18

     தமயந்தி, பி.காம்., பி.எல்...

     பெரிய பரப்பை அடைத்துக் கொண்டிருக்கும் சுற்றுச் சுவர் முகப்பிலேயே அவள் பெயர் இருக்கிறது.

     சுஜா, உஷாவையும் அபிராமியையும் அழைத்துக் கொண்டு, உள்ளே நுழைகிறாள். வலது பக்கம் ஒரு மாமரம் கிளைகளைத் தாழப் பரப்பிக் கொண்டு, குழந்தைகளே என்னிடம் வாருங்கள் என்று சொல்வது போல் பரந்திருக்கிறது. தை பிறந்து விட்டதென்று ஒரேயடியாகப் பூரித்துப் பூக்கள் குலுங்க அந்தப் பிரதேசத்துக்கே சோபையூட்டுகிறது. போர்ட்டிகோவின் முன் வட்டமான பூப்பாத்தி. இடையே அழகாகப் பாதை விட்டுப் புல்தரை பசுமையாக இருக்கிறது.

     நாய் ஒன்றும் இல்லை. மாலை ஐந்து மணிக்குத்தான் வருவதாகச் சொல்லியிருக்கிறாள்.

     வாயிலில் ஆள் அரவமே தெரியவில்லை.

     முன்வாசல் படியேறி வராந்தாவின் இடது பக்கத்தில் அவளது அலுவலறை போல் தெரியும் அறையில் சுஜா எட்டிப் பார்க்கிறாள். அங்கும் சுழல் நாற்காலி காலியாக இருக்கிறது.

     மணியை அடிக்கிறாள்.

     ஒரு பணிப்பெண், விரைந்து வருகிறாள். "உள்ளாற உட்காரச் சொன்னாங்க, இதோ அம்மா வந்திடுவாங்க!"

     தமயந்தியின் அறைக்கு இதற்கு முன் சுஜா ஓரிரு தடவைகள் வந்திருக்கிறாள். அலுவலக மகளிர் அமைப்புக் கூட்டத்துக்கு அவளை அழைக்கவும் சில செய்திகளை விவாதிக்கவும் லீலாவுடன் வந்திருக்கிறாள்.

     அபிராமிக்குப் புதியது.

     அடுக்கடுக்காக அலமாரிகளில் சட்டப் புத்தகங்கள் கோப்புகள் உள்ள மரத்தட்டுகள்... பெரிய மேசை வழவழவென்று எழுதும் சாதனங்களை ஏந்திக் கொண்டிருக்கின்றது.

     தொலைபேசி... காகிதம் பறக்காமல் வைக்கப் பெறும் கண்ணாடி முட்டைக்குள் அழகிய மலர்கள் நிறைந்திருக்கின்றன.

     சுவரில் ஆதிவாசிகளின் சந்தைக் காட்சி ஓவியமாகத் தீட்டப் பெற்ற படம். டைப்ரைட்டர் சற்றுத்தள்ளி மூடி வைக்கப்பட்டிருக்கிறது.

     "ஹலோ, சுஜா, ரொம்ப நேரமாயிட்டுதா?"

     "இல்ல, அஞ்சு நிமிஷம்தானாச்சு. கோர்ட்லேந்து இப்பதா வரியா?..."

     "அப்பவே வந்தாச்சு. ஏன்னு ஊகிச்சிட்டிருப்பியே?"

     சிரித்துக் கொண்டே உட்காருகிறாள். நல்ல உயரமும் பருமனுமான வாளிப்பு; செம்மையோடிய நிறம். தீர்க்கமான மூக்கு; கண்கள்... முப்பது வயசிருக்கலாம் என்று அபிராமி நினைக்கிறாள்.

     "இவங்க தா என் மதர் இன்லா, தமா... நான் சொன்னேனே...!"

     "ஓ... ஐ ஸி... நமஸ்காரம் அம்மா!... இவதா உன் பேபில்ல...? ஹாய்! என்ன பேரு...? உஷால்ல? எனக்கு ரொம்பப் பிடிக்கும். உஷஸ் கருக்கிருட்டைப் பிளந்து கொண்டு நம்பிக்கையளிக்கும் தேவதை. அழகான, வலிமையான, புதுமையான... எல்லாவற்றுக்கும் உஷா..."

     "...அம்மா, இவ எதுக்குச் சட்டம் படிச்சான்னு நினைப்பேன். இலக்கியம் கவிதை எல்லாம் இவளுக்கு ரொம்ப ஈடுபாடு..."

