உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
9 "ஆண்! ஆண் குழந்தை! பிள்ளையாப் பிறந்திருக்குடீ..." அபிராமிக்குப் பிரசவ அறையில் கேட்ட தாயின் ஆர்ப்பரிப்பு, நேற்றுக் கேட்டார் போல் பசுமையாக ஒலிக்கிறது. அவளுடைய சிறுமை வாழ்வில், இருட்டாகப் படுதா விழுந்து விட்ட மணவாழ்வின் பின்னணியில் ஒரு நட்சத்திரமாக மின்னியது அந்தச் சொல். "அடீ, செக்கச் சிவக்க, சுருட்டை முடி வழிய... கண்பட்டுடும்..." இது ஒரு கிழத்தின் குரல். கறுப்பு அபிராமிக்கு, எந்த வகையிலும் உயர்வு இல்லாத அபிராமிக்கு, அப்படி ஒரு மாப்பிள்ளை வாய்த்தான். திருஷ்டி பட்டுவிட்டது! அது போல் இந்தப் பிள்ளை... இவளுக்கு ஒட்டுமோ என்று அப்போது யாரும் பிரலாபிக்கவில்லை. முழுக்க முழுக்க இவளுக்குப் பெருமை சேர்க்க, தாயின் குடல் விளக்கம் செய்து கொண்டு வந்த தெய்வப் பிள்ளை போல் புகழேற்றான். அப்போது அவள் வாழ்வின் உச்ச நிலையாகிய தாய்மைப் பேற்றின் சுவர்க்கத்தில், வேறு எந்தக் குறையும் தெரியாதவளாக அவளை அவன் ஏற்றி வைத்தான். அந்த நிமிடத்துக்கான சுவர்க்கானுபவத்துக்குக் கைம்மாறு போல், இப்போது தண்ணீர், பத்திய உணவு, பார்லி, ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டிறங்கி லொங்கு லொங்கென்று நடக்கிறாள். 'இன்றோடு முப்பத்தெட்டு நாட்களாகி விட்டன, அவனை மருத்துவமனையில் சேர்த்து குடல் அரிப்பு, புண், நரம்புத் தளர்ச்சி எல்லாம் முத்திரண்டு வயசான அவனில் மேவியிருக்கின்றன. பெரிய பெரிய டாக்டர்கள், நிபுணர்கள் என்று வந்து, பணம் பறிக்கும் பல வழிகளையும் நோயாளிகளிடம் கையாளும் மருத்துவமனை அது. இவனுடைய கம்பெனி இந்தச் செலவுகளுக்குப் பணம் கொடுக்குமா என்று அவள் அறியாள். ஆனால் அலுவலகத்தில் வாந்தி எடுத்து விழுந்தவுடன் அலுவலகத்திலிருந்தவர்கள் சேர்த்திருக்கிறார்கள். தனி அறை இல்லை என்று அவன் குறைப்படுகிறான். இது பெரிய அறைக்குள் அட்டைத் தடுப்புப் போட்டு, கட்டில் கொள்ள இடம் விட்ட புறாக் கூண்டு என்றால் தப்பில்லை. இதற்கே ஒரு நளைக்கு ஐம்பது ரூபாய் வாடகை. ஆயா, வார்ட் பாய், நர்ஸ், மருந்து என்று அவ்வப் போது நூறு நூறாகச் செலவாகிறது. அபிராமி அந்தச் சங்கிலியைச் சுந்தராம்மாளிடம் கிரயம் போட்டுக் கொடுத்துப் பெற்ற பணம் துப்புரவாகத் தீர்ந்துவிட்டது. இன்னும் டாக்டர் பில். மருத்துவமனைக்கு அவ்வப்போது ஆயிரம் ஆயிரம் முன்பணம் கட்டியது போக வரவிருக்கும் பில் எவ்வளவோ? பையனின் நோய்க் கவலையை விட, தங்கள் சக்திக்கு எட்டாத வைத்தியம், எத்தகைய பணச்செலவில் கொண்டு விடுமோ என்ற கவலை பெரிதாக இருக்கிறது. அவன் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு இரண்டு வாரங்கள் பொறுத்து, சுஜிக்கு அவள் நேராகச் சென்றே விவரம் தெரிவித்தாள். நோயைப் பற்றிய விவரத்தை விரித்துச் சொல்லவில்லை. அமிதமான குடியினால் ஏற்பட்ட கோளாறு என்பதுதான் வெளிச்சமாயிற்றே? "ஆயிரம் ஆயிரமாச் செலவழியிது. அவன் கம்பெனியில