15

     அபிராமி, இப்படி ஒரு இல்லத்தை வாழ்நாளில் நினைத்துப் பார்த்திருக்கிறாளோ? இல்லை. செய்திகளாக வயசு வந்தவர்கள் ஒதுங்க இல்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். தெரிஸா அன்னை சாகும் காலத்தில் நிராதரவாக அபலைகளுக்கு ஒரு புகலிடம் வேண்டும் என்று சொன்னதை தொலைக்காட்சியில் பார்த்ததாக நினைவு. இந்துக்களுக்கு அப்படி ஒரு இடம் என்பதை, சங்கராச்சாரியாருடைய ஆசிகளுடன் இணைத்துப் பார்த்துக் கொள்கிறாள்.

     உள்ளே நுழைந்ததும், கீழ்ப்பகுதியில் உள்ள அறைகளில் ஆண்கள் இருக்கிறார்கள் என்றும், பின்பகுதி உக்கிராணம், சமையற்கட்டு என்று ஒதுக்கப்பட்டது என்றும், பெண்களுக்குத் தங்குமிடம் மாடிப்பகுதி என்றும் புரிந்து கொள்கிறாள்.

     சாரதா உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்து அறை வாசலில், ஒட்டிய கன்னங்களும் முன் வழுக்கையுமாக ஒருவர் வெள்ளைச் சட்டையுடன் நிற்கிறார்.

     "நமஸ்காரம்... அவா வந்திருந்தாளா...?"

     "ஆ... இப்பத்தான் வந்து இண்டர்வ்யூ முடிச்சிட்டுப் போனா..."

     "டேப்பும் பண்ணிக்கச் சொன்னேனே?"

     "ஆமாம்... ஃபோட்டோவும் எடுத்திட்டா..."

     "எல்லா விஷயமும் விவரமாச் சொல்லியிருக்கேள் இல்லையா...?"

     "ஆமாம், அவாளுக்கே ஆச்சரியம். இந்த மூலையில் இப்படி ஒரு அத்யாவசியமான சர்வீஸ் பண்றேளேம்மான்னு. வளசரவாக்கத்தில இன்னொரு ஆசிரமம் வைக்கக் கட்டிடம் எழுப்பிட்டிருக்கிறோம்... ரொம்பப் பேர் அமெரிக்காவிலும் அங்கும் இங்கும் ஸெட்டிலாயிடறா. பெரியவாளுக்கு ஒரு பிடிப்பே இல்லாம போயிடறதுன்னேன். இப்படி அப்படி ரொம்பப் பேர் வந்துடறோம்ங்கறா..."

     சாரதா நிறுத்தி விட்டு, "இவா... புதுசா வந்திருக்கா, நம்ம கோமதிப் பாட்டி ரூமில ஒரு இடம் இருக்கே... காட்டத்தான் கூட்டிண்டு போறேன்..."

     மாடியேறிப் போகிறார்கள்.

     "இவர் ஒரு இன்மேட்... கலெக்டரா இருந்து ரிடயர் ஆயிட்டார். பெண்-பிள்ளை எல்லாரும் இருக்கா. ஒத்துக்கல. இந்தக் காலம் சுதந்தரமா இடம் கொடுத்து வளத்துடறா. பின்னால, ஜனரேஷன் கேப்னு ஒத்துக்காம போயிடறது. அக்கடான்னு இங்க வந்துட்டார். நாலு வருஷமாறது..." என்று அவரைப் பற்றி படி ஏறும் போது சொல்கிறாள்.

     மாடிப்படியில் ஒரு வேலைக்காரன் கும்பிடு போடுகிறான் சாரதாவுக்கு.

     "...வெங்கம்மா? வெங்கம்மா பாட்டி இருக்காளா?..."

