10

     தாலிச்சரட்டைக் கழற்றி எறிந்து, புருஷன் மனைவி பந்தத்தைத் துண்டித்தெறிவது எளிது என்று அபிராமி இப்போது நினைக்கிறாள்.

     கழுத்துப் புருஷனையும் விடப் பந்தமுள்ளவன், இந்த வயிற்றுப் புருஷன். இவனை இரத்தத்தோடு சதையோடு ஊட்டி வளர்த்துத் தன்னுள் ஒரு பகுதியாக வைத்திருந்து பிய்த்து எறிவது போல் வேறாக்க இடம் கொடுக்கிறாள். அவன் முகம் வாடும் போது இங்கே உணர்வுகள் துடிக்கின்றன. அவன் சந்தோஷம் தான் தன் மலர்ச்சி என்று குருட்டுத்தனமான கோட்டில் அவள் உணர்வுகள் பழக்கப் பட்டிருக்கின்றன. எட்டரை மணிக்குப் பள்ளிக்குப் போவதற்கு முன் வயிற்றில் சூடாகப் போட்டுப் பழக்கப்படுத்தி விட்டால், எட்டரைமணிக்கு அமிலத்தைச் சுரப்பித்துப் பசியுணர்வை மிஞ்சிவிடும் பழக்கத்தைப் போல் இந்த உணர்வுகளுக்கும் அறிவார்ந்த தெளிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் போகின்றன.

     இது மூடத்தனம், முட்டாள்தனம், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் குருட்டுத்தனம். அவனைக் காணும் போது, கோடு கிழித்த வெட்டாக, துண்டித்து எறிய வேண்டும். தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு வேறு...

     மனசை ஒரு திட நிலையில் நிறுத்திக்கொண்டு, இனி என்ன செய்யலாம் என்று யோசனை செய்கிறாள்.

     "நீ வேலை செய்யப்போ, மூட்டை சும, அல்லது கூலி வேலை செய், சம்பாதித்து வா, இல்லையேல் ஒரு காசு இல்லை..."

     இந்தக் கண்டிப்புச் சொற்களை மனசுக்குள் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்கிறாள். அன்றிரவு அவன் எட்டரை மணிக்கே திரும்பி விடுகிறான். என்றாலும் அபிராமி அவனுடம் மலர்முகத்துடனோ, சுளிப்புடனோ கூடப் பேசவில்லை; சோறு போடவில்லை. தான் முதலில் சாப்பாடு பண்ணிவிட்டு வந்து முன்னறையில், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

     "அம்மா...? அம்மா?... சாதம் போடம்மா, பசிக்கிறது...?" அவளிடமிருந்து எதிரொலியே எழும்பவில்லை.

     "ஐ...ம் ஸாரி! மா! நடந்ததுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறேன் மா...மா...?"

     அவளைத் தொட்டு, நைச்சியம் பேச வருபவனிடம் இருந்து நகர்ந்து போகிறாள்.

     "ஏம்மா, இவ்வளவு கோபம்...? அம்...மா? என்னம்மா நீ...!"

     "எங்கிட்ட வராதே. சோறு வேணுன்னா வச்சிருக்கிறேன். போட்டுத்தின்னு!" வெறுப்புடன் சொற்களை உமிழ்ந்து விட்டுப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுக்கிறாள்.

     "நாளையிலிருந்து, நீ கூலி வேலை செய்தோ, மூட்டை சுமந்தோ, நாணயமா நாலு காசு சம்பாதித்து வராம உனக்கு இந்த வீட்டில் சோறு கிடையாது!" என்று படுத்த நிலையிலேயே அவனுக்குத் தீர்ப்பு விடுக்கிறாள். அவனும் கோபத்துடன் படுக்கையைப் போட்டுக் கொள்கிறான்.

     கழுதை... வாசற் கதவைப் பூட்ட வேண்டும் என்ற பொறுப்புக் கூட இல்லை!...

     மீண்டும் அவள் எழுந்துதான் சமையலறையைக் கூடச் சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

     ஜனவரி முதல் தேதியும் ஓடிவிடுகிறது.

     அபிராமி அடுத்த நாள் பென்ஷன் வாங்கினால் தான் கையில் செலவுக்குப் பணம் என்ற நிலையில் நிற்கிறாள்.

     காலையில் எழுந்திருக்கும் போது, முதுகுவலியும், தலை சுற்றலும் எழுந்திருக்க முடியாது என்று தடுக்கிறது.

     படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைப் பக்கம் சென்று வருவதற்கும் பிரயாசமாக இருக்கிறது.

     "அம்மா...! என்னம்மா இது...! நீ ரொம்ப உடம்ப வருத்திக்கறேம்மா. படுத்துக்கோ, நீ எழுந்திருக்க வேண்டாம்..."

     அவனே பால் வாங்கி வந்து காபி போடுகிறான்.

     தனபாக்கியத்திடம் போய்ச் சொல்லி விட்டான் போலிருக்கிறது.

     "என்னங்க டீச்சர்? படுத்திட்டீங்களே?... உங்களுக்கு ரெஸ்டே இல்லாம போச்சு. என்ன மருமக...? ஒரு ஆபத்து சம்பத்துக்கு உதவாம! நீங்க ஆசுபத்திரிக்கு ஓடி ஓடி, வீட்டிலும் அத்துவானப் பட்டுட்டு இருந்தப்ப கூட எட்டிப் பாக்காம. ஆயிரந்தா மனஸ்தாபம் இருந்தாலும், புருஷன் பொஞ்சாதிக்குள்ள, ஒரு சமயம் போதுன்னு விட்டுக் குடுக்கலாமா? நேத்து ஒண்ணாந்தேதி, லீவுதா, வந்து பாக்கக்கூடாதா? நாங்க சொல்லிட்டே இருக்கிறம்..."

     அபிராமிக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. "எனக்கு ஒண்ணில்ல தனம்மா, சீனி சும்மா எதையோ சொல்லிட்டிருக்கிறான்."

     "பாருங்கம்மா, எங்கம்மாக்கு மருமகள யாரும் எதுவும் சொன்னாப் பொறுக்காது. இது உலகத்தில் இல்லாத அதிசயம்" என்று அவன் பாடுகிறான்.

     "ஆமா, அதிசயம்தான் தனம்மா, உங்களுக்குத் தெரியாது. மருமக உசத்திதான். நம்ம பெத்தபுள்ள, அம்மான்னு இரக்கம் காட்ட மாட்டேங்குறான். இவனுக்கு எல்லா வேலையும் செஞ்சு உடம்பைத் தேச்சிட்டு, அவளை வந்து லீவு போட்டுட்டு வேலை செய்யின்னு சொல்றது நியாயமா? புள்ள செய்யட்டுமே? இவனுக்கு கடமை இல்லையா?"

     "என்ன டீச்சர், நீங்க புது நியாயம் பேசுறீங்க? ஆம்புள, செல்லமா வளர்ந்த பிறகு அடுப்படி வேலை செய்யத் தெரியுமா? அட உங்களுக்கு ஒரு வாய்க்கு வேணுங்கற ரசமோ, குழம்போ செஞ்சு போடணும்னா அது பொம்பிளயால தான முடியும்?... நீங்க படுத்திருங்க... நா ஒரு சீரகரசம் பத்தியமா வச்சுத் தாரேன். சாப்பிடுவீங்கல்ல?"

     "உங்களுக்கென்னத்துக்கம்மா சிரமம்?"

     "செரமம் ஒண்ணுமில்ல. பேசாம மருமகளக் கூட்டிட்டு வரச் சொல்லுங்க, பத்து நா லீவு போட்டுட்டு!" என்று சொல்லி விட்டுப் போகிறாள்.

     அவள் சென்ற பிறகு அபிராமி அவனை இடிக்கிறாள்.

     "உன்னை யாருடா அவகிட்ட இவகிட்டல்லாம் டாம்டாம் போடச் சொன்னது?"

     "அம்மா, நீ வரவர சிடுசிடுன்னு விழற... எனக்கு இது பத்தாத காலம்..." எதிரே உட்கார்ந்து கண்களை கசக்குகிறான்.

     "என்னைப் பெற்ற அன்னிக்கே நீ இப்படித் தூக்கி எறிஞ்சிருந்தா, நல்லாயிருந்திருக்கும். நானும் சேரிக்குழந்தைகளோடு வளர்ந்து ஒரு மூட்டை சுவப்பவனாகவோ, ரிக்‌ஷா இழுப்பவனாகவோ வளர்ந்திருப்பேன். நீதான் நான் ராஜகுமாரன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் கற்பிச்சிட்டிருந்தே. கோபுரத்தில தூக்கி வச்சிட்டு, இப்பக் காலால தள்ளிவிடாதே" மூசுமூசென்று அழுகிறான்.

     "சீ! எதுக்குடா இப்ப அழுகை? இந்தக் காலத்தில் பொண்ணுகள் கூடக் கண்ணீர் காட்டுறதில்ல. எங்கள் முன்ன உக்காந்து அழுது தொலைக்காத போயிடு!"

     "நீ இப்படி உதச்சா எங்கம்மா போவேன்...!"

     அவள் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறான்.

     "போதும்டா, போதும். காலை விடு! யோக்கியனாக இருந்து காட்டு. காலைப் புடிச்சிட்டு அழுவானேன்? போய் எங்கேனும் வேலை தேடிட்டு வா!..."

     "அம்மா, நானே வேலைய விட்டுட்டேன்னா நினைக்கிறீங்க?... எனக்கு உடம்பு சரியில்லாம விழுந்ததும், அந்த செக்‌ஷனையே குளோஸ் பண்ணிட்டாங்க. என்னமோ உங்க சொந்தக்காரங்கன்னு, சிபாரிசுல வேலை கிடைச்சதுன்னு நினைச்சிட்டிருப்பே... ரொம்ப மோசம்மா. முதலாளிங்க பழம் பெருச்சாளிகளாச் சில பேர் உட்காந்திட்டு, சுரண்டறான். நான் இதை எடுத்துக் காட்ட, தட்டிக் கேட்டதும் எம்பேரில இல்லாத பொல்லாத பழியெல்லாம் சொல்லி அவங்க தப்பிச்சிட்டிருக்காங்க..."

     "எனக்கு ரொம்ப மோசமான காலம்... அம்மா... அம்மா, நீ ஒருத்தி என் பக்கம் இருக்கிறன்னு தெம்பு இருந்தது... அதுவும் இல்லேங்கற..."

     எங்கோ நுண்ணிய இழைகளைத் தேடிச் சென்று அசைக்கும் வல்லமை, இவனுடைய குரலுக்கு இருக்கிறது.

     "சரிதாண்டா, போயி, ஒரு ஆட்டோ கொண்டு வா. நான் பென்ஷன் வாங்கிட்டு வந்து தான் யாரேனும் டாக்டரைப் பார்க்கணும்..."

     அவன் உடனே சென்று வண்டி அழைத்து வருகிறான்.

     அவனும் அவளுடன் ஆதரவாகச் செல்கிறான்.

     வங்கியில் சிறிது நேரம் ஆகிறது.

     அறிந்தவர், தெரிந்தவர்...

     "ஏன் டீச்சர்? உடம்பு சரியில்லையா? ரொம்பவும் இளைத்து உருமாறிப் போயிட்டீங்க?" என்று சண்பகம் விசாரிக்கிறாள். இன்னும் பலரும் விசாரிக்கின்றனர்.

     முன்னூற்று எண்பத்து சொச்சம் - பென்ஷன்...

     முன்னூற்றைம்பது வங்கியில் இருந்து பெற்றுக் கொள்கிறாள்.

     "அம்மா, டாக்டரிடம் போய்விட்டு வீட்டுக்குப் போகலாம்..."

     அவள் பணத்தை எண்ணிக் கைப்பையில் போட்டுக் கொள்ளும் போது அருகில் நின்று அவளைப் பார்க்கிறான்.

     "போகலாம்..."

     பலவீனமான அவளைக் கையைப் பற்றிக் கொண்டு வந்து ஆட்டோவில் உட்காரச் செய்கிறான்.

     டாக்டர் தாட்சாயணியின் கிளினிக் அவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரம் தான்! டாக்டர் வீட்டில் வண்டியை விட்டு இறங்கியதும் அவனே கைப்பையை அம்மாவிடம் இருந்து எடுத்து, மீட்டர் கூலி எட்டு ரூபாயைக் கொடுக்கிறான்.

     பன்னிரண்டடிக்கும் நேரம். வெளியே கடையில் இருந்து அம்மாவுக்கு ஒரு ஆரஞ்சு ரசம் வாங்கி வந்து கொடுத்து ஆசுவாசப் படுத்துகிறான்.

     எங்கும் அறிந்த தெரிந்த முகங்கள், விசாரணைகள்...

     சுகுணா புருஷோத்தமன் ஊசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறாள்.

     "ரொம்ப லொடுக்குனு போயிட்டீங்க டீச்சர்... என்னப்பா சீனி? உன்னைக் காணுறதே இல்லே?..."

     "எங்க மாமி, பொழுதுக்கும் பாட்டுக்கும் சரியாப் போகுது... உங்களை அன்னிக்கு டி.வி.ல பாத்தேன்... எங்கியோ, சேவை இல்லத்துக்குக் கவர்னர் வரச்ச, நீங்க நின்னீங்க..."

     அவள் முகம் மலருகிறது.

     "ஓ... அதுவா?..."

     தக்காருக்குத் தக்கபடி பேசி, வேஷம் போடுகிறான்.

     அபிராமி எதிலும் நிலை கொள்ளாமல் காத்துக் கிடக்கிறாள்.

     அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்த சிறுபெண் தாட்சாயணி, ஒரு காலத்தில் இவள் மாணவியாக இருந்தவள். குட்டையாகச் சிவப்பாக... பரபரப்பாக இருக்கும் தாட்சாயணி, இன்று ஒரு தேவதைக்குரிய மாட்சிமையுடன் இந்தச் சிறு மரத்தடுப்பு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். இள நீல ஜார்ஜட் சேலை, மெல்லிய தங்கச் சங்கிலி டாலர் முகப்பு... சிறு நட்சத்திர நீலப் பொட்டு...

     சீனி அவளைப் பார்த்து முகமன் கூற, அவள் புன்னகையுடன் குளிர்ச்சியாகப் பார்க்கிறாள்.

     "என்ன டீச்சர், நீங்க ப்ரிஸ்காகவே இருப்பீங்க?..."

     "கேளுங்க. சொன்னாலே கேக்கறதில்ல டாக்டர். எப்பவும் எல்லா வேலையும் தானே செய்யணும், ஒரு சர்வென்ட் மெய்ட் கூட வச்சுக்கிறதில்ல."

     "அதெல்லாம் இல்லம்மா, அநாவசியமா எதுக்கு...? நம்ம வேலை நாம் செஞ்சிக்கறோம். ரிடயர் ஆயாச்சு. தெரியுமில்ல?"

     "ரிடயர் ஆயாச்சு, மருமகளும் வந்தாச்சி..."

     மீண்டும் புன்னகை.

     "தலை சுத்துது, நடக்கறப்ப ஸ்டெடியா இல்ல..."

     "இப்படி சவுரியமா உட்காருங்க..." அருகில் சிறு முக்காலியில உட்காரச் சொல்லி, இரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய முனைகிறாள்.

     காதுகளில் குழாயை மாட்டிக் கொண்டு பரிசோதனை செய்கிறாள்.

     சில நிமிடங்களாகின்றன. எடுத்து வைக்கிறாள்.

     பிறகு கண் இமைகளை நீக்கிப் பார்க்கிறாள்.

     "என்ன டாக்டர்...!"

     "...கொஞ்சம் ...பிரஷர் இருக்கு. எதற்கும் பிளட், யூரின் டெஸ்ட் பார்த்துட்டு, நாளை ரிஸல்ட் எடுத்திட்டு வாங்க. இப்ப மாத்திரை எழுதித் தரேன். சாப்பாட்டுக்கு பிறகு ஒன்று, ஒன்று... ராத்திரி நல்லாத் தூங்குவீங்க..."

     சீட்டில் மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறாள். பரிசோதனைக்கு வேண்டிய சீட்டு...

     "இங்க... சந்திரா லாப்ல குடுத்துப் பார்த்துக்குங்க..." என்ற பரிந்துரை.

     "ஹௌமச்... டாக்டர்?"

     "டென்..."

     சீனி இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைக்கிறான்.

     "தாங்யூ!"

     ஒரு கீற்றுப் புன்னகை. தலையசைப்பு. மணியடிப்பு.

     அபிராமிக்கு வெளியே வருகையில் குப்பென்று வேர்க்கிறது.

     'டீச்சர்... டீச்சர்' என்று பரபரக்கும் அந்தத் தாட்சாயணியில்லை. டாக்டர் தாட்சாயணி, எம்.டி... என்ற பலகை இரண்டு மூன்று இடங்களில். முன்பு எம்.பி.பி.எஸ். என்று இருந்தது. ஐந்து ரூபாயிலிருந்து பத்தாக ஏற, எம்.டி. என்ற எழுத்துக்கள் வந்து விட்டன.

     அந்த நாட்களில் டீச்சர் டீச்சர் என்று தன்னையே அவர்கள் சார்ந்திருந்தது போன்ற பலம் அவளுக்கு இருந்தது. இன்று... இவள் வெறும் நோயாளி. இளம் டாக்டருக்குப் ‘பிராக்டிஸை' ஊர்ச்சிதப் படுத்திப் பெயரும் புகழும் சேர்க்கக் குழுமும் நோயாளிக் கும்பலில் இவளும் ஒருத்தி.

     "ஓ... உங்ககிட்ட... நான் ஒண்ணும் வாங்க மாட்டேன்... நோ... நோ... டீச்சர்?" என்று மறுப்பதை அபிராமி எதிர்பார்த்திருந்தாள். தாட்சாயணி எம்.டி... தொழில் என்று வந்த பின், அந்த மரியாதை, பாசத் தொடர்புகளுக்கும் மென்மைகளுக்கும் ஏது இடம்?... எம்.டி. டாக்டர் இப்படி ஆள் எண்ணிப் பணம் பண்ணிச் சேர்த்து எவனேனும் ஆண் பிள்ளைக்குக் கொட்டிக் கொடுத்து...

     இவர்கள் சாதியில் டாக்டருக்கு லட்சம் ரூபாய் தட்சணை. அதற்குத் தான் இந்த இடத்திலும் வேறு இடத்திலும் தொழில் பண்ணுகிறாளோ? தாட்சாயணியைத் தொழில் முறை இல்லாமல் தனியாகப் பார்த்து, ‘ஏமாறாதே பெண்ணே' என்று சொல்ல வேண்டும்...

     "என்னம்மா? இப்படியே லாப்ல நீர், இரத்த பரிசோதனைக்குக் கொடுத்து விட்டு வரலாம்...!"

     "கிடக்குடா, இப்ப ஒண்ணும் வாணாம்! என்னமோ முழுநீளம் எழுதிக் குடுத்துட்டா டெஸ்ட் டெஸ்ட்னு!" யார் மீதென்று சொல்லத் தெரியாத எரிச்சல்...

     "நீ உன் உடம்பையே பாழடிச்சிக்கற!"

     "ஆமாம். அதில் உனக்கும் பங்கு உண்டு!..."

     தனபாக்கியம் சொன்னபடி ரசம் கொண்டு வந்து தருகிறாள்.

     குக்கரில் சோறு வைத்திருக்கிறாள். சீனியும் அந்த ரசம் சோற்றைத் தான் சாப்பிடுகிறான்.

     அபிராமிக்கு உண்டதும், அந்த மாத்திரையின் வேகத்தில் உறக்கம் வந்து விடுகிறது.

     கண்களை விழிக்கையில் மணி நாலரையாகியிருக்கிறது.

     திடுக்கென்று எழுந்திருக்கிறாள். "ஓ, பால் வந்து போயிருக்குமே?..."

     சீனி?...சீனி...?...

     சீனி இல்லை. வாசற் கதவை வெறுமே சாத்திவிட்டுப் போயிருக்கிறான்.

     அவனுடைய செருப்பு இல்லை.

     சரேலென்று நினைவு வந்தவளாகத் தன் கைப்பையை எடுக்கிறாள். பணத்தை இப்போதெல்லாம் இரும்பலமாரியில் வைத்துப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொள்கிறாள். வெளியே புழங்க, அதிகமாகப் பணம் இல்லை. என்றாலும் மகனை நம்புவதில்லை. வந்ததும் வராததுமாகக் கைப்பையை அறையில், திறந்த அலமாரியில் வைத்திருக்கிறாள்...

     அது அங்கேயே கிடக்கிறது.

     எடுத்து உள் அறையைப் பார்க்கிறாள். வெறும் பத்து ரூபாயும், இரண்டு ரூபாயும் மட்டுமே இருக்கின்றன. மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள்... அவள் உழைத்த பின் ஓய்வு காலத்துக்குப் பெறும் ஊதியம்...

     "எங்கே?"

     ஒருகால் முன்பே உள் அலமாரியில் வைத்து விட்டாளா?

     ஐம்பது - ஏற்கெனவே ஏழெட்டு ரூபாய் சில்லறை இருந்தது... டாக்டருக்குப் பத்து ரூபாய், ஆட்டோ எட்டு ரூபாய் - லெமனேடோ ஏதோ வாங்கித் தந்தான். கணக்குப் போட்டுக் கொண்டு இரும்பு அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். அவள் அலமாரியைத் திறந்து பணத்தை எடுத்து வைத்திருக்கவில்லை. உச்சி மண்டையிலிருந்து இரத்தம் சுண்டி விட்டாற் போல் சுள்சுள்ளென்று ஊசிக்குத்துகளாக வேதனை...

     "படுபாவி, நீ மகனா? மகனாடா? இப்படித் தாயை சுறண்டித் தின்ன... உனக்காடா பால் கொடுத்தேன்?"

     மடேர் மடேரென்று அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது. அபிராமி... மூடப்பாசமுள்ள தாயான அபிராமி. அவளுடைய படிப்பு, தொழில், அதில் அவள் கண்ட வெற்றிகள் எல்லாமே இந்த மூடப்பாசப் பாசிக் குளத்தில் முழுகிப் போயின... அபிராமி...! நீ... உனக்கு உய்வு இல்லை. நீ மரித்துப் போ... போய்விடு...!