குடுப்பாங்களோ, மாட்டாங்களோ தெரியல..." சுஜா எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாள். "மாட்டாங்க..." என்றாள் வெடுக்கென்று. "அவங்கதானே அங்க கொண்டு போய் சேர்த்தது?" "அது பக்கத்தில எவனானும் அவசரத்துக்குச் சேர்த்திருப்பான். இவரு வெறும் ஸேல்ஸ் ஆளு. அதுவும் வருஷம் வருஷம் கான்ட்ராக்ட். கமிஷன் சம்பளம்னு தரான். இன்னும் பர்மனன்டாக் கூட ஆக்கல. இந்தப் பணம் புடுங்கி நர்ஸிங் ஹோம் செலவு அவங்க ஏத்துப்பாங்களா?" "பத்தாயிரம் இழுத்திடும் போல இருக்கும்மா!" என்றாள் அபிராமி கலவரத்துடன். "நான் சொல்றதக் கேளுங்க. அந்த நர்ஸிங்ஹோமிலேந்து பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு மாத்துங்க. இவங்க இல்லாத பொல்லாத டெஸ்ட்னும், ட்ரீட்மென்ட்டுன்னும் உரிச்சு எடுத்திடுவாங்க... நா வேணா, பிரேமைப் பார்த்து, ஹெல்ப் பண்ணச் சொல்றேன். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் யார் டாக்டரோ ஸ்பெஷலிஸ்டோ, கவனிக்கச் சொல்வாரு..." "லிவர் கெட்டிருக்காம்..." "கெடாம என்ன செய்யும்...?" என்று முணு முணுத்துக் கொண்டு போனாள் அவள். அபிராமி திகைத்தாள். மகனைச் சுற்றி, மாலையில் யாரெல்லாமோ சிநேகிதர்கள் அலுவலகத்து 'ரிசப்ஷனிஸ்ட்' என்று ஒரு பெண் சுவாதீனமாகப் படுக்கையில் வந்து உட்கார்ந்து தொட்டுத் தொட்டுப் பேசுகிறாள். சிரிப்பு, பேச்சு... இரவு ஒன்பது மணி வரையிலும். பத்தியச் சாப்பாட்டைக் கண்டால் வெறுக்கிறான். "என்னம்மா இது? வறுகலா, முறுகலா எதானும் கொண்டு வாயேன். அந்த டாக்டர் தான் சொல்றான்னா நீ வேற அறுக்கறே?" "டேய், பத்தாயிரம் செலவழிஞ்சாச்சு. உன் ஆபீசில குடுப்பாங்களா என்னன்னு தெரியல... உனக்கு எதானும் கவலை இருக்கா? டாக்டரானால், முழு நீளம் மருந்து மாத்திரைன்னு எழுதறார். நீயானால் வறுகல் முறுகல்ங்கற... உடம்பு எழுந்திருக்க முடியாம தள்ளாடுறது..." "நீ என்னம்மா, பணம் பணம்னு? இதிலியே பாதி என் உயிரை எடுத்துடறே. கொஞ்ச நேரம் சிரிச்சுக் கவலையில்லாம பேசறதில்ல, நீ வரவேணாம் போம்மா!" டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்ன பொருளை வாங்கிச் சாப்பிட்டு விடுவானோ என்பதற்காக அபிராமி கண்ணுங்கருத்துமாக அவன் வெடுவெடுப்பை மீறித் தவம் கிடக்கிறாள். புழுங்கலரிசிக் கஞ்சி, இட்டிலி, காய்கள் வேகவைத்து தயாரித்த ரசம், என்று அவன் எளிதில் சீரணித்து, உடல் தேறி வருவதற்காக குருதி கசியும் முள்ளில் பயணம் செய்வது போல் நாட்களை நகர்த்துகிறாள். இடையில் சுஜா ஒரு நாள் எதிர்வீட்டுத் தொலைபேசியில் அவளுடன் பேசுகிறாள். "ஜி.எச்சுக்குப் போகவில்லையா? ஏன்...?" இவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை யாரிடம் சொல்வது, எப்படிச் சேர்ப்பது! தனபாக்கியத்திடம் சாடையாகத் தெரிவித்த போது, "ஜி.