13

     இரவு ஒன்பது மணி சுமாருக்கு வாசலில் மோட்டார் சைக்கிள் ஓசை கேட்கிறது.

     அபிராமி வாசற் படியில் வந்து நிற்கிறாள்.

     "ஹாய்...! அம்மா... வந்தாச்சா?..."

     சீனிதான் கூவுகிறான். இவள் போட்டிருக்கும் வாயில் விளக்கு வெளிச்சத்தில் சீனியின் பின் ஒரு பெண்ணும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் இன்னொரு ஜோடியும் இருக்கின்றனர். இந்தப் பெண்... முன்பே அபிராமி பார்த்திருக்கும் மாலாவோ கல்பனாவோ அல்ல. மிஞ்சினால் பதினேழு பதினெட்டு வயசிருக்கும். பெரும்பாலும் ஒலியும் ஒளியும் ஜோடியில் வரும் பெண்ணைப் போல் குட்டை ஸ்கர்ட்டும், குட்டை ப்ளவுசும் அணிந்திருக்கிறாள். அபிராமியை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தெரிகிறது.

     ...சீனி வண்டியை விட்டிறங்கவில்லை.

     "...வா ரேகா உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடறேன்..."

     மீண்டும் அவர்கள் ஏறிக்கொள்ள, இரண்டு வண்டிகளுமே செல்கின்றன.

     தணிகாசலம் சொன்னதை அபிராமி நினைத்துக் கொள்கிறாள்.

     அவள் வீட்டிலிருந்தால் இப்படிச் சீரழிவு நடக்காது.

     பையனைத் திருத்த வேண்டுமானால் அவள் அவனை விட்டுப் போகக் கூடாது.

     ஒரு சோறு வடித்துக் குழம்பு வைத்திருக்கிறாள்.

     அந்த வீட்டுக்கு வந்து தான் மட்டும் வயிறார உண்டு விட்டு அவனைப் 'படியேறாதே' என்று வெருட்டும் கடுமை அவளுக்கு என்றுமே வராது.

     காத்திருக்கிறாள்.

     நல்ல பிள்ளையாக வந்து சேருகிறான். வண்டியைக் காணவில்லை.

     "மை டியர் மம்மி! நீ வந்திடுவேன்னு எனக்குத் தெரியும்" என்று புகை நாற்றத்துடன் அவள் கன்னத்தை முத்தமிடுகிறான்.

     "சனியனே? புகை நாத்தம். என்னை நீ எதுக்குத் தொடறே?"

     சிரிப்பும் அழுகையுமாக இந்தக் 'கூடல்' விரிகிறது.

     "அம்மா, நீ போகணும்னு நினைச்சாலும் என்னை விட்டு உன்னால் போக முடியல பாத்தியா?... அன்னிக்கு ரொம்ப ரசாபாசமா அவளும் அந்த டாக்டரும் இங்க வந்து கத்தினாங்கம்மா..."

     "நீ தானேடா ஸ்கூட்டர் ஆக்ஸிடன்ட்னு சொல்லி அனுப்பிச்சே? தடி ராஸ்கல்? அவளை மட்டும் தட்டணும்னு?"

     "அம்மா, அந்த ப்ளக்கார்ட் வில்லியம் அப்படி அவந்து சொல்லிருக்கான்னு எனக்கே தெரியாது. நானே இவ அவமானம் பண்ணிட்டாளேன்னு முள்ள முழுங்கிட்டு தலை குனிஞ்சிட்டுப் போறேன். அப்படி வருவேனா? நிஜமா யாரானும் வந்து சொன்னாங்களா? அதுவே ஒரு சாக்கா வச்சிட்டு என்னை என் ஃபிரன்ட்ஸ் முன்ன அவமானம் பண்ண வந்திருக்கிறாளோ?"

     "நீ முழுப் பூசணியச் சோத்தில மறைக்காதே... எனக்கும் தெரியும். அந்தப் பையன், வில்லியம்ஸோ, வின்சென்ட்டோ, அவன் வந்து சீனிவாஸுக்கு ஆட்டோ ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில அட்மிட்டாகிருக்கார்... அபிராமி டீச்சர் மகன்னு சொன்னானே?... இது நீ வேணும்னு மட்டம் தட்டத்தான் இப்படிக் குச்சி கொளுத்தித் தூக்கிப் போட்ட...?"

