உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
4 சுஜா கருவுற்று, மூன்றாம் மாதத்தில் தாய் வீடு சென்றிருந்த நாட்களில் தான் அபிராமி ஓய்வு பெற்றாள். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்தாள். சுஜாவுக்கென்று, மூன்று சவரனில் அழகிய நெக்லேசும், இனிப்பு கார வகைகளும், பழங்களும் வாங்கிக் கொண்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்றாள். வாயிலில் கார் ஒன்று நின்றது. கூடத்து நாற்காலியில் சிறிது முன் வழுக்கை தெரிய கண்ணியமும் அறிவின் மலர்ச்சியும் பணிவும் ஒருங்கே தெரிய, உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். சுஜா சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கை நிறைய வளையல்களும் பட்டுச் சேலையும் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தாள். "வாங்க, வாங்கம்மா! இப்பத்தான் பேசிட்டிருந்தோம்..." என்று அப்பா வரவேற்றார். "டாக்டர் பிரேம் குமார், எம்.டி.,... நியூராலஜிஸ்ட்டா ஏழு வருஷம் அமெரிக்காவில இருந்திட்டு இப்ப இங்கேயே வந்திடனும்னு வந்திருக்காரு... இவங்கதா, சுஜா மாமியார். டீச்சரா இருக்காங்க..." அபிராமி கைகுவிக்கு முன் அவனே எழுந்து மரியாதையாக 'வணக்கம்' என்றான். "சின்ன வயசில இங்கதா எதிர் வீட்டில இருந்தாங்க. எந்நேரமும் இங்க தான் கிடக்கும். எங்க வெங்கியும் இவனும் ஒரே வயது..." என்று மங்களம் தெரிவித்தாள். அபிராமி ஒரு தட்டுக் கொண்டு வரச் சொல்லி இனிப்பு பழங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். பிறகு அட்டைப் பெட்டியைத் திறந்து நகையைக் காட்டினாள். "பிடிச்சிருக்கம்மா?..." "ஓ, நல்லாயிருக்கு... என்ன ஆச்சரியம்? பிரேம், உங்க பிரேஸ்லெட் மாதிரியே பாட்டான்... பாருங்க?..." பிரேம்குமார், அவளுக்குத் திருமணப் பரிசாக வாங்கித் தந்திருக்கும் அந்தக் கையணியை அவள் ஒன்றாக வைத்துக் காட்டினாள். "லவ்லி..." மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு எல்லோரையும் வணங்கினாள். "சுஜா, உன் ஹஸ்ஸியிடம் கேட்டு, எப்ப சௌகரியப்படும்னு ஃபோன் பண்ணு. விருந்துக்கு...!" என்று எழுந்திருக்கிறான் பிரேம். "வரேம்மா?" சுஜா வாசலில் நின்று கார் மறையும் வரை வழியனுப்பினாள். "கொஞ்சம் கூடக் கருவமில்லாத பிள்ளை. ஞாபகம் வச்சிட்டு வந்திருக்கு பாரு... இங்கதா கிடக்கும். அம்மா கிடையாது. ஒரே ஒரு தங்கச்சி இருந்திச்சி. அது நெருப்புப் பிடிச்சி எறந்து போயிட்டுது. பாவம். ரொம்ப கெட்டிக்காரன். ஏழு வருஷம் அமெரிக்காவுக்குப் போயி மாறவே இல்ல. அப்படியே இருக்கு?" அவன் புகழையே அன்று மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அபிராமிக்குத் தான் நகை வாங்கிச் சென்றது கூட எடுபடாமல் போயிற்றே என்றிருந்தது. அடுத்த நாள், வழக்கத்திற்கு மாறாக, சீனி மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பி விட்டான். முகம் கலவரமடைந்திருப்பதைக் காட்டியது. "அம்மா, நீ எனக்கொரு உதவி செய்யணும். மாட்டேன்னு சொல்லக் கூடாது." அபிராமி அவன் முகத்தை உறுத்துப் பார்த்தாள். "ஒரு அவசரம்னு ஆபீஸ் பணம் அஞ்சாயிரம் எடுத்துட்டேம்மா. இன்னிக்குக் கணக்கு ஒப்பிக்கணும். குடு... திங்கக்கிழமை திருப்பிடறேன்..." "ஆபீஸ் பணத்தை என்ன அவசரம்னு