எச்சில் பார்ப்பாங்களா? அநாத மாதிரி இழுத்துப் போடுவான். பச்சத் தண்ணி கூடக் குடுக்க மாட்டான். உங்களுக்கு ஒரு புள்ள, என்னம்மா செலவு? பணம் இன்னி வரும், நாளைப் போகும்" என்று சொன்னாள். இதையெல்லாம் எப்படி அவளிடம் தெரிவிக்க? அவளுக்கும் கெடுபிடியாம். அவர்கள் வீடு பத்திரம் எழுதி கிரயம் ஆகிவிட்டதாம். அங்கேயே ஹவுஸிங் போர்ட் வீடொன்று வாடகைக்கு எடுத்து முதல் தேதி அம்மாவுடன் போகிறாளாம்... செய்தி சொல்லத்தான் அந்தப் பேச்சு. அவள் வந்து இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. வீடு விற்ற பணத்தில் ஒரு பங்கு கையில் வந்திருக்கும். புருஷனின் மருத்துவச் செலவுக்கு... கல்லானாலும் கணவன் மரபில் மலர்ந்த அவளுக்கு, மனசின் ஊடே இத்தகைய வரிகள் மின்னுகின்றன. பட்டென்று அவளே வெட்டிக் கொள்கிறாள். "அம்மா, டாக்டர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டார்..." "அப்பாடா..." ஆனால் இன்னும் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? வீட்டுக்கு வந்த பின் மருந்து ஊட்டத்துக்கான சத்துகள்... இன்னமும் நாலாயிரத்துச் சொச்சம் பில் கொடுக்கிறார்கள்... அபிராமி அலையக்குலைய வீடு வருகிறாள். தணிகாசலம் வெளியே 'வாக்கிங்' கிளம்பிக் கொண்டிருக்கிறார். "வாங்க டீச்சர், சீனி எப்படி இருக்கிறான்? வீட்டுக்கு எப்ப அனுப்புறாங்க?" "அதான்... உள்ள வாங்க சொல்றேன்... வீட்டுக்கு அழைச்சிட்டுப் போன்னு சொல்லிட்டாங்க..." உள்ளே வந்து அவர் உட்காருகிறார். தனபாக்கியம் அருகில் நிற்கிறாள். "இன்னும் அஞ்சாயிரம் போல வேண்டியிருக்கு... அதான் அவசரமா வந்தேன்..." "உக்காருங்க டீச்சர், நின்னிட்டே..." தனபாக்கியம் மஞ்சள் குளித்து பசுமை மாறாத முகத்தில் குங்குமம் துலங்க, "அம்மாடி, நல்லபடியாச்சில்ல. உங்க மருமகள, அம்மன் கோயில்ல வெள்ளிக்கிழமை மாவிளக்கு போடச் சொல்லுங்கம்மா, ரெண்டு வீட்டில மடிப்பிச்சை வாங்கி!" என்று கூறுகிறாள். இவர்கள் சம்பிரதாயம் வழுவாமல் இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து, இரண்டு மருமகன்களும் கொண்டிருக்கிறார்கள். சம்பிரதாயம்-மரபு மீறாத குடும்பம்... இவள் கோயில் பிரசாதத்தைத் தூக்கி எறிந்தாள்; மஞ்சட்கயிற்றைக் கழற்றி விட்டாள். கழுத்தில் தாலி இல்லை. சுருக்சுருக்கென்று குத்துகிறது. ஒரு வேளை இந்தப் பையனுக்கு இவ்வளவு உடல் நலக்கேடு அதனால் வந்ததோ? சுஜாவின் முன் நிற்கும் போது அவள் பக்கம் நியாயம் என்று சாய்ந்து விடும் மனசு இப்போது, இந்த மூடப்பிடியையும் பற்றிக் கொள்கிறதே? "ஏம்மா, சுஜா அப்படியே நர்சிங் ஹோம் வந்து பாத்திட்டுப் போவுதோ?" "...ஆமா, அவளுக்குப் பொழுதே இல்ல. குழந்தைய வீட்டில விட்டுவரா. அவங்க வீட்டில வேர தகராறு. அவ வீடு மாத்திட்டுத் தொலைவில போயிருக்கிறா..." "...அதா... ரொம்ப முட்டாயிட்டது. இவன் ஆபீசில பணம் எப்ப வருமோ, அவசரத்துக்குக் கையில் பத்தாயிரம் வேண்டி இருக்கு. வீட்டை வங்கில வச்சு, ஒரு பத்து வாங்கி வச்சிக்கலாம்னு பாக்கறேன்..." தணிகாசலம் உறுத்துப் பார்க்கிறார். "ஏம்மா வீட்டைப் போய் வைக்கறீங்க? உங்க மருமக நினைச்சா, அம்பதாயிரம் புரட்டலாமே?..." "...