     "ஹிஸ்டரி அதைச் சொல்லு... நம்ப பெண்களின் வரலாறு புதிசா எழுதப்படணும்..."

     "என்ன விசேஷம்...? இன்னிக்கு!..."

     "தெரியாதா? ஊகிக்க முடியலியா? யாரோ ஒரு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர், நூறு சவரன் பிளஸ் ஒரு லட்சம் பிளஸ் க்ராண்ட் மாரியேஜ் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா பார்ட்டி இன்னிக்கு வந்தாங்க. நீ என்ன நினைக்கிற?..."

     "ஸஸ்பென்ஸா இருக்கு."

     "என் ஐடியா போலீசுக்கு ஃபோன் பண்ணி, பார்ட்டியப் புடிச்சிக் குடுக்கலாம்னு..."

     அவள் இடி இடி என்று சிரிக்கிறாள்.

     "ரொம்ப ஆரோக்கியமா இருக்கு..."

     "அதானே முடியல? அம்மா அழுகை, பாட்டி அழுகை, அத்தை, சின்னம்மா முழுப் பெண் பட்டாளத்தையும் நான் ஒருத்தி எப்படி எதித்து நிக்க? நா ஒரு வக்கீல், சட்டத்தை, நியாயத்துக்காக வச்சி வாதாட... எனக்கே இது பயன்பட முடியாம குடுபத்தில கிடந்து எதுக்கு அல்லாடணும்னு புரியல. 'முப்பது வயிசாகப் போவுதே நான் சாவும் முன்ன உன் கலியாணம் பார்க்க முடியாதா'ன்னு பாட்டி அழுவுறாங்க. 'அருமை பெருமையா, செல்லமா, வளர்த்ததுக்கு, நீ இப்படி எதித்து நிக்கலாமா கண்ணு, பாட்டி எவ்வளவு வருத்தப்படுறாங்கன்னு' அம்மா புலம்பல். எனக்கு வர வர நாளொரு கல்யாணப் பேச்சும் பொழுதொரு போராட்டமுமா இருக்கு... குடும்பம்ங்கறது என்னாத்துக்கு? தேவையா? இந்த ஆளுங்கள எப்படி எந்த ஜனமத்தில மாத்தப் போறோம்?"

     "நான் உங்கிட்ட கேட்க வந்தால், நீ அதுக்கு முன்ன எங்கிட்டக் கேக்கற. குடும்பம்ங்கறது தேவையான்னு நானுந்தான் அடிக்கடி நினைச்சுக்கறேன். ஆனா, அதும் சுவாரசியமாப் படல. நீ முதியோர் இல்லம், கிரீஷ் ரெண்டையும் நம்ம ஊருகள்ல பார்த்துப் பழக்கப்படல. இதுங்களப் பார்த்திருந்தேன்னா, பேசமாட்டே."

     "குடும்பம் வாணாம்னா. கிரீஷ் எண்ணத்துக்கு?"

     "அதுசரி... அப்ப முதியோர் இல்லம் இல்லாம இருக்க முடியாதே? கொளத்தூரில ஆசிரமம் ஒண்ணு இருக்கு. கொஞ்சம் போயிப் பாத்துட்டு, நம்மை ஒரு அறுபது வயசா நினைச்சிட்டு, இதில வந்து இருப்பதாக நினைச்சுக்க புரியும்... அதுவும் பெண்கள் நடத்தறதுதான்..."

     "ஏன், அவ்வளவு மோசமா இருக்கா?..."

     "மோசம்... இல்லன்னு சொல்லல... முதியவரா இருந்தாலும், குடும்பத்தில இருக்கும் போது தான் - குடும்பங்கற அமைப்பில தான் மூணு தலைமுறை சந்திக்க முடிகிறது. அந்தக் காலத்தில எல்லாம் துறந்து காட்டில வானப்பிரஸ்தம் போனாங்க, அது வேற யுகம். விஷயம் இப்ப, ஒதுங்கிச் சக்கையா, ஒருத்தருக் கொருத்தர் அதே அவநம்பிக்கை, பழைய மூடத்தனங்கள், இதுங்களோடு போராடிட்டு, அதே கிழட்டு முகங்களை நாள் பூராப் பார்த்துக் கொண்டு இருப்பது பிரச்சனைக்குத் தீர்வாங்கறது புரியல. நாம் மாற்றம் கொண்டு வரணும். அதில்லாம எதுவும் தீர்வாக இருக்க முடியாது தமா..."