எடுத்தே?" "ஃபிஷர்மென்கோவில் அவசரமா ஒரு பார்ட்டி அரேஞ்ஜ் பண்ண வேண்டி இருந்தது. பணம் பத்தல. மானேஜர் ஊரில இல்ல. எடுத்தேன். இன்னிக்குக் கணக்கு உதைக்கும்..." "சீனி! நீ எங்கே கொண்டு போறேன்னு புரியலடா! நீ என்னை ஏமாத்தறே, அவளையும் ஏமாத்தறே!" "இதென்னம்மா, உன்னோட ரோதனையாப் போச்சு? மூணு லட்சத்துக்கு ஒரே சமயம் ஆர்டர் புடிச்சிருக்கிறேன். அதுக்கு இது சின்ன மீன். பணம் மெள்ள சாங்ஷன் ஆகிவிடும். நான் முந்திக்கலன்னா, வேற ஒருத்தன் தட்டிட்டுப் போயிடுவான். போட்டிம்மா...!" "சீனி, எங்கையில இப்ப ஒரு சல்லிக்காசு கிடையாது..." "உன் பிள்ளையை போலீசில பிடிச்சிட்டுப் போணா பாத்திட்டிருப்பியா?" அபிராமி அதிர்ந்து போனாள். "அடபாவி, கல்யாணம் பண்ணினா பொறுப்பு வரும்னு பார்த்தால், இப்படி பார்ட்டி பார்ட்டின்னு தண்ணி ஊத்துவதும் ஊத்திக்கிறதுமாச் சீரழியறியே...?" அவள் வாய்விட்டே அழுதாள் அன்று. "இந்தத் தடவை நீ காப்பாத்திடும்மா. இனிமே சத்தியமா இல்ல." "நீ எங்கிட்ட சத்தியம் பண்ணாதே. சத்தியம்ங்கற சொல்லை உச்சரிக்கக் கூட உனக்குத் தகுதியில்ல..." "அப்படிப் பார்த்தா யாருக்குமே தகுதியில்ல. நீ சொல்ற நீதியெல்லாம் இன்னிக்குச் செல்லாக்காசு அம்மா!... இன்னிக்கு இந்த கம்பெனி இவ்வளவு பெரிசா வந்திருக்குன்னா நீதி நேர்மையின்னு இல்ல புரிஞ்சுக்க. கறுப்புப் பணம், லஞ்சம், தண்ணி, பொண்ணு எல்லாந்தான் பின்னால..." "சீனி, நான் உனக்கு ஒரு பைசா குடுக்க மாட்டேன். போ இங்கேந்து?" ஆனால் அவன் என்ன தந்திரம் பேசியோ, சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும், அபிராமி, "சுஜா, புதிதா வாங்கின ஸில்க் புடவைய உடுத்திட்டு, நெக்லசைப் போட்டுக்கோம்மா. பக்கத்து வீட்டு தனம்மா, பார்க்கணும் வரேன்னா" என்றாள். சுஜா ஒன்றும் புரியாமல் விழித்தாள். "ஏம்மா, உங்க பிள்ளை, அதில் இன்னொரு கண்ணி சேர்க்கணும், வாங்கி வரச் சொன்னீங்கன்னு அன்னைக்கே வந்து கேட்டாரே?..." "அட... பாவி?" அபிராமி இடிந்து போனாள். "ஓ... மறந்தே போயிட்டம்மா! எனக்குத்தா என்ன நினைப்பு?" என்று மூடி மறைத்து மெழுகி, அடுத்த நாளே ஃபிக்ஸட் டெபாஸிட் என்று போட்டிருந்த பணத்தை முறித்துக் கடைக்குச் சென்று, ஒரு நெக்லஸ் வாங்கி வந்தாள். "இதோ பார் சுஜாம்மா, அவன் கேட்டால் என்னைக் கேக்காம ஒண்ணும், குடுக்காதே?" என்று சொல்லி வைத்தாள். அவளுக்கு இதெல்லாம் புரிந்து கொள்ள வெகு நாட்களாகவில்லை! பிரசவித்து வந்த பிறகு, அவள் பழைய சுஜாவாக இல்லை. முன்பு அவளிடம் காட்டிய பணிவு, மென்மை எதுவுமே இல்லை. அவளை 'அம்மா' என்று கூடக் கூப்பிடுவதில்லை. "மாமி! குழந்தை துணிய அவன் துணியோடு வைக்காதிங்க!..." "குழந்தை உள்ளே தூங்கறா இவன் மூஞ்சியை அந்த பூகிட்டக் கொண்டு வச்சிட்டுக் கொஞ்சறேன்னு பேர் பண்ண வாணாம். கொஞ்சம் பாத்துக்குங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன்..." என்ற மாதிரியான சொற்கள் அவள் நாவிலிருந்து தெறிக்கும் போது, இவள் துணுக்குற்றுப் போகிறாள். ஆனால் சில சமயங்களில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது. கடிகாரம் டிக்டிக்கென்று அடிப்பது நெஞ்சில் அடிப்பது போல் ஒலிக்கிறது. "சுஜிம்மா? குழந்தை தூங்கறப்பவே சாப்பிட்டு விடலாமே வா..." அவள் பேசாமல் எழுந்து வருகிறாள். மௌனமாக, ஒரு