அது இருக்கட்டுங்க. அவகிட்ட போய்ச் சொல்றது கேவலம்னு சீனியே நினைப்பான்... எனக்கு நாளையே வந்திட்டா திருப்பிடப் போறம்?" "இல்லம்மா, ஓரஞ்சு பத்துக்காக..." "அதுக்குத்தான் யாருகிட்ட போயி நிக்க? நாளைக்கு வங்கிலியே வச்சிடலாம்னு பாக்கறேன்... நீங்க வந்து...பாருங்க, எனக்கு இப்ப தனியா எது செய்யலாம்னாலும் நடுக்கமாயிருக்கு..." "இதுக்கென்னம்மா, நாளைக்கு வெள்ளிக்கிழமை. ராவுகாலத்துக்கு முன்ன பத்திரமெல்லாம் எடுத்திட்டு வாங்க..." மறுநாள், சொன்னபடி பணம் பெற்று பகுதிப் பணத்தை சேமிப்புக் கணக்கில் போடுகிறாள். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போது மணி பன்னிரண்டாகி விடுகிறது. "ஏம்மா இத்தனை நேரம்...? சுஜிக்குச் சொன்னியா?..." நாலைந்து நாட்களாக அவன் சுஜிக்கு சொன்னாயா, வரச் சொன்னாயா என்று கேட்கிறான். உயிர் பிழைத்த பையன், வெளுத்து, நிறம் மாறி, தளர்ந்து, எப்படிப் போய் விட்டான்? ஆனால் அவள் சிறிதும் ஈரமில்லாத குரலில் முணமுணத்ததை எப்படித் தெரிவிப்பாள்? "டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிட்டாரா?" "சாயங்காலந்தான் வருவார்?... சுஜிய எப்பம்மா பார்த்தே? அவள வரச் சொல்லலியா?" "அவ... வீட்டை வித்திட்டாங்கப்பா. வேற எங்கோ வீடு பாத்திருக்கிறாளாம்..." அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றுகிறது. "வீட்டை வித்தாச்சாமா? என்ன கிரயம்?" "அதெல்லாம் நான் கேட்கல..." "இவளுக்கு ஒரு ஷேர் வந்திருக்கும். அம்மா, வீடு ரெண்டு லட்சம்னு பேசிக்கிட்டாங்க. அவம்மா இங்கதான இருக்கா?" "ஆமா." அவன் படுக்கையில் உட்கார்ந்து, அபிராமி கிண்ணத்தில் விட்டுக் கொடுக்கும் ரசத்தைப் பருகுகிறான். "சப்புச் சப்புன்னு ருசியே இல்லம்மா. இதுல கொஞ்சம் மசாலாப் பொடி போடக் கூடாது?" "கொஞ்சம் பொறுத்துக்கோ. டாக்டர் குடுக்கலாம்னு சொன்னாக் குடுப்பேன் நீ கேட்காம. வீட்டை பாங்கில வச்சு பத்தாயிரம் வாங்கினேன். உன் உடம்பு நல்லபடியா ஆகணும். நீயும் அதுக்கு ஒத்துழைக்கணும்டா சீனி?" "...அம்மா... நான் இந்த வேலைய விட்டொழிச்சிடப் போறேன். எனக்கும் குடிக்கிற பழக்கம் இதுல இருந்தா போகாது..." "சரி, நீ முதல்ல நல்லபடியா வீட்டுக்கு வந்துடு, பேசிக்கலாம்." "இல்லம்மா, கல்பனா இருக்காளே, எங்க ஆபீஸ்ல... அவண்ணன் ராஜனும் இன்னொருத்தருமா, நல்ல ஸ்கீம் வச்சிருக்கா. சொந்தமா நாமே இந்த பிஸினஸ்ஸைச் செய்யலாம்னு. முதல்ல ஒரு இருபதாயிரம் போட்டு, ஆரம்பிச்சிடலாம். அவங்க லட்சம் முடக்கறாங்க. நான் வொர்க்கிங் பார்ட்னர். சுஜா மட்டும் இப்ப ஹெல்ப் பண்ணினா..." துணுக்கென்று கடிக்கிறது நெஞ்சில். "இதபாரு சீனி? உனக்கு ரோசம் மானம் இருக்கா, இல்லையா? அவகிட்ட நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது. நீ முதலிலேயே அவகிட்டப் பண விவகாரம் வச்சிட்டதால தான் சீன்னு போயிட்டது. உனக்குப் பெண் சாதி