முன்னுரை ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றக்கூடிய இரத்த பந்த நெருக்கமான உறவைக் குறிப்பிட வேண்டுமானால் அது தாய்-மகன் உறவுதான். இந்த ஆதி உறவில் இருந்து தான் மானிட உறவுகளே பல பரிமானங்களுடன் விரிவடைகின்றன எனலாம். தாய்மைப் பேற்றுக்கு இன்றியமையாத காரணியாக ஆண் உறவை முதன்மைப் படுத்தலாமென்றாலும், அந்த உறவு, பெரும்பாலும் செயற்கையாகவும், வற்புறுத்தல், கட்டாயம் ஆகிய நிலைகளிலும் கூடப் பிணைப்பாகி விடலாம். தாய்-மகன் என்ற பந்தத்தில், தூலமான சிதைவுகளும் கூட அத்தகைய விரிசல்களைக் கொண்டு வருவதில்லை. இந்தப் பிணைப்பில் சமமான உடல்-மன வளர்ச்சி இல்லை. பெண்ணின் பக்கம் உணர்ச்சிகளே முதன்மையிடம் வகிக்கின்றன. உணர்ச்சிகளின் உந்துதலாலேயே அவள் மகவுக்குப் பாலூட்டுகிறாள்; அதன் அசுத்தங்களை முகம் சுளிக்காமல் ஏந்துகிறாள்; சுத்தம் செய்கிறாள். 'வாத்ஸல்யம்' என்ற அமுதைப் பொழிகிறாள். ஆனால், மகவு இதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை. அது தனது எல்லாத் தேவைகளுக்கும் தாயைச் சார்ந்துதான் இருக்கிறது. அது தனது எல்லாச் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி அவளைப் பற்றிக் கொள்கிறது. தனது தேவைகளைத் தானாகக் கேட்டு உரிமையுடன் பெற முடியும் என்ற வளர்ச்சி பெற்றதும், அதன் நீக்கும், போக்கும் வேறு பட்டுப் போகிறது. ஆனால் தாய் அந்த ஆதி உணர்வு நிலையிலிருந்து மாறாதவளாகவே பழக்கப்பட்டுப் போகிறாள். பொதுவாகவே தாயின் இயல்பு தன் மக்கள் எல்லோரிடத்திலும் இவ்வாறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இயற்கையாக எழும் உணர்வுக்கும் பாசத்துக்கும் மகன் வேறு, மகள் வேறு எனற பிரிவுகள் இருக்க முடியாது. கூட்டுக்குஞ்சுகளுக்கு உணவூட்டிப் பாதுகாக்கும் பறவைத்தாய் ஆண் குஞ்சு, பெண் குஞ்சு என்று பார்ப்பதில்லை. அது இயல்பூக்கத்தினால் செயல்படுகிறது. ஆனால், மனிதரில் மட்டும், பகுத்தறிவு பிரித்துப் பார்க்க வழியமைக்கிறது. மகள் என்று வரும்போது, தாய் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. மகளின் சந்தோஷத்தை விட, அவளை சமூகம் ஒப்புக் கொள்ளும் இலக்கையே தாய் பெரிதாகக் கணிக்கிறால். ஆனால், மகன் என்ற நெகிழ்ந்த உணர்வில், கல்வி வசதியில்லாமல் தெருவோரத்தில் ஆப்பக்கடை போட்டிருக்கும் ஏழைத்தாயும், உலகு புகழ் நாடாளும் ஒரு பெண்மணியும் ஒரே கோட்டில் சந்திக்கிறார்கள். இது ஏன்? இந்தத் தாய்மை நெகிழ்ச்சி நாடு, சமயம், மொழி, என்ற வரையறைகளுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது. அறிவும் அநுபவமும் பின்னுக்குச் சென்றுவிடும் வகையில், மகன் பாச உணர்வு, பல சமயங்களிலும் கண் மூடித்தனமான வகையில் ஒரு தாயை வழி நடத்துகிறது. ஒரு பெண் தனக்கு மகன் பிறந்ததும், கணவனை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறாள் என்ற நியதியும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏன்? அவள் கொண்டவன் என்று இணைபவனுடன் சார்ந்திருக்கும் சார்பை விட, தன்னுள் இடம் கொடுத்து, தன் அணுவாய்க் காப்பாற்றி வளர்க்கும் மகனை மிக அதிகமாகப் பற்றுகிறாள். பிரதிபலன் கிட்டுமா, கிட்டாதா என்ற ஐய இழைக்குக் கூட இடமின்றித் தன்னை ஒட்டவைத்துக் கொள்கிறாள். இந்தத் தன்மை, மகனின் சலுகைகளை, உரிமைகளை வரம்பில்லாமல் பெருக்கிவிடுகிறது. அவனைக் கட்டுப்பாடற்றவனாகவே கூட