     வெங்கம்மா என்ற நரைத்தலை, உலர்ந்து காய்ந்த உருவம் ஒரு சோகைச் சேலையில் விரைந்து வருகிறது. அவளுடைய பற்களும் சிரிப்பும், உருவத்துக்கு நேர்மாறாக இளமையுடன் விளங்குகின்றன.

     "என்ன, டிஃபனெல்லாம் வந்ததா?... போண்டா தானே?"

     "ஆமாம். எல்லாம் வந்து அப்பவே முடிஞ்சாச்சு..."

     "இவா புதிசா வர இருக்கா... டீச்சரா இருந்து ரிடயர் ஆயிருக்கா, சுந்தராம்மா இல்லையா? அன்னிக்கூட பெரியவா வந்த அன்னிக்கு வந்து பூஜை பண்ண ஏற்பாடு செய்தாரே? அவர் ஸ்கூல்ல தான் இருந்திருக்கா... லெட்டர் குடுத்திருக்கா..."

     "அப்படியா... வாங்கோம்மா?..."

     மருந்துக்கும் இளமை நம்பிக்கை இல்லாதபடி ஒட்டி உலர்ந்த குழி விழுந்த, பொக்கைக் கோலங்கள். சேலை வண்ணங்களோ, சொல்ல வேண்டாம்...

     அபிராமிக்குத் திக்கென்றிருக்கிறது.

     இவர்களுக்கிடையே அவள்... இருக்கப் போகிறாளா?

     நீண்ட கூடத்தில் ஒரு மூலையில் சுவாமி படங்கள் வைத்திருக்கின்றன.

     புள்ளி வைத்த மாக்கோலத் தாமரைப் பூ அழகாக வரிந்திருக்கிறது...

     "இது ஹால்-டார்மிடரி டைப். இங்கே பன்னிரண்டு பேர் இருக்கா..."

     "ரூம்... பாருங்கோ?..."

     பழைய காலத்து வீட்டு அறைகள். கூடத்துக்கு வலப்புறம் இரண்டு; இடப்புறம் இரண்டு... ஒரு அறையில் மூன்று கட்டில்கள் இருக்கின்றன. முன்புறம் உள்ள அறையில், ஒரு கட்டிலும், பெரிதாக ஒரு அலமாரியும் ஒரு மேசையும் இருக்கின்றன. அந்த அறையில் இருக்கும் சுமனா பாய், வசதியுள்ளவள்; மூகாம்பிகை தரிசனத்துக்குப் போயிருக்கிறாளாம். ஓய்வு பெற்ற நர்ஸாம். அறைகளைப் பார்க்கும் போது, ஆஸ்பத்திரிக் கட்டில்களின் நினைவே வருகிறது. தனக்கென்று அவர்கள் காட்டிய அறையின் கட்டிலில், பழமாய், குடுக்கையான மொட்டைத் தலையுடன், வெள்ளைச் சேலைக் கிழம் ஒன்று கிடக்கிறது.

     "பாட்டீ? என்ன பண்றேள்?..."

     சாரதா உள்ளே அடி வைக்கிறாள்.

     "சாரதா வாம்மா...? ஆர் வந்திருக்கா?..."

     "உங்க ரூமுக்கு, உங்களுக்குத் துணை வந்திருக்கா..."

     "யாரோ பேப்பர்காரா வரான்னு சொல்லிண்டாளே? எங்கிட்ட சித்த கூட்டிண்டு வாடீ!... அந்தக் காலத்திலே, அவர் புஸ்தகம் போட்டார். கட்டுக்கட்டா வரும். எல்லாரும் வாசிச்சு, அவர் எழுத்துன்னா ரொம்ப மோகமா இருப்பா. எல்லாம் எழுதச் சொல்லணும் டீ..."

     "எல்லாம் சொல்லிருக்கேன் பாட்டீ?..."

     "பேரன், கிச்சா... அவனையும் சொல்லிருக்கையோ? அவனுந்தான் இங்கிலீஷ்லே எழுதுறான்..."