குழந்தைய வச்சிட்டுக் காப்பத்தணும்ங்கற பொறுப்பு இல்ல. எந்தப் பெண்ணானாலும் அவ ஆயிரம் சம்பாதிச்சாலும், புருஷன் தங்கிட்டப் பணம் கேட்கிறான்னா கேவலாமாத்தான் மதிப்பா? அவ வந்து ஒரு வருஷம் ஆகுமுன்ன உன் புத்தியக் காட்டிட்டே. அவளாகக் கொடுப்பது வேற. ஆனா, உன்னால நான் அவமானப் படறேன்; நாணிச் சாகறேன்?" அபிராமியின் கடுமை அவனை வாயடைக்கச் செய்கிறது. மேலும் இரண்டு நாட்கள் பொறுத்து, அவன் சிகிச்சை இல்லத்தை விட்டு வருகிறான். அக்கமும் பக்கமும் தெரிந்தவர்களும் வந்து பார்க்காமல் இருப்பார்களா? "பாவம், எப்படீ ஆயிட்டது?... டூர் டூர்னு போயி கண்ட நேரத்தில கண்ட ஓட்டல்ல சாப்பிட்டுதா வயிறு கெட்டு குடல் புண்ணாயிட்டுது" என்று தனபாக்கியம் அங்கலாய்க்கிறாள். "வி.ஜே. நர்சிங் ஹோமா? அங்கதா எல்லா ஸ்பெஷலிஸ்டும் வராங்களே?... பாவம், டீச்சர், இந்த ஒண்ணறை மாசமா அலைஞ்சு தேஞ்சு உருகிப் போயிட்டாங்க. இப்ப அவங்களுக்குத்தான் ஸ்பெஷலிஸ்ட் பார்க்கணும். எங்க நேத்ராவுக்கு ஜான்டிஸ் வந்தப்ப..." என்று தொடங்கி பொறுமையைச் சோதிக்கிறாள் எதிர்வீட்டுக்காரி. "ஏம்மா சுஜி வரவேயில்லையா?" என்று யாரும் கேட்கத் தவறவில்லை. எல்லோருக்கும் அபிராமி மூடி மழுப்புகிறாள். இவன் வீடு வந்தது தெரிந்ததும், மருத்துவமனைக்கு வரும் சிநேகிதர்கள் இங்கே வருகிறார்கள். கல்பனா, மாலா, ராஜன்... எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சிரித்துப் பேசுகிறார்கள்! சீட்டாடுகிறார்கள். "அம்மா, டீ போட்டு வாயேன்!" அபிராமியினால் தட்ட முடியவில்லை. அதிகப்படி பால் வாங்கி, தேநீர் தயாரித்தாள். "ஏம்மா? கொறிக்க ஒண்ணுமில்லையா? நீ வச்சிருப்பியே?" என்று எல்லோர் முன்பும் கேட்கும் கேள்வி அவளை இளக்குகிறது. இருப்பது இல்லாதது தேடி, இட்டு நிறப்பி, மாவைக் கரைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அவர்கள் கொறிக்கக் கொண்டு வைக்கிறாள். இடையே தொலைக்காட்சி ஓடுகிறது. அபிராமியினால் சகிக்க முடியவில்லை. அவரவர் ஸ்கூட்டர், சைகிளில் ஏறிச் செல்ல இரவு ஒன்பதரை பத்து மணியாகிறது. "சீனி, இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை?" சிகரெட்டை உதட்டில் வைத்துப் புகையை விட்டுக் கொண்டு அவளை உறுத்துப் பார்க்கிறான். வாழ்க்கை என்பதை இவன் புரிந்து கொண்டிருப்பது இதற்குத்தானா?... இவனுக்கேற்ற சிநேகங்கள்... உதிரிகள். பொறுப்பற்ற, உதிரிகள். குடும்பம், அல்லது, ஒன்றிப் பணி செய்யும் கடமையுணர்வு, எந்த இலட்சியமேனும் அளிக்கும் தாகம்-ஒன்றுமே இல்லாத வாழ்வு. ஒழுக்கம், கண்ணியம், நேர்மை என்ற குறிக்கோள்கள் எதுவும் இல்லாத பாதையில் போகிறார்கள். இந்தப் போலி வாழ்வுக்கு, புகை, இரைச்சல், சூதாட்டம் - அது இது எல்லாம் சொர்க்கமாகத் தோன்றுகின்றன. அபிராமி மனம் நைந்து செய்வதறியாமல் சோருகிறாள். "நீ இப்படியே போயிட்டிருந்தால், நாம நடுத்தெருவில் நிற்கும் நாள் தொலைவில் இல்லை