17

     அன்பளிப்பாக வழங்கப்பெற்ற அந்தக் கீதைப் புத்தகத்தை, இதுநாள் வரையிலும் இப்படி ஆசுவாசமாக உட்கார்ந்து படிக்கக் கூடியிருக்கவில்லை.

     அன்று பகலில் அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     "அருச்சுனா, விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கித் தன் கடமையை ஆற்றுபவர் எவரும் என்னை அடைகிறார்..."

     விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிக் கடமையை... விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி... கண்கள் அந்த வரியில் மட்டும் ஒன்றிப் போகிறது.

     ஆனால் எழுத்துக்கள் தெரியவில்லை.

     அந்தச் சிறிய வீடு, சியாமளா, ரோஜாப் பூவாய்க் குழந்தை, அன்பு கவியும் ஒளியாய் அரவிந்தன்.

     அந்த வீட்டில் அவள் உரிமையுடன் அவளுக்குப் பத்தியம் வட்டிக்கிறாள். குழந்தையை மென்மையாய் தூக்கிக் குளிப்பாட்டுகிறாள்.

     அவன் அம்மா, அம்மா என்று அன்பைச் சொரிகிறான்.

     விமானப் படையில் இருக்கும் அவன்... யாரோ பெற்ற மகன்.

     "அருச்சுனா, விருப்பு வெறுப்பு அகற்றி..."

     யார் மீதும் விருப்பு இல்லாமல், வெறுப்பும் இல்லாமல்...

     மனம் மூர்க்கமாக, அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக அந்த அன்பில் ஒட்டிக் கொள்ளும் கற்பனையில் இலயித்துப் போகிறது.

     "என் பென்ஷனைத் தந்து விடுகிறேன். இந்த ஆசிரமம் பிடிக்கவில்லை. உங்களுடன் நான் இருக்கட்டுமா?..."

     விமானப்படை என்றால் தொலைவில் மாற்றுவார்களாக இருக்கும்.

     அவளைக் கண்ணாகப் பார்த்துக் கொள்வாள். அவளுடைய வாழ்வில் அவளுக்கு இப்படி அன்பு செய்யும் குடும்ப நிழலே கிடைக்காதா?

     ...மனசின் ஆழத்தில், பொங்கல், மறுநாள் லீவு, சுஜா விசாரித்துக் கொண்டு வருவாளோ என்ற சபலம் இருந்தது.

     ஆனால் இரண்டு நாளைய விடுமுறையும் கழிந்து விட்டன.

     அவள் வரவில்லை. அவள் வரமாட்டாள். அவளுக்கு என்ன ஒட்டு இனிமேல்?

     "ஏண்டிம்மா? என்ன புஸ்தகம் அது? அப்பவே புடிச்சி ஒரே பக்கத்தை வச்சிண்டு உக்காந்திருக்கே?..."

     "இது கீதைப் புஸ்தகம். ஒரு பக்கம் படிக்கவே ஒரு ஆயுசும் வேணும் போல இருக்கு..."

     "இங்க மன்றத்தில ரெண்டு மாசத்துக்கு முன்ன கீதை சொன்னார் ஒருத்தர். இவாள்ளாம் போனா. எனக்குத்தான் எங்க போக முடிகிறது? ஆனா, எங்காத்தில இல்லாத புஸ்தகமா?... அதெல்லாம் புரிஞ்சு படிக்கத் தனியா மூளை இருக்கணும். பொம்மணாட்டிக்குச் சமைக்கிறதும், காரியம் செய்யறதும், பிள்ளை பெறுவதும் தான் மோக்ஷம். இப்பதா பெத்துக்கறதே இல்ல. ஒண்ணு ரெண்டோட நிறுத்திக்கறா... அந்தப் பொண்ணு, பெத்திருக்கான்னயே? பொறந்தாத்திலேந்து யாரானும் வந்திருக்காளா?..."

     அபிராமி எழுந்து போக வேண்டியதுதான்.