     "அவ மட்டும் என்னை இவ்வளவுக்கு மட்டம் தட்டலாமா? உள்ளுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க முன்ன எத்துணை கேவலமாப் போச்சு? நீ... நீ அன்னிக்கு ஏழரை மணிக்கு மருந்தும், சாமானும் வாங்கிட்டு வந்தப்ப, இந்த இன்விடேஷனை வச்சிட்டு, கதவைப் பூட்டிட்டுப் போனியே, அது சரியா? எனக்கு எப்படி இருந்திருக்கும்..."

     அழுகையைக் கொண்டு வருகிறான்.

     "சீ... பேசாதேடா? தாயைக் கொள்ளையடிக்கிற கடையன் நீ! ஒரு நொடியில், நான் கண்ணசந்திருக்கிற போது, பர்சை எடுத்துப் பணத்தை உருவிண்டு போயிருக்கே...? நீ பிள்ளையாடா?"

     சீனி விழிகள் நிலைக்கப் பார்க்கிறான். "என்னம்மா? புதுக்கதையாயிருக்கு? நானா?... உன் பர்சையா? என்னம்மா இப்படி அபாண்டம் பேசற?..."

     "என்னது? அப்ப நீ எடுக்கலியா? பின்ன எப்படி ஹாண்ட்பாகில இருந்த முந்நூறு ரூபாய் மாயமாப் போச்சி?..."

     "எனக்கென்ன தெரியும்? நீ கண்ணை மூடித் தூங்கிட்டிருந்தே. எனக்குப் போரடிச்சிது... அதுவும் இல்லாம ராஜன் அந்த ஏஜன்சி சம்பந்தமா, போய்ப் பார்த்துட்டு வரலாம், வாடான்னு சொல்லியிருந்தான். போனேன். ஏழரை மணிக்கு வந்து பார்த்தா ஆள் இல்ல..."

     இவன் ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்திருக்கிறாள். ஆனாலும் அவனுடைய சாதனை, ஒரு வேளை திறந்த வீட்டில் யாரேனும் வந்து களவாடி இருக்கக் கூடுமோ என்ற சாத்தியக் கூறுகளையும் ஆராயச் செய்கிறது. அழுகையும் கெஞ்சலுமாக இரவுச் சாப்பாட்டை முடிக்கிறார்கள்.

     "ஏண்டா? டி.வி. எங்க, காணல?"

     "அன்னிக்கு டென்னிஸ் மாட்ச் போடலாம்னு போட்டா, எடுக்கவே இல்ல. படம் ஒரே டல்லா எப்படியோ விழுந்தது. ஆன்டென்னா சரி பண்ணியும் சரியாகல. என் ஃபிரன்ட் சுகுமார் தா சரி பண்ணிக் கொண்டு வரேன்னு எடுத்திட்டுப் போனான். ஏண்டா இந்த பிரான்ட் வாங்கின. இது ஒரு வருஷம் கூட நல்லா வரதில்லன்னான். எல்லாம் எங்கம்மா வாங்கினதுன்னேன். ஏமாத்திட்டான்னு சொன்னான்..."

     'ஏமாளிதானே நான்?' என்று உள்ளத்தில் எதிரொலி தோன்றுகிறது.

     காலையில் அபிராமி பால் வாங்கச் செல்கிறாள். நான்காம் வீட்டு சுந்தரி, "என்ன அபிராமி அம்மா? வீட்டை விக்கப் போறதாக் காதில விழுந்ததே?..." என்று விசாரிக்கிறாள்.

     அபிராமிக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

     "யார் சொன்னாங்க?..."

     "மாதர் சங்கத்தில புவனா புருஷோத்தமன் சொல்லிட்டிருந்தா. சீனி ஹைதராபாத் போறதாகவும், நீங்க வீட்டை வித்துடப் போறதாகவும் சொன்னா... உங்க மருமக ஸ்டேட் சர்வீஸாச்சே, எப்படிப் போவாங்கன்னு கூடக் கேட்டேன். அது கூட என்னென்னமோ அரசபுரசலாச் சொல்லிட்டாங்க..."