சீனி!" "என்னம்மா, நீ எப்ப பார்த்தாலும் மூக்கால அழுற... ஒரு சமயமானும் என்னை நீ தட்டிக் கொடுத்து மெச்சி, என் திறமையை வளர்த்திருக்கியா? நாம நடு வீதில நிப்போம் - ப்ளடி மிடில் கிளாஸ் மென்டாலிடி, பயம்... ஒரு காரியம், ஒரு வென்சர், செய்ய எப்பவானும் உட்டிருக்கியா நீ?... உன் மனசே எப்பவும் குத்துப்பட்ட உடஞ்ச கண்ணாடி போல, கோளாறையே பாக்கிறது. அவநம்பிக்கைப்படுது..." "அது சரிதான் சீனி, இப்படி எத்தனை நாளைக்கு உக்காந்து வெளிச்சம் போடறது?" "நான் ஆபீசுக்குப் போயி எல்லாம் தீத்துட்டு, வந்துடப் போறேன். ராஜன் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இங்கா ஹைதராபாதான்னு தீர்மானமாகல. நான் வொர்க்கிங் பாட்னர்..." "நீ பாட்டில பணத்தை வாங்கிட்டு எங்கேனும் எவளோடயேனும் போய் வேட்டு விட்டுட்டு வருவே. இதுதான் வொர்க்கிங் பாட்னர்?" "சீ... சீ! உன்னோடு பேசிப் புண்ணியமில்லை அம்மா!" அபிராமி என்ன செய்வாள்? பிள்ளையா காலைப் பிடித்த சனியனா?... இவள் ஒதுங்குவதாகப் பேசாமல் போனாலும் அவன் விடவில்லை. "மம்மி டியர்... இடிஞ்சி போயிட்டியே?... நீ பாரு, நான் சொல்றேன். ராஜன், இருக்கிறானே, அவன் சாமானியம் இல்ல. நல்ல புல் உள்ளவர். நாங்க இப்ப மார்க்கெட்ல இறக்கிற சரக்கு... ஒரு கலக்கே கலக்கப் போறது. புது விஷயம் - புது டெக்னிக்... புதுவித பப்ளிஸிடி... அது ஒவ்வொரு இடத்துக்கும் பரவுறது... ரீச் ஆறதுக்குப் புது ஐடியாஸ்... சட்டுனு அது கிளிக் ஆகுது... நான் இப்ப சொல்றது உனக்குப் புரியாது... நானும் பெரிய ஆளா ஆவேன். அப்ப பாரு..." வேர்விடாத பாசி... அதற்கு நீர் வார்த்து வளர்த்துக் கொண்டு வருகிறாளே? அவள் ஒரு வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளாமல் செட்டும் கட்டுமாக சேமித்து, வீடு கட்டியது, நகை செய்தது, அவனைப் படிக்க வைத்தது, எல்லாம் வெறும் அர்த்தமில்லாத கனவுதானா? இந்த நிலையில் யாரிடம் சென்று உதவி அல்லது ஆலோசனை கேட்பாள்? தம்பி, அக்காள் எல்லோரும் அவரவர்க்கு மூன்றாம் தலைமுறை தலையெடுக்க ஒதுங்கி விட்டார்கள். இவளுக்கென்று ஆதரவாக ஆந்தரிகமாக... அப்படி யாரிடமேனும் அண்ட வேண்டும் என்று தாபமாக இருக்கிறது. யார் தோளிலேனும் சாய்ந்து, 'அம்மா...' என்று கூவ வேண்டும் போன்ற ஒரு பலவீனம் ஆட்கொள்ளுகிறது. அதேசமயம் நாணமாகவும் இருக்கிறது. இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் ஆசிரியை என்ற பெருமித உணர்வோடு, ஆயிரமாயிரமாய் இளம் குழந்தைகளுக்கு அவள் தாய் போல் இருந்திருக்கிறாள். அவளுக்குப் பலவீனம் வந்ததில்லை. அவள் சாய்ந்து கொள்ள ஒரு பெருந்தூணாக அந்த உணர்வே இருந்தது... அபிராமிக்கு இப்போது, இந்த வீடு, இந்தப் பிள்ளை, உறவு எல்லாவற்றையும் உதறி விட்டு, எங்கேனும் ஒதுக்குப் புறமாக ஒரு பள்ளியில், இளம் உள்ளங்களைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளைக் கழிக்க முடியாதா என்று தோன்றுகிறது. நாட்கள் நகருகின்றன. சீனி