வளர்க்கிறது. அறம் சார்ந்த நெறிகள் அவனால் மதிக்கப் பெறுவதில்லை. சொல்லப் போனால், அவற்றைக் காலின் கீழ் தள்ளி மிதிக்கக் கூட அவன் கூசுவதில்லை. தகப்பன் - மகன் உறவு, தாய் மகன் உறவு போல் குருட்டுத்தனமாக அமைவதில்லை. இதனாலேயே, மகனின் கட்டுப்பாடற்ற போக்குக்கு, தாய்-தகப்பன் இருவர் கண்காணிப்பில் இருக்கும் போது, ஒரு அழுத்தம் தடையாக உதவுகிறது. தகப்பன் மகனை விமரிசனக் கண்கொண்டு பார்க்கிறான். கண்டிப்பு, கடுமை என்றால் அப்பாவிடம் தான் முத்திரை பெற்றதாக மகன் நினைக்கிறான். முறைகேடாக மகன் செல்கையில் தகப்பன் கடுமை காட்டும் போது, தாய் பாசச் சிறகால் அவனை அணைக்கிறாள். தாயின் சலுகை இருக்கும் வரையிலும் எப்படியும் நடக்கலாம் என்று தவறான வழிகளில் செல்லும் மகன் துணிவு பெறுகிறான். இந்தத் துர்ப்பாக்கியம், ஒரு பெண் எப்போதும் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற குறியுடன் பரம்பரை பரம்பரையாகப் பெண் பதப்படுத்தப்பட்டு வந்திருப்பதாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்ணின் மூடப்பாசத்துக்கு அறிவார்ந்த ரீதியில் விளக்கம் தேடக் கூட யாரும் முனைவதில்லை. மாறாக, அது நியாயப்படுத்தப்பட்டு, சமூக ஒப்புதலுக்கும் தடம் வகுக்கப்பட்டிருக்கிறது. கணவனில்லாமல் ஒரு தாய் வளர்க்கும் மகன், நல்ல பிரஜையாக, வளரமாட்டான் என்பதும், உலக முழுவதும் வழக்கில் இருந்து வரும் ஒரு கருத்தாகவும் இருக்கிறது. ஓர் ஆணை ஏசிப் பேசுவதற்கும் கூட இத்தகைய தொடரைப் பயன்படுத்துகிறார்கள்... இந்தக் கருத்தில் சமூகப் பிரஜையாக, கௌரவப்பட்டவனாக ஒருவன் உருப்பெறாத வருத்தத்தை விட, இந்தத் தாயே குற்றவாளியாகக் குறிக்கப்படுவது முதன்மை பெறுகிறது. அபரிமிதமான சலுகைகளைப் பெற்ற பின் பிள்ளைகள், தாயை மதிப்பதில்லை என்பது மட்டும் இல்லை; அவர்கள் தங்கள் கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்களுக்குத் தாயைக் கருவியாக்குகின்றனர். ஓர் ஆணைச் சார்ந்து பற்றிக் கொள்ளும் இந்த மனப்பாங்கு, பெண்களிடையே எஞ்ஞான்றும் ஒற்றுமையே வர இயலாத வகையில் அவர்களைப் பிளவுபடுத்துகிறது. கணவனின் குற்றம், முதியவளான தாயின் நிலை இரண்டையும் படித்த மருமகளும் சீர் தூக்கிப் பார்க்க மாட்டாள். எது எப்படியானாலும் முதிய மாமியார், தனக்கு எதிரி என்ற கண்ணோடு, கணவனின் பக்கம் சேருவதோ, அல்லது, தாய் மருமகளை எதிரியாகக் கருதி மகன் பக்கம் நின்று கொள்வதோ மிகச் சாதாரணமாகக் குடும்பங்களில் நிகழும் பிளவுக்குக் காரணிகளாக அமைகின்றன. ஆணாதிக்கம் நிலைத்து வலுப்பெற, இந்தப் பிளவு ஒரு வலுவான சாதனமாகவும் இருக்கிறது. இந்தச் சார்பு நிலை உறவின் அடித்தளமில்லாமல், ஒரு பெண் இன்னொரு ஆணுடன், நட்புறவு கொண்டு பழகலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கலாமே ஒழிய, ஓர் ஆணுக்கு இருக்கும் தனித்தன்மையுடன் கூடிய சமூக மதிப்பு அவளுக்கு இல்லை. இத்தகைய தனி மதிப்பைப் பெற்று, குடும்ப உறவுகளில் சமமான பொறுப்பும், உரிமையும், பங்கும் உடையவர்களாய்ப் பெண்கள் ஏற்றம் காணும்போதுதான், அவர்கள் பெற்ற கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆகிய சலுகைகள், உண்மையிலேயே பயனுடைய உரிமைகளாக அவர்கள் சமுதாய மதிப்பை உயர்த்த முடியும். இந்நாள், மலிந்துள்ள பல்வேறு சமுதாயம் சார்ந்த பிரச்னைகள், குறிப்பாகப் பெண்ணைத் தொடர்பாக்கியே உருவாகின்றன. பெண் விடுதலை