சிரிப்பு, பேச்சு, சகஜம் இல்லாமல் சாப்பாடு. குழந்தைக்குப் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள். அபிராமிக்கு மண்டையை முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. ஊர் உலகத்தில் எத்தனையோ பிள்ளைகள்... அவளுக்கு தெரிந்து யாருமே இப்படி அன்பென்னும் ஈரம் கசிவு இல்லாத சுயநலப் பிண்டமாக வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உயர்ந்த படிப்புப் படிக்காத கீழ் மட்டத்தில், குடித்துவிட்டுப் புரளுபவன் கூட எப்போதேனும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஏனெனில் அந்த மட்டத்தில் அது இயல்பாகப் படுகிறது. மணி பத்து நாற்பத்தைந்து. தெருவில் ஓசை அடங்கியாயிற்று. எதிர் வீட்டுத் தொலைக்காட்சி அரவம் கூட ஓய்ந்து, விளக்கணைத்து விட்டார்கள். சுஜியின் அறையில் இருந்து விளக்கொளி வெளியில் விழுகிறது. அவள் புத்தகம் படிப்பாளோ?... உறுதியாக, மஞ்சட் கயிற்றைக் கழற்றிக் கையில் வைத்துச் சுருட்டினாள். இவள் செய்யத் துணியாத செயல்கள் - தகர்ப்புக்கள். வாயிற்கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வருகிறாள். வயிற்றில் பசி எரிச்சலைத் தோற்றுவிக்கிறது. ஒரு நாள் போல், சோற்றை வைத்து மூடும் அவலம்... அந்தக் காலத்திலும் இதே தான். சில நாட்களே சாப்பிடுவான். சில நாட்களில் சாப்பாடு வேண்டாம் என்று படுக்கையில் விழுவான். இவள் சோற்றுக்கு நீரூற்றி வைத்திருந்து காலையில் தான் சாப்பிட்டு, அவனுக்குச் சுடு சோறு வட்டிப்பாள். இது பாசமா, மூடத்தனமா? ருசித்துச் சாப்பிட முடியாத நெஞ்சுச் சுமை... அவள் தட்டிலிருந்து கடைசிப்பிடி எடுக்கும் போது வாசலில் ஆட்டோவின் இரைச்சல் கேட்கிறது. கேட் தள்ளப்படும் அரவம்... செருப்போசை. தட்டைப் போட்டு விட்டு ஓடி வருகிறாள். வாயிற்கதவைத் திறக்கிறாள். விளக்கைப் போடுகிறாள். எவனோ ஒரு தொப்பிக்காரன் - வயிறு தெரியும் சட்டையுடன், இவனைக் கைத்தாங்கலாக இழுத்து வருகிறான். முகம், பிரேதக் களையாக - பெரிய மூக்கும், உதடுகளும், குடித்துக் குடித்துத் தடித்துப் போய், உப்பிய வயிறும் கன்னங்களுமாக - "அட... பாவி!... பாவி...!" நாற்றம். கொண்டு வந்து விட்டவன் வண்டிச் சத்தம் கேட்கிறான். எட்டு ரூபாயாம். இவளிடம் சில்லறையில்லை. ஒரு ஐந்து ரூபாயும் இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்களுமாகக் கொடுத்து அவனை அனுப்புகிறாள். ஊரைக் கூட்ட முடியாதபடி இடை நிலை வருக்கக் கவுரவம் உள்ளே இழுக்கிறதே? எப்போதோ கேள்விப் பட்டதை நினைவில் கொண்டு ஒரு சொம்பு நீரைக் கொண்டு வந்து அவன் முகத்தில் வழிய, தலையில் கொட்டுகிறாள். ஓரமாக அவனை இழுத்துக் குலுக்குகிறாள். "டேய், சீனி? சீனி?..." உலுக்க உலுக்க ஏதோ உளறல். "பாவிப்பிள்ளை? என்ன பாவம் செய்தோ உனக்குத் தாயானேன்! சோற்றைத் தின்று விட்டு வந்து விழுடா?" சிவந்த கண்களைத் திறந்து கொட்டிக் கொட்டி... "நழ்ல அம்மா... கொண்டா... சா...