உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஈரோடு புத்தகத் திருவிழா 2025 கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 150 & 151 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 01/08/2025 முதல் 12/08/2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 6.00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைவரும் வாரீர் |
11 தன்னிரக்கம் அவளைப் புலம்பிப் புலம்பி அழச் செய்கிறது. ஒரு ஓட்டைப் படகு, அதை மூடி மறைத்து நிலை நிறுத்தப் பார்த்தாள். அது நிற்கவில்லை. அவளை வீழ்த்தி விட்டது... எத்தனை நேரமாயிற்று என்று புரியவில்லை. கனவிலே ஒலிப்பது போல் குரல்கள் கேட்கின்றன. பொழுது மங்கி, முகம் தெளிவில்லாத இருள் பரவியிருக்கிறது. பாட்டீ... கூப்பிடு...? பா...த்தி! பாட்டீ... பாத்தீ...! தேன் பிசிறாகச் செவியில் யாரோ ஒலித்தாரை பாய்ச்சுகிறார்கள்? பா...த்தீ...? சிலுக் சிலுக்கென்று இளஞ்சலங்கை ஒலி. பிஞ்சு விரல்கள் முகத்தை வருடுகிறது. கன்றுக் குட்டியின் உடலில் சிலிர்ப்போடுவது போல் சிலிர்ப்பு உடலெங்கும் பரவுகிறது. அபிராமி குழந்தையை வாரி எடுத்து முத்தமழை பொழிகிறாள். கண்ணீர் வெள்ளமாகப் பெருகுகிறது. இப்படி அவள் மைந்தனும் கள்ளம் கவடில்லாமல் இருந்தான்... "அம்மா, என்னம்மா? உங்களைப் பாத்து, இருபது வருஷம் ஆயிட்ட மாதிரி இருக்கிறீங்களே? என்னம்மா? உடம்பு சரியில்லையா?..." பை பிதுங்க, சாத்துக்குடி, ஆப்பிள், பன்னீர் திராட்சை எடுத்து வைக்கிறாள். கீழே அமர்ந்து ஆதரவுடன் கையைப் பற்றிக் கொள்கிறாள். "என்ன ஆச்சு அம்மா?... நோ... ஏன் இப்படி? உங்களுக்கு உடம்பு சுகமில்லன்னா ஒரு பதினஞ்சு பைசா கார்டு போடக் கூடாதா? அம்மா? எங்கிட்ட உங்களுக்கு என்ன வைராக்கியம்?..." அபிராமியினால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓராதரவுக்காக ஏங்கியிருந்தாளே? அதைக் கண்டவுடன், பெற்ற உடன்... நெஞ்சம் உருகிப் பெருகுகிறது. யாரோ பெற்ற பெண்... இவள் என்ன உறவு? என்ன ஒட்டு?... "உஷாம்மா, பாட்டி அழாதே நானாம் சொலும்மா!..." உஷா குஞ்சுக் கையினால் கண்ணீரைத் துடைக்கிறது. "நானாம்...நானாம்..." கண்ணீரின் கரிப்பு - அந்தப் பிஞ்சுக்கை... "என் கண்ணே, நான் அழமாட்டேன், நான் ஏன் அழணும்? இனி எனக்கு ஒண்ணுமில்ல..." சுஜா பன்னீர் திராட்சையை அலம்பித் தட்டில் போட்டுக் கொண்டு வருகிறாள். "இந்தா உஷாம்மா, பாட்டிக்கு 'ஆ' போடு...!" திராட்சையின் குளிர்ச்சி, கொள்ளை போகும் இனிப்பு, புத்துணர்வு எல்லாம் நாடி நரம்புகளில் பரவி, அவள் சோர்வுகளை விரட்டியடிக்கிறது. "நான் இப்ப எதுக்கு வந்திருக்கிறேன் தெரியுமாம்மா?" சொல்லிக் கொண்டு கைப்பையைத் திறந்து ஒரு கார்டை வெளியாக்குகிறாள். அஞ்சலட்டை அளவிலான வெண்மையான அட்டை. ஓரங்களில் சிவப்பும் பச்சையுமான பூக்களில் எல்லை கட்டியிருக்கிறது. மேலே, 'ஸுஜாதா இன்வைட்ஸ்' என்று ஆங்கிலத்தில் எழுத்துக்கள். "ஓ... குஞ்சம்மாக்கு ஒரு வயசாறதா? கண்ணே, மறந்து போயிட்டனே...?" என்று தன்னையே குற்றம் சாட்டிக் கொள்கிறாள் அபிராமி. "மேலே பாருங்கம்மா! உஷா பர்த்டே மட்டுமில்ல...?" குறும்புச் சிரிப்பு இதழ்களில் முல்லையாய் மணம் அவிழ்க்கிறது. "இருபத்தெட்டாண்டுகள் ஆசிரியப் பணி செய்து, ஓய்வு பெற்ற அபிராமி டீச்சரின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா...!" இதையொட்டி, மாலையில்... இல்லத்தில் சிறு விருந்தும் பாராட்டுக் கூட்டமும்... அபிராமிக்கு இதை ஏற்க முடியவில்லை. "...இதெல்லாம் என்னம்மா, சுஜா...? எனக்கென்ன இருக்கு கொண்டாட! வேண்டாம், வேண்டாம்மா, மறந்துடு. குழந்தைக்கு பர்த்டே சரி... என்னைக் கேக்காம இதெல்லாம்..." அவளுடைய, குன்றிப் போகும் சிறுமை உணர்வை விரட்டுவது போல் சுஜா கைகளைப் பற்றிக் கொள்கிறாள். "ஏன்...? ஏன் கொண்டாடக் கூடாது? நீங்க ஏன் உங்களைக் குறைவாகவே எப்பவும் நினைச்சிக்கணும்? நீங்க எத்தனை எத்தனை பெண்களுக்கு ஒரு முக்கியமான கால கட்டத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள்? எத்தனை பேர் இன்றைக்குப் பெரிய பதவிகளில் கௌரவமான நிலையில் இருக்கிறார்கள்? சாதாரணமா, கல்யாணம் பண்ணிட்டு ஒருத்தன் நிழலில் தேய்ந்து அவனுக்கு விழா எடுக்கிற போது அதில் தானும் ஒண்டிக்கிறதுன்னே பெண்களுக்குப் பிச்சை வாழ்வு தான் நியதியா இருக்கு. நாம இப்ப மாத்தணும். உங்களுக்கு என்ன குறஞ்சு போச்சு? உங்க வாழ்க்கை சாதனை வாழ்க்கை அம்மா!" "சுஜி உன் வாழ்க்கையை நானே வெறுமையாக்க ஒரு பிள்ளையைப் பெற்றுச் சாவியா வளர்த்திருக்கிறனே, இதுவா சாதனைங்கறே?... மூடப்பாசம், முட்டாள் தாயா, தூக்கித் தூக்கி வச்சு, இன்னிக்கு என் பென்ஷன் பணத்தையே திருடிட்டுப் போற பிள்ளையா உருவாக்கியிருக்கிறேனே இதுவா சாதனை?..." "கரைமேல உக்காந்துட்டு, பூவும்பட்டும் பொட்டும்னு ஓர் அடிமையா நாலு பேர் மதிப்பை வாங்கிக்கிறதை விட, நீங்க தண்ணில நிலைச்சு, இழுப்பில நிலைச்சி எழுந்திருந்து கரை காண முடியும்னு வாழ்ந்திருக்கிறீங்க. நிழலை ஏன் பாக்கிறீங்க? என்னைப் பொறுத்த வரையிலும், உங்க அறுபது வயசு நிறைவு பெரிசு. உங்க பிள்ளைய மறந்திடுங்க. உங்ககிட்டப் படிச்ச பாமா, அவங்க வராங்க. உங்ககிட்ட படிச்ச லீலா, பெண்களுக்காக ஒரு இயக்கமே நடத்திட்டு இருக்காங்க. பண்பாடு, கலாசாரம்னு, ஒரே பக்கம் அழுத்தும் மரபை உடைச்சிட்டுப் புதிய கலாசாரத்துக்கு வழி வகுக்கிறவங்க. அவங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். "இது ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்டாடுவதற்கு இல்ல. வியாபாரத்துக்கான விளம்பரம் இல்ல. நம்மை நாமே புரிஞ்சு கொள்ள, நமக்கு நாமே எண்ணிப் பார்த்துத் தன்னம்பிக்கையும் தைரியமும் பெறத்தான் ஒரு வாய்ப்பு. நீங்க வேண்டாம்னா, எனக்கு வேணும். காலம் காலமா, இரண்டு பொண்ணுக சேரமாட்டாங்கன்னு ஒரு நியதில அமுல்படுத்தி, ஒரு பக்கத்து ஆதிக்கம் சுலபமா நடந்துட்டிருக்கு. அம்மா, இது எனக்காக, இதோ நிக்கிற இந்தக் குழந்தைக்காக..." சுஜாதா... ஒல்லியாக, மாநிறமாக, தாயின் பின் நின்ற வண்ணம் அந்தக் கோயில் தூணருகில், கைகுவித்தாளே... அந்தப் பெண்... இவள், ஊர் உலகத்து மருமகளைப் போன்றவள் அல்ல. புதியவள், புதியவள்... "சுஜா, உனக்குத் தெரியுமா? நீ இவ்வளவு பிரியம் காட்ட நான் தகுதியே யில்லாதவ. எனக்குன்னு ஒரு உறுதியே இல்ல. இந்த வீட்ட வச்சிப் பணம் வாங்கி, இந்தச் சாவியான பிள்ளைக்குச் செலவழிச்சிட்டிருக்கிறேன். ஜி.எச்சில சேருங்கன்னு சொன்னப்ப, எனக்கு அதை எப்படி ஏத்துக்குவான்னு பயமா இருந்தது. பணம் பணமா கட்டினேன். நீ வந்து பாக்கலியேன்னு கூட நினைச்சிக்கிட்டேன்..." "போகட்டும், நீங்க இப்ப அதையெல்லாம் எதுக்கு நினைக்கிறீங்க? ஒரு ஆணை ஒட்டித்தான் நாம வாழணும்ங்கற கட்டாயத்தைக் காலம் காலமா ஏத்துட்டுத்தான் ஒண்ணுமே இல்லாதவங்களா நம்மை நாமே ஆக்கிக் கிட்டோம். அதை உடைப்போம். இப்ப நீங்க எங்க கூட வரீங்க..." அபிராமிக்கு ஆறுதல் வேண்டி இருக்கிறது. தன்னுடைய சில முக்கியமான தேவைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறாள். அபிராமி மாற்றுச் சாவியை தனபாக்கியத்தின் வீட்டில் கொடுத்து விட்டு வருமுன், வண்ண வண்ண மசிப் பென்சிலால் கையால் எழுதப் பெற்ற, அந்த அழைப்பிதழ் அட்டை ஒன்றில் சீனிவாசன் என்று எழுதி மேசை மீது சுஜா வைக்கிறாள். ஆட்டோ ஒன்றிலேறி அவர்கள் செல்கின்றனர். "போன வருஷம் இதே நாளில் நீங்க ஓய்வு பெற்றீங்க. உங்க பர்த்டேக்கும், உஷா பிறந்த நாளுக்கும் ஒரே நாள் தான் வித்தியாசம்..." என்று குழந்தையைப் பார்க்க அபிராமி சென்ற போது முதலாவதாகப் பேசிய சொல்... "பாட்டி மாதிரி அதிர்ஷ்டம் இருந்து விடக்கூடாது. வேணாம்மா! என்னோட இணைக்காதே!" என்றாள் அபிராமி. வேண்டுமென்றே இணைத்திருக்கிறாள். புதிய வீடு - முதல் மாடியில் இருக்கிறது. ஒரு படுக்கையறை; சமையல் அறை; ஒரு முன்னறை உள்ள அழகிய வீடு. பல ஆண்டுகளாக அடைத்துக் கிடந்த பழைய சாமான்கள், கட்டில் எல்லாம் விற்றுவிட்டார்கள். இந்த வீட்டில் சுவருடன் பதித்துக் கட்டிய அலமாரி இருக்கிறது. வாடகை முந்நூறு ரூபாயாம். மங்களம் அபிராமி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறாள். "மாப்பிள்ளை எப்படிம்மா இருக்கார்? உடம்பு நன்றாகத் தேவலையா?..." "உடம்பெல்லாம் தேவலை, மத்தது ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்லம்மா..." "என்னமோ, நம்மகாலம் வேறயா இருந்தது. இப்ப ஒண்ணும் புரியல. நீங்க இங்கயே இருங்கோம்மா, அவகிட்ட என்னால பேச முடியிறதில்ல. ஒரே வெட்டுத்தான். உங்ககிட்ட அப்படி இருக்க மாட்டா..." மனசுக்கு மிகமிக ஆறுதலாக இருக்கிறது. சுஜி பத்து நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறாள். அவளுக்குப் புதிய வீட்டுக்கான சீட்டு விழுந்திருப்பது மெய்தான். அங்கேயே பக்கத்தில் ரயில் நிலையத்துக்கப்பால் உருவாகும் அடுக்கில், முதல் மாடி வீட்டுக்குச் சீட்டு விழுந்திருக்கிறது. இரண்டு படுக்கையறை வசதி உள்ள ஃப்ளாட். தொண்ணூறாயிரம் வருமாம். "என் கல்யாணமாய் ஆறு மாசத்துக்கெல்லாம் இது கட்டினேன், மா. உங்ககிட்டச் சொல்லலதா. மாசாமாசம் வாடகை குடுக்கிறாப்பல, கட்டிடுவோம். இருபது வருஷத்துக்குள்ள வீடு சொந்தமாயிடும்..." அந்த இடத்தைக் கொண்டு காட்டுகிறாள். தூண்கள் வைத்து வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாசங்களில் தயாராகி விடுமாம்... குழந்தை அபிராமியிடம் ஒட்டி விடுகிறாள். கடைக்குப் போய், குழந்தைக்குத் துணி வாங்கித் தைக்கக் கொடுக்கிறாள். மாலை விருந்துக்கு சமையற்காரரைப் பிடித்து ஏற்பாடுகள் செய்கிறாள். அபிராமிக்கு, நல்ல பட்டில், அவளுக்குப் பிடித்த ஆலிவ் பச்சையில் சிவப்புக்கரை மெலிதாகக் கட்டிய சேலை எடுக்கிறாள். வேண்டாம் வேண்டாம் என்று இவள் சொல்வாள் என்று ஒன்றுமே கேட்கவில்லை. தலைசுற்றல் சோர்வு, உறக்கமின்மை எல்லாம் போன இடம் தெரியவில்லை. சீனியைப் பற்றி நினைப்பதே இல்லை. கீழே உள்ள பகுதி வீட்டில் உரியவர்கள் ஊரில் இல்லாததால், அந்தக் கூடத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு விழாக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருக்கிறாள் சுஜா. அன்று காலையிலேயே சுஜாவின் நெருங்கிய தோழிகள் பரிமளாவும் கீதாவும் வந்து விடுகிறார்கள். திருமணமாகி ஒரு வருஷம் ஆகிறது. புருஷன் மதுரையில் கல்லூரி ஆசிரியர். இவளுக்கு அங்கே மாற்றல் கிடைக்கவில்லை. புருஷன் வீட்டில் வேலையை விடச் சொல்கிறார்கள்; பெற்றோரும் நெருக்குகிறார்கள். இவள் வேலையை விடச் சம்மதிக்கவில்லை. "முதல் உரிமை இது... இந்த சுதந்தரம் இல்லேன்னா, வாயில்லாப் பூச்சிகதா!" என்று உறுதியாக நிற்கிறாள். கீதாவுக்குக் கணவன் இறந்து விட்டான். இசைக் கல்லூரி விரிவுரையாளர். விடுதியில் இருக்கிறாள். இரண்டு குழந்தைகள் - அவள் பெற்றோருடன் திருச்சியில் இருக்கிறார்கள். புதிய கோலங்களிட்டு, வண்ணக் காகிதத் தோரணங்களில் அலங்கரிக்கிறார்கள். விருந்துக்கு வருபவர்கள் இருபது பேர்களுக்கு மேலில்லையாம். கீழே ஸ்டவ் வைத்துக் கொண்டு வறுவலும், சித்திரான்னங்களும் அவியலும் ஓரம்மாளே தயாரிக்கிறாள். "சமையற் காரங்கன்னா ஆம்பிளங்கன்னு நினைச்சேன்..." "இல்ல டீச்சர், ஸ்பெஷலா நாங்க இந்தம்மாளத்தான் கூப்பிடுவோம். இவா முந்நூறு பேருக்குச் சமையல் பண்ணுவா. நீங்க சாப்பிட்டுப் பார்க்கப் போறீங்களே? பால்பாயாசம்... ஆகா... அப்படி யாழும் குழலும் சேர்ந்த கனடா ராகம்தான்!" என்று கீதா தன் இரசனையை வெளியாக்குகிறாள். குழந்தைக்குத் தலைவாரிச் சிங்காரித்து, புதிய ஃப்ராக் அணிவிக்கிறார்கள். அபிராமியை வற்புறுத்திப் புதிய சேலையை அணிந்து கொள்ளச் செய்கிறார்கள். சரியாக நான்கு மணிக்கு லீலா வந்துவிடுகிறாள். லீலா முடியைக் குட்டையாக்கிக் கொண்டிருக்கிறாள். ஒரு கைத்தறிச் சேலை, சிறு குங்குமப் பொட்டு... நல்ல உயரமும் வாளிப்புமாக... லீலா... "டீச்சர்...? ஞாபகமிருக்கா?" வந்து தழுவிக் கொள்கிறாள்... "எனக்கு சுஜா உங்க டாட்டர் இன் லான்னு இப்பத் தான் தெரியும்... இப்படீன்னு சொன்னா, 'ஹாய்,... அந்த ஸ்கூலா? அபிராமி டீச்சருக்கு ஓல்ட் ஸ்டூடண்ட் நான். யாரை மறந்தாலும் டீச்சரை மறக்க முடியுமா'ன்னேன். உங்க மருமகளுக்கும் கூடச் சொல்லல..." அபிராமிக்கு நெஞ்சு விம்முகிறது. தாழ்ந்த படியில் இருந்து படிக்க வந்த சிறுமி. அப்பா ஒரு தகரக்கடைத் தொழிலாளி. தாயார் நாலைந்து வீடு வேலை செய்து பிழைத்தாள். ஆறு குழந்தைகளில் இவள் இரண்டாவது பெண். பள்ளிக் கூடத்தில், எப்போதும் சோர்ந்து உட்கார்ந்திருப்பாள். கண்களும் முகமும் எல்லாம் சோர்வுக்குரியவள் அல்ல நான் என்று அபிராமிக்குப் பறை சாற்றுவது போல் இருக்கும். "அடீ, லீலா மக்கு? என்னடீ தூங்குகிறியா?" என்று கேட்கும்படி பின் வரிசை பெஞ்சியில் உட்கார்ந்திருப்பாள். இவள் வகுப்புக்கு வரும் போது, லீலாவுக்குப் பதினைந்து வயசு இருக்கும். எட்டாம் வகுப்புக்கு அது அதிகம். "கடா மாடு மாதிரி வளர்ந்திருக்கு. ஒவ்வொரு கிளாசிலும் ரெண்டு வருஷம் நல்லா பெஞ்சி தேச்சிட்டு வருது" என்று இத்தகைய பின் பெஞ்சிப் பெண்களுக்கு அருச்சனைகள் மிகவும் சகஜம். இந்த லீலாவை, அபிராமி முன் பெஞ்சுக்கு மாற்றினாள். அதிகமாக மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் ஆசிரியர்களின் அன்புக்கும் தனி மதிப்புக்கும் உரியவர்களாகும் சிலரில், நந்தினியும் ஒருத்தி. தாயும் தகப்பனும் வேலை செய்பவர்கள். உயர்ந்த சாதிப் பெண்... "டீச்சர், லீலாவ முன்ன உக்காத்தி வச்சா எங்களுக்கு அவ தலை மறைக்கிறது" என்று புகார் செய்தாள். ஓரமாக முன் வரிசையில் இடம் போட்டாள். தன் கவனத்தை அவள் மீது அதிகமாகச் செலுத்தினாள். "ஏய், லீலா? என்ன எங்கியோ பாக்கற... இப்ப என்ன சொல்லிட்டிருந்தேன், சொல்லு?..." சொல்லத் தெரியாது; விழிப்பாள். பிறகுதான் தெரிந்தது, பாதி நாட்களும் லீலா பட்டினியாகப் பள்ளிக்கு வருகிறாள் என்று. தன் வீட்டில் காலையில் வரச் செய்து, உதவிக்கு வைத்துக் கொண்டாள். படிப்பில் ஆர்வம் பிறந்தது. அரைப் பரீட்சையில் முன்னணி மாணவியாக நின்ற போது தான், நந்தினி, இவள் மீது திருட்டுக் குற்றம் சாட்டினாள். சுந்தராம்மாள் வரையிலும் போயிற்று. அவள் பஸ்ஸில் போகும் போது, பக்கத்தில் இருந்து, பர்சைத் திருடி, பணத்தை எடுத்துக் கொண்டு வெறும் பர்சைக் கீழே போட்டு விட்டாள் என்று குற்றத்தை இவள் ஒப்புக் கொள்ளும்படி முன் வைத்தாள். "போலீஸில் பிடிச்சுக் கொடுக்கணும் நியாயமாக. ஏன்னா இது ஸ்கூல்ல நடந்த குற்றமில்ல. ஆனா, இந்த ஸ்கூலுக்குக் கெட்ட பேர் வரக்கூடாது, அதனால இங்க வந்தேன்..." என்று நந்தினியின் தாயான இன்னொரு பள்ளி ஆசிரியை சுந்தராம்மாளின் அறையில் அவளைக் கொண்டு நிறுத்தியிருந்தாள். அபிராமிக்கு வேதனையாக இருந்தது. பொருளாதாரம் சார்ந்து சமுதாயம் சார்ந்து அடி நிலையில் இருக்கும் குழந்தைகள், எப்போதும் வழுக்குப் பாறையில் தான் முன்னேற வேண்டி இருக்கிறது என்பது புரிந்து இருந்தது. சுந்தராம்மாள் பள்ளியை விட்டே விலக்கிச் சீட்டுக் கொடுத்து விட்டாள். அன்று அவள் தாயும், அவளும் வந்து வீட்டில் அழுததை அபிராமியினால் இன்னும் மறக்க முடியவில்லை. "அவளா எடுத்து எங்கிட்ட புத்தகத்தில் ரூபாய வச்சி இப்படிச் செஞ்சிருக்கா டீச்சர்... நா எடுக்கவேயில்ல, உங்கூட்ல இவ்வளவு நாளா வரமே! நா எதாணும் எடுத்திருக்கிறனா?..." என்று அழுதாள். அபிராமிக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. "... இந்த வருசம் போயிடும். போனாப் போகட்டும். எனக்குத் தெரிஞ்ச டீச்சர் அம்மா ஒருத்தர் சிதம்பரத்தில இருக்காங்க. லெட்டர் தாரேன்; அவங்க எதானும் வழி பண்ணுவாங்க. யோக்கியமா நல்லபடியா இருந்து பிழைச்சுக்க..." சீதாலட்சுமியும் அவளைப் போல் மண வாழ்வில்லாமல் ஆசிரியப்பணிக்குப் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பாட்டனார் காலத்திலிருந்து ஒரு நல்ல பள்ளியை நடத்திக் கொண்டிருப்பது தெரியும். அவளுக்கு உதவி கோரிக் கடிதம் கொடுத்து அனுப்பினாள். பிறகு, லீலாவிடம் இருந்து, தான் பள்ளியில் சேர்ந்திருப்பதாகவும், சீதாலட்சுமி அம்மாள் அன்புடன் நடத்துவதாகவும் கடிதம் ஒன்று வந்தது. மறந்தே போனாள். அந்த லீலா... நரையோடும் இழைகளுடன்... "சீதாலட்சுமி நல்லாயிருக்காங்களா?" "...அவங்க போன வருஷம் இறந்துட்டாங்கம்மா. அவங்க தம்பி மனைவி, பார்வதி இப்ப ஸ்கூல் எச்.எம். ஸ்கூல் ரொம்பப் பெரிசாப் போயிட்டுது... நான் அங்க நாலு வருஷம் படிச்சிட்டு, படிப்பை நிறுத்திட்டேன். மேல படிக்க வசதியில்ல. இங்க வந்து அவங்க சிபாரிசில ஒரு டாக்டர்கிட்ட ரிசப்ஷனிஸ்டா இருந்தேன். பின்ன, பால சேவிகா ட்ரெயினிங் ஒரு வருஷம் எடுத்தேன்... மறுபடி ஸ்கூல். கிரீச் ஆயா... அதோட கரஸ்பான்டன்ட் கோர்ஸ் படிச்சேன்... சொன்னா இராமயணம். இன்னிக்கு, பெண்களுக்கு எல்லாப் படியிலும் இருக்கும் கஷ்டமெல்லாம் எனக்குப் புரியிதம்மா. நாம எதானும் செய்யணும்னுதான் ஒரு மூவ்மென்ட் தொடங்கியிருக்கிறேன்... இத பாருங்க... ஒரு ஜர்னல்... இதும் நடத்துறோம்..." "பெண் - புதிய பார்வை..." அந்த அட்டை வண்ணமில்லாச் சிறு ஏட்டை அபிராமி நெஞ்சு துளும்பப் பார்க்கிறாள். வரதட்சணை, சாராயக்கடை அவலம் - கருத்தடை, ஒரு பக்க நியாயம், சினிமா விமர்சனம்... என்று பல விஷயங்களைத் தொட்டு விவாதிக்கிறார்கள். பெண்ணுக்கு நியாயம் காட்டுவதாகப் புகழப்பட்டு ஓகோகோ என்று ஓடிய ஒரு திரைப்படத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து எறிந்திருக்கிறாள். 'கற்பு பெண்ணுக்கு மட்டும் தானா என்று கேட்க வந்து நியாய உணர்வைத் தட்டி எழுப்புவதற்காக மூன்று முடிச்சுப் போட்ட கதை, இறுதியில் கற்பழித்தவனை உன்னத கதாநாயகனாக்கும் தீவிரத்துடன் முடிச்சை அவிழ்க்கிறது. அவனுக்காக நாயகி வெள்ளை உடுத்தி, அவன் கட்டாத தாலியை எடுத்து எறிகிறாள்! தாலி கட்டிய புருஷன், கற்பு, கற்பழிப்பு - மீண்டும் தாலி மகத்துவம் என்று பழைய கள்ளையே புதிய மொந்தையில் கொடுக்கும் சாதுரியம்.' "சுஜாவை உனக்கு எத்தனை நாளாகப் பழக்கம்?" "வேலை செய்யும் பெண்களுக்கான ஃபோரம் ஒன்று கூட்டினோம். முன்ன, டெலிபோனில் வேலை செய்த பெண்ணொருத்தி, மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செஞ்சிட்டாளே, அப்பத்தான் தீவிரமா யோசனை செய்தேன். ஆனா... ரொம்பக் கஷ்டம். நம் காலால் நாம் நிற்கணும், நம்மால் எதுவும் முடியும் என்ற தைரியத்தைக் கொண்டு வரவே ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கு. சுஜா அப்பதான் இந்த ஃபோரத்தில சேர்ந்தாள்... பத்திரிகை ஆரம்பிக்கணும்னு எத்தனை முயற்சிகள்? ரெண்டு வருஷம் நடத்தி, முடியாமப் போய், இப்ப திரும்ப வேறு ஒரு பெயரில் அஞ்சு மாசமா கொண்டு வரேன்..." "உனக்கு... இது முழு நேர வேலையா?..." "ஆமாம்மா... நான் ஒருத்தியல்ல. நாங்கள் பத்துப் பேருக்கு மேல் இந்த இயக்கத்தில் முழு மூச்சா ஈடுபட்டிருக்கிறோம். பத்திரிகையில் கீழே எல்லாருடைய பெயரும் இருக்கு..." சற்றுப் பொறுத்து இன்னொரு ஆச்சரியமாக, நந்தினி வேணுகோபால் வருகிறாள். பெரிய பூமாலை... அபிராமியின் கழுத்தில் போட்டு, கீழே விழுந்து வணங்குகிறாள். அபிராமிக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது. "என்னம்மா... காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதே எனக்குப் பிடிக்காது!" "டீச்சர்! உங்களுக்கு வெற்றி இல்லையா இது?" "என் வாழ்நாளில் இது போல் சந்தோஷமான சமயம் வேறு வர முடியாது. நந்தினி! நீ இங்கதானிருக்கிறியா?..." "ஆமாம் டீச்சர், அண்ணா நகரில். அவர் சவுதியில் இருக்கிறார். மூன்று குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டு, மாமியாருடன் இருக்கிறேன். டீச்சர், நம்ம பெண்களிடம் பழைய சம்பிரதாயங்களைத் தூக்கி எறிவது ரொம்ப முடியாத காரியமாக இருக்கிறது. நான் எம்.ஏ. ஸோஷியாலஜி பண்ணி, மேலும் எம்.ஃபில்லும் எடுத்தேன். மாமியார் கட்டுப்பாடு, நான் வேலைக்குப் போகக்கூடாது; சம்பாதிக்கக் கூடாது. பணம் தான் நிறைய வருகிறதே?..." "டீச்சர், அவர் இங்கேயே வேலை இல்லாமல் இல்லை. பி அண்ட் டியில் இருந்தார். இங்கே சரியாக பிரமோஷன் வறலன்னு ஒரு சாக்கைச் சொல்லிட்டு விட்டுட்டுப் போயிருக்கிறார். இங்கேயே இருந்து, நானும் வேலை செய்து சம்பாதிக்க உரிமை கொடுத்து, குடும்பத்தை எல்லாரும் பொறுப்பேற்க வேண்டும்னு பங்கிட்டுக் கொண்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?..." அடுத்து பாமா... இதற்காகவே டில்லியில் இருந்து வந்திருப்பதாகச் சொல்கிறாள். "டீச்சர்...? நினைப்பு இருக்கா?" பாமா... வெள்ளை வெளேரென்று ஒரு அசட்டு வெளுப்பு. ஒல்லியாகப் பாச்சைக் குஞ்சைப் போல் இருப்பாள்... இப்போது, அந்த வெண்மையில் ரோஜாவின் செம்மை ஏறியிருக்கிறது. இவளும் முடியைக் குட்டையாக்கிக் கொண்டிருக்கிறாள். நெற்றியில் குங்குமப் பொட்டு இருக்கிறதோ இல்லையோ என்ற அளவில்... செவிகளில் சிறு முத்துத் தோடு. கரையில்லாத மயில்கண் நிறப்பட்டுச் சேலை, சோளி... எல்லாருமே கண்களுக்கு, கருத்துக்கு, அறிவுக்கு விருந்தாக அந்தப் பழைய ஆசிரியையைச் சூழ்ந்து நன்றி தெரிவிப்பது போல் வந்திருக்கிறார்கள். வாசலில் இன்னும் யார் குரலோ கேட்கிறது. சுஜாவின் தோழி பரிமளா சென்று அம்சாவைக் கூட்டி வருகிறாள். பெரிய குங்குமப் பொட்டு, வட்டக் கொண்டையில் பூ, உடன் பெண் குழந்தைகள், கையில் இரண்டு ஆப்பிள் பழங்கள்... "உனக்கு யாருடி சொன்னது, அம்சா?..." "நந்தினி அம்மா தா சொல்லிச்சி... அவுங்க வூட்டுக்கு வாடிக்கையா காய் கொண்டு போடறனில்ல?..." மாலைகள், பழங்கள், புத்தகங்கள் என்று இவளுடைய புகழில், குழந்தை உஷா ஊடே வந்து வந்து தனக்குரிய பரிசுகளைப் பெற்றுக் கொள்வதும், சிரிப்பும் மகிழ்ச்சியும் கலகலப்புமாகப் பொழுது ஓடுகிறது. "உங்க அன்புக்கு நான் என்னம்மா நன்றி சொல்வதுன்னு புரியலம்மா!" என்று அபிராமி நெஞ்சு துளும்ப நிற்கிறாள். "உங்களுக்கு நிறையப் பொறுப்புக் கொடுப்போம் டீச்சர்! இந்தச் சந்தர்ப்பம் பாராட்டுக் கூட்டமோ, இல்லே, நன்றிக் கூட்டமோ இல்ல. நாமெல்லாம் ஒண்ணுன்னு ஐக்கியமான இலட்சியத்தைக் கொண்டு வருவதற்குத் தான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி யிருக்கிறோம்... பெரிய மாலை, போஸ்டர் நிறையச் சிரிப்புன்னு மத்தவங்க கொண்டாடுற மணி விழா இல்லை இது. காலம் காலமா, பெண், போகம், உழைப்பு இரண்டுக்குமாகத் தான் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறாள். இதை மாற்றி, அவளுக்கும் அறிவு உண்டு; அவளுக்கும் தன்னை மேம்படுத்திக் கொண்டு முன்னேற உரிமை உண்டு என்ற அடிப்படையில் சமத்துவம் காணணும். அதற்குக் குறுக்கே வரும் தடைகளை நாம் களையணும்..." லீலா தான் எவ்வளவு அழகாகப் பேசுகிறாள்? இவளுடைய அறிவும் ஆழ்ந்த நோக்கும், வாழ்க்கை என்னும் வழுக்குப் பாறை அனுபவங்களில் மலர்ந்தவை அன்றோ? அபிராமி இந்த இனிய பொழுதில், விருந்தில், தன் கருநிழலான மகனின் நினைவையே மறந்து போகிறாள். |