நன்றாகச் சாப்பிடுகிறான்; படுத்து உறங்குகிறான்; நான்கு மணிக்கு நன்றாக உடுத்திக் கொண்டு வெளியே சென்று ஆறு மணிக்கெல்லாம் திரும்பி வருவதும், நண்பர்கள் வருவதும் சிரிப்பும் கும்மாளமுமாக இரவு பதினோரு மணி வரையிலும் கழிவதுமாகப் போகிறது. அக்கம் பக்கம் சும்மாயிருக்குமா? "சீனிக்கு எத்தனை நாள் லீவு? உடம்பு நல்லாயிடுத்தா? இருக்கட்டும், உடம்பு நல்லாத் தேறட்டும்..." என்று கேள்விகளும், பதில்களும் எழுந்து விழுகின்றன. அபிராமியினால் அன்று காலை எழுந்திருக்க முடியவில்லை. எழுந்து நின்றால், நிலையில்லாமல் தலை சுற்றுகிறது. "சீனி..., சீனி..., பால் வாங்கிட்டு வரியாடா? எந்திருந்து நிக்க முடியலப்பா?" அவன் அருகே வந்து பார்க்கிறான். "என்னம்மா...?...அட... வாணாம், படுத்துக்கோ, நான் வாங்கிட்டு வரேன்?" இளவரசனாக அல்லவா உட்கார்த்தி வைத்துப் பேணி இருக்கிறாள்? அவனுக்கு இப்படி ஒரு 'ரோல்' அவள் கற்பித்தது கூட இல்லையே? எனவே இதைச் சொன்னதே பெரிதாக இருக்கிறது. பால் வாங்கி வருகிறான். அவள் மெள்ள மெள்ள எழுந்து காபி போட வருமுன் தானாகவே அவளை உட்காரச் செய்து, பால் காய்ச்சுகிறான். "அம்மா - நீ கஷ்டப்பட வேண்டாம். படுத்துக் கொள். நான் போயி, ஒரு இட்டிலி பார்சல் வாங்கி வரேன். பிறகு உன்னை டாக்டரிடம் கூட்டிப் போறேன்..." அபிராமிக்கு மனம் உருகிப் போகிறது. "ஓட்டலெல்லாம் வேண்டாம் சீனி. உனக்கு உடம்பு சரியில்லாமல் தேறிய உடம்பு. எனக்கு இரண்டு எலுமிச்சம் பழம் வாங்கி வா. கரைச்சுக் குடிச்சால் தலை சுற்றல் நிற்கும். மெள்ள ஒரு சாதம் கூட்டு, ரசம் பண்ணிடறேன்..." "நீ சொன்னால் கேட்க மாட்டியே? ஒரு நா அவசரத்துக்கு ஓட்டல்ல சாப்பிட்டா என்ன வந்திடும்...?" "வேண்டாம். எலுமிச்சம் பழம் மட்டும் வாங்கிட்டு வா?" எலுமிச்சம் பழம் வாங்கச் சென்றவன், ஆள் அரவமே தெரியவில்லை. மணி ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு என்று ஓடிற்று. அபிராமி விதியை நொந்து கொண்டு கிடந்தாள். இவ்வளவு பொறுப்பற்ற பிள்ளையை இனியும் நம்புவாளா? இவனை சுஜி கண்மூடித்தனமாக மதிக்காமல் விலகுவது எத்துணை விவேகம்! கண்களை மூடியும் மூடாமலும், எங்கோ மிதப்பது போலும் தவிப்பது போலும் உணர்வுகள் பந்தாட, அவள் கிடந்தாள். பெற்று எடுப்பதும் பேணுவதும், போஷிப்பதும், தேய்வதும் - தாய்மை - பெண்மை. மனித இனத்திலும் தாழ்ந்த விலங்கினங்களிலும், இன்னும் பரிணாமத்தின் கீழ்ப்படியிலும் இனப்பெருக்கம் மட்டுமே குறி. இந்தக் குறியில் இரண்டு இனங்களுமே சமமாகப் பொறுப்பு ஏற்கின்றன. ஆனால் மனித இனத்திலோ, ஆணுக்காகப் பெண் உயிர் வாழ்கிறாள்; இயங்குகிறாள்; தேய்கிறாள். இந்த நியதி காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. இவள் வேறுபட்டு வந்த பின்னரும், இந்த பிள்ளைக்காகத் தேய்ந்து ஓய்ந்து கிடக்கிறாள்! இந்த அநீதியான அக்கிரமமான நியதியை உடைத்தெரியும் துணிவு, கடுமை ஏன் இன்னும் வரவில்லை? அவன், அம்மா