தம்... கொண்டா..." என்று உளறுகிறான். சோற்றைப் பிசைந்து கொண்டு வருகிறாள். உருண்டை உருண்டையாக விழுங்கிவிட்டு, அங்கேயே சாய்கிறான். அபிராமிக்கு உறக்கம் எப்படிப் பிடிக்கும்? இந்தக் கல்யாணம் செய்ய அவள் தானே முன்னின்றாள்...? தெய்வம் என்பதெல்லாமும் சினிமாப் பொய்யாகத் தானே பலித்திருக்கிறது! இப்போதும் என்ன கெட்டுப் போயிற்று? அவள் பிரிந்து போகட்டும். வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் தப்பில்லை. இவனுக்கு அந்தத் தண்டனை வேண்டும்... உளைச்சலுடன் புரண்டு புரண்டு படுத்தவள், விடியற் காலையில் அயர்ந்திருக்கிறாள். ஒரு கனவு. சுஜி குழந்தையுடன் மணவிலக்குப் பெற்றுப் போய் விட்டாள். ஆனால் இவள் நினைத்தாற் போல் சீனி அவமானத்தில் குறுகித் திருந்தி விடவில்லை. இவனுடன் வேறு ஒருத்தி வருகிறாள். வீட்டில் இரண்டு பேரும், ஜமா சேர்த்துக் கொண்டு இரைச்சலும் சிரிப்புமாகச் சீட்டாடுவதும் குடிப்பதும்... சகிக்கவில்லை. "ஏண்டி? இது குடும்பக்காரங்க இருக்கிற இடம். நீ ஒரு பொம்பிளயாடி?" இவள் கத்துகிறாள். "இந்தக் கிழத்த அடிச்சி விரட்டுங்க, டார்லிங்? எப்ப பார்த்தாலும் சண்ட போடுது" என்று அவள் சொல்ல, அவன் பெற்ற தாயைத் தோளைப் பிடித்து உலுக்கி, "என்ன? சும்மாயிருக்க மாட்டே? சமையலை பண்ணி வச்சிட்டு அங்கியே விழுந்து கிடக்கிறதுக்கு என்ன?" என்று அதட்டுகிறான். "டேய்..." எப்படிக் கூச்சல் போட்டாள் என்று புரியவில்லை. சுஜிதான் கையில் ஃபீடிங் பாட்டிலுடன் குனிந்து, "என்னம்மா?" என்று பரிவாகத் தொடுகிறாள்; "வேர்த்துக் கொட்டிருக்கு. இந்த நடையில ஏம்மா படுக்கணும்? கதவைத் தட்டி என்னைக் கூப்பிடக் கூடாதா? இது உங்க வீடு. நீங்க உழைச்சிக் கட்டின வீடு. உரிமையோட என்னைக் கூப்பிடாம, இந்தப் பிள்ளைக்காக இப்படி வீணாத் தேஞ்சு போறீங்களே?" புரிந்து கொள்ளச் சிறிது நேரம் ஆகிறது. என்ன பயங்கர சொப்பனம்? நினைவு எதிர் மாறாக இருக்கிறது. ஆம் இது அவள் உழைத்து உண்டாக்கிய குடும்பம். வீடு. ஆறுதல். சுஜி பால் வாங்கி வந்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி இருக்கிறாள். காபி டிகாக்ஷனும் போட்டிருக்கிறாள். வாசலில் கீரைக்காரி குரல் கேட்கிறது. தான் ஓய்வு பெற்ற பின், வாழ்க்கை வசதிகள் பலவற்றைச் செய்து கொள்ள முடியும் என்று அபிராமி ஒரு காலத்தில் கனவு கண்டதுண்டு. இன்றும் வீடு பெறுக்கித் துடைத்து, பாத்திரம் பண்டம் துலக்கக் கூட வேலைக்காரி வைத்துக் கொள்ளவில்லை. கீரை வாங்கி வந்து விட்டு, குக்கரில் அரிசியும் பருப்பும் ஏற்றுகிறாள். பின்னர் குழாயடியில் பாத்திரம் பண்டம் துலக்குகையில் முன் அறையில் சுஜியின் குரல் உரத்துக் கேட்கிறது. அவள் வீடு பெருக்குகிறாளோ? "...ஏய், எழுந்திரு? எழுந்திருடா?" இது வேண்டுமென்று அவனைச் சண்டைக்கு இழுக்கும் குரல் தான். அபிராமிக்குக் கையும் காலும் வெல வெலத்து வருகிறது. உள்ளே குழந்தை அழும் ஒலி கேட்கிறது. கையைக் கழுவிக் கொள்கிறாள். ஓசை செய்யும் குக்கரைக் கண்டு அடுப்பைத் தணித்து விட்டு உள்ளே சென்று தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்துக் கொள்கிறாள். "டேய், எழுந்திருன்னேனே, காதில் விழல..." துடைப்பத்துடன் தான் நிற்கிறாள். அதிகமாகப் போனால் துடைப்பத்தாலேயே போட்டு விடுவாள் போல் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. அவன் எழுந்திருக்கவில்லை; கனவா, நினைவா என்பது போல் இரண்டு கால்களுக்கிடையில் கையை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்கிறான். "என்னடா பாக்கற? நான் தான், உனக்குக் கழுத்தை நீட்டிட்டு வெக்கமில்லாம உங்கிட்ட ஒரு குழந்தையையும் பெத்து வச்சிட்டிருக்கேனே, சுஜி... எழுந்திரு. இன்னிக்கு உங்கிட்ட ரெண்டில ஒண்ணு, பேசணும்!" படுக்கையைக் காலால் எத்துகிறாள். அவன் குபுக்கென்று எழுந்து உட்காருகிறான். "என்னடீ என் வீட்டில உட்கார்ந்து அடாபுடான்னு பேசற. காலால படுக்கையைத் தள்ளற?" எழுந்து கை நீட்டிக் கொண்டு அவள் மீது பாய்கிறான். அபிராமி குழந்தையுடன் அவள் மீது அவன் கைபடாதபடி குறுக்கே வந்து சமயத்தில் தடுக்கிறாள். "ஏண்டா? பேசினா என்ன? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு பூசை பண்ணணுமோ உன்ன? அந்தக் காலம் மலையேறிப் போச்சு?" "தே...டியா...? நீ..." அவன் மூர்க்கமாக வசைகளைப் பொழிந்து கொண்டு அபிராமியின் தடுப்பையும் மீறி அவளைப் பாய்ந்து அடிக்கிறான். ஆனால் அவள் அழவில்லை. திருப்பித் தாக்குகிறாள். பிடித்துச் சுவரில் மோதத் தள்ளுகிறாள். அவனுடைய குத்தப்பட்ட ரோசம், ... தோல்வி உணர்வு எல்லாம் மிகவும் கீழ்த்தர வசைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. "அம்மா இந்தக் கழுதைக்குப் பைத்தியம் புடிச்சிடுத்து. கண்டவங் கூடல்லாம் திரியற. பட்டவர்த்தனமா அந்த டாக்டர் கிட்டப் படுத்திட்டு வரே; எவ்வளவு திமிரு இருந்தா புருஷனைத் தொட்டடிப்ப? பாரம்மா?" "அம்மா ஆட்டுக் குட்டின்னெல்லாம் கூப்பிடாத. மரியாதை குடுத்தாத் தான் மரியாதை கிடைக்கும். நீ என்னைப் புழுவா நினைச்சயானா, அதே பாடம் தான் திருப்பி வாங்கிப்பே. நீ என்னைப் பாய்ந்து அடிக்கலாமானால், தற்காப்புக்கு நானும் அடிக்கிறது சரிதான். ஆனா, உன்னை மனுஷன்னு நினைச்சேனே, அது தப்பு. மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம்... உன் அம்மா, உன் அப்பனைப் புருஷன்னு நினைச்சுப் பூஜை பண்ணிட்டிருந்தா. அது அந்தக் காலம். இது வேற. என்ன திமிர் இருந்தால், என் ஆபீசில் வந்து, என்னை விரட்டுவே? அம்மா வீட்டில இருந்தா, ரா பத்து மணிக்கும் பதினோரு மணிக்கும் குடிச்சுட்டு வந்து அங்க ரகளை பண்ணின. அங்க கீழ்மட்டத் தொழிலாளர் கும்பல் கூடத் தேவலைன்னு நினைக்கும்படி அக்கம் பக்கமெல்லாம் நாறப் பண்ணின. உங்கூத்துக்காகவே இங்க வந்தேன். நீ இப்படியே இருக்கலாம், எகிறலாம்னு கனவிலும் நினைக்காதே! இந்த யுகம் வேற..." அவள் சரசரவென்று பெருக்கி முடித்து விட்டு வாசலில் வேடிக்கை பார்க்க நிற்கும் எதிர்வீட்டு வேலைக்காரப் பெண்ணைச் சாடுகிறாள். "என்னடி இங்க? என்ன பாக்கற!" அது பயந்து ஓடுகிறது. துடைப்பத்தைக் கொண்டு வைத்து விட்டு, அபிராமியிடம் எதுவும் நடவாதது போல் குழந்தையை வாங்கிக் கொண்டு போகிறாள். "அம்மா, நீ பாத்திட்டு நிக்கறியே? உனக்கு மானம் போகல...! மானம் போகலே?... இந்தத் தே...யாளை முதல்ல வீட்ட விட்டுத் துரத்து!" மானம்... அது இன்னமும் இருக்கிறதா! அபிராமி சிலையாக நிற்கிறாள். ஆனால் சுஜாதா, எதுவுமே நடக்காதது போல் குழந்தைக் காரியங்கள் கவனித்து, தான் குளித்து, துணிமணிகளை அலசிப் போட்டு, அலுவலகத்துக்குப் புறப்படத் தயாராகிறாள். சோறும் பருப்பும் மட்டுமே ஆகியிருந்தாலும், டப்பியில் தயிர் ஊற்றிப் பிசைந்து அடைத்துக் கொள்கிறாள். சிறிது பருப்புச் சோற்றை மட்டும் உண்டதாகப் பெயர் பண்ணிவிட்டு, எட்டரைக்கெல்லாம், குழந்தையுடன் படியிறங்கிச் செல்கிறாள். சீனி