     "அபிராமி டீச்சர்... அபிராமி டீச்சரைத் தான் தேடிண்டு வரா. உன்னையும் என்னையும் யார் தேடிண்டு வருவா? டீச்சரா இருந்தா எத்தனையோ பேரு!"

     புத்தகத்தைப் பட்டென்று மூடிவிட்டுக் கூடத்தில் எட்டிப் பார்க்கிறாள்.

     "யாரு?..."

     "உங்களைத்தான் யாரோ பொண்ணு தேடிண்டு வந்திருக்கா..."

     யாரோ பொண்ணு...

     மாடிப்படியில் கால் வைக்கு முன், மருதாணிக்கலர் பட்டுச் சேலையில் பழக்கமான அந்த அமைதியான முகம் தெரிகிறது.

     சுஜா... சுஜா...

     வராந்தாவிலேயே நிற்கிறாள். கண்களில் நீர் கோத்துக் கொள்கிறது.

     "அம்மா...!"

     அபிராமி அவளை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் நிற்கிறாள்.

     அவள் மெதுவாக வந்து தோளைத் தொடுகிறாள்.

     "...கிளம்புங்க அம்மா, போகலாம்."

     "சுஜி, உன் முகத்தில முழிக்க எனக்குத் தகுதியில்லை. நான் நிம்மதியா உங்களை விடணும்னா, உங்ககிட்ட வரக்கூடாது..."

     "நீங்க அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். வீட்டுக்கு வந்து பார்த்துட்டு ஓடி வந்துட்டா உங்களைக் கண்டு பிடிக்க முடியாதா? உஷா அழுதுண்டே இருக்கு. கிளம்புங்கம்மா!"

     எல்லாக் கிழங்களும் வராந்தாவில் எட்டிப் பார்க்கின்றன.

     "யாரு?... உள்ள வந்து பேசலாமே? வாசல்லயே நிக்க வச்சு?..."

     "இவளும் உங்க கிட்ட படிச்ச பொண்ணா?"

     அபிராமி உள்ளே வர சுஜாவும் பின் தொடருகிறாள்.

     சிறிய அறை, இவள் கட்டில், அடியில் பெட்டி... சூழ நிற்கும் முகங்கள்...

     "அம்மா, வாசல்ல நான் ஆட்டோவை நிற்க வச்சிருக்கிறேன். ரயில்வே ஸ்டேஷன்லேந்து புடிச்சிட்டு வந்தேன். கிளம்புங்க..."

     "ஏண்டி கூட்டிண்டு போகப் போறியா? நீ என்ன உறவா? பொண் பிள்ளை யாரும் இல்லைன்னு சொன்னாப்பில இருந்தது."

     கிழவி தலைத்துணி நழுவ, அவளை உறுத்துப் பார்க்கிறாள்.

     "...பெத்தால் தான் பெண்ணா?...பொண் மாதிரித்தான்."

     சுஜா கட்டிலுக்குக் கீழிருந்து பெட்டியை இழுக்கிறாள். கொடிச் சேலையை மடிக்கிறாள்! தட்டு டம்ளர், சீப்பு எண்ணெய் குப்பி எல்லாம் எடுத்து வைக்கிறாள்.

     "இதென்ன, திடுதிப்புனு சொல்லாம கொள்ளாம வந்து கூட்டிண்டு போறே?..."

     சுஜா அமைதியாகப் பதிலளிக்கிறாள்.

     "நான் செகரிடரி அம்மாக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சிட்டு கேட்டுண்டு தான் வந்திருக்கிறேன். போறப்ப வீட்ல சொல்லிட்டுப் போவோம்..."

     "எனக்கு அப்பவே தெரியும், இந்தக் கிழவியின் நச்சரிப்புக்கு ஒருத்தி இந்த ரூம்ல தங்கமாட்டான்னு" என்று முணமுணக்கிறாள் வெங்கி.

     நியாயமான ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றுவாராம்!

     இவளுடைய அந்தரங்க ஆசை நியாயமானதா?