     "அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா எதானும் யாரானும் புரளியக் கிளப்பி விடறாங்க?..."

     "சீனியே தான் சொன்னதாக் கேள்விப்பட்டேன் மா. எங்களுக்கு இந்தக் காலனிய விட்டு நீங்க போறதுன்னாலே எப்படியோ இருக்கு... நான் ஏன் கேட்டேன்னா, என் தங்கை வீடுவாங்கணும்னிருக்கா. அதான் விசாரிச்சேன்..."

     அபிராமி கத்தரித்துக் கொண்டு வருகிறாள்.

     காபியைக் கலந்து வைத்துக் கொண்டு அவனைத் தட்டி எழுப்புகிறாள்.

     "ஏண்டா, சீனி? வீட்டை வித்துட்டு ஹைதராபாத் போகப் போறியாமே? நீ என்னலாம்டா நினைச்சிட்டிருக்கே?"

     ஒன்றும் தெரியாத குழந்தை போல் கண்களைக் கசக்கிக் கொள்கிறான்.

     "ஏம்மா? இந்த வீட்டிலே இருந்து அவமானப்பட்டது போதாதா? வெளில தலை காட்ட முடியல! நீ நாப்பதாயிரத்துக்கு இதைக் கட்டினே. ஒண்ணே கால் லட்சம் கைமேல வரும். நான் சொல்றேனே... அந்த ஃபுட் ப்ராடக்ட்ஸ் ஏஜன்ஸீஸ், இப்ப செம கிராக்கி, எங்களுக்குக் கிடைச்சிடும். போலாம்னு ஒரு ஐடியாவிலே நான் தான் புவனாக் கிட்டச் சொன்னேன். எல்லாரும் என் தலையக் கண்டா, 'அவ ஏன் வரல'ன்னு விசாரிக்கிறா, என்ன பதிலைச் சொல்ல?"

     அபிராமி வாயடைத்துப் போகிறாள்.

     இதற்குத் தீர்வு என்ன? சுஜா சொல்வது போல் திரும்பிப் பாராமல் அவளால் இருந்துவிட முடியுமா? இவனுக்கு மருத்துவச் செலவு செய்து, உருப்படியாகத் தேற்றி இருக்கிறாளே, அது விரயமாக அல்லவா போகும்?

     ...நீள நெடுக, நம்பிக்கையும் உறுதியுமாக வளர வேண்டிய பிள்ளை, எங்கெல்லாமோ வளைந்து, முட்டி, இருட்டிலே கிளை விட்டுக் கொண்டிருக்கிறான். தன் இரத்தத்தில் அணுவாக வளர்த்த அவனை, அப்படி வெட்டித் தரித்து விட முடியுமா?

     சட்டப்பூர்வமாக சுஜா விலக்குப் பெற்று விடலாம். தாயும் மகனும் அப்படிக் கழன்று கொள்ள முடியுமா?

     அவனுடைய இந்தக் கூறு கெட்ட வளர்ச்சிக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வை அவளால் மறுக்க இயலவில்லை.

     அதற்காக அவள் சுமை சுமக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொள்கிறாள்.

     கருமேகத்தைச் சுற்றிய ஒளிமய விளிம்புகள் போல் கற்பனைகள் நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன. மனசுக்கு இதமாக இருக்கிறது.

     முன்பின் அறியாத சூழல், குட்டுப்பட்டுச் சூடுண்ட நிலையில், அவன் புதிய இடத்தில் பிழைக்கத் துளிர் விடுகிறான்... இப்போது அவன் குடிப்பதாகத் தெரியவில்லை. வேலையில், வாணிப தந்திர சாமர்த்தியங்களில் அவன் கெட்டிக்காரன். மற்றவர் பொறாமையில் ஏதேனும் குறை சொல்லலாமே ஒழிய, அவன் இந்தத் துறையில் கெட்டிக்காரன், என்பதை சுஜா கூட ஒரு முறை சொன்னாள். காலக் கோலாறு, இத்துணை வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை இந்த வீட்டின் காரணமாகக் கூடக் கஷ்டம் வந்திருக்கலாம்... இந்த வீடு கட்டிய நாளிலிருந்து தான் சீனி அவளுக்கு அடங்காத பிள்ளையாகப் போனான்...