இன்னமும் எழுந்திருக்காமல் சோம்பலாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை விடுகிறான். "ஏண்டா, உனக்கே இது சரியாயிருக்கா?" சாம்பலைக் கீழே தட்டுகிறான். பரிதாபம் தேக்கிய ஒரு பார்வை. "அம்மா, எனக்கு முன்னமே தெரியாமப் போச்சு. ஏமாற்றப்பட்டேன். அந்த ஏமாற்றம், அவமானம் தாளவில்லை. அதனால் தான் குடிக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, குழந்தையை நான் தொடக்கூடாதுங்கறாளே... எனக்குப் பொறுக்கவேயில்லை, மா...! நா நேத்து மத்தியானம் அந்தக் கிரீச் ஆயாவுக்குத் திருட்டுத் தனமாப் பணம் குடுத்துக் குழந்தையைக் கொஞ்ச நேரம் ஆசை தீர வச்சிட்டிருந்தேம்மா..." சிறு குழந்தை போல் அழுகிறான். அபிராமிக்குப் பெற்ற வயிறு சங்கடம் செய்கிறது. கணவன் என்ற பிம்பத்தை எக்காரணம் கொண்டும் மாசு படுத்தாத, குறை கூறாத மரபில் நிற்பவள் அவள். அது மட்டுமல்ல, அந்த பிம்பத்தை எற்றிப் போற்றும் மூடக் கொள்கையையும் பற்றியிருந்தவள். தொழுநோய்க் கணவனை விலைமகளின் வீட்டுக்குச் சுமந்து செல்லும் கற்பரசி, அவன் விலை மகளின் முன் செல்கையில் மன்மத உருவம் பெற்றதையும் சகித்தவள். அந்தக் கணவன் முனிவன் என்ற வருக்கத்தில் பாராட்டப் பெறுவதை நியாயமா என்று கேட்கத் தெரியாத மரபுக்குள் அழுந்திய கூட்டுப் புழு அவள். அவள் படிப்பு, பொருளாதார சுதந்தரம், தொழில் எதுவுமே அந்த மரபாகிய அரணை மீறிய விழிப்புக்கு அவளை இட்டுச் செல்லவில்லை. தகப்பன் - புருஷன் பின் மகன் என்று ஆணைச் சார்ந்து நிற்பதே பெண் தருமம் என்பதை ஏற்று ஊறிப் போயிருக்கிறாள். இன்று, சுஜாவின் நடப்பு, அவளை உலுக்கிவிட்டிருக்கிறது. வேர் வரை ஆட்டம் காணும் அளவுக்கு உலுக்கி விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் தன் உலகமே இந்த மைந்தன் என்று அருமை பெருமைகளைத் தேக்கி வைத்திருந்தாள். நம்பிக்கைகளை மலையாக வளர்த்திருந்த ஆசை மகன் - அந்த முப்பத்திரண்டு வயசு மகன் சிறுமி போல் அழுகிறான். உலகையே வென்று விடுவதாகச் சவால் அடிப்பவன், அழுகிறான். அவன் இப்படி அழுது அவள் பார்த்ததில்லை. "சீனி! ஏண்டா இப்படி வெக்கமில்லாம அழற?" இந்த அழுகை தாயின் மனசைக் கரைக்கும் மந்திரம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. "அவ பக்கம் நியாயம் இருக்கு. நீ செய்யறதையும் செய்திட்டு அழற...?" "அம்மா, நீயும் என்னைப் புரிஞ்சிக்காம பேசறியே? நீ... ன்னாலும் புரிஞ்சிப்பேன்னு தாம்மா நான் வீட்டுக்கு வரேன். சில சமயம் உயிரே வெறுத்துப் போகுதம்மா! சுஜி மேல எனக்கு எத்தனை ஆசை தெரியுமா? குழந்தையை நான் தொடக்கூடாது. அவ... அவகிட்ட நான் எந்த உரிமையும் எடுக்கக் கூடாது. என் வீட்டில என்னைத் தள்ளி வச்சிட்டு ஆட்டம் போடுறா. நீ பாத்திட்டிருக்கே. அத்தோட... என் ஃபிரண்ட்ஸுக்கெல்லாமும் தெரிஞ்சி கேவலமாப் போச்சும்மா!... குழந்தை பார்க்க வாங்கன்னு யாரையும் கூப்பிட முடியல..." "அதற்குக் காரணம் நீ தான். நீ ஒரு கண்ணியமான புருஷன்கிற பொறுப்பைக் கால்ல போட்டு மிதிச்சே. என்னை, அவளை ரெண்டு பேரையும் பொய் சொல்லிப் பொய் சொல்லி ஏமாத்தின. வீட்டிலியே திருடறே. குடித்து, சூதாடி அழிஞ்சு போற. உறவுகள்ளாம் எப்படி நல்லபடியா இருக்கும்?" "அம்மா, நீயே சொல்லு அவ எதுக்கு குழந்தையை இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணும்? நான் தான், சரியா