உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஈரோடு புத்தகத் திருவிழா 2025 கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 150 & 151 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 01/08/2025 முதல் 12/08/2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 6.00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைவரும் வாரீர் |
16 அவளுக்கு இந்த உலகம் நுழைந்ததிலிருந்தே ஒட்டக் கூடியதாகத் தோன்றவில்லை. வாழ்நாளின் பெரும்பகுதியை பள்ளிக்கூடத்தில், இளமையும் துருதுருப்பும் சிரிப்பும் உற்சாகமும் ததும்பும் ஓர் உலகையே கண்டு பழகியவள் அவள். இங்கே நுழையும் போதே அதிர்ச்சியாக இருந்தது உண்மைதான்... இங்கே மாடியில் அடைபட்டிருப்பவர்கள், வாழ்நாளில் எந்த முக்கியத்துவமும் அநுபவிக்காமல், குடும்ப அமைப்புக்களில் இருந்து, ஆற்று நீரில் மிதந்து வரும் மக்கிய மரக்கிளை போன்றோ, பழுத்த இலைகள் போன்றோ கரையில் ஒதுக்கப்பட்டவர்கள். இவ்வாறு ஒதுக்கப்படுபவர்களுக்கு, பொருளாதாரம் பறித்த குழியிலிருந்து எட்டிப் பார்க்கவும் முடியாத நிலை. இந்த இல்லத்தின் செலவை, மாசாமாசம் இவர்களுக்காக மகனோ, மகளோ, பேரன் பேத்தியோ, அல்லது புருஷன் சேமித்து வைத்த நிலையில் இருந்து எண்ணி எண்ணிப் பார்த்தோ கொடுக்கிறார்கள். சுமனா பாய் ஒருத்தி தான் தன் காலால் நின்று ஓய்வு பெற்றவள்... சுமனா பாயை இன்னமும் அபிராமி பார்க்கவில்லை. அவள் சிவப்பாக இருப்பாளாம்; நர்சாக இருந்தவளாம். கீழே இருக்கும் ஆண் பிள்ளைகளுடன் நெருக்கமாகப் பழகுவாளாம். சீட்டாடுவாளாம்... "வர்ச்சாவர்ச்சம் கிடையாது. வாயைத் திறக்கக் கூடாது..." என்று கிழவி கூறுகிறாள். அடிக்கொரு முறை, இவள் புருஷன் அந்தக் காலத்தில் நடேச சாஸ்திரிக்குச் சமமாகப் புஸ்தகம் போட்டதைச் சொல்கிறாள். ஆனால் இவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பிள்ளை அறுபதுக்கறுபது சாந்தி செய்த மறு நாள் இறந்து போனான். அவன் குடும்பம் முழுவதும் அமெரிக்காவில் இருக்கிறது. "டாலர் டாலரா அனுப்பித் தரான். லேடியோ, ஃபிளாஸ்கு, கம்பளிச் சட்டை, பாட்டரி லைட்... எல்லாம் அவன் கொண்டு வந்து தந்ததுதான்..." கிழவி, சற்றே உட்கார்ந்தால் அறுக்கிறாள். பொங்கலன்று, வெளியே சற்று உலாவலாம் என்று போகிறாள். பெரிய சாலைப் பக்கம், ஒரு திடலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்துக் கொண்டு நிற்கிறாள். "டீச்சர்...? அபிராமி டீச்சரில்ல?..." புதிய தாய்மையில் பூரித்த உடலுடன் ஒரு பெண்... யார் இவள்...? "ஓ... சியாமளா இல்ல? உலகம் எத்தனி சின்னது? நீ இங்கயா இருக்கே?" "ஆமாம் டீச்சர். எங்க வீடு இங்கதான் இருக்கு. வாங்களேன் வீட்டுக்கு? இங்கதான்... நீங்க எங்க... வந்துட்டுப் போறீங்க டீச்சர்?" "நான் வந்துட்டுப் போகலம்மா... இங்க தான் ஆசிரமத்தில இருக்கிறேன்..." "அடாடா தெரியாத போச்சே? இங்க ஆசிரமம் இருக்குன்னு சொல்லுவாங்க..." "எத்தனை நாளாச்சு டீச்சர்...?" "இப்பத்தா, நேத்து வந்தேன்...?" "வாங்க டீச்சர்...?" உயர்ந்த சாதிப் பெண். சமையல் வேலை