     குருட்டுத்தனமான செதில்கள், மிக ஆக்ரோஷமாக அபிராமியின் சுயத் தெளிவையும், நியாய உணர்வுகளையும் மூடிக் கொள்ளக் கிளைக்கின்றன. எதை எதையோ பற்றிக் கொண்டு, மகனுடைய செய்கைகளுக்கு, நடத்தைக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறாள்.

     அடுத்து, இவள் வீடு விற்கும் செய்தி, எங்கும் பரவி விட்டது. தரகன் ஒருவன் சீனியின் நண்பன் மூலமாக சைக்கிளில் வந்து வந்து போகிறான்.

     சுந்தரியின் கணவன் பரசுராம் அதிகாலையில் வந்து பேசுகிறான். "அபிராமி அம்மா! தரகன் கிட்ட எதுக்கு விடறீங்க? அநாவசியமா அவன் சாப்பிடுவான்."

     "நேரான டீல். கறுப்பு கிறுப்பெல்லாம் இல்லை. எழுபத்தஞ்சுன்னு காதும் காதும் வச்சாப்பில முடிச்சிடலாம். ரெடி கேஷ்..."

     "எழுபத்தைந்தா?... ரொம்பக் குறைக்கிறீங்களே? கிரௌன்டே இங்க எண்பதாகிறது..."

     "சரி எண்பது வச்சுக்குங்க... என்னம்மா, கட்டி பத்து வருஷம் ஆகப் போகுதே? அதுக்கு டிப்ரிஸியேஷன் வால்யூ உண்டில்ல?"

     "ஒண்ணேகால் லட்சத்துக்கே நேத்து பார்ட்டி கூட்டி வந்தாங்க வேணாம்னுட்டேன். இப்ப எனக்கே வீட்டை எதுக்குக் குடுக்கணும்னு தோணுது. எங்களுக்கு முடை ஒண்ணுமில்லையே?"

     இதற்கிடையே சீனி, வேண்டாத சாமான்களை, அகற்றுவதில் தீவிரமாக இருக்கிறான். அபிராமி சீனி ஒன்றாம் வகுப்பில் தூக்கிப் போன புத்தகப் பெட்டி முதல் கழிக்காமல் வைத்திருக்காளே?

     பழைய சாமான் கடைக்காரனை அழைத்து வந்து, எல்லாக் குப்பைகளையும் கழித்துக் கட்டுகிறான்.

     "கட்டில்... குடுக்கிறீங்களா சார்?"

     இவளுக்குத் துணுக்கென்றிருக்கிறது. "ஆமாம், எவ்வளவுக்கு எடுத்துக்கற?" அவன் அருகில் வந்து பார்க்கிறான்.

     வீடு கட்டியதும், அபிராமி மரம் வாங்கிச் செய்த கட்டில், அரசகுமாரனான சீனி தான் அதில் படுத்துக் கொள்வான்...

     திருமணமான பின் இன்னொரு கட்டில் வாங்கவேயில்லை. சுஜா வீட்டுக்குள் பிரிந்த பின், அது சில நாட்களுக்குக் கண்ட சாமான்களும் வைக்கும் இடமாக இருந்தது. இப்போது அறைக்குள் சீனி படுத்துக் கொள்கிறான்... அவன் சாமான்...

     "எழுபத்தஞ்சு தாரேன்..."

     எழுபத்தஞ்சா? தேக்கல்லவா வாங்கிக் கொடுத்தாள்?

     இவன் நூற்றைம்பது கேட்க... கடைசியில் நூற்றுப் பத்தில் பேரம் முடிகிறது. இவளால் இந்தச் சாமான்கள் போவதையே செரித்துக் கொள்ள முடியவில்லை.