நடக்கல வச்சுக்க. நீ எத்தனை பாசமாய், பிரியமாய் இருக்கே? உன்னை எப்படி உதாசீனம் பண்றா? குழந்தையை நீ பார்த்துக்க மாட்டியா? எத்தனை குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கும் தொழிலில் இருந்திருக்கே? எத்தனை பெண்கள் தாயா உன்னை நினைச்சிருக்கா?... இவ குழந்தையைத் தூக்கிட்டுப் போறதால அதுக்கு எத்தனை சிரமம்? அந்த ஆயா, பேய் போல இருக்கா. நிச்சயமா இவ பாலைக் கொடுக்க மாட்டா. தான் குடிச்சிட்டுக் கண்ட காபி தண்ணியையும் குழந்தைக்கு வாங்கி ஊத்துவா. நீ வாணா பாரு. அவ டிவோர்ஸ் வாங்கிட்டு, அந்த டாக்டரைக் கட்டிக்கப் போறா. அவன் பிளான் தான் இதெல்லாம்... நீ கட்டிக் காத்த மானம், குடும்ப கௌரவம் எல்லாம் தூள் தூளாப் போயிட்டிருக்கு!" மறுபடியும் சிகரெட்டைக் கொளுத்திப் புகை வளையங்களை ஊதுகிறான். அபிராமியினால் சீரணிக்க முடியவில்லை தான். டாக்டர்... அந்த டாக்டர், இவர்களுக்கு ஒரு நாள் உயர்ந்த ஓட்டலில் விருந்து வைக்க அழைத்தான். ஆனால் சுஜி, இவனைக் கூட்டிக் கொண்டு போகவில்லை. அவன் பிரேஸ்லெட் பரிசளித்தது இவனுக்குத் தெரியாது. அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் ஏதோ காதல் விவகாரம், அதனால் தான் ஊர் திரும்பி விட்டான் என்றும் சுஜா சொன்னாள். அவர்கள் பழக்கத்தில் இதுவரையிலும் அவளால் விகல்பம் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன ஆயிரம் இருந்தாலும்... படுக்கையைக் காலால் எகிறியதும், தொட்டு அடித்ததும்... அறிவும், மூடப்பாசமும் முரண்டுகின்றன. "அதுசரி, நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்? உனக்குன்னு கட்டுப்பாடு இல்லாத ஒரு வேலை. நினைத்த போது போகிறாய் - ஊர் சுற்றுகிறாய், வருகிறாய். நீ ஒழுங்காக ஒரு மாசம் பொழுதோடு வீடு வந்து, உலகத்துப் பிள்ளைகளைப் போல் வீட்டுக்கு நல்லவனாக நடந்து காட்டு. மாசச் சம்பளம் ஒரு காசு உன்னிடமிருந்து வரதில்ல. ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிட்டா, அவளை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பு உண்டு. நீ என்னடான்னா..." "அம்மா, நீ வாயைத் திறந்தா பணம் பணம்னு உயிரை விடற. இந்த ஆபீசில நான் சேர்ந்து கோடிக் கணக்கில் பிஸினஸ் பண்ணியிருக்கிறேன். ஆனா, அங்கயும் எம்மேல பொறாமைதான் வளர்ந்திருக்கு. நிதம் ஆபீசுக்கு வந்து, அந்த வழுக்கத்தலையன் கிட்ட கொத்தடிமை மாதிரி நிக்கணுமாம். எனக்கு எம்.டி. உறவுக்காரர், அதனால் நான் எகிறறேன்னு பேசறது அந்தக் கிழம்... நான் சொந்தத் திறமையில் மேலே வரேன். எம்மேல இல்லாததும் பொல்லாததும் வத்தி வைக்கிறது... அம்மா, எனக்கு ஒரு ஒரு சமயம், இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு வெறுப்பா வரது..." "நீ ஒண்ணிலும் ஒழுங்கா ஒட்டாம இப்படியே பேசிட்டிருந்தா எப்படிடா?" "எப்படிடான்னா, எனக்கு அவ்வளவு டென்ஷனாயிடுது. இந்த உலகத்தில் யாருக்கும் ஏற்படாத அவமானம் எனக்கு நேர்ந்திருக்கு. சொல்லிட்டா வெட்கம், சொல்லாத போனா துக்கம்னு. நீதான் முதல்ல பரம்பரை பரம்பரையா இருந்த வழக்கத்த மீறி வலுவிலே, எதுவுமில்லாம என் பையனுக்குப் பண்ணிக்கிறேன்னு போய்ச் சொன்ன. அவளுடைய பழைய சரித்திரம் என்ன, ஏதுன்னு விசாரிச்சியா? வேலை செய்யிற பொண்ணு, இருபத்தெட்டு வயசு வரை ஏன் கல்யாணமாகலன்னு