அல்லது பெண் உரிமை சமுதாயத்தில் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அது மொத்த சமுதாய அமைப்பிலும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. குடும்ப அமைப்புக்களை உடைத்து, தனித்தனி நபர்களாக ஒரு கட்டுக்கோப்பான சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும் என்பதும் சரியில்லாத, நடைமுறைக்கு வர இயலாத கருத்து. இன்றையக் குடும்பங்களில் சக்திகள் ஆணிடமே குவிக்கப்பட்டு, அவனை ஆதிக்கம் மிகுந்தவனாக நெறிப்படுத்தியிருக்கிறது. பெண் கல்வியில்லாத அடிமை உழைப்பாளியாக அடுக்களையோடு இருந்த நாட்களை விட, இந்நாள் மறுமலர்ச்சி பெற்ற தன் ஆற்றல் திறமையனைத்தையும் ஓர் ஆணுக்கு உரிமையாக்கி, அவன் சக்தியைப் பெருக்கியிருக்கிறாள். இதன் காரணமாக இரட்டைச் சுமை சுமக்கிறாள். குவிந்து கிடக்கும், குவிக்கப் பெற்றிருக்கும் சக்திகளை, சமமாக்குவதுதான் இதற்கு மாற்றாக இருக்க முடியும். ஆண்-பெண் உறவுகளில் ஆதிக்கமற்ற, ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்தும் பாங்கு அப்போதுதான் காணமுடியும். ஆணும் பெண்ணும், குடும்பமாகிய அமைப்பில், சமமாக உழைத்து, சமமான உரிமை பாராட்டி, நடக்கும் போது, ஆதிக்கக் கோட்டைகள் தகர்க்கப்படும். இந்த மாற்றம், பெண்ணின் சார்பு நிலையை ஒழிப்பதனால் தான் சாத்தியமாகும். குடும்ப உற்பத்தி-பொருளாதாரம் சார்ந்தும், உழைப்பைச் சார்ந்தும், சக்தியாக ஆணிடம் குவிக்கப் பெறுவதைப் பெண், இன்னும் குருட்டுத்தனமாகப் பற்றியிராமல், தன்னுணர்வும், நம்பிக்கையும் பெறவேண்டும். இதற்கு, வழி வழியாக வரும் ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள், கலாசாரம் என்ற பெயரில் ஆணாதிக்கம் சார்ந்து நெறிப்படுத்தப்படும் சமயச் சடங்குகள், பழக்கங்கள் எல்லாமே பெண்களால் பரிசீலிக்கப்பட வேண்டும். இதனால் ஏற்கெனவே உருவாக்கப் பெற்றிருக்கும் பழைய கறைபிடித்த பிம்பங்கள் தகர்ந்து போகலாம். பெண்ணினம் பெண்ணினத்தோடு புரிய வேண்டிய, புரட்சிப் போராட்டமாக இது தொடர வேண்டி இருக்கிறது. இது, குடும்பத்துக்கு வெளியே நிகழக்கூடிய தொழிலாளர் - முதலாளி போராட்டம் போன்றதாக இருக்க முடியாது. இத்தகைய சிந்தனைகளின் விளைவே இந்தப் புதிய சிறகுகள். இந்நாளைய சமுதாயத்தில், சீனியையும், அபிராமியையும், போன்ற மாந்தர் நிறைய இருக்கிறார்கள். ஆனால், சுஜா... அவளைத் தீர்வு காணக்கூடிய புதிய சிறகுகளைப் பெற வழிகாட்டும் நம்பிக்கையுடன் படைத்துள்ளேன். ஆயிரம் யோசனைகளைக் கூறலாம். ஆனால், வாழ்க்கை அநுபவத்தில் தான் அந்த யோசனைகளை நடைமுறையாக்குவதன் சிரமங்கள் தெரிய வரும். மிகச்சாதாரணமான இந்த நாவலில், நான் புதுமையானவை என்று நினைக்கும் இழைகள் உங்களுக்கும் தட்டுப்பட்டால், எனது நோக்கம் பயனளித்திருக்கிறது என்று மகிழ்ச்சியடைவேன். எனது ஒவ்வொரு படைப்பையும், அன்புடன் ஏற்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் படித்துணர அளிக்கும் பெரு மதிப்புக்குரிய பாரி புத்தகப் பண்ணையார் தாம் இந்நூலையும் வாசகர்களாகிய தங்களுக்கு அளிக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். இந்நூல் வருவதற்கு, அளவிரந்த ஊக்கமும், ஆர்வமும் காட்டிய இளைய சமுதாயத்தினர் திரு.கண்ணன் அவர்களுக்கும், சகோதரி மீனாவுக்கும், தனிப்பட்ட முறையில், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜம் கிருஷ்ணன் |