     அபிராமி பெருமையும், வியப்புமாக சுஜாவைப் பார்க்கிறாள். அவள் அந்த இரண்டு மூன்று நாட்களில் உணர்ந்ததை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டாள்?

     "எப்படிக் கொண்டு வர? இதா உள் வீட்டில சண்டை போட்டு முடியாம, இங்க உங்கிட்ட வந்திருக்கிறேன்... அம்மாவாவது, அத்தைப் பாட்டியாவதுன்னு தூக்கி எறிஞ்சிட்டு நான் போய் தனியா இருந்தன்னாலும் விடாது. ஆணானால் கத்தரிச்சிட்டு ஓடிடுவான். போனாலும், அவனுக்கு எதுவும் செய்ய விட்டுக் கொடுக்கறாங்க. பொண்ணுங்கன்னு வந்திட்டா... சே...! என்ன பிற்போக்குன்ற? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மண்டயில ஏறுறதே இல்ல..."

     "நாம செம வேலை செய்யணும். ஸ்கூலு, காலேஜ், கோயில், மடம், சேரி... தெருவு, எல்லா இடங்களிலும், பொம்பிளங்கறவ, ஆணைச் சார்ந்து அண்டிக் கிட்டுத் தான் இருக்கணும்ங்கற அதைரியத்த முதல்ல கில்லி எறியணும். மரியாதை குடுக்கறது வேற; அண்டிப் பத்திட்டு எந்தக் கஷ்டத்தையும் சகிக்கிறது வேற... இந்த மூணு வருஷத்தில, நான் எனக்குள்ள போராட்டமே நடத்தித்தான் தெளிஞ்சிருக்கிறேன்... ஒரு வேளை, ஸ்மூத்தா எல்லா சராசரி போல, எனக்கும் என் ஹ்ஸ்பெண்ட் முதல்ல நாலு சேலை வாங்கிக் குடுத்து, பிரியமா இருந்து, பொழுதோட வீட்டுக்கு வந்து நம்ம 'ஆன்டி விமன்' டி.வி. நாடகம் ரசிச்சிட்டு, சம்பளத்தை எங்கிட்டக் குடுத்திருந்தாருன்னா, நானும் சராசரி பொண்ணுங்கள்ல ஒருத்தியா ஆபீஸ் நேரத்தில மாமியாரைப் பத்திக் குறை சொல்லிட்டு, வீட்டில ஆபீஸ்ல வேலை தாஸ்தின்னு கொண்டாடிட்டு, லீவு நாள்ளயும் குழந்தைய வீட்ல விட்டுட்டு ஹஸ்பன்ட் கூட சினிமா, ஓட்டல்னு போயி என்ஜாய் பண்ணிட்டு அப்படியே கிழவியாகிட்டிருப்பேனா இருக்கும்..."

     "அப்ப... வாழ்க்கையில் எதானும் விபத்து வரணும்ங்கற, ஞானோதயம் வர?"

     "ஷ்யூர், தமா. நாமெல்லாம், நமக்குள்ளயே, அடுத்தவரைப் பத்தி நினைக்கறதும் இல்ல! புரிஞ்சிக்கிறதும் இல்ல. இப்ப இவங்க கதைய நீ கேக்கப் போற, யோசனையும் சொல்லப் போறன்னு தான் வந்திருக்கிறோம். தான் எந்த சிரமங்களைப் பட்டோமோ, அதை இளைய தலைமுறை நமது சொந்த மகளே படக்கூடாதுங்கற எண்ணமே உதிக்கிறதில்ல. கண்ணை மூடிட்டு, போட்ட தடத்தில தான் போகணும். இல்லாத போனால் என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டே இருக்காங்க, வற்புறுத்தறாங்க..."

     "உண்மைதான்."

     கண்ணாடிக் குண்டை இந்தக் கையிலும் அந்தக் கையிலும் மாற்றிக் கொண்டு தமயந்தி அபிராமியை ஆராய்ந்து கொண்டிருக்கிறாள்.

     அபிராமிக்கு உள்ளூற நாணமாக இருக்கிறது. எழுந்திருக்கிறாள்.

     "சுஜா, நீ... அவங்ககிட்ட, எல்லா விவரமும் சொல்லி யோசனை கேளு. நான் கொஞ்சம் தோட்டத்திலே நிக்கிறேன்."

     "ஓ... என்னம்மா இது? ப்ளீஸ்... உட்காருங்க. நீங்க சொல்லுங்க விவரமா..."