கேட்டியா? இந்தக் காலத்துப் பொண்ணுகளப்பத்தி உனக்கென்ன தெரியும்?... இத்தனை துணிச்சலுள்ள அவ, நாளைக்கு என் புருஷனும் மாமியாரும் என்னை வரதட்சனைக்காகக் கொடுமைப்படுத்தினாங்க, கொலை பண்ண முயற்சி செய்தாங்கன்னு ஏன் குற்றம் சாட்ட மாட்டா? அவளால சாட்சி அது இது எல்லாம் தயார் பண்ண முடியும். ஆயிரம் கேஸ் நடக்கிறது. ஆனா உண்மை உள்ளேருந்து வெளிவராது. நான் குடிக்கிறேன். அது பெரிய தப்பாப் படுது. ஏன் குடிக்கிறேன்? அதை நினைச்சுப் பாரு!" அபிராமி அதிர்ந்து போகிறாள். கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையாக... அப்படியும் ஆகுமோ? ஆறாம் வகுப்புச் சிறுமிகளுக்கு அப்பால் உலகம் தெரியாத பேதையாக அல்லவோ இருந்திருக்கிறாள். புருஷன் எப்படி இருந்தாலும் அவனால் பாதிக்கப்படும் பெண், கண்ணீர்க் குளத்தில் தடுமாறிக் கொண்டு நியதிகளால் ஒடுக்கப்பட்ட உலகுக் கொப்ப வாழ்ந்து தானாக வேண்டும் என்ற கோட்பாட்டை உடைக்கப் போனால், நியாயங்களையே குழப்புவதற்கு அஞ்சமாட்டார்கள் என்று அவள் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் சுஜி அவ்வாறு வழக்கை ஜோடிக்கத் துணியாதவள் அல்ல... புருஷன் என்ற மேலான பிம்பத்தைத் தூக்கி எறிந்து விட்டாளே? அவள் செய்வதறியாமல் கலங்கி நிற்கையில், சீனி அடுத்த இலக்குக்கு மெள்ளத் தாவுகிறான். "ஒரே வழி தான் இப்ப இருக்கு. நீ எனக்கு ஒரு பத்தாயிரம் தோது பண்ணிக்குடு. சவுதிலேந்து லச்சு வந்திருக்கிறான். பாஸ்போர்ட் எடுத்திட்டு வந்துடுடா, நல்ல சான்ஸ் இருக்குன்னான். பத்து முடியாதுன்ன, ஒரு அஞ்சு அட்லீஸ்ட் குடுத்தாக் கூட சமாளிச்சிடுவேன். இந்த வம்பெல்லாம் வாணாம். நான் அங்கே போயிட்டா, ஒரே வருஷத்தில் ஒன்னரை லட்சம் சம்பாதிச்சிக் காட்டுவேன். பிரிஞ்சு போயிட்டா அப்ப அவ என்ன செய்யறான்னு உனக்கும் வெட்ட வெளிச்சமாகும். எம்பேரில அப்ப உன்னாலும் தப்புக் கண்டுபிடிக்க முடியாது. நான் சொன்னது நிசம்னு அப்ப தெரியும்..." அவன் அவள் முகத்தை உற்றுப் பார்க்கிறான். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து... கடைசியில் பணம்... பணம்! "என்னிடம் ஒத்தக்காசு கிடையாது. நீ என்ன விளையாடறியா? ஏண்டா? முந்நூறு ரூபா பென்ஷன் என் வயிற்றைக் கழுவ. அதைத் தவிர ஒண்ணில்லாம உனக்குத் துடச்சிக் குடுத்தாச்சி. நீ சவுதிக்குப் போவியோ, எங்கே போவியோ? எவ்வளவு பணம் இது வரை நீ அழிச்சிருக்கே?... ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடலாம்னு நினைச்சேன். என் உடம்பையே செருப்பாக்கி உழைச்சேன். இனிமேலும் என்னைத் தொந்தரவு பண்ணாதே... போ!" இவள் துப்பிவிட்டாலும் அவன் விட்டு விடுவானா? "அப்ப எனக்கு வேற வழியே இல்லேன்னு சொல்ற. எங்கியானும் உன் பிள்ளை பாடி கிடக்கும். பின்னால் வருத்தப்பட்டு அழுது பிரயோசனமில்ல... எனக்கு உசிரை விட மானம் பெரிசம்மா... நான் எங்க போனாலும் ஒரு லீடர் போலத்தான் இருந்திருக்கிறேனே ஒழிய, சீன்னு ஒருத்தர் சொன்னதில்ல. நீ ஆபீசில வந்து கேட்டுப்பாரு. எங்க வாணாலும் வந்து கேளு... அப்படியான என்னக் கட்டிய பெண்சாதி, காலால இடறிட்டுப் போறா..." கண் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது. அபிராமி தன்னையறியாமல் நெகிழ்ந்து போகிறாள். கடைசி அம்பு நன்றாகப் பற்றிக் கொள்கிறது. |