செய்து தாய் இவளையும் மூன்று பையன்களையும் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்தாள். தகப்பன் சீக்குக்காரன்... இந்தப் பெண் இரண்டு வருஷங்களுக்கு முன் யாரோ ஒரு கீழ்ச்சாதிக்காரனுடன் ஓடிப் போய் விட்டாள் என்று, அம்மா, தைலாம்பாள், கடைத்தெருவில் கண்டு சொல்லி அழுதாள். ஒரு சமயம், இவளைச் சீனிக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கேட்கலாமா என்று கூட எண்ணியதுண்டு. அபிராமியைத் தெய்வம் போல் மதிக்கும் அந்த ஏழை, உடனே சம்மதித்திருப்பாள். ஆனால், பையனின் நடத்தையை நன்கு உணர்ந்திருந்த அபிராமி, உறுதியாகத் தன் மீது பொறுப்பைப் போட்டுக் கொள்ளாமல், அஞ்சி விடுத்தாள். இப்போது, குருட்டுத்தனமாகத் தெய்வத்தின் மீது அந்தப் பொறுப்பைப் போட்டு விட்டதாக எண்ணி ஏமாந்திருக்கிறாள். ஏமாற்றி இருக்கிறாள். "வாங்க டீச்சர்...?" வெட்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த வீடுகளில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறு இல்லம். வாயிலில் பூச்செடிகள் வைத்திருக்கிறாள். சிறு கிணறு; துளசி மாடம்... கண்களுக்கும் மனசுக்கும் நிறைவாக இருக்கிறது. முன்னறையில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கலர்ப்படம். அவன்... இராணுவ உடையில் இருக்கிறான். "...ஏர்ஃபோர்ஸில இருக்கார் டீச்சர். இங்கேந்து காம்புக்கு சைகிள்ள போவார்..." "இது..." "வாடகை வீடு டீச்சர், முந்நூறு ரூபாய் வாடகை. உள்ளாற எங்களுக்குக் குவார்டர்ஸ் இனிமே கிடைக்குமாம். ஆனா, எனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு..." "உன் அம்மா, ...வருவாளா?" அவள் முகம் இருண்டு போகிறது. "வர்றதில்ல டீச்சர். அவங்க வீட்டிலும் ஏத்துக்கல. ஆனா, நாங்க சந்தோஷமா இருக்கிறம்... இங்க இன்னும் மூணு மாசந்தா... ட்ரெயினிங் முடியும் வரை இருப்போம். பிறகு எங்க போவோமோ?..." உள்ளே சென்று, சிறு தட்டில் சர்க்கரைப் பொங்கலும் தயிர் வடையும் எடுத்துக் கொண்டு வருகிறாள். டீபாயை நகர்த்தி வைக்கிறாள். "எடுத்துக்குங்க டீச்சர்... அவர் ஒரு சிநேகிதரை வழியனுப்ப டவுனுக்குப் போயிருக்கார். தனியே இருக்கறப்ப சில சமயம் வருத்தமா இருக்கும். தம்பியை, நான் பார்த்த வேலைக்குச் சிபாரிசு பண்ணி வச்சிட்டு வந்தேன். அவன் கூட ஒரு நல்லநாள்னு கூட வந்து பார்க்கிறதில்ல. டீச்சர், இவங்க வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணுறாப்பல இருக்கா? இவரு... ஒரு ஸ்மோக் கூட பண்ண மாட்டார். ஃப்ளைட் ஆபீசரா இருக்கார்... நீங்க வாங்க டீச்சர், நாளைக்கு... அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்...?" சர்க்கரைப் பொங்கல் இனிப்பு மிகச் சரியாக இருக்கிறது. தயிர்வடை அதை விட ருசியாக இருக்கிறது. குளிர்ந்த நீர்... "இந்தக் கிணற்று நீராம்மா?" "ஆமாம் டீச்சர்?" "அருமையாயிருக்கு"... இப்படி வீடு குடும்பம்... இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு, உற்சாகம், நம்பிக்கை இதெல்லாம் அல்லவோ முதுமைக்கு ஜீவநாதம்?... இந்தக் கூலிக்குப் புகலிடம் தந்த இடத்தில் அமைதி