     வெங்கம்மா முன் வந்து, "விட மாட்டாளே!" என்று முணமுணக்கிறாள்.

     "இதோ பாருங்கோ, இதான் அலமாரி, இந்த இடத்துக்கு. பக்கத்தில பாத்ரூம். வெளி வராந்தாவில் புடவை எதாச்சு உலர்த்திக்கலாம். முடியாதவா எக்ஸ்ட்ரா பத்து ரூபா குடுத்தா, தோச்சு மடியா உலர்த்திடுவா... காலம ஆறு மணிக்குக் காபி. பத்தாவது மணிக்குச் சாப்பாடு. ஒண்ணரை மணிக்கு இரண்டாந்தரம் காபி. நாலுமணி சுமாருக்கு எதானும் மிருதுவா, கொறிக்கக் குடுக்கறோம். ஏழு மணிக்கு, பலகாரம் - ஏன்னா, ராத்திரி இங்க சாப்பாடுன்னு குழம்பு ரசம் போட்டுச் சாப்பிடறவா இல்லை. தோசையோ, இட்டிலியோ, சேவையோ, உப்புமாவோ சாம்பார் சட்டினி வச்சுக் குடுத்துடறோம். பால்வேணுங்கறவா அதுக்கு எக்ஸ்ட்ரா குடுத்து வாங்கிக்கலாம்... இங்க ஆஸ்திக நற்பணி மன்றம் இருக்கு. அடிக்கடி சத்கதை காலட்சேபம், பிரசங்கம், பஜனை நடக்கும்... எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்ங்கறதுதான் எனக்கு..."

     அபிராமி அந்த அறையில், அந்தக் கும்பலில் ஒருத்தியாகத் தன்னைப் பொருத்திக் கொள்கிறாள். இந்த வீட்டுக்குள், இவர்களிடையே தனது பழைய அத்தனை நினனவுகளையும் தொடர்புகளையும் துடைத்துக் கொண்டு, நேரத்தில் சாப்பிட்டு விட்டு, பஜனை சத் கதாகாலட்சேபம் என்று போய்க் கொண்டு... முதியவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

     முடிவு நிச்சயமாக்கப்பட்ட ஒற்றையடித்தடம் என்று வந்திருக்கிறாள். ஆனால் எங்கே கொண்டு செல்லுமோ என்ற தெளிவின்மை அவளைக் கப்பிக் கொள்கிறது.

     மீண்டும் சாரதாம்பாளுடன் வீட்டுக்கு வந்து, அவளிடம் இருந்து விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக் கொள்கிறாள்.

     மறுநாள் பதினோரு மணி சுமாருக்கு, சுஜாவின் சாமான்களை டெம்போவில் அனுப்பி விட்டு, அவளும் செல்கிறாள்.

     அடுத்த நாள் போகிப் பண்டிகை. எங்கும் ஒரே கலகலப்பு. வண்ண வண்ணங்களாக நடை பாதையில் நிரம்பி வழியும் பல்வேறு கடைகள். துணிமணியிலிருந்து பழ வகைகள், கரும்பு முதல் நடக்க இடமில்லாமல் நிரம்பியிருக்கின்றன. சிறுவருக்கான சிறு உடுக்கு போன்ற டமாரம்... ஒரு ரூபாய் கொடுத்து உஷாவுக்கு ஒன்று வாங்குகிறாள்.

     அவள் அந்த விசாலமான தெருவில் டெம்போவை எதிர்பார்த்து நிற்கையில், கந்தப்பனே "அம்மா?" என்று அழைக்கிறான்.

     "நா வந்து அரை அவுராச்சிம்மா!"

     அபிராமி மாடியேறுகிறாள். கதவை மங்களம் தான் வந்து திறக்கிறாள்.

     "வாங்கோம்மா? வாங்க... சுஜா சொல்லிட்டே இருக்கா. இன்னிக்கே ஒரு வேளை வந்தாலும் வருவா, ஆபீசிலேருந்து?"