     "...எனக்கு அப்படித் தெளிவாச் சொல்லக் கூட வராது... இப்ப நாங்க மாமியார் மருமகள் இல்லை. என் பெண், ஆதரவாளர், எல்லாம் அவள் தான். அவளை விட என்னை நன்றாகப் புரிஞ்சிட்டவங்க இல்லை. அவளே சொல்லுவாள்..."

     "சரி, அதுக்கு நீங்க ஏன் எழுந்து போகணும்? வக்கீலிடமும் டாக்டரிடமும் ஒளிக்கக் கூடாதும்மா எதுவும்..."

     "ஒளிக்கலியே? நான் தான் இன்னமும் அஞ்ஞானத்துடன் எதானும் மறைப்பேன் அவளுக்குத் தெரியும். எல்லாம் அவளிடம் சொல்லி விட்டேன்..."

     சுஜா ஜாடை காட்டுகிறாள்.

     தமயந்தி அமருகிறாள்.

     "வாடி கண்ணு, நாம மரத்தில ஊஞ்சல் ஆடலாம்..."

     குழந்தையை அழைத்துக் கொண்டு அபிராமி வெளியேறுகிறாள். மரத்தடியில் கிளை தாழ்ந்து படிந்து குழந்தையை உட்கார்த்தி வைத்து விளையாட்டுக் காட்ட வசதியாக இருக்கிறது.

     இந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு, தோட்டத்து ஓரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகள், அண்ணனும் தங்கையும் இவள் அருகில் வந்து நிற்கின்றனர். அவர்கள் கோலமே தோட்டக்காரன் அல்லது வேலைக்காரியின் குழந்தைகளாக இருக்கும் என்று விளங்குகிறது. "பாப்பா... வாங்க...? உஷாக்கண்ணோட விளையாடலாம்...?"

     அந்தப் பையன் சரசரவென்று மரத்தின் அடிக்கிளையிலிருந்து மேலேறி நிற்கிறான்.

     கையைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்.

     உஷாவுக்கு ஒரே மகிழ்ச்சி கையைத் தட்டிக் கொண்டு சிரிக்கிறது.

     பிறகு மரத்தைச் சுற்றி அவர்களை விளையாட வைக்கிறாள்.

     மஞ்சள் வெயில் முறுகி, இருள் பரவும் நேரம் வந்து தெரு விளக்குகள் பூக்கின்றன.

     "உஷா... வா... வாம்மா, போகலாம்...!"

     சுஜா வெளியே வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறாள். காபி வைத்திருக்கிறது.

     "இப்ப எதுக்குக் காபி...?"

     அபிராமி தயங்குகிறாள்.

     "சும்மா உக்காந்து சாப்பிடுங்க!... நானும் சுஜாவும் ரொம்ப சிநேகம்; படிக்கிற காலத்தில கவலையே தெரியாது. எதுவும் சிரிப்பாக இருக்கும்; ஜாலிதான்... இப்ப... அந்தக் காலம் போயிடிச்சேன்னு இருக்கு... இப்ப எதுக்கானும் சிரிச்சிட்டா, எங்க ஸீனியர், கழுகு மாதிரி மூஞ்சிய வச்சிட்டுப் பாக்கும். 'என்ன சிரிப்பு'ங்கும். வாழ்க்கை தான் எப்படி மாறிப் போகுது?..."

     அபிராமி காபியைக் கூச்சத்துடன் எடுத்துப் பருகுகிறாள்.

     "எல்லா விவரமும் கேட்டேன். அம்மா, நீங்க, அன்னிக்கு இதைக் கண்டு பிடிச்ச உடனே வங்கில கேட்டப்ப, நாந்தான் செக் குடுத்தேன்னு சொல்லிட்டீங்க இல்ல...?"

     "ஆமாம், ஒரே ஜடமா, மக்கா இருக்கிறேன் சில சமயத்தில. அப்ப, போனா போகட்டும், தொலையட்டும் நமக்கு ஒண்ணும் வானாம்னு தோணித்து தவிர..."

     "சொல்லுங்க!"

