8

     சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும், பிதுரார்ஜிதமாக வந்தவை. இன்னொரு வீடு சுஜியின் சிற்றப்பன் மகனுக்குப் பிரிவினையாகி, அவன் அதை இடித்து, முற்றிலும் பெரியதாக மாடி வைத்துக் கட்டிவிட்டான். அந்தப் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி, பெருக்கம், பஸ் ஓடும் சாலையில் இருந்து பிரிந்து வரும் கிளைத்தெருவான இத்தெருவையும் சந்தடி மிகுந்ததாக ஆக்கிவிட்டிருக்கிறது. ஏறக்குறைய இதுவும் ஒரு கடை வீதியாகவே இருக்கிறது. சிற்றப்பன் மகன் தேங்காய் மண்டி வைத்துள்ளான். கீழ்ப்பகுதியை வாணிபத் தலமாகவும் மேலே குடியிருப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறான். இது தவிர, பெரிய சாலையில் 'ஹார்ட்வேர்' என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனங்களும் விற்பனை செய்யும் கடையும் வைத்திருக்கிறான்.

     இப்போது அவனுக்கு இந்த வீட்டின் மீது ஒரு கண். ஒரு லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டால், இடித்துப் புதுமாதிரியாகக் கட்டி வாடகைக்கு விடலாம் என்று எண்ணம். எனவே அவர்கள் எல்லோரிடமும் வீட்டை விற்பதனால் பெரும் லாபம் என்பதைச் சொல்லி முன்பிருந்தே ஆசைகாட்டுபவன் அவன். வீடு விற்கலாம் என்பது முன்பே முடிவாகியிருந்தால் சுஜாவின் திருமணம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கும். ஆனால், வீட்டை விற்று விட்டால், தன் பெற்றோரின் நிலை என்னவாகும் என்பதை சுஜா இளம் வயதிலேயே உணர்ந்திருந்தாள். எதிர்த்துப் பேசத் தெரியாத தாய், மூத்தாள் மக்களின் சுயநலங்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பாள். தந்தையின் மீது அரணாகச் சாய்ந்து கொண்டு, "எனக்குக் கல்யாணம் அப்படி வேண்டாம்" என்று ஒரே பிடியாக நின்றவள் அவள். பிறகு வீட்டை விற்காமலே திருமணம் நடந்தேறியது.

     திருமணத்துக்கு இரண்டு தமக்கைகளும் தான் வந்திருந்தார்கள். அண்ணன் அப்போது வெளி நாட்டில் இருந்ததால் வரவில்லை. பிறிதொரு சமயம் வந்து பார்த்துவிட்டு, இவளுக்கு ஒரு ஜார்ஜெட் சேலையும், அவனுக்கு ஒரு பான்ட்பீஸும் கொடுத்து விட்டுப் போனான்.

     அந்த அண்ணன், தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கிறான்.

     அபிராமி மூன்றாம் நாள் காலையில் உடலைத் தகனம் செய்ய எடுத்துச் செல்லுமுன் செல்கையில், சீனியும் உலகத்து மருமகன்களைப் போல் வேட்டியும் மல்ஜிப்பாவும் தரித்துக் கொண்டு தாயுடன் வருகிறான். அங்கே, சுஜா, தன் சகோதர சகோதரிகளைத் தவிர்த்துக் குழந்தையுடன் தனியே நிற்கையில், இவன் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக, மரியாதையாகப் பல நாட்கள் பழகிய மாதிரி பேசுகிறான்.

     "அபிராமி அம்மா, இப்படி விட்டுட்டுப் போயிட்டாரே? முதல்ல என்னைக் கூப்பிட்டுட்டுப் போயிருக்கக் கூடாதா யமன்!" என்று ஆத்மார்த்தமான சோகத்தை விண்டு அரற்றுகிறாள் தாய் மங்களம்.

     "துக்கந்தா. ஒரு பொம்பிளக்கு எந்தத் துக்கத்தையும் விடத் தாலித்துக்கம் பெரிசு. பாவம், பத்து வருஷம் அவுரு நடமாட்டம் ஓய்ந்த பிறகு, அப்படிக் கட்டிக் காத்தாங்க. கடிகாரம் தப்பும். இவங்க அவருக்கு அந்தந்த நேரத்துக்குச் செய்யிற தொண்ணும் தப்பாது..." என்று பங்காளி, தாயாதி வகைப் பெண்ணொருத்தி உரைக்கிறாள்.

     "புருசன்னு ஒருத்தன் எப்படி இருந்தாலும் இருக்கிறாங்கறது தானம்மா ஒரு பொம்பிளக்கி தயிரியம். அதும் இவுங்களுக்குன்னு ஆம்புளப்புள்ளயும் இல்ல. ஆயிரம்னாலும் அவங்கவுங்களுக்கு வேணுமில்ல?" என்று இன்னொருத்தி கூறுகிறாள்.

