12

     விருந்துக்கான இலைகளை சுஜாவும் தோழிகளும் பரப்புகின்றனர். சமையல் செய்த பார்வதியை லீலா கையைப் பிடித்து அழைத்து வருகிறாள். முன்னுச்சியில் நரைகளோடிய பார்வதி நாணத்துடன் புன்னகை செய்கிறாள்.

     "பெண் பிள்ளைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது? ரசம் வைக்கக் கூட அவர்களுக்குத் தகுதி கிடையாது. நான்கு பேருக்கு மேல் சமைக்க வேண்டுமானால் ஆண் பிள்ளை தான் வேண்டும், அவனுக்குத்தான் மூளை அதிகம்; அவனுக்குத் தான் திறமை அதிகம் என்று, ஒரு சமயம் ஒரு மகாநாட்டில் ஒரு ஆண் பிள்ளை வந்து கொக்கரித்தான். பார்வதி அதற்குச் சவால் விடுப்பாள். இப்ப நம்ம இயக்கத்தில் ஒரு செட்டே இருக்கிறோம்... இவர்கள் காலம் காலமாக, பொது உற்பத்தியில் பெண்களுக்கு இடமில்லை என்று ஒதுக்கியிருக்கிறார்கள். வீட்டிலே அவள் ஊதியமில்லாத ஊழியம் செய்யலாம். ஆனால் ஊதியம் வரக்கூடிய எல்லா இடங்களிலும் இவன் நின்று, பெண்ணைத் தனக்கு உதவியாளாக வைத்துக் கொள்கிறான். கொத்துக் கரண்டி பிடிச்சாலும், சமையல் கரண்டி பிடிச்சாலும், அவனுக்குக் கீழே தான் இவள்... இதற்காகவே பார்வதி பார்ட்டியை நாங்கள் உருவாக்கி ஆதரிக்கிறோம்..."

     "கொத்தனார் பார்ட்டி இருக்காங்களா லீலா?"

     லீலா புன்முறுவல் செய்கிறாள்.

     "வந்திட்டிருக்காங்க... கட்டிடத் தொழிலாளர் சங்கத்திலிருந்து பயிற்சியே கொடுக்கிறோம்..."

     கோஷம், கூச்சல், ஆரவாரங்களில்லாமல், உள்ளார்ந்த வகையில் புதிய சிந்தனைகளைத் தூண்டும் சந்தர்ப்பமாக விருந்து நடைபெறும் போது, பிரேம் வருகிறான். "ஹலோ... எனக்கும் இடம் உண்டா...?"

     அவனுடன் இன்னும் இரண்டு மருத்துவர்கள், ஆண்கள் வந்திருக்கின்றனர். உஷாவுக்குப் பொம்மை பரிசுகள்...

     "வாங்க... வாங்க டாக்டர்...?"

     "ஹலோ...?" தொழில் முறைப் பரிச்சயமாக பாமா முகம் மலர அருகில் செல்கிறாள்.

     விருந்து முடிந்ததும், சீதா இனிய இசை வழங்குகிறாள். மணி பத்தடித்திருக்கிறது.

     பிரேம் தன் நண்பர்களுடன் விடை பெற்றுக் கிளம்பும் நேரத்தில், கல்லூரி மாணவன் போல் ஒரு பையன் தடதடவென்று வருகிறான். குழந்தையின் உடையை மாற்றி மங்களத்திடம் விட்டு விட்டு மாடிப்படியில் வந்து கொண்டிருந்த அபிராமி, திடுக்கிட்டு நிற்கிறாள். அவனை... அவனை... சீனியின் சீட்டாட்டக் கூட்டத்தில் பார்த்த நினைவு...

     "அபிராமி டீச்சர்... அவங்க மகன் சீனிவாஸ், ஆட்டோவில ஆக்ஸிடென்ட் ஆகி, ஆஸ்பத்திரில அட்மிட்டாகியிருக்காரு... நான் சேதி சொல்ல வந்தேன்..."

     "எந்த ஆஸ்பத்திரி? ஜி.எச்சா?..."

     அவன் என்ன பதில் சொன்னான் என்று செவிகளில் விழவில்லை.

     அபிராமியின் உள்ளத்தில் எங்கோ ஆழத்தில் உறைந்து கிடந்த குற்ற உணர்வு, குபீரென்று பூதாகாரமாக வீங்கி அவளைத் துன்புறுத்துகிறது.

     "...ரிலாக்ஸ் பண்ணிக்குங்க டீச்சர், ஒண்ணும் ஆயிருக்காது. எப்படியிருந்தாலும், சுஜா போயிருக்கா, டாக்டர் போயிருக்கிறார். நீங்க போயி எதுவும் செய்வதை விடச் செய்வாங்க..."

     அவன் வந்து கலவரம் பண்ணுவானோ என்று அவள் உள்ளூறப் பயந்திருந்தது உண்டு. கௌரவப்பட்டவர்களிடையே, மனைவியை மட்டம் தட்ட, "எங்கம்மாக்கு நீ விழா கொண்டாடுகிறியா? ...ஏண்டி? உனக்கு எத்தனை திமிர் இருந்தல், என்னை மட்டம் தட்ட இப்படி ஒண்ணு ஏற்பாடு பண்ணுவே" என்று அவன் கேட்பானோ என்று அஞ்சியிருந்தாள்.

     ஆட்டோவில் இங்குதான் வந்து கொண்டிருந்தானோ?

     ...ஆண்டவனாகப் பார்த்து, இவளுக்கு அத்தகைய மானக்குறைவு ஏற்பட வேண்டாம் என்று இப்படித் தடுத்திருக்கிறாரோ?

     ஒருவேளை, அவன் நல்ல முறையில் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வந்திருக்கலாமோ?... சீனிக்குக் கௌரவப்பட்டவர்களிடம் மேலாகப் பேசிக் கௌரவம் பாராட்டத் தெரியும். மிக அருமையாக நடிப்பான்.

     சுஜாவின் அண்ணனுடன் எப்படிப் பேசி நல்ல பெயர் பெற்றான்? அவர்கள் எல்லோரும், "மாப்பிள்ளை தங்கமானவரா இருக்கார், இவ... எப்பவுமே அடங்காப்பிடாரி" என்று தான் சொன்னார்களாம்.

     அவனுக்கு ஏதானும் ஆய்விட்டால்...?

     கண், கை, கால், உறுப்புக்கள் பறிபோன விபத்துக்கள் எல்லாம் நினைவில் வருகின்றன.

     சீனிக்கு, முரண்டின அவள் பிள்ளைக்கு, காலமெல்லாம் மனைவியின் தயவில், தாயின் தயவில் காலம் தள்ளும்படி கடவுள் தண்டனை விதித்து விடுவாரோ?

     சொல்லத் தெரியாமல் மனம் துடிக்கிறது. சற்று முன் அவள் அநுபவித்த இனிமைகள் எல்லாம் எங்கோ ஆவியாகப் போய், அவளை அந்த அச்சமே ஆட்டிப் படைக்கிறது.

     வேக வேகமாக மூச்சு எழும்ப, அவள் பறிதவிக்கிறாள்.

     பாமா ஏதோ மாத்திரை எழுதிக் கொடுக்க, மூலையில் உள்ள இருபத்து நான்கு மணி நேர ஆஸ்பத்திரியில் சென்று அந்த நேரத்தில் மாத்திரை வாங்கி வந்து கொடுக்கிறாள் பரிமளா.

     சிறிது நேர அரற்றலுக்குப் பிறகு அபிராமி தூங்கிப் போகிறாள்.

     அவள் மடியில் குழந்தையைப் போட்டுக் கொண்டு படிக்கிறாள்... அவளுக்கு ஓய்வு பெற்ற போது கூட, இப்படிக் கோலாகலமாகப் பிரிவுபசாரம் செய்யவில்லை. சுந்தராம்மா, 'ஹார்ட் அட்டாக்' வந்து படுத்திருந்தாள்.

     அபிராமி டீச்சர், பலகாலம் சேவை செய்தவள், ஓசைப்படாமல் அனுப்பிவிடக் கூடாது என்று சௌமினியும், கோடீசுவரியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தொன்றுமில்லை. ஒரு ஜாங்கிரியும், காராபூந்தியும், காபியும். ஆசிரியைகள் முப்பது பேரும் கூடி, ஒரு கீதைப் புத்தகமும், வெள்ளி ராமர் பட்டாபிஷேகப் படமும் பரிசளித்தார்கள். "ஒரு காலத்தில் ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த படம்... இப்ப ஐநூறு ஆயிடுத்து..." என்று சௌமினி வெளிப்படையாகச் சொன்னாள். "ஆனால் ரொம்ப லட்சணமா அமைஞ்சு போச்சு டீச்சர். நான் கூட பூசை அலமாரிக்கு இது போல ஒரு படம் வாங்கி வைக்கணும்னு இருக்கேன்..." என்றாள் கோடீசுவரி.

     ராமர் பட்டாபிஷேகப் படம் ஆணி அடித்து மாட்ட முடியாத சுவரில் இடம் பெறாமல் அலமாரியில் இருக்கிறது. கீதைப் புத்தகம் படிக்க அவளுக்கு மனம் கூடவேயில்லை.

     இதெல்லாம் நினைவில் வருகிறது.

     ஆனால் மடியில் இருக்கும் குழந்தை சீனியே... சீனியல்லவா?

     "அம்மா, எங்கப்பா செத்துப் போயிட்டா இல்ல?..."

     இவள் துணுக்குற்று, "அப்படிச் சொல்லக் கூடாதுடா கண்ணா, உங்கப்பா பெங்களூரில இருக்கார்டா?" என்று சொல்லுகிறாள்.

     "பின்ன ஏம்மா, இங்க இருக்கல?"

     "உங்கம்மாவைப் பிடிக்கல. அவ அழகாயில்ல. விட்டுட்டு வேற அம்மாவைக் கூட்டி வச்சிட்டா..."

     "ஏம்மா இந்த அம்மாவைப் புடிக்கல?"

     "ஏன்னா, புடிக்கல..."

     "அப்ப, எனக்கும் அப்பாவைப் புடிக்கல. எனக்கும் அந்த அப்பா வேண்டாம்..."

     அபிராமி அந்தக் குழந்தையை இறுகத் தழுவி முத்தமாரி பொழிகிறாள்.

     "அப்பா வேண்டாம். அப்பா நானாம். அப்பாவோட டூ...டூ..."

     இது சீனியின் குரலா, உஷாவா? உஷா... உஷாவின் குரல்... இது... இக் குடும்பம் இப்படிப் போகவா கல்யாணம் பண்ணினாள்.

     அம்மா... அம்மா...! அம்மா...!...

     முனகுகிறாள். அவள் முனகுவதே செவிகளில் விழுகிறது. பட்டென்று விழிக்கிறாள்.

     இருள்... விடிவிளக்கு...

     சுஜா அருகில்... நிழலுருவாக...

     "என்னம்மா?... உங்க பிள்ளைக்கு ஒண்ணுமில்ல. வீட்டில சுகமா ஃபிரண்ட்ஸோட சீட்டாடிட்டிருந்தார். சும்மா கலாட்டா பண்ண இப்படிச் செய்தி..."

     "ஆ...?"

     அட... பாவி?...

     "நீ... எப்பம்மா வந்தே?..."

     "நான்... என்னைப் பிரேம் கொண்டு விட்டுட்டுப் போறப்ப மணி பன்னிரண்டு. நாங்க ஜி.எச்சுக்குப் போனோம்... அப்படிக் கேசே வரலன்னாங்க. பின்ன மத்த ஆசுபத்திரிங்களுக்கு அவரே ஃபோன் பண்ணி விசாரிச்சார். நான் தான் வீட்டுக்குப் போவோம்னு சொன்னேன்... விட்டுத் தள்ளுங்கம்மா..."

     அவள் வெறுப்படைந்திருக்கிறாள்.

     "டாக்டர் பாமா ஏதோ மாத்திரை கொடுத்தாங்கன்னு பரிமளா சொன்னா... இப்ப எப்படி இருக்கும்மா? ஆர்லிக்ஸ் எதானும் கரைச்சுத் தரட்டுமா?" அவள் நெற்றியில் கை வைக்கிறாள்.

     "வேத்திருக்கு, நீங்க சும்மா அலட்டிக்காதீங்கம்மா..."

     "ஒண்ணுமில்ல சுஜா... ஒண்ணுமில்ல..."

     அவள் கையைக் கண்களில் வைக்கிறாள். கண்ணீர் பொங்குகிறது. "வாழ்க்கையில் என்னமோ சாதனைன்னு சொல்லி என்னையே ஏமாத்திக்க வச்சிட்டேமா. தோல்வி, படுதோல்வி... சமையல்வேலை, கொத்து வேலை, டாக்டர், வக்கீல், அது இதுன்னு சொல்லிட்டு முன்னுக்கு வரலாம். ஆனா, ஒரு பையனை, ஒழுக்கமும் கண்ணியமும் தைரியமுமா வளர்க்க முடியாம போயிட்டுதே? வள்ளுவர் கூட, பையன் சபையில் முந்தி இருப்பதை, அப்பன் என்ன தவம் செய்தானோன்னு தான் சொல்லுராரம்மா?..."

     சுஜா சோர்ந்து போகிறாள்.

     "அம்மா, ப்ளீஸ், நீங்க இப்படி ஒரு மனப் பிரமையத் தூக்கி எறிஞ்சிடுங்க. இப்ப சாயங்காலம் நான் எல்லாரையும் கூப்பிட்டேன். உங்க வட்டத்தில யாரையும் அதனால கூப்பிடல. என் உறவுக்காரங்க, தெரிஞ்சவங்க யாரையும் கூப்பிடல. ஏன்?... 'இவ புருஷன் எங்கே? இந்தம்மா மகன் எங்கே?'ன்னு கேட்டு அதையே கொச்சைப் படுத்துவாங்க. அவரும் வந்து புதிசா இந்தப் பார்வையை நாலு பேரைப் பார்த்தேனும் தெரிஞ்சிக்கணும்னு நினைச்சிக் கூப்பிட்டேன்... ஓராணுக்கும் பெண்ணுக்கும் நட்புரிமையே இருக்கக் கூடாதுன்னு கொச்சைப் படுத்தறதையும் நாம தூக்கியடிக்கணும். குழந்தை நல்லபடியாகப் பிழைச்சதில் பிரேமுக்கு ரொம்ப சந்தோஷம். தொழிலில் அவங்களுக்கு வெற்றி. கூடப் பார்த்த ரெண்டு டாக்டர்களையும் கூட்டிட்டு வந்தாரு. வெளியில் என் போல இருக்கிறவங்க, ஆண் வாடை படாம வேலை செய்ய முடியுமா?... அம்மா, நீங்க புரிஞ்சிக்கணும், எங்கம்மாவை நான் வற்புறுத்தப் போறதில்ல. ஆனா நீங்க... அவளைப் போல இல்ல. எங்களுக்கு எவ்வளவோ ஆதரவாக, பலமாக இருக்க முடியும். உங்க பிள்ளை பத்தின பேதைமையான எண்ணங்களை மறந்திடுங்கம்மா..."

     அபிராமி கண்களை மூடிக் கொள்கிறாள்.

     பொழுது விடிந்ததும் முதல் பஸ்ஸில் சீதாவும், பரிமளவும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.

     சுஜா துணிகள் துவைத்து மடித்து, வேறு பல வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறாள். அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.

     அபிராமியினால் அவளைப் போல் எந்தப் பாதிப்பும் தெரியாதவளாக இயங்க முடியவில்லை. ஒரு கால், முதல் நாள் அந்த கலாட்டாவை அவன் பண்ணியிராமல் இருந்திருந்தால் அன்றைய சந்திப்புகள் அவளை மாற்றியிருக்குமாக இருக்கும்.

     இப்போது... இவளால் மங்களத்தின் பக்கம் சார்ந்து, பழைய மதிப்பீடுகளைப் பற்றிப் பேசித் தீர்க்கவும் முடியவில்லை. சுஜாவைப் போல் புதிய அலைகளில் மிதக்கவும் முடியவில்லை.

     வீட்டில் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் என்று முடித்து விட்டாள். அதைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டாள். இவளும் பிரேமும் போன போது, பத்து மணிக்கு மேல். அவன் ரசாபாசமாகப் பேசியிருப்பானோ?... அல்லது அங்கே, உதிரிகளாய் எவர் எவர் கூடியிருந்தனரோ? நீ மோசம், நீ மோசம் என்று புருஷனும் மனைவியும் நள்ளிரவில் அக்கம் பக்கம் கேட்க, இந்த உறவுகளைக் கேவலப்படுத்திக் கொண்டனரோ?

     இவளால் கண்களை மூட முடியவில்லை. குழந்தையுடன் விளையாடுவதும் கூட ஒன்றவில்லை. வாசல் முகப்பில் நின்று, போகும் வரும் வண்டிகளை வேடிக்கைப் பார்க்கிறாள். இங்கு, தன் வீட்டில் இருந்த அக்கம் பக்கத் தலையீட்டுத் தொந்தரவு இல்லை.

     "உங்களுடைய ஓய்வை, தங்கள் இயக்கக் காரியங்களுக்குப் பயன்படுத்த லீலா நிறைய வேலை வச்சிருக்கா. பொழுது போகலியேன்னு நினைக்க வேணாம்மா" என்று அவள் சங்கடத்தைப் பார்த்துவிட்டு, சுஜா புரிந்து கொண்டு பேசுகிறாள்.

     "நான் என்னம்மா செய்வேன்..."

     "எத்தனையோ பெண்களின் வரலாறு, அவர்கள் - தேசீய மற்றும் சமுதாயம் சார்ந்து எழுச்சி பெற்ற நிலைகள் - என்று ஒரு பெரிய அருங்காட்சி தயார் செய்து கொண்டிருக்கிறாள். விளக்கப் படங்கள் தயாரிப்பதில் நீங்கள் உதவக் கூடாதா? எத்தனையோ யோசனைகள் சொல்ல முடியும்... உங்களுக்குப் பொழுது போவது தெரியாது!..."

     அடுத்த நாள் சுஜா அலுவலகம் சென்று விடுகிறாள்.

     அபிராமியினால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அந்த வீட்டிலிருந்து அவள் துண்டாகக் கத்திரித்துக் கொண்டு வரவில்லையே? சுஜாவுக்கு ஒன்றுமில்லாமல் போகலாம்... ஆனால் அவளுக்கு? வீட்டில் சில வெள்ளி உருப்படிகள் இருக்கின்றன.

     தன் பையன் கயவன் என்று அவளே வெளியில் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால்... அவன் என்ன செய்வானோ என்ற துடிப்பு...

     அவனை எப்படியேனும் நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தவிப்பு... அது மன வலிமை பெற்று விடுகிறது.

     புதிய அலைச் சிந்தனைகள் பொருளற்றுப் போகின்றன. பிற்பகலில் குழந்தை உறங்குகையில், மங்களத்திடம், அந்த வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, பையுடன் வெளியில் இறங்குகிறாள்.

     வீடு பூட்டிக் கிடக்கிறது. முன் வாயில் தெளித்துக் கோலம் போட்டிருக்கவில்லை.

     தன்னிடமிருக்கும் சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள்.

     முன்னறை முழுதும் புழுதி; சிகரெட் துண்டுகள். ஓட்டல் பார்சலின் காகிதங்கள். காய்ந்த இலைகள் மூலையில், தொலைக்காட்சிப் பெட்டியைக் காணவில்லை. பரபரவென்று துடைப்பத்தை எடுத்துப் பெருக்குகிறாள்.

     கதவு திறந்த அரவம் கேட்டுத்தான் போலும், தனபாக்கியம் விரைந்து வருகிறாள்.

     "டீச்சர்... வந்துட்டீங்களா? என்னா? மருமக கூப்பிட்டதும் போயி உக்காந்துட்டீங்க?"

     "குழந்தைக்கு ஆண்டு நிறைவு... சீனிய வரச் சொல்லிட்டுப் போனேன். இவன் வர இல்ல. உடம்பு சரியில்லையா?..."

     அவள் குரலை இறக்கி அருகில் வந்து பேசுகிறாள்.

     "ஏம்மா, அதுக்கு உடம்பு சரியில்லாம இருந்த உடம்பு. பொஞ்சாதி இங்க வந்து இருந்து ஆண்டு நிறைவு கொண்டாடுறதில்ல? அது ரொம்பச் சொல்லி வேதனைப் பட்டிச்சு. எங்கம்மா எப்படி மாறிப் போனாங்க ஆன்டி,... எனக்கு வெக்கமா இருக்கு, எல்லாரும் கேக்கறாங்கன்னு சொல்லிட்டே இருந்திச்சி... தனியா இருந்தா கண்ட பயலும், ஆரோ ரெண்டு பொண்ணுங்க கூட ஸ்கூட்டர்ல வந்திச்சிங்க. ரொம்ப வேதனையாப் போச்சி. சீனி இப்படி ஒரு பிள்ளையில்ல. பொஞ்சாதிங்கறவ இப்படி இருக்கலாமா? அன்னிக்கு ரா பதினோரு மணிக்கு டாக்டரோட காரில வந்து, சீனிகிட்ட சண்டை போட்டுட்டுப் போனாளாம். என்னா, டீச்சர் இப்படி எடங்குடுக்கிறாங்கன்னு நானும் உங்களத்தான் ரொம்பக் கோவிச்சிட்டேன். பொம்பிள சரியில்லன்னாதா ஆம்பிள மோசமாப் போவான்."

     "...எங்கூட்ல, தானே போயி டீச்சரக் கூட்டிட்டு அந்த மருமவளயும் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டிருந்தாரு..."

     இவர்களுக்கெல்லாம் உண்மை எப்படித் தெரியும்? எதற்கு மூடி மறைக்க வேண்டும்?

     "இவன் செய்யிறதும் நல்லாயில்ல தனம்மா. அந்தப் பொண்ணு தங்கமான பொண்ணு. எனக்கு உடம்பு சரியில்ல, ஒரு வெந்நித்தண்ணி வச்சிக் குடுக்க நாதியில்லாம போட்டுட்டு, கதவையும் ஜிலோன்னு போட்டுட்டு போயிட்டான். பொறுப்பத்த புள்ள. அவ வந்து கூப்பிட்டா, போனேன். இவன் சரித்திரம் மோசமாப் போச்சு. இன்னொரு வீட்டுப் பொண்ணக் குறை சொல்றது சரியில்ல."

     "அபிராமி அம்மா! நீங்க எப்படி மாறிப் போனீங்க...? புருஷனுக்கு மருந்து வைப்பான்னுதான் அந்தக் காலத்தில சொல்லுவா; மாமியாரைக் கைக்குள்ள போட்டுக்கிட்டுப் புள்ளைய ஆகாத அடிக்கறதும் உண்டா... அடியம்மா!" தனபாக்கியம் மஞ்சள் பூச்சு முகத்தில் கை வைத்து ராகத்தையே மாற்றி விடுகிறாள்.

     இது இத்துடன் நிற்கவில்லை.

     தணிகாசலம் வந்து விசாரிக்கிறார்.

     "என்னம்மா, ரசாபாசமாப் போச்சு, சேரிச் சண்டை போல? மே வீடு, எதிர் வீடு, கீழ் வீடு எல்லாம் கூடிப் போச்சு; என்ன என்னன்னு. நீங்க இங்க இருந்தா கண்டவங்களையும் இட்டார - இல்ல அவங்க தான் வர, துணிச்சல் இருக்குமா? புருஷன் பொஞ்சாதி சண்டை வெளியே வரலாமா? ஆயிரம் இருக்கும். எங்க ரெண்டாவது மருமவ, தா எம்.எஸ்ஸி., வேலை செய்வேன்னா. அப்ப உன் வீட்ல இருந்துக்க. கலியாணம் ஏன் கட்டினேன்னேன். ஆறு மாசம்... பிறகு தன்னால வந்து சேந்திட்டா. இப்ப புருஷன் பின்னாலயே சட்டயப் புடிச்சிட்டுப் போறா, மூணு புள்ளயாச்சி!... வய்க்கிற எடத்தில வைக்கணும். மருமகளுக்கு நீங்க ரொம்ப எடம் குடுத்திட்டீங்க!..."

     "புருஷன் இல்லாம இவ என்ன பார்ட்டி குடுக்கிறது? நீங்க எப்படிப் போனீங்க?... அத்தோட இன்னொன்னும் கேள்விப்பட்டேன்... உங்களுக்கு அறுபதாவது விழா அவ கொண்டாடுறாளாமில்ல? வெக்கக்கேடு? ஏம்மா? டீச்சர், நூறு பேருக்குப் புத்தி சொன்னவங்க, இப்ப, தறுதலைக் கூட சேந்துகிட்டு மகனை அம்போன்னு விட்டுப் போட்டுப் போயிட்டீங்க? ஆம்பிள அவனுக்கு ரோசம் வர்றது உள்ளதுதானே? வராம இருந்தாதா தப்பு. முதல்லயே, நீங்க மருமகளுக்கு ரொம்ப எடம் கொடுத்திட்டீங்க. புருஷன் அப்படி ஆசுபத்திரில கிடக்கிறான், ஒரு நா வந்து எட்டிப் பார்க்கல...? நானா இருந்தா, வீட்டில உள்ள நுழைய விட்டிருக்க மாட்டேன்..."

     தணிகாசலத்தின் முட்டைக் கண்கள், இன்னும் உருண்டையாகத் தெரிகிறது.

     ரேவதி வந்து விசாரிக்கிறாள்.

     "என்னம்மா விஷயம்? டாக்டர் அன்னிக்கு ராத்திரி உங்க பையன் ஆக்ஸிடென்ட்ல அடிபட்டான்னு சேதி கேட்டு வந்ததாச் சொன்னாரு... சுஜாவும் வந்திருந்தா... ஒண்ணும் புரியல... உங்க பிள்ளை ரொம்ப மோசமா கத்தினாரு. சகிக்க முடியல..."

     "நீங்க எந்த ஊருக்குப் போயிருந்தீங்க? எங்க தாயி சொல்லிச்சி, நீங்க திருப்பதிக்குப் போயிருக்கீங்கன்னு?"

     அபிராமி சிலையாக நிற்கிறாள்.

     வெறும் வாயையே மெல்லக் கூடிய இந்த வருக்கம், இந்தச் சலசலப்பை விட்டு வைக்குமா? குடிசைகளிலும் குப்பங்களிலும் உடனுக்குடன் வெடித்து எரிந்து தணிந்து விடும். இந்தப் போலி கவுரவத்தில் உள்ளூறப் புரையோடி நச்சுக் கனிகளைக் குலுக்கும்.