     "கட்டில் இப்ப பண்ணணுமானால் ஐந்நூறு ஆகும்டா சீனி! ரொம்பக் குறைச்சலாப் போட்டிருக்கிறோம்..."

     "ஆமாம்மா, அதுக்காக இதை எங்க போட்டு வைக்க? நீ பாத்துண்டே இரு, ஒரே வருஷம், புது வீடு ஃபரினிச்சரோடு வாங்கிக் காட்டறேன்."

     சுஜாவின் அரை பீரோவும், அவள் பாத்திரங்கள் அடங்கிய பெட்டியும் தனியாகப் பிரித்து வைக்கப் படுகின்றன.

     தை பிறந்து நாட்கள் இருபதும் ஓடி விடுகின்றன. பொன்னின் இனிமையாகப் பரவும் காலை வெயிலில் உக்கிறம் ஏறுகிறது.

     தரகர் ஒரு பார்ட்டியைக் கூட்டி வருகிறார். லட்சத்திப் பத்தாயிரம் - தரகர் கமிஷன் போக, இவனுக்குத் தீர்ந்து விடுகிறது.

     வீட்டை வாங்குகிறவர்கள், கேரள மாநிலத்தைச் சார்ந்த மொழி பேசுகிறவர்கள். வீட்டுத் தலைவர் துபாயில் இருக்கிறார். முகமதியர்கள். மனைவியும் நான்கு குழந்தைகளும், அவள் தந்தையும் வீட்டில் இருப்பார்கள். மூத்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பார்த்தால் மதம் தெரியாதபடி, பொட்டும் சேலையுமாக இருக்கிறாள். "எனக்கு இங்க படிக்கிறதுக்குத் தான் இப்ப வீடு வாங்கறது. ஆண்டி, அம்மா தம்பி தங்கச்சி எல்லாம் திருச்சில இருக்காங்க. வீட்டை கொஞ்சம் ரி-மாடல் பண்ணி, அடுத்த அகடமிக் இயர்ல தா எல்லாம் இங்க வருவாங்க. நீங்க அது வரையிலும் உங்க சாமானை வச்சிட்டு ஒரு பக்கம் இருக்கலாம்..." என்று சொல்கிறாள்.

     அபிராமியால் நம்பக் கூட முடியவில்லை. அவ்வளவு வேகத்தில், எல்லாம் நடைபெறுகிறது.

     முன்பணம் பெற்று, வங்கிக் கடனை அடைத்து, பத்திரத்தைத் திருப்பிப் பெறுகின்றனர். ஊரிலிருந்து ஆயிஷாவின் தாயும் அவள் சகோதரனும், தகப்பனாரும் வருகிறார்கள். பதிவாளர் அலுவலகத்தில் விருவிரென்று சடங்குகள் முடிகின்றன. வீடு கை மாறிவிட்டது.

     அபிராமிக்கென்று சகோதரன் விட்டுக் கொடுத்த பணமும், கைச்சேமிப்புமாக ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு அவள் என் வீடு, என் வீடு என்று கொண்டாடினாள். அவளும் ஒரு குடும்பத்தைச் சமைத்து, குத்துவிளக்கேற்ற ஒரு பெண்ணையும் கொண்டு வந்தாள். உன் தலைமுறைக்கே குடும்பம் கிடையாது என்று தீர்ந்தாற் போல், கூடு பிய்த்தெரியப்படுகிறது. "குளவிக் கூட்டைக் கலைக்காதே, குருவிக் கூட்டைக் கலைக்காதே மகா பாவம்" என்ற பல கூடாதுகளில் பதம் பெற்றிருக்கும் அவள், அசல் குடும்பமே கூடாதபடி சிதைக்கப்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறாள்.

     ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வைக்கலாம். மனித சமுதாயம் தனித் தனித் தீவாக இயங்க முடியாது. குடும்பம்... அதுதான் ஆணும் பெண்ணும் நெறியோடு வாழ, குழந்தைகள் வளர, அன்பு தழைக்க, ஓர் அருமையான அமைப்பு என்று வலியுறுத்தினார்கள். அந்த அமைப்பு, கொடுங்கோலர் ஆளும் ஆதிக்கக் கூண்டுகளாக மாறிய பின், அடைபட்ட கிளிகள் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறுவது நியாயம் தானே?...