     அபிராமி உள்ளே சென்று குழந்தை கையில் ஆப்பிளையும், அந்தத் தமுக்கையும் கொடுத்து விட்டு முத்தமிட்டுக் கொள்கிறாள்.

     அலமாரியை மாடிக்கு ஏற்ற அரைமணியாகிறது. பெட்டியையும் ஏற்றி வைக்கிறாள்.

     "அம்மா, வீட்டை வித்தாச்சு. எனக்கு சுஜி முகத்தில முழிக்க யோக்கியதை இல்லை. நான் நம்பிக்கை மோசம் செஞ்சுட்டேன். சாகும் வரை இது விடாது..."

     கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

     "என்னம்மா? என்னென்னவோ சொல்றேளே? வீட்டை வித்துட்டு எங்க இருக்கீங்க? உடம்பு... காலா, கறுத்து அடையாளம் தெரியாமே ஆயிட்டீங்க? உக்காருங்கம்மா?"

     அபிராமி உட்காரவில்லை.

     அவளால் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

     "அடாடா... என்னம்மா?... நீங்க பேசாம விட்டுத் தொலைச்சிட்டு இங்க வந்துட வேண்டியதுதான? ஒருத்தருக்கு ரெண்டு பேராக் கிடந்துட்டுப் போறம்...?"

     "...உஷாக்கண்ணு, பாட்டிய அழாதே சொல்லும்மா?"

     அபிராமி முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்... "எல்லாம் விட்டாச்சு. ஆசிரமத்திலே சேர்ந்துட முடிவும் எடுத்து ஏற்பாடு பண்ணியாச்சு.... இவ சாமான்... நான் வரேம்மா - வரேண்டீ கண்ணே..."

     குழந்தை புடைவையைப் பற்றுகிறது.

     "சுஜி வந்தப்புறம் சொல்லிட்டு... முடிவு பண்ணுங்கோம்மா, அவ வந்தா என்னைத்தான் கோவிச்சிப்பா!"

     "எனக்கு முகமில்லை..."

     குழந்தை தானும் வருவதாக அழுகிறாள். விடாப்பிடியாக வேறாக்கிக் கொண்டு படியில் இறங்குகிறாள்.

     டொனேஷன், அட்வான்ஸுக்குப் போதுமான பணம் இல்லை.

     வீட்டுப் பாத்திரம் - தட்டு முட்டுக்கள், பெட்டியோடு அதே கந்தப்பன் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று கடையில் போடுகிறாள்!

     "எங்கம்மா? சாமானை எடுத்திட்டு எங்கே போயிட்டீங்க?... சொல்லல கொள்ளல? சீனி கிட்டேந்து காயிதம் வந்திச்சா?..."

     தனம்மாளின் விசாரணை.

     "...ம்... நாந்தான் முடிவு பண்ணிட்டேன். சுந்தராம்மா சொன்னாங்க, குளத்தூர்ல 'அமைதி ஆசிரமம்'னு இருக்கு. வயசு காலத்தில் அங்க இருந்துக்குவம்னு முடிவு பண்ணிட்டேன்... நாளைக்குத் தை பிறக்கிறதில்லையா, போறேன்..."

     "அடாடா...? அவுசர அவுசரமா எங்கியோ போறீங்க, வரீங்க, தெரியலியேன்னு நினைச்சேன்."

     எல்லாக் கேள்விக் குறிகளுக்கும் ஒரே பதில்...

     தனது சொற்பமான சேலை-துணி, மற்றும் சில புத்தகங்கள், அந்தப் பட்டாபிஷேக வெள்ளிப் படம், சாப்பிடும் தட்டு, ஃபிளாஸ்கு... என்று ஒரு பெட்டி, படுக்கை, கூடையில் அவளுடைய இத்தனை காலத்து வாழ்வின் எச்சங்கள் அடங்கிவிட்டன.