     "சுஜா... நீ என்னை இப்படிக் கட்டாயமா அழைச்சிட்டுப் போறியே? நான்... நான், புழங்கும் பாத்திரம் பண்டம் தட்டு முட்டைக் கூட வித்துட்டு இங்க டொனேஷன் குடுத்திட்டு வந்தேன்மா! அந்தப்பாவி... மோசம் பண்ணிட்டான்..."

     "போகட்டும்..."

     சியாமளாவைப் பற்றிச் சொல்கிறாள். "இந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அவளை வீட்டுக்கு அழைத்து வந்த பின் பார்க்க வேண்டுமே?"

     "வரலாம்..."

     "அவம்மா, தைலாவைப் பார்த்தால் ஏனிப்படி இருக்கேன்னு சண்டை கூடப் போட்டு வரச் சொல்லணும். அந்தப் பையன் எத்தனை பிரியமாக இருக்கிறான்? சாதியாம் சாதி!"

     "செய்யலாம்..." போகப் போகிறாள், இந்தச் சுழலை விட்டு...

     அபிராமி எல்லோரிடமும் "போய்ட்டு வரேம்மா, அந்த ஏர்போர்ஸ் பையன் வந்தால், அப்புறம் வந்து பார்ப்பாள்னு சொல்லிடுங்கோ..." என்று சொல்லிக் கொள்கிறாள்.

     ஆட்டோவில் சாமான்களை வைத்தாகிவிட்டது.

     சாரதாம்பா, வீட்டு வாசலில் சோபா ஊஞ்சலில் இருக்கிறாள். இவர்களைக் கண்டதும் எழுந்து வருகிறாள்.

     "நீங்க கோவிச்சிண்டுதான் வந்திருக்கேள்னு தெரியாம போச்சே?..." என்று சொல்லிவிட்டு, ஏதேதோ காகிதங்களில், கையெழுத்து வாங்கிக் கொள்கிறாள். ஒரு மாச அட்வான்ஸ்... அது திருப்பித் தரும் வழக்கம் இல்லை...

     ரயில் வண்டியில் அந்த நேரத்தில் பள்ளிச் சிறுவர்களின் கூட்டம் நிறைந்திருக்கிறது. ஆண் பிள்ளைகள் - பெண் குழந்தைகள் நீலச்சீருடை; ஆறேழு வயசுக்கு மேல் இல்லை. ஆயா ஒருத்தி வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டு, கொத்தாகப் புத்தகப் பை, தண்ணீர் குப்பிகளுடன் வண்டியில் எல்லாருக்கும் காவலாக வீற்றிருக்கிறாள்.

     வண்டி கிளம்புகிறது. இரண்டு பிள்ளைகள், துருதுருப்பாய், விளிம்பில் நின்று காலை வெளியில் ஆட்டி வீரத்தனத்தைக் காட்டுகின்றனர்.

     "டேய், பாலாஜி! முகேஷ்! உங்க ரெண்டு பேரையும் இன்னா செய்யறது!" மூர்க்கமாக ஆயா இரண்டையும் பின்னுக்கு இழுத்து விடுகிறாள்.

     பெண் குழந்தைகளால் சங்கடம் இல்லை. அவர்கள் இப்படிச் சாகசம் காட்ட ஓடுவதில்லை, பாய்வதில்லை...

     இவள் ஒரு பக்கம் இழுத்து விட்டால், மறுபக்கம் விளிம்பில் நின்று கை காட்டுகிறார்கள்.

     "...நா இன்னா செய்யட்டும்! வாலுக! மிச்சம் பேரு கம்முனு கிடக்கல?..."

     குரோம்பேட்டை வந்து அந்தக் கும்பலை ஆயா இறக்கிச் செல்கிறாள். புதிய கல்லூரிப் பெண்கள், நிறைகின்றனர்.

     அபிராமி கனவில் நடப்பது போல பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.

     நுங்கம்பாக்கத்தில் இறங்கி, ஆட்டோ பிடிக்கிறார்கள்.

     வீடு... வீடு... வீட்டில் குழந்தை, மங்களம்மா...