     ஆனால்... இதன் முடிவு என்ன? சிந்தித்தாலே குழப்பம் உண்டாகிறது. சீனியின் கையிலே சுக்கானைக் கொடுத்து விட்டாள். அவன் ஆற்றின் இழுப்போடு அவளைத் தள்ளிச் செல்கிறான். அவன் வஞ்சகன், கயவன், ஏமாற்றுபவன், சூதாடி, எல்லாக் கீழ்க்குணங்களுக்கும் இருப்பிடமானவன். ஆனாலும், அவள் தன் கையில் இயக்கும் அந்த வலிமையை இழந்து விட்டாள். நல்லதோ கெட்டதோ, அவனைச் சார்ந்திருப்பதுதான் அவளுடைய தர்மம் என்று பழைய பலவீனத்துக்கு நியாயம் கூறிக் கொள்கிறாள்.

     "எனக்கு இப்போது இருபதாயிரம் போதும், அம்மா. மற்றதை உன் கணக்கில் வைத்துக் கொள். நான் ஹைதராபாத் சென்ற பின், ஒரு சிறு இடம் பார்த்து, உன்னை வந்து கூட்டிப் போகிறேன்... அது வரையிலும் நீ இதே வீட்டில் இருந்து கொள்ளலாம்..." என்று சீனி மிகவும் பாசத்துடனும், அன்புடனும் கூறுகிறான். வங்கிக்கு இரண்டு பேருமாகத் தான் செல்கின்றனர்.

     அபிராமிக்குப் பணம் கைக்கு வந்ததும் மீண்டும் அமைதி குலைகிறது. சுஜாவுக்கு தெரிவிக்காமல் வந்தது மட்டுமின்றி வீட்டை விற்றதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

     இவள் கையில் இருந்து பணத்தை அவன் எப்படியும் பறித்துச் சென்று விடுவானோ, எதுவுமே மிச்சமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சமும் அவ்வப்போது இரவெல்லாம் கிளர்ந்து, நாவை உலரச் செய்கிறது.

     பணத்தை சுஜாவிடம் கேட்டே, பத்திரமாக எடுக்க முடியாதபடி முடக்க வேண்டும். இவன் ஊருக்குக் கிளம்பிச் சென்றதும், நேராக அவளிடம் சென்று சுமையை இறக்க வேண்டும். "பெற்ற மனம் பித்து என்பார்கள், என்னால் நீ சொன்னபடி இருக்க முடியவில்லை... கரைகளை அரித்து, வரம்புகள் உடைத்து தலைக்கு மேல் போய்விட்டது. அப்படியும் நம்பிக்கை வைக்கிறேன். உன் சாமான்கள்... இந்தப் பணத்தில் பாதியை, உஷா பேரில் ஏதேனும் பத்திரங்களாகப் போடலாமா, நகை வாங்கலாமா என்று தீர்மானம் பண்ணும்மா!"

     இரவெல்லாம் பல்வேறு விதமாகச் சிந்திக்கிறாள். கிளர்ச்சியும் நெகிழ்ச்சியும் உறக்கத்தையும் அமைதியையும் விரட்டி அடிக்கின்றன.

     காலையில் கலைந்துவிட்ட கூட்டில் சாமான் தேடி, அன்றாடச் சமையல் சாப்பாட்டை முடிப்பதே கஷ்டமாக இருக்கிறது.

     "வீட்டை வித்தாச்சா? யார் வராங்க...?" என்று அறிந்தவர் தெரிந்தவர் விசாரிக்க வருகின்றனர்.

     அபிராமி மிகவும் சோர்ந்து போகிறாள். சீனி ஏதோ புதிய வாழ்வுக்குத் தயாராகிறவன் போல் பயணத்துக்குச் சிறு பெட்டி, ஷூ என்று வாங்கிக் கொண்டு வருகிறான். இவளிடம் தேனொழுகப் பேசிவிட்டு, மூன்றாம் நாள் அதிகாலையில் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போகிறான்.