என்றால் இளகிப் போகிறாள்! வெட்கம்! ஒரு மணி சுமாருக்கு அவன் திரும்பி வருகிறான். வெய்யிலில் வந்ததால் தான் போலும், முகம் செவ செவ என்று தெறிக்கிறது. "அம்மா? அக்கிரமத்தக் கேட்டியா?" அவள் விருட்டென்று எழுந்து உட்காருகிறாள். "என்னடா பெரிய அக்கிரமம்? நீ எலுமிச்சம் பழம் வாங்கப் போனவனா?" "இங்க எங்கும் நல்ல எலுமிச்சம் பழமே இல்ல. காஞ்சு கிடந்தது. மாம்பலம் ரயிலடிக்குப் போனேன். அங்கே யதேச்சையா சுஜியின் கசினைப் பார்த்தேன். அவளுக்கு ஹவுஸிங் போர்ட் லாட்ல ஃப்ளாட் விழுந்திருக்காம். எச்.ஐ.ஜி. ஃப்ளாட். என்ன அக்கிரமம் பாரம்மா? இவ ஒரு மரியாதைக்கு நம்ம கிட்டச் சொன்னாளா? இவ எல்லாப் பணத்தையும் அந்தப் பக்கம் சாச்சிட்டு, என்னையும் சுறண்டிட்டு, இன்னிக்கு எனக்கு உங்கிட்ட கெட்ட பேரும் வாங்கிக் குடுத்திட்டு எவ்வளவு அழுத்தமா உக்காந்திருக்கா, பாரும்மா? இவளுக்கு எடுத்ததும் சும்மா லாட்ல விழுமா? எனக்குத் தெரிஞ்சு எத்தனை பேர் பணம் கட்டிப் பணம் கட்டி ஒண்ணும் வராம போயிருக்கு? ஏன், உனக்குத் தெரியாம நான் கூட மூணு தரம் பணம் கட்டி வச்சேன். கே.கே. நகர்ல, பெரியார் நகர்ல ரெண்டு எடத்திலும் எம்.ஐ.ஜி. ஃப்ளாட்... இதெல்லாம் சொன்னா வெக்கம். அவளுக்கு எங்க தொடர்பு, எங்க கான்டாக்ட், எங்க பேரம்னு உனக்குத் தெரியாது. அவ புள்ளிகள்ளாம் கறுப்புப் பணம்." "சீனி" அவள் குரல் சீறி வெடிக்கிறது. "ஏண்டா இப்படி மானம் கெட்டுப் போற, அவளைப் பத்தி அவதூறு பேசிட்டு?" "அம்மா, நீ பைத்தியம்! அவளுக்கெல்லாம் கல்யாணங்கறது ஒரு லைசன்ஸ் மாதிரி. பிரேம்குமார் உனக்குத் தெரிஞ்சு..." அபிராமிக்குக் கண்களில் பொறி பறக்கிறது. "அடேய்! மேலே எதனாலும் பேசினா உன்னைப் பல்லை உடைப்பேன்? முதல்ல உன்னைச் சீர்திருத்திக் கொள். அவள் முகத்தில் முழிக்க உனக்கு யோக்கியதை இல்லை. உன்னால் எனக்கும் இல்லாம போயிட்டது..." அவன் ஒரு மட்டரகப் பாம்பு. வெட்டினாலும் வெட்டின துண்டுகளும் துள்ளுமாம். "நீ அவ பக்கமே பேசிட்டிரு. நாளக்கி அவ நோட்டீஸ் விடுவா. மாமியார் துன்பப்படுத்தினா, என்னைக் கிரசின் ஊத்தித் தாயும் பிள்ளையுமா எரிக்க முயற்சி பண்ணினான்னு வழக்கு போடுவா. பொய்ச் சாட்சி தயார் பண்ணுவா. எல்லாத்துக்கும் துணிஞ்சவ..." அபிராமியின் செவிகளில் அந்தச் சொற்கள் விழவில்லை. "ஆ, ஊன்னா பணம் குடு. எத்தனை பணம், எத்தனை பணம்? உடம்பு வணங்கி ஒரு நாள் வேலை செய்தாயா? மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில் தான் உக்காந்து பெண்ணைச் சுறண்டுறது... உன்னைச் சொல்லிப் பலனில்லை. உன்னை ஆகாசத்திலேந்து இறங்கியதா நினைச்சி, எச்சில் தட்டுக் கூடக் கழுவி வச்சி, அரைத் துணி கசக்கிக் குடுத்து ஆடம்பரத்துக்கு உழைச்சுக் கொட்டுறனே? அதன் பலன் அநுபவிக்கிறேன்..." அபிராமிக்கு நரம்புகள் படபடவென்று துடிக்கின்றன. இவள் இப்போது இளகமாட்டாள் என்ற நிலையில் பேசாமல் வெளியிறங்கிச் செல்கிறாள் அவன். |