     "வாங்கோம்மா! அன்னிக்கு எந்த ஆசிரமம்னு கேக்காத போயிட்டேன். நீங்க எதுக்கு ஆசிரமத்துக்குப் போகணும்? நல்லவேளை கூட்டி வந்துட்டாளே!"

     "பாத்தீ...!" குழந்தை காலைக் கட்டுகிறது.

     "ஆசிரமமா? கிழடுகளை வச்சிட்டு ஒரு ஹாஸ்டல் நடத்தறா. அவ என்ன லேசில விட்டாளா. நான் யாரு என்னன்னு நம்பல. வயசுப் பெண்கள் ஹாஸ்டல்லேந்து கூட எப்படி எப்படியோ அழைச்சிட்டுப் போயிடறாங்க. எத்தனை பேப்பரில அழச்சிட்டுப் போறேன்னு கையெழுத்து? உங்களுக்கு அங்க எப்படி இருக்க முடிந்தது அம்மா? நாளெல்லாம் ஸ்கூலில் கலகலன்னு குழந்தைகளுடன் இருந்திட்டு...!" என்று கூறிக் கொண்டே சுஜா பெட்டியை மாடியில் கொண்டு வந்து வைக்கிறாள்.

     "எந்த மூஞ்சிய வச்சிண்டு உங்கிட்ட வந்து நிப்பேன்? ஐ ஃபீல் கில்ட்டி சுஜா!"

     "நீங்க ஏன் அப்படி நினைக்கணும்? அப்படிப் பாத்தா, நானும் தான், இருபத்தெட்டு வயசில, இந்தக் கல்யாணம் சரிவருமான்னு கணிக்கத் தெரியாம விழுந்தேன். போனதெல்லாம் போகட்டும். அங்கே போய் பார்த்த பிறகு, அங்க போய் வேற யாரும் இருக்கறதக் கூட நான் விரும்பல. நம்பிக்கையே இல்லாத ஒரே வறட்சியான முகங்கள். என்னமோ, ஜெயில் கட்டடம் மாதிரி... ஆசிரமம்னா தனித்தனியா, பெரிய தோட்டம், நதிக்கரைன்னு இருக்கணும். கொஞ்ச நஞ்சம் நடக்கிறவர்களும் கூட, இங்க முடங்கினால் சீக்குக்காரர்கள் போல் ஆயிடுவாங்கன்னு எனக்குத் தோணித்து!"

     மங்களம் காபியும், பகோடாவும் கொண்டு வந்து வைக்கிறாள்.

     அபிராமிக்கு இதற்கு மேல் அடக்க முடியவில்லை.

     சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்று, பிள்ளையின் பசப்பலில் மயங்கி, எல்லாவற்றையும் இழந்து இங்கு சக்கையாக விழுந்திருக்கிறாள்...

     "நீங்க அதை எல்லாம் மறந்திடுங்கம்மா, நீங்க போனது ஒரு விதத்தில நல்லது. ஏன்னா, அந்தப் பசை உங்ககிட்ட ஒட்டி இருக்கிற வரையிலும் பிள்ளைப்பாசம் விட்டிருக்காது. அவனும் உங்களை விட்டிருக்க மாட்டான். இனி நிம்மதி. நீங்க உழைச்ச ஊதியம் பென்ஷன் வருது. எங்ககிட்ட சும்மா இருக்கிறதா நினைக்க வேண்டாம். எங்களுக்கு நீங்க ஆதரவு, மாமியார் மருமகள் உறவில்லை. நாமெல்லாரும் ஒரே இனம்... இனிமே கண்ணீர் வரக்கூடாது..."

     "சுஜி, எனக்கு... என்னன்னாலும் ஆறல. வக்கீலப் பார்க்கணும்..."

     "எதுக்கு?"

     "பணம் போன வயித்தெரிச்சல் கூட இல்ல, அவன் என்னமா நாடகம் ஆடிருக்கிறான்? அவன் மேல வழக்குப் போடணும். ஃபோர்ஜரி... பண்ணிப் பணத்தை எடுத்திட்டுப் போயிருக்கிறான்."