     அன்று முழுவதும் மிகவும் சோர்வாக இருக்கிறது.

     தனபாக்கியம் சொல்கிறாள், "டீச்சரம்மா, வீடு வித்திட்டமேன்னு நினைச்சிக்காதீங்க. நம்ம வீடு இங்க இருக்கு, உங்களுக்குச் சொந்தம் போல. சீனிக்கு அங்க வீடு பாக்க ஆறு மாசம் ஆனாலும் கூட, நீங்க வித்துப் போட்ட எடத்தில எதுக்கு இருக்கணும்? இங்க ஒரு பக்கம் ஸ்டவ் வச்சிட்டு சமையல செஞ்சிக்குங்க. செரமமே இல்ல..."

     "இப்படி எல்லாம் வீட்டை வித்திட்டுப் போவம்னு கனவில கூட நினைக்கல தனம்மா...?"

     கண்ணீரும் விம்மலும் பொங்கி வருகின்றன.

     "அட நீங்க ஒண்ணு, இதெல்லாம் இன்னிக்கு சகஜம். நீங்க என்ன, திருடினீங்களா, கடன் வாங்கினீங்களா? ஏதோ அந்தப் பொண்ணு நடத்தயினால கொஞ்சம் ரசாபாசமாப் போச்சு. சீனி, மானி... தலை தூக்க முடியாம போயிடிச்சேன்னு மனசு விட்டுப் போயி வீட்டை வித்திருக்கு. உங்களுக்கு என்ன குறைச்சல்? நாளைக்கே ஜாம் ஜாமுன்னு உங்க பையன் பங்களா வாங்குவான்... இப்பல்லந்தா, விவாகரத்தாமில்ல, அத வாங்கிக்கிறதும், வேற கட்டிக்கறதும் சகஜமாயிப் போச்சே? பொம்பிளயே துணிஞ்சி செய்யிறப்ப, உங்க பையன் ராஜாப் போல..."

     இந்தப் பொய்ச் சுவர்களை அவளால் தகர்க்க முடியவில்லையே?

     பொய்மையையும் போலித்தனங்களையும் பலவீனங்களையும் சுமந்து கொண்டு அபிராமி நான்கு நாட்கள் போராடுகிறாள்.

     இடையில், ஆயிஷா ஒரு பெரியவருடன் வீட்டுக்கு வருகிறாள்.

     வீட்டில் எங்கெங்கே மாற்றம் செய்ய வேண்டும், எங்கே இடிக்க வேண்டும், கட்ட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

     மாடியில் இரண்டு படுக்கும் அறைகள் போடப் போகிறார்கள்.

     குளிர் சாதனம் பொருத்த வசதிகள் - கீழே குளிரலமாரி வைக்க இடம் பார்த்தல்... டாய்லெட்டில், நீர்ப்பாய்ச்சும் சாதனங்கள் - வீடு முழுவதற்கும் என்ன வண்ணத்தில் சுவர் 'பெயின்ட்' அடிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள்...

     "திங்களன்று யூசூஃபைக் கூட்டிட்டு வந்து சொல்லிடறேம்மா?" என்று அவர் அவளிடம் தெரிவிக்கிறார்... இருவரும் போகிறார்கள்.

     இவள் கண் முன் வீட்டை இடிப்பார்கள், மாற்றுவார்கள்...

     ஆட்கள் வருவார்கள். அதற்கு முன் எல்லா சாமான்களையும் அகற்றி விட வேண்டுமே?

     புழங்கும் பாத்திரம் பண்டங்களை, ஒரு பெட்டியில் போடுகிறாள்.

     தனம்மாள் கூப்பிட்டிருப்பது ஏற்புடையதுதான்.

     அவர்கள் வீட்டுத் தாழ்வரையில் ஒரு புறம்... என்பதைக் கடைசிப் புகலிடமாகத்தான் மனசில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

     சுஜா, அவளை அப்படி விட மாட்டாள்... என்ற நம்பிக்கை தூரத்து நட்சத்திரமாக ஒளிராமல் இல்லை.