     "அக்கம்பக்க மெல்லாம் ஒரு போலியான மரியாதைக்கு அவம்மேல தப்பில்லைன்னு அபிப்பிராயம் இருந்தது, இருக்கு. அதை உடச்சிக்கிறாப்பல, கேவலமா ஆயிடுமே? ஏற்கெனவே, அவங்க வேற விதமா கண்டதும் பேசிட்டிருந்தா. எனக்கு அப்ப, இந்த சங்காத்தியமே வேண்டாம்னு வெறுப்பாக இருந்தது. அப்புறம் கூடப் போய்ச் சொல்லாம இருந்துட்டேன்... நீங்கள்ளாரும் சின்னவங்களா இருக்கிறீங்க, ஆனா துணிவா, முடிவு எடுக்கிறீங்க. எனக்கு முடிவு எடுக்க முடியாத பலவீனமே எப்போதும். தனம்மாவும், சுந்தராம்மாவும் ஒரே மாதிரிப் பேசுறவங்க தான். சுஜா என்னைக் கூட்டிட்டுப் போறப்ப... எப்படி ஆறுதலாக இருந்தது? ஆனால் நாலு நாளைக்குள்ள ஏன் ஓடினேன்? திரும்பவும் என்னமோ என் இடம் அங்கு தான்னு ஒரு பிரமை. உள் மனசுக்குத் தப்புன்னு தெரிஞ்சாலும் அவங்கல்லாம், பையன் பக்கமே பேசறப்ப அந்தப் பொய்யையே நிசம் போல நினைச்சிட்டிருந்தேன்..."

     "இப்ப மட்டும் உங்களுக்கு ஏன் இத்தனை கடுமை? நான் இப்போதும் சொல்றேன். வீணா வழக்கு கோர்ட்டுன்னு நீங்க உங்க பிள்ளை மேல சேற்றை வாரி இறைச்சு அவனை ஜெயில்ல போடறதில என்ன லாபம் வரப்போறது உங்களுக்கு. அதை விட்டுட்டு போனாப் போவுது, இத்தோட தொலைஞ்சிது இனி அவன் வரதுக்கு ஒண்ணுமில்லன்னு இருந்துட்டா என்ன?"

     "இல்ல அவன் இந்தப் பெண்களை - தாயாராக இருப்பவளை, ஏமாத்திடலாம்னு நினைச்சான். அதுக்கு அவனைச் சும்மா விடக்கூடாது..."

     "சரி, இப்ப கேஸ்... பாங்கே எடுத்து நடத்துதுன்னு வச்சுக்குங்க. ஆள் நாட்டை விட்டுப் போயிருந்தா எதுவும் செய்ய முடியாது. ரெண்டாவது, கோர்ட் கேஸ்னு வந்தால் என்னவெல்லாமோ வெளியில் கிளம்பும். எங்கெல்லாம் இருந்தோ கெளறுவாங்க, தோண்டு வாங்க. உங்களைக் குறுக்கு விசாரணை பண்ணுவாங்க. நீங்க நினைச்சே பார்க்காத திருப்பம் வரலாம். அப்ப நீங்க வெறும் உணர்ச்சி மூட்டைன்னு கொஞ்சம் தெரிஞ்சிட்டாலும் போச்சு, ஏன் கோர்ட்டுக்குப் போனோம்னு வருத்தப்படறாப்பல ஆகலாம். எல்லாத்துக்கும் தயாரா?..."

     அபிராமி திணறிப் போகிறாள்.

     "உங்க மகனோடு நீங்க சமாதானமாப் போகணும், மன்னிக்கணும், திருந்த சந்தர்ப்பம் கொடுக்கணும்னு நான் நிச்சயமாச் சொல்லப் போறதில்ல. நிச்சயமா நாம் நினைக்கிற மாறுதல் அதனால் வரப் போறதில்ல. நீங்க தீர யோசனை செய்யுங்கள். உணர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி, அறிவை முன்னுக்கு வச்சு யோசனை செய்து முடிவு செய்யுங்கள். பண்ணியதும் என்னிடம் வாங்க, ஏன் சுஜா? நேரே எங்க ஆபீசுக்கே வந்திடுங்க. தம்பு செட்டித் தெரு... தெரியுமில்ல?"

     "ஓ..."

     "ஓ...கே...?"

     அவள் எழுந்திருக்கிறாள்.

     "உஷா பாப்பா!... போறியா?..."

     அருகில் வந்து குழந்தைக்கு முத்தம் கொடுக்கிறாள்.

     "டாடா சொல்லு, ஆண்டிக்கு!"

     குழந்தை கையை ஆட்டுகிறாள்.

     அபிராமி கையைக் குவிக்கிறாள்.

     சுந்தராம்மாளிடம், தனம்மாளிடம் யோசனை கேட்கப் போய், தன்னை ஒரு சூன்யமாய் மதித்த நிலையில் உட்கார்ந்திருந்த நினைவு உறுத்துகிறது.