அதுபோல் கிடைக்குமோ?... இந்தச் சிறு வீடு... இது ஆசிரமம். முதுமை, ஓய்விலும் தான் ஒதுக்கப்படவில்லை, என்ற ஒட்டுணர்வுடன் அரவணைக்கப்படும் இடம்... "டீச்சர், கேக்கறேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... உங்க பிள்ளை... அவர் மெட்றாசில இல்லையா?" "இல்லம்மா. கல்யாணமாய் குழந்தை இருக்கு... நான் தான் என்னவோ ஆருக்கும் சிரமம் வேண்டாம்னு வந்திருக்கிறேன்..." "டீச்சர்... கடவுளே உங்களைக் கொண்டு விட்டிருக்கார் போல இருக்கு. அடுத்தது மாசம்னு சொல்லியிருக்கா ஆஸ்பத்திரில. பறங்கிமலை போகணும் ஆஸ்பத்திரிக்கு. எப்பவோ எதோன்னாக் கூட அக்கம் பக்கம் கூடத் தெரியலியேன்னு ரொம்பப் பயமா இருந்தது..." "...பயப்படாதே... நான், எனக்கு என்ன வேலை, தினமும் சாயங்காலம் இப்படி வந்துட்டுப் போறம்மா?..." வெறுமை உணர்வை, அந்த இளம் பெண்ணின் தாபம் மூடி நிறைத்து விடுகிறது. "எங்க, டீச்சர், இருட்டற வரையிலும் போயிட்டு வரேள்... அம்மாவோட பேசிண்டிருந்தேளா?... வீட்டில இருக்காளோ?... எங்கானும் ப்ரோகிராம், மீட்டிங்னு போயிடலியோ?" வெங்கம்மா வார்டனின் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறாளோ? "யார்... அம்மா?" "சாரதாம்பா தான். இந்தப் பக்கத்தில அம்மானு தான் சொல்லுவா. அதே பழக்கம்." "நான் அங்க போகல... குழந்தைகள் விளையாடிட்டிருந்ததைப் பார்த்திட்டிருந்தேன். எங்கிட்ட படிச்ச பொண்ணு, கல்யாணமாகி இங்க இருக்கா, பாத்துட்டுக் கூப்பிட்டா... போனேன்..." "அப்படியா?..." வெங்கம்மாளின் குரல் விழுந்து விடுகிறது. இவள் புடவையைத் தானே துவைத்துக் கொள்கிறாள். பால் குடிப்பதில்லை. அதிகப்படி தயிர் நெய் கேட்கவில்லை. வெங்கம்மாளுக்கு பத்து ரூபாய் புடவை அலசலுக்குக் கிடைக்காது. தாராளம் இல்லாத வறட்சிதான் என்று சுவாரசியம் விழுந்து விட்டது. அடுத்த நாள் பிற்பகல் மூன்று மணி இருக்கும். அபிராமி மாடி வராந்தாவில் நின்று பார்க்கையில், விமானப்படையின் சீருடையில் சைக்கிளில் வந்து அவன் விசாரிப்பது தெரிகிறது. அபிராமி பரபரவென்று கீழறங்கி வருகிறாள். "...யாரு...?...நீங்க..." "இங்க அபிராமி டீச்சர்னு இருக்காங்களாமே? என் வொய்ஃப்... சியாமளா சொல்லி அனுப்பினாள்." அபிராமியின் முகம் மலருகிறது. "நாந்தான்... நீங்க தான் அவள் ஹ்ஸ்பண்டா?" அவன் கைகுவிக்கிறான். "நீங்க... ஒரு ஹெல்ப் பண்ணனும். அவளுக்குத் திடீர்னு உடம்பு சரியில்ல. நான் போய்ச் சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போக வண்டி கொண்டு வரணும்... யாரும் இல்ல. நீங்க... உங்களை..." "ஓ... இது தானே? அவசியமா வரேன்." மேலே ஏறி, உடுத்திருந்த பழைய சாயம்போன சேலையை மாற்றிக் கொள்கிறாள். ஏதேனும் பழம், பட்சணம் வாங்கிச் செல்ல வேண்டும் என்று முதல் நாள் நினைத்துக் கொண்டாள். இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லை... விருவிரென்று கீழே இறங்கி வருகையில் துளசியும் வெங்கம்மாவும், பார்க்கிறார்கள். "போறச்ச கேக்கக்கூடாது... யார் அவன்? மிலிட்டரி போல இருக்கான்?" "...