     "அதை நீங்க பார்த்த உடனே ஏன்மா கேட்கல? சாவகாசமா வந்து கேட்டா, நான் சொல்லிக் கொடுத்துப் பொய்யாப் போட்டிருப்பதான்னா நினைப்பாங்க?"

     ஆமாம். அவள் முட்டாள்தனமாக அப்போது நான் தான் செக் கொடுத்தேன் என்றாளே?

     "அப்ப எனக்கு அதிர்ச்சில ஒண்ணுமே தோணலை... ஆனா இப்ப ஆத்திரமா வரது. ஒரு சமூக விரோதி, புல்லுருவி அதற்குரிய பலனை அவன் அநுபவிக்கணும்..."

     "பொன்னூசியால கண்ணைக் குத்திக்கலாமான்னு இப்ப தோணலாமா?"

     "குத்தலன்னு வச்சுக்க. அதைத் தொலைச்சிட்டு, இங்க உங்கிட்டயும் வந்து உன்னையும் உரிச்செடுக்க நாடகம் ஆடுவான். அவன் அஞ்சு உணக்கையும் விட்ட அயோக்கியன்."

     "அதெல்லாம் இங்க வரவிட மாட்டேன். எங்கிட்ட இனிமே அவன் ஜம்பம் ஒண்ணும் சாயாது. புருஷன்னுற உறவெல்லாம் எப்பவோ போச்சு. சட்டப்படி வாங்க வேண்டியதுதான் பாக்கி..."

     "அதுக்குச் சொல்லலம்மா, அவன் ரசாபாசமா உன் ஆபீசில் வந்து கத்துவான். அவன் கொட்டத்தை அடக்கணும். ஒரு ஆண், பெண்ணுடைய மென்மையான இயல்புகளை எப்படிச் சூறையாடுகிறான்கிறதுக்கு, எல்லையே இல்லைன்னு நிரூபிச்சிருக்கிறான். இதை மூடி மறைக்கக் கூடாது. இவனைச் சட்டப்படி புடிச்சுத் தண்டனை வாங்கிக் குடுக்கணும்..."

     அபிராமிக்கு வெறியே வந்திருக்கிறது.

     அவளுடைய எலும்பு முட்டிய கன்னங்கள் இன்னும் இறுகி விழிகள் துருத்திக் கொண்டு நிலைப்பது போல் பார்க்கிறாள்.

     இந்த உணர்வு, மகனைப் பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் தானா, அல்லது, ...இந்த மருமகள், இவள் எப்படியும் வெற்றி பெற்று விடுகிறாளே, இவளை நாம் தோற்கடிக்க முடியவில்லையே என்ற உணர்வோ?...

     "ஏன் இப்படி உங்களுக்குக் கை துடிக்கிறது...? நடுங்குகிறது?... டோன்ட் கெட் அஜிடேடட்... அம்மா, காம் யுவர் செல்ஃப்... உங்களை முதலில் டாக்டரிடம் கூட்டிட்டுப் போகணும்..."

     "டாக்டர் வேண்டாம், வக்கீலைத்தான் பார்த்து எல்லாம் சொல்லணும். நீ யாரோ உன் கூடப் படிச்சவளோ, ஃபிரன்டோ வக்கீல் இருக்கான்னீயே? படிச்சாலும், தாய்ங்றவங்க எப்படி முட்டாளாகவே இருக்கான்னு, அவ கூடப் புரிஞ்சிக்கணும்..."

     "சரி, எனக்கு லீவு கிடைக்கட்டும், கூட்டிட்டுப் போறேன்..."

     "ஏன், இன்னிக்கே இப்பவே போகக் கூடாது..."

     "...இருக்கட்டும், அவள் இன்னிக்கு வீட்டில் இருப்பாளோ, இல்லையோ, நாளைக்கு ஃபோன் பண்ணி ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போகலாம்!"

     கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.