     அமைதி ஆசிரமத்துக்கு அவள் வந்து சேருகையில், மாலை நான்கு மணி இருக்கும்.

     "வாங்கோம்மா... வாங்கோ?..."

     வெங்கம்மா தான் வாயெல்லாம் பல்லாக வந்து, படுக்கையைத் தூக்கிப் போகிறாள். பெட்டியைப் படுக்கைக்கு அடியில் வைக்கிறாள்.

     "தேவலாம், தட்டு ஃபிளாஸ்கெல்லாம் கொண்டு வந்துட்டேள்..."

     "காபி வாங்கிண்டு வந்துடட்டுமா?..."

     உண்மையில் அபிராமி அன்று காலை காபிக்குப் பிறகு ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. ரயில் நிலைய கான்டீனில், இரண்டு தோசையும் காபியும் வாங்கிச் சாப்பிட்டாள்.

     வெங்கம்மா ஒரு இலையில் இரண்டு வடையும், ஒரு போளியும், வைத்துக் கொண்டு வந்து தருகிறாள்.

     "இன்னிக்கு போகியில்லையா? காலம யாருக்கு இறங்கும்? அதுனால, மத்தியான டிபனா இருக்கட்டும்னு சாரதா சொல்லிட்டாப்ல இருக்கு." இங்கே எல்லாம் சாரதா தான் என்பது ஒவ்வொரு நிமிஷமும் அறிவுறுத்தப்படுவதாகத் தோன்றுகிறது.

     தனது முதல் நாளை, இனிப்பும் காரமுமாக இங்கே கொண்டாடுகிறோம், என்று தேறுதல் குறிக் கொள்கிறாள்...

     மறுநாள் சங்கராந்திக்கு, வீடு முழுவதும் பெருக்கித் துடைக்க வேண்டும்... அது, டார்மிடரி, கூடத்தில் இருக்கும் சிலர் பொறுப்பு போலிருக்கிறது.

     "துளசி மாமி? காலம நீங்க கோலம் போடுங்கோ. நீங்க தான் புடிச்சு நிறுத்தினாப்பல படிக்கோலம் போடுவேள்?"

     "நான் என்னடி, பழங்காலப் பைத்தியம். இப்பல்லாம் இங்கிலீஷ் கோலம் போடறா. புஸ்தகமெல்லாம் படிச்சிட்டு..."

     "ஆமா, பொல்லாத இங்கிலீஷ் கோலம்! புள்ளியச் சேத்துச் சேத்து இழுத்துண்டு போடற கோலம். நீங்க போடற பிரும்ம முடி இன்னும் எனக்கு ஏழு புள்ளிக்கு மேல போடத் தெரியல!..."

     "புதிசா வந்திருக்காளே, அவா கோலம் நன்னாப் போடுவாளோ என்னமோ?"

     "அவ டீச்சரா இருந்து ரிடயர் ஆகியிருக்கா. நம்மப் போல இல்ல..."

     "டீச்சரா?... சர்த்தான்... அதான் ஜாதிக்கட்டுக் கட்டிக்கலியேன்னு நினைச்சேன்... டீச்சரா..."

     "புடவை தோச்சுக்குடுக்க நீ ஒத்துண்டிருக்கியா வெங்கி?..."

     "ஏங்கிட்ட கேக்கல ஒருகா, தாயம்மாளே தோச்சா உடுத்திப்பாளா இருக்கும்..."

     அபிராமிக்குத் தன் அறையில் அப்போதே முடங்கப் பிடிக்கவில்லை. அவள் முன் வராந்தாவில் நிற்கையில் இதெல்லாம் செவிகளில் விழுகின்றன.

