பழக்கம் உண்டாம். ‘தேறல் அருந்துதல் பழந்தமிழர் வழக்கம்’னு ஆய்வுக் கட்டுரையே எழுதியிருக்கிருறாராம் அவர்.” கண்ணனுக்கு அப்போதுதான் அவர்கள் நெற்றியில் பட்டையடிக்க விபூதி கேட்கவில்லை. பட்டைச் சாராயம் கேட்கிறார்கள் என்று புரிந்தது. கையில் இருந்ததைத் திரட்டி அவர்களுக்கு முப்பது ரூபாய் கொடுத்துத் தொலைக்க வேண்டியிருந்தது. “நாளைக்குக் காலையில் நீ ஆபீஸ் புறப்படறத்துக்குள்ளே ஸ்கிரிப்ட் உன் கைக்கு வந்து சேரும். பயப்படாதே” என்று கூறி விட்டுப் புலவருடன் நண்பன் கிளம்பிப் போனான். தெண்டத்துக்கு முப்பது ரூபாய்க்குச் சாராயம் வாங்கக் காசு கொடுத்தாவது இந்தப் பேட்டியைத் தரவேண்டியது தன்னளவில் அவசியம்தானா என்று கண்ணனுக்கு இப்போது மனத்துக்குள் தோன்றியது. மறுபடி மறுபடி நைப்பாசை காரணமாகப் புதுப் புது வம்பில் தான் சிக்கிக் கொள்கிறோமோகிறோமோ என்று கூடத் தன்னைப் பற்றியே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் பாகவதர் மேலும், அம்மிணி அம்மாள் மீதும் அவனாகக் கற்பித்துக் கொண்ட விரோதம் அவனை அவ்வப்போது தூண்டியது. செயற்படச் செய்தது. வேகப்படுத்தி முடுக்கி விட்டுக் கொண்டிருந்தது.  |