     உணர்ச்சிகளின் எல்லையில் நிற்கும் பருவத்தினரான இவர்களுக்குப் பாதுகாப்பும் துணிவும் நல்க வேண்டிய தலைமுறைக்காரி அவள்.

     அவள் தலை முறையினர், படிப்பறிவும், பொருளாதார சுதந்தரம் பெற்றும் தெளிவு பெறவில்லை. அந்தக் குருட்டுத் தடத்திலேயே பெண்களின் கண்களைக் கட்டி அழைத்து வருகிறார்கள்; ஆண்களை எந்த நிலையிலும் ஏற்றிப் போற்றுகிறார்கள். உணர்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளி அறிவை முன்னுக்கு வைத்து யோசனை செய்... அந்த முதியோர் இல்லத்துக்குப் போகச் சொன்னவள் சுந்தராம்மா தான். அநுபவங்கள் எது உகந்தது, எது கெடுதலானது என்று உணர்வித்திருந்தும் இவள் அந்த அநுபவப் பாடங்களைப் பயன்படுத்திக் கொள்ள, அறிவைத் துலக்கிக் கொள்ளவில்லை.

     சுற்றுச் சுவரை விட்டு வெளியே வந்து நடக்கிறார்கள்.

     வெளியில் சாலை விளக்கு தொலைவில் தான் வெளிச்சம் காட்டுகிறது. யார் யாரோ முகம் புரியாத அந்தப் பொழுதில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

     "அம்மா, நீங்க நல்லா யோசனை பண்ணிக்கிங்க. என்னைப் பொறுத்த மட்டிலும் நான் எந்த சந்தர்ப்பத்தையும் துணிவோடு சமாளிக்க வேணும்னு தீர்மானமா இருக்கிறேன். என்னைப் பொறுத்த மட்டிலும், நான் அந்த உறவை விட்டாச்சு. நாளைக்குக் கோர்ட்டில் எந்தக் கேள்வி எழுந்தாலும் அதே துணிவுடன் என்னால் சமாளிக்க முடியும். ஆனா... நீங்க... மறுபடியும் மறுபடியும், வழுக்கிப் போயிடக் கூடாது. ஒருவேளை எல்லாம் கூடி தண்டனைன்னு வந்த பிறகு, சினிமாவில காட்டுவாங்க, சிறைக்கம்பிக்குப் பின்னால், தாடியும் மீசையும் கண்ணீருமா, பரிதாபத்துக்குரிய நல்லதொரு இமேஜைக் காட்டி, காதலியோ, மனைவியோ காத்திருப்பதாகக் காட்டுவாங்க. அப்புடி ஒரு இமேஜை நீங்கள் உங்களுக்குள்ளே வளர்க்கிறதாக இருந்தால், வழக்கும் வேண்டாம், வம்பும் வேண்டாம். எத்த்னையோ குற்றவாளிகள் தண்டனை பெறவில்லையா? அதுபோல் இவனும் ஆடினான், அனுபவிக்கிறான் என்று நினைப்பதாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் என் வாழ்க்கையில் இருந்து கணவன், என் குழந்தையின் தகப்பன் என்ற தார்மிகப் பொறுப்புக்களை அலட்சியமாகக் கருதிவிட்டுப் போனவன் தான், வில்லன் தான். ஆனால் நீங்கள்...?" சுஜாவின் முகம் தெரியவில்லை.

     மௌனமாகவே நடக்கிறார்கள். பஸ் நிற்கும் இடம்... ஒளி பரவியிருக்கிறது.

     ஆனால் நீங்கள்...? நீங்கள்...? நீங்கள்...?...

     அவளுக்குள் அந்தக் கேள்வி பத்து நூறு ஆயிரமாகப் பெருகி வளைக்கிறது.

     பஸ் வந்துட்டது...

     "ஏறுங்க...? அம்மா, ஏறிக்குங்கோ!"

     கையைக் கொடுத்து உள்ளே ஏற்றுகிறாள்... "இங்கே இடம் இருக்கு உக்காருங்க அம்மா... உஷா... பாட்டிட்ட உக்காந்துக்க!"

     "பாட்டிட்ட..."

     குழந்தை சிரிக்கிறாள்.

     பஸ் தன் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான திருப்பத்துக்குக் கொண்டு செல்வதாக ஒரு துணிவும் தெம்பும் தோன்றுகின்றன. குழந்தையை இறுக அணைத்துக் கொள்கிறாள்.

(முற்றும்)