     அபிராமி உலகபரமான பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு, அதே மாதிரியில் துக்கம் விசாரிக்கத் தெரியாத ஜடமாக உட்கார்ந்திருக்கிறாள்.

     ஆனால் 'புருஷ'ப் பெருமைகள் அவள் உள்ளச் சுவர்களில் வந்து மோதி எதிரொலி எழுப்பாமல் இல்லை.

     அவள் உலகத்தார் போல் புருஷனுடன் வாழ்ந்திருந்தால் சீனி இப்படி உருவாகி இருக்க மாட்டானோ? அம்மா... மூடப்பாசம் வைப்பாள்; அப்பன் கண்டிப்பான். அதனால் தான் கைம்பெண் வளர்த்த பிள்ளை என்பது கேவலமாகச் சுட்டப்படுகிறதோ? அவன் சிகரெட் குடிக்கிறான் என்பது தெரிந்தவுடன் அதை மூடி மறைப்பதில் தான் சிரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுடைய உள்ளார்ந்த பலவீனம், மகனைக் கண்டித்து, அவனுக்குப் பணம் கொடுக்கும் செயலில் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால், இவ்வளவுக்கு வருமா? அவன் எந்தக் கல்லூரியில் சேர வேண்டும், என்ன படிப்புப் படிக்க வேண்டும் என்று சிரத்தையை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? முட்டாளான பாமரத் தாய்க்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?

     உடலை எடுத்துச் சென்றதும் கிணற்றடியில் நீராடுகிறார்கள்.

     திரும்பும் போது அபிராமி சுஜியிடம் தயங்கி நிற்கிறாள்.

     "நான் அங்கே வரப்போகிறதில்லை, இப்ப. நீங்க போகலாம்..." அவள் சீனியை அருகில் நெருங்கவோ பேசவோ வெளிப்படையாக விடாமல் வெறுப்பைக் காட்டிக் கொள்கிறாள்.

     அவள் மரணச் சடங்குகள் முடிந்து, மங்கள நாள் நிறைவேறிய பின்னரும் வரவில்லை. சீனி வீட்டில் மிக நல்ல பிள்ளையாக இருக்கிறான். காலையில் 'அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து அவள் இட்ட உணவை உட்கொண்டு அலுவலகம் செல்கிறான். மாலையில் ஆறு, அல்லது ஏழு மணிக்குத் திரும்பி வருகிறான். தொலைக்காட்சி சிறிது நேரம் பார்க்கிறான்; அல்லது தணிகாசலத்துடன் அரட்டை பேசுகிறான். படுக்கிறான்.

     ஞாயிற்றுக்கிழமையில் எங்கோ வெளியில் சென்றான். அவள் கேட்கவில்லை. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. குடிக்காமலிருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அன்றிரவு அவன் வீடு வரும் போது ஒன்பதரை மணி. வாயிலில் வரும் போதே வாடை வீசுகிறது.

     முகம் சுளித்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அவன் சட்டையைக் கழற்றிவிட்டு, லுங்கி அணிந்து கொண்டு, தட்டைப் போட்டுக் கொள்கிறான்.

     தேங்காய்த் துவையல் அவனுக்குப் பிடிக்கும் என்று காரசாரமாக அரைத்து வைத்திருக்கிறாள்.

     "ஏண்டா, இப்படிக் குடிச்சுப் பாழாப் போற? இத்தனை நாள் இல்லன்னு நினைச்சேனே?..."

     அவன் பேசவில்லை. துவையல் சோற்றைப் பிடித்துப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடிக்கிறான்.

     "நீ அங்க போனியாடா?"

     அவன் கண்களில் நீர் வருகிறது.

     "அம்மா, அவ என்னை எல்லாரையும் வச்சிட்டு அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசினா... புருஷங்கறவன், உன்னை விட்டுட்டு, வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிட்டே வாழ்ந்தான். உன் பிள்ளைக்கு ஒரு பைசா குடுக்கல. நீ கோர்ட்டுக்குப் போனியா, இல்ல. அவன் செத்த பிறகு தாலியைக் கழட்டின. குங்குமத்தை அழிச்சே. இப்பவும் அவன் இவன்னு சொல்றதில்ல. ஆனா இவ, உன் கண் முன்ன தாலியக் கழட்டிப் போட்டுட்டா. எல்லாத்துக்கும் மேல, என்ன... எல்லார் முன்னிலயிலும் அவமானம் செய்யறாப்பல, மூஞ்சியத் திருப்பிட்டுப் போனா..."