தெரிஞ்சவா, அந்தப் பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு வந்திருக்கிறான். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகணுமாம். ஆரும் இல்ல... நான் வரேன்..." நிற்காமல் சொல்லி விட்டு அவனுடன் நடக்கிறாள். "நீங்க எதுக்கும் அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்கோ?" இது அவள் செவிகளில் விழுகிறது. என்றாலும் பொருட்டாகப் படவில்லை. நோவைக் கூட வெளிக்காட்டாமல், "டீச்சர்...? இந்த சமயம் அம்மா நீங்கதா?..." என்று அவள் தோளைப் பற்றிக் கொள்கிறாள் சியாமளா. "ம், எதுக்குக் கண்ணீர் விடறே?... ஒண்ணும் ஆகாது. நல்லபடியா..." 'பிள்ளைக் குழந்தை' என்ற சொல் வராதபடி தடுத்துக் கொள்கிறாள். "டாக்டர் சொன்னபடி இன்னும் ஒரு மாசம் இருக்கு டீச்சர்..." "இதெல்லாம் சில சமயம் மனுஷக் கணிப்புக்கு மேல இருக்கும்... பயப்படாதேம்மா, நல்லபடியா ஆகும். ஒரு வேளை 'ஃபால்ஸ் பெயின்ஸா' இருந்தாலும் டாக்டர் பார்த்தா தெரிஞ்சுடும்..." அவன் வண்டி கொண்டு வரச் செல்கிறான். ஆஸ்பத்திரிக்குப் போக என்னென்ன சாமான் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் மிகவும் கணிப்பாக எடுத்து வைத்திருக்கிறாள். "நீங்க காபி சாப்பிடுங்கோ டீச்சர்?" "எதுக்கும்மா நீ சிரமப்படறே?... நீ உட்காரு. எனக்கு உபசாரம் எதுவும் வேண்டாம்..." "டீச்சர், பத்தாம் நாள் வீட்டுக்கு வந்துட்டா, இங்க ஒரு கிழவியத் துணைக்குக் கூப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் நீங்க வந்து இங்க ஒத்தாசை செய்யும்படி இருக்கும்..." "இது என்னம்மா பிரமாதம்? நீ கவலையே படாதே. ஆண்டவனாகப் பார்த்துத்தான் இப்படி விட்டிருக்கிறார். எனக்கு உங்கம்மாவைப் பார்த்து, 'ஏண்டி இப்படி இருக்கே சாதி என்னடி பிரமாத சாதின்னு' கேக்கணும். ஏன் இப்படி மௌட்டீகமா இருக்கா?..." "சொல்லுங்கோ டீச்சர்? இப்படி என் பக்கம் கேக்கக் கூட நாதியில்லாம போயிட்டுது. நீங்க என்ன நினைச்சுப் பீங்களோ? சுந்தராம்மா மேடம் கூட அம்மாவை அப்படிக் கேக்கல. 'எவனோ சாதி கெட்டவனை இழுத்துண்டு ஓடிப் போயிடுத்து'ன்னு சொன்னாங்களாம்... 'நான் அப்பவே ஒரு பையனைப் பாத்துக் கட்டிவையிடீ, உன் சக்திக்குக் காலேஜென்னன்னு சொன்னேன், கேட்டியா? ஆசாரிய சுவாமிகள் சொல்லிண்டிருக்காள். காலாகாலத்தில் பெண் குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிடனும்னு. நீ பாட்டில, காலேஜி, அது இதுன்னு படிக்க விட்டே. என்ன ஆச்சு?'ன்னு தான் கேட்டாங்களாம்... இவர் ரொம்ப நல்லவர் டீச்சர், எங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கார். கட்டின துணியோட வந்தேன். மாத்துப் புடவை கூட வாங்கிக் குடுத்தவர் இவர் தான்..." "அழாதே... அழாதேம்மா... எல்லாம் சரியாப் போயிடும்..." நோவுடன் மனச்சுமையும் கண்ணீரைப் பெருக்குகின்றன. மடியில் சாத்திக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்கிறாள். வண்டி வந்து விட்டது. விமானப் படையின் ஆம்புலன்ஸ். "நீங்களும் வாங்க... வரீங்க இல்லையா?..." "வரேன்..." வண்டியில் ஏறிக் கொள்கிறாள். எல்லாமே புதிய அநுபவங்கள். இந்த இளைஞன் யாரோ? அவளை அம்மா அம்மா என்று நொடிக்குப் பத்துத் தடவை கூப்பிடுகிறான். ஒரு பருமனான செவிலி சியாமளாவை மெள்ள அழைத்துச் செல்கிறாள். மருத்துவர் பரிசோதனை செய்த பின், அது பொய்நோவு இல்லை என்றும், இரவுக்குள் பிரசவம் ஆய்விடும் என்றும் சொல்கிறார்கள். இந்தி மொழி ஒலிக்கும் சூழல். இவன் பெயர் அரவிந்தன். "எந்தா, பார்யையுட அம்ம வந்நோ?" என்று யாரோ விசாரிக்கிறார்கள், இவளைப் பார்த்து விட்டு. அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. நீண்ட வராந்தாவில் யார் யாரோ வருவதும் போவதுமாக இருக்கின்றனர். "அம்மா, உங்களை நான் அங்கே கொண்டு விடுகிறேன். இரவு ஆகுமாம். பிறகு நான் வந்து பார்க்கிறேன். போகலாமா?" "...வேண்டாமே? எனக்கு இங்கு இருப்பது சிரமமில்லை. இரவு ஒன்பது மணி வரை இருக்கலாமே?" "எதற்கம்மா? காலையில் வந்து சேதி சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் டாக்டர்." அவர்கள் வண்டியிலேயே அவளை ஏற்றிக் கொண்டு பெரிய சாலையில் வந்து இறக்கி விடுகிறார்கள். அரவிந்தன் அவளுடன் ஆசிரமம் வரை வருகிறான். "ரொம்ப தாங்க்ஸ் அம்மா, காலம வரேன்..." இவள் படியேறி வரும்போது 'பலகாரக்' கடை விரித்திருக்கிறது. தோசை... "அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்கோன்னேனே? நீங்க பாட்டில போயிட்டேள். அம்மா வந்தா. சொல்லல போல இருக்கு. இருட்டிப் போச்சேன்னு ஒரே கவலையாப் போயிடுத்து. சொல்லிக்காம போகலாமா?" "ஆமாம், வயசானவா, எங்கயானும் போய், எதானும் ஆயிட்டா, அவாளுக்குத் தானே பொறுப்பு அம்மா?" துளசி ஒத்துப் பாடுகிறாள். "யாரோ மிலிட்ரிக்காரன்னாளே? உறவா?..." மொலு மொலுவென்று கேள்விகள் கொக்கிகளாகப் பற்றுகின்றன. "நான் சொல்லிவிட்டுத்தானே போனேன்? அப்படி எங்கே ஓடிப் போயிடுவேன்? அந்தப் பொண்ணு, பிரசவ வலி எடுத்து யாருமில்லாம சிரமப்பட்டிட்டிருந்தா. அவன் கூப்பிட்டான். ஆஸ்பத்திரில விட்டுட்டு வரேன்..." "அடாடா?... ஏன்? பிறந்தாத்தில யாருமில்லையா?" "அதெல்லாம் நான் விசாரிக்கல..." இவள் அறைக் கிழவிக்கு இது அவல் கிடைத்தாற் போலாகிறது. ஓராயிரம் சந்தேகங்கள் அவளுக்குக் கேட்டாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருக்கிறது. சாரதாம்பா தினமும் வருவதில்லை. அன்று இவள் வெளியே போயிருந்த நேரம் பார்த்து வந்தாளாம், இவள் வந்ததும் சொர்ணத்திடம் செய்தி சொல்லி அனுப்பினார்களாம். "அவா ஆளுகையில நாம இருக்கோம். நமக்கு எதானும் ஆச்சுன்னா அவா பொறுப்பில்லையா? இனிமே இப்படி திடுக்குனு சொல்லாம போயிடாதே!" அபிராமிக்கு முதல் தடவையாக இது ஆசிரமமா, இல்லை சிறையா என்று தோன்றுகிறது. மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு அரவிந்தன் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, வாசலில் சைக்கிளில் வந்து மணி அடிக்கிறான். கையில் புதிய ஜிகினாத்தாள் ஒட்டிய இனிப்புப் பெட்டி. அபிராமி வராந்தாவில் சேலை உலர்த்திக் கொண்டிருக்கிறாள். உடனே விரைந்து வருகிறாள். "குழந்தை பிறந்தாச்சா!" "ஆமாம். பெண் குழந்தை. நாலரை கிலோ. சுகப்பிரசவம் தன்னே. உங்களை ரொம்ப விசாரிச்சா. உடனே ஸ்வீட் வாங்கிட்டுப் போங்கோன்னு சொன்னாள்... இது..." "ஏதோ பகவான் அருள்..." என்று அதை வாங்கிக் கொள்கிறாள். பெரிய பெட்டியாக இருக்கிறது, திறக்கிறாள். பாலில் பண்ணிய இனிப்புத்தான். "நிறைய இருக்கு? இவ்வளவு எனக்கு எதுக்கு?..." "ஹோம்ல எல்லாருக்கும் குடுக்கச் சொன்னா... எங்களுக்கு நீங்கல்லாம் பெரியவங்க தானே...?" "இப்ப வந்து அவளைப் பார்க்கலாமா?" "ஓ... நீங்கள் வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாள். அவளுக்கு அம்மாவின் ஸ்தானத்தில் கடவுளே உங்களை அனுப்பியிருப்பதாக சந்தோஷம்..." அபிராமிக்குப் பத்து வயசு குறைந்து விட்டாற்போல் இருக்கிறது. எத்தனையோ சமயங்களில் சீனி பிள்ளையாக இராமல் மகளாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறாள்... மாடிக்கு விரைந்து வருகிறாள். "அவள் பிரசவிச்சாச்சாம் பார்த்துட்டு வரலாம்னிருக்கிறேன். எல்லாருக்கும் குடுங்கோன்னு பால்கோவா ஸ்வீட் வாங்கிண்டு வந்திருக்கிறான்... நா போய்ப் பார்த்துட்டு வரேன். சாரதாம்பா வீட்ல சொல்லிட்டுப் போறேன்..." இனிப்புப் பெட்டியை வெங்கம்மாவிடம் கொடுத்து விட்டு அபிராமி குழந்தையைப் பார்க்க அவனுடன் கிளம்பி விடுகிறாள். சாரதாம்பா வீட்டில் நாய்களைத் தாண்டி உள்ளே மணியடித்து ஐந்து நிமிடங்கள் காத்த பிறகு வேலைக்காரி வருகிறாள். "அம்மா பூஜையில் இருக்காங்க, மத்தியான்னமா வாங்க!" "இல்லம்மா, நான் ஆசிரமத்திலே இருக்கிறேன். ஒரு... சிநேகிதி, ஆஸ்பத்திரில குழந்தை பெத்திருக்கா... பார்த்துட்டு வரேன்..." அவள் என்ன காதில் வாங்கிக் கொண்டாளோ, சொல்லிவிட்டுக் கிளம்பி விடுகிறாள். தூய வெண்மை தெரியும் ஆஸ்பத்திரி. அபிராமி இப்போதைக்கு அநுபவித்தறியாத மகிழ்ச்சியை அநுபவிக்கிறாள். ஒரு சிறு வட்டத்தில் இணைத்த பிணைப்பைத் துண்டித்து விட்டுப் பெரிய உலகில் தான் வந்துவிட்டார் போல் உணருகிறாள். வடக்கு மாநிலம், தெற்கு மாநிலம், கிழக்கு மாநிலம் என்று பாரதத்தின் ஒரு சிறு மாத்திரை போல் அந்த ஆஸ்பத்திரி மகப்பேற்றுப் பிரிவு விரிந்திருக்கிறது. பல்வேறு மொழிக் கலவைகள்... சியாமளா, மூன்றாவதாகப் படுத்திருக்கிறாள். "வாங்க டீச்சர்..." குழந்தை தொட்டிலில் ரோஜாப் பூப்போல் கிடக்கிறது. முடி நிறைய இல்லை. ஆனால் நல்ல வெண்மைச் சிவப்பில், நீளமும் பருமனுமாக... பிறந்த குழந்தை திடகாத்திரமாக இருக்கிறது. "டீச்சர்... உங்க பேர் தான் வைக்கப் போறேன். முன்ன யாருக்கோ கடவுளே வந்து பேறு பார்த்தாராம். அது போல இந்த யுகத்தில் நீங்க எனக்கு தைரியமா வந்தீங்க. ஸ்வீட் குடுத்தாரா?" "நிறையக் குடுத்திருக்கிறார். எனக்கே இப்ப வீடில்லையே உனக்கு வேண்டுமென்ற பத்தியம் கொண்டுப் போட முடியலியேன்னிருக்கு. வீடு, குடும்பம்னா அது தனி தான்..." "பத்து நாளானதும் வீட்டுக்கு வந்துடுவேன். டீச்சர், நீங்க சொல்லுங்கோ, அவரே அதுபோல பண்ணுவார்..." "ஆமாம், நீங்க சொல்லிக் குடுங்க, நான் பிரிபேர் பண்ணிக் கொடுத்திடுவேன்..." அபிராமி நெகிழ்ந்து போகிறாள். இப்படி ஒரு கணவனும் மனைவியும்... இப்படி ஒரு அன்புக் குடும்பம் மனம் நிறைந்து போகிறது. |