     "சுமனா பாய் வந்துட்டா, ரெண்டு பேரும் படிச்சவா, சரியாயிருக்கும். நம்மோட அவா பேசறதுக்கு என்ன இருக்கு? நமக்கு சமையலும் சாப்பாடும், பெருக்கலும் மெழுகலும் தான் தெரியும்... கிருஷ்ணா ராமான்னு சொல்லக் கூடத் தெம்பில்ல..."

     அவள் சகஜமாக அவர்களுடன் பேச வராததைக் குறிப்பாக்குவது போல் தோன்றுகிறது. எனினும் யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. தெருவைப் பார்த்துக் கொண்டு, சிறுவர் சிறுமியர் புதிய டமாரங்களைக் கொட்டிக் கொண்டு ரசிப்பதைச் செவியுற்ற வண்ணம் நிற்கிறாள். எங்கோ அருகில் மைக் போட்டு சினிமாப் பாட்டு வைக்கத் தொடங்குகிறார்கள். காதைத் துளைக்கிறது.

     விளக்கு வைத்ததும் கூடத்தில் எல்லாருமாக உட்கார்ந்து பஜனை செய்கிறார்கள். ஆர்மோனியச் சுருதி போட்டுக் கொண்டு தான் பாடுகிறார்கள். ஆனால் கட்டைக் குரலும் பிசிறடித்த குரலும், கீச்சுக் குரலும் ஒன்றையொன்று ஒட்டாமல் தனித்தனி வண்ணங்களாக சுறுதி முறுக்கில் சேராமல் தனித்துவம் காட்டுகின்றன. வெளியேயிருந்து வரும் சினிமாப் பாட்டு ஒலியை, இந்த ஒலி விழுங்கி விடுகிறது. அபிராமி அந்த பஜனையில் சாட்சியாக உட்கார்ந்திருக்கிறாள்.

     அவள் அறையிலிருக்கும் கிழவிக்குத் தொண்ணூறு வயசாம். அவள் எழுந்து வரவில்லை. அவளைச் சாயங்காலத்தில் குளியலறைக்குக் கொண்டு விட்டு, சுத்தம் செய்து கொள்ள வெங்கிதான் உதவுகிறாள். விபூதியைக் குழைத்துப் பட்டையாகக் குடுக்கை முகத்து நெற்றியிலும் சுருங்கிய கைகளிலும் இட்டுக் கொண்டு, கட்டிலிலேயே உட்கார்ந்திருக்கிறாள்.

     கீழிருந்து சொர்ணமும், அவள் புருஷனும் உப்புமாக் கொழுக்கட்டையும் சாம்பார் துடுக்கும் எடுத்து வரும் அரவத்துடன் பஜனை நிறைவேறி விடுகிறது.

     துளசி கர்ப்பூரம் காட்டுகிறாள். நிவேதனமாக நான்கு பழங்கள். முறை போட்டு வாங்கி வைப்பார்களாம். அவர்களுக்குப் போகும் என்று தெரிந்து கொள்கிறாள்.

     "அபிராமி, அம்மா, பலகாரந்தானே?... இல்லே நீங்க சாப்பிடும் வழக்கம் உண்டோ?"

     கொழுக்கட்டைத் தூக்குடன் சொர்ணம் இவளிடம் நின்று கேட்கிறாள்.

     "...எனக்கு எதுவும் பழக்கந்தான்..."

     "ரூம்லந்து எழுந்து படில இறங்க முடியும்னா கீழ கூடத்தில வந்து சாப்பிடலாம். மேல சாப்பிட்டுத் துடைச்சு ஈரமானா அவா படுத்துக்க முடியாது..."

     "கீழ வரணும்னா வரேன்..."

     "இன்னிக்கு வாண்டாம். கொண்டு வந்துட்டேன்..."

     தட்டைக் கீழே வைத்துக் கொள்கிறாள். எதிர்க்கட்டில் கிழவிக்குக் கட்டிலில் உட்கார்ந்தவாறே சாப்பிடுவதற்கு ஒரு ஸ்டூல் போட்டு, தட்டில் எடுத்து வைக்கிறாள்.

     "சாம்பார் சட்னி... இப்படியே போடட்டுமா?"

     "உம்..."

     "ஏண்டி? கொத்ஸு வைக்கறதுக்கென்ன?... நீ என்ன பண்ணுவே, சாரதா சொல்லிருப்பா...?"

     கிழம் முணமுணத்துக் கொண்டு சாப்பிடுகிறது.

     "உங்களுக்கு பால் வேணுமா?..."

     "...எனக்குப் வழக்கமில்லை..."

     அபிராமி விரைவில் முடித்துக் கொண்டு தட்டை எடுத்துச் சென்று கழுவி வருகிறாள்.

     சிறிது நேரம் வராந்தாவில் நின்று வாசலைப் பார்க்கிறாள். தெரு விளக்கு ஒன்றும் எரியவில்லை... முகம் தெரியாதவர் நடமாட்டம் கூட ஓய்ந்து போகிறது. நகரத்துக் குடியிருப்பானால் இரவு பதினோரு மணி வரையிலும் கூட அரவம் இருக்கும்...

     பத்து மணிக்குள் எல்லாரும் கூடத்தில் படுக்கை விரித்து விடுகிறார்கள். மெத்தை, தலையணை, போர்வை...

     அபிராமியின் கட்டிலில் அந்த மெத்தைக்கு மேல் தனது ஜமுக்காளத்தை விரித்துக் கொள்கிறாள். கொடுக்கப் பட்டிருக்கும் விண்ணென்ற ரப்பர் குஷன் தலையணை இவளுக்குச் சரியாக இல்லை. தனது மெல்லிய அணையையே வைத்துக் கொண்டு படுக்கிறாள்.

     மேலே ஒரு முப்பத்தாறு விசிறி ஓடுவது தெரியாமல் ஓடுகிறது.

     "விளக்கை அணைக்கட்டுமா...?"

     வெங்கம்மா வந்து கேட்கிறாள்.

     "அணைக்கலாம்..." என்று அபிராமி சொல்ல, எல்லா விளக்குகளும், அணைந்து போகின்றன.

     கொசு ஒன்று முகத்தில் வந்து உட்காருகிறது. அபிராமி முகத்தை மூடிக் கொள்கிறாள்.

     "ஏண்டிம்மா. உன் பேரென்ன, சிவகாமியா?..."

     "இல்ல, அபிராமி..."

     "கல்யாணமாய் எத்தனை வருஷம் வாழ்ந்தே?... இல்லே வாழவேயில்லையா?"

     "அதெல்லாம் மறந்து போயாச்சு பாட்டி, இப்ப எதுக்கு?"

     "எத்தனை வருஷமானாலும் கல்யாணம்ங்கறத ஒரு பொம்மனாட்டியால மறக்க முடியுமோ? புருஷான்னா மறந்துடுவா. அவா எத்தனை கல்யாணம்னாலும் பண்ணிக்கலாம்... கீழ இருக்காம் பாரு மேப்புறத்து ரூம்ல?... கட்டினவ அண்ணாமலை புரத்தில இருக்கச்ச, வேற ஒருத்திய ரிஜிஸ்டர் பண்ணிண்டானாம். அவ அம்போன்னு விட்டுட்டு அமெரிக்காக்குப் போயிட்டா. என்னமோ பொண் ஜன்மம். இப்ப இவனுக்கு இதுவுமில்ல. அதுவுமில்ல. பொண் பிள்ள இருக்கு. ஆனா, இந்தக் காலத்தில, அதது தனியாப் போயிடறது. இங்க வந்து கிடக்கிறான். ஒத்தை ரூம், ஐநூறு ரூபா குடுத்துண்டு... அந்தக் காலத்தில..." அபிராமி 'உம்' கொட்டவில்லை.

     "கேக்கறயாடிம்மா? தூங்கிட்டியோ?..."

     "உம்..."

     அப்போது வெங்கம்மா அங்கே வருகிறாள்.

     "பாட்டி! நீங்க செத்த சும்மா இருக்க மாட்டியா? ராமா கிருஷ்ணான்னாலும் பிரயோசனம் உண்டு. சுமனாம்மா வந்தா பிளாஸ்திரி போட்டுடுவ வாயில்."

     "ஒனக்கென்னடி வந்தது, மொசப் புழுக்கை? எனக்குத் தூக்கம் வரல, நான் பேசறேன், அவ கேக்கறா. நீ கேக்க முடியலன்னா பஞ்சடச்சுக்கோ?"

     "ஆமா, பஞ்சடச்சிக்கிறேன்? நீங்க இப்ப எதுக்கு ஊர் அக்கப்போர் பேசணும்? எவ ஓடிப்போனா, எவன் தெருவில திரிஞ்சான். இதெல்லாமா பேச்சு? வயசு ஆறது கோட்டானாட்டம். இந்த ரூம்முக்கு வரவா, உன்னோட சல்லாபம் தாங்காம தான் மூணு நாள்ளே ஓடிப் போறா?..."

     "நீ என்னடீ சட்டாம் பிள்ளத்தனம் பண்ற? வாசக்காரியயும் கொல்லக் காரியயும் நீ கைக்குள்ள போட்டுண்டு பண்ற அழிச்சாட்டியம் கொஞ்சமா! சாரதாட்டச் சொல்லிக் குடுத்து உன்னைத் துரத்தணும் முதல்ல!... எம் பேரன், சுளயாட்டம் டாலர் அனுப்பிச்சித் தரான்... பொறாமைப் பிண்டங்களுக்கு சும்மா இருக்க முடியுமோ? சோத்துக்கு வீங்கிண்டு இங்க ஊழியம் பண்ண வந்தவளுக்கு வாய் வேற...?"

     அபிராமிக்கு இலேசாக ஒரு பயம் தோன்றுகிறது.

     அக்கம்பக்க வீட்டுக்காரர்கள், தலையீடு சுவரைத் துளைத்துக் கொண்டு வர முடியாது. இது...

     வெங்கம்மா தணிந்து, பாட்டியின் பக்கம் குனிந்து மெல்லிய குரலில் பேசுகிறாள்.

     "பாட்டி, உங்களுக்கே அதிகம் பேசக் கூடாது, பி.பி. ஏறிடும்னு டாக்டர் அன்னிக்கு வந்து சொல்லிட்டுப் போனா இல்லையா? உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். கண்ணை மூடிண்டு ராமா கிருஷ்ணான்னு சொல்லுங்கோ, தூக்கம் வந்துடும்..."

     "அப்படீன்னா என் லேடியோவ எடுத்துக் குடு. காதுகிட்ட வச்சிண்டே தூங்குவேன்..."

     "ராம ராமா?"

     அலுத்துக் கொண்டே வெங்கி விளக்கைப் போட்டு, அவள் அலமாரியைத் திறந்து சிறிய டிரான்ஸிஸ்டரை எடுத்துத் திருகிக் கொடுக்கிறாள்.

     "எவனோ இங்கிலீஷில பேசிண்டிருக்கான். உங்களுக்கென்ன புரியப் போறது?"

     அவள் காதுகளில் வைக்கிறாள்.

     "ஒண்ணுமே கேக்கலியே? சித்த பலக்க வையிடீ...?"

     "பலக்கத்தா வச்சிருக்கு. சினிமாப் பாட்டு புடிச்சுக்குங்கோ?..."

     வைத்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போகிறாள்.

     ஏதோ ஓர் உடல் குளிக்கும் பாட்டு, ராகமும் வார்த்தையும் புரியாமல் அமைதியைக் குலைக்கிறது.

     அபிராமி செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.