     கண்ணீர் விட்டு அழும் போது, அபிராமிக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவனிடம் நியாயம் கிடையாது என்ற உணர்வு கூர்மை மழுங்கவில்லை. "தான் சம்பாதிக்கிற தைரியத்தில அவள் யாரையும் மதிக்கிறதில்ல. உன்னை நிச்சயமா மதிக்கிறதில்ல. அம்மா, அம்மான்னு ஒரு பாசாங்கு. குழந்தையை உன்னிடம் அவள் விடுவதில்லை. யாரையும் மதிக்கிறதில்ல. என்னைத் திட்டமிட்டு அவமானம் பண்றா. 'நீ என்னத்துக்கு இங்க சும்மா வர? நா உங்கூட வரப்போறதில்ல. பேசவும் ஒண்ணில்லன்னு' அவ அக்கா புருஷன் குழந்தைகள் எல்லாரையும் வச்சிட்டுச் சொன்னாம்மா...! எனக்குத் தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூடத் தோணிப்போச்சி..." பிழியப் ப்ழிய அழுகிறான், தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு.

     'கைம்பெண் வளர்த்த பிள்ளை...' என்று அவள் மனத்தட்டில் சுறுக்சுறுக்கென்று ஊசி குத்துகிறது.

     "எனக்கு நினைவு தெரிஞ்சு, முதமுதலா, இப்படி கட்டின பெண்டாட்டிதா அவமானம் செய்ய, துச்சமாப் பேசறா. படிக்கிறபோதும் சரி, அப்புறமும், இப்பவும் தா, 'சீனி'ன்னா லீடர்போல. இன்னிக்கும் எங்க சேர்மன் வந்தாக் கூட, என்னை மரியாதைக் குறைவா ஒரு பேச்சுச் சொன்னதில்ல. அதனாலதா நான் குடிக்கிறேன். நான் ஒப்புத்துக்கறேன். ஏம்மா, இந்த உலகத்தில தப்பு செய்யாதவன் யார் இருக்கிறான்?...இவ இப்படிப் பார்த்தால், நான் எத்தனை தப்பு இவ நடத்தையில் கண்டு பிடிக்கலாம்? இவள் இருபத்தெட்டு வயசு வரை, எப்படியெல்லாம் இருந்திருப்பான்னு துருவமாட்டேனா? டாக்டர் பிரேம் குமாருடன் இன்றைக்கும் பகிரங்கமாக நடக்கிறாள். ஒரு கன்ஸல்டிங்னா, எழுபது எண்பது வாங்கக் கூடிய பெரிய ந்யூரோ ஸ்பெஷலிஸ்ட் அதுவும் குழந்தை டாக்டர். இவ குழந்தையை வந்து வந்து பார்க்க என்ன அக்கறை? அவன் இவ குழந்தைக்கு பிரஸன்ட் தரான்! இவளுக்கு பிரஸன்ட் தரான். அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?... எனக்குத் தெரியாதா, கல்யாணம் பண்ணிக்கட்டும், பண்ணிக்காமலும் ஆபீசில வேலை செய்யிற பத்தினிகளைப் பத்தி? உன் காலமா இப்ப...?"

     அபிராமிக்கு உண்மை யில்லாமலில்லை என்று உள்ளம் ஒத்துப் பாடுகிறது.

     "வீட்டை விற்கக் கூடாதென்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறாள். பெரியவர் பிதுரார்ஜித சொத்தாகையால், எதுவும் எழுதி வைத்திருக்கவில்லை. லட்சத்துக்கு மேல் கிரயம் வரும், அதை அவள் பேரில் வங்கியில் போட்டு விட்டு, அவளைக் கூட்டிப் போகிறோம் என்று அந்தப் பிள்ளையும் பெண்ணும் சொன்னார்கள். இவள் அதற்கும் விடவில்லை. இவள் அம்மாவைக் காவலாக வச்சிக்கிட்டு, அங்கே தனிக்குடித்தனம் நடத்துவாளாம். அவன் இவன் எல்லாரும் ஃப்ரீயாக வரலாம் இதுதான் பிளான். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை. அவளை இங்கே கூட்டி வர வேணும்..."

     அபிராமியினால் இந்தக் குற்றச் சாட்டைச் சீரணிக்க முடியவில்லை.

     "அவள் மனசை நீ எவ்வளவுக்குப் புண்படுத்தியிருக்கறன்னு உனக்கு எப்படித் தெரியும்? ஒரு படித்து, வேலை செய்யும் பொண்ணுன்னா, நீயும் மரியாதை கொடுத்து நடக்கணும். புழுக்கச்சிபோல் நினைக்கக் கூடாது. நீ எப்படின்னு உன்குறை எனக்குத் தெரியும். பொறுக்கிறேன். கேட்ட போதெல்லாம் பணம் குடுத்து, உன்னைக் குட்டிச் சுவராக்கினேன்..."

     "என்னம்மா நீ பணம் பணம்னு! நான் எவ்வளவு பணம் உனக்குக் கொண்டு வரேன் பாரு!... நீ முதல்ல எப்படியானும் அவளை இங்க கூட்டி வரணும்மா!"

     "அவ வந்தப்புறமும் நீ எப்படி நடக்கிறேங்கறதப் பொறுத்துத்தான் அவ மனசில உன்னப்பத்தி விழுந்திருக்கிற அபிப்பிராயம் மாறும்..."

     "என்னம்மா நீ, ஸேம்ஸைட் கோலே போடற? நாலு பேர் பகிரங்கமா உன்னைக் கேக்கறப்ப அசிங்கமா இல்ல? கொலைகாரனுக்குக் கூடத் தாய்ன்னு இருக்கிறவ கருணை காட்டறா. நீ ரொம்ப மோசமானவ!..."

     தட்டைத் தள்ளிவிட்டுப் போகிறான்.

     அபிராமி யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள்.

     ஏறக்குறைய ஒரு மாசம் ஆனதும், அன்று இரண்டாம் சனி நாளில், பிற்பகல் இரண்டு மணி சுமாருக்கு அவர்கள் வீட்டுக்குச் செல்கிறாள்.

     சுஜி வீட்டில் இல்லை. எங்கோ வெளியில் சென்றிருக்கிறாளென்றும், வரும் நேரந்தான் என்றும் மங்களம் கூறுகிறாள்.

     வீட்டின் பொக்கை பொள்ளை சிமன்ட் பூசி, வெள்ளையடித்துப் புதுப்பித்திருக்கிறார்கள். ஆக, வீட்டை விற்கவில்லை.

     உஷா முன்பு பிரேம் வாங்கிக் கொடுத்த அந்தப் பெரிய நாய்ப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் உயர்ந்து, பிடித்துக் கொண்டு நிற்கிறது.

     "அடி கண்ணே! உன்னைப் பாக்காம கண்ணே பூத்து போச்சுடிம்மா!" என்று கெஞ்சிக் கொண்டு பையிலிருந்து ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுக்கிறாள் அபிராமி.

     குழந்தை ஒற்றைப் பல்லைக் காட்டி, சொள்ளு வழியச் சிரித்து ஆப்பிளைக் கடிக்கிறது.

     "சுஜிதா உங்களைப் பாத்துட்டு வரணும்னு சொல்லிட்டே இருந்தா. ஆனா பொழுதுதா இல்ல. இங்கயும் ஏகத் தகராறு. வீட்டை வாங்கிப் போட்டுடறதுன்னு எங்க கொழுந்தன் பையன் புடிவாதமா இருக்கிறான். அவங்க எல்லாரும் ஒண்ணா கையெழுத்துக் கூடப் போட்டாச்சி. பிதுரார்ச்சிதம், இவ ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு பலதும் பேசறாங்க. நானுந்தா ஏன்மா வீணாக் கூச்சல், ஏதோ உனக்கும் ஒரு பங்கு தரேன்னு சொல்றத வாங்கிட்டு இருன்னு சொல்லிட்டிருந்தேன்... எனக்கு என்னம்மா, ஜக்கு எங்கூட வந்திருன்னு கூப்பிடறான்... அவனுக்கும் அவளும் வேலைக்குப் போகிறதால, வீட்டக் கவனிச்சிக்க ஆளு வேணும்..."

     அபிராமி எதுவும் பேசவில்லை.

     மங்களம்மா, இந்த ஒரு மாசத்தில் எப்படி மாறி விட்டாள் என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள்.

     முகத்தில் மஞ்சள் குங்குமம் துலங்க, அவள் கண்டிருந்த அந்த மங்களம், இன்று ஒரேயடியாகச் சதையின் இறுக்கங்கள் தளர, சாரமனைத்தும் தூலமாக வடிந்து விட்டாற்போல் காட்சியளிக்கிறாள். நெற்றியில் திருநீறு துளியாக. கூந்தலில் எண்ணெய்ப் பிசுக்கே இல்லை. நரை ஓடிய நாராகப் பிரிபிரியாகத் தோளில் விழுந்திருக்கிறது. கணவனின் இழப்பு ஒரு பெண்ணுக்கு வெளிப்படையாக இவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வருமா?

     அபிராமி டீச்சருக்குப் புருஷன் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கைம்மை நிலை அவளை இவ்வளவு வெளிப்படையாகப் பாதித்ததில்லை.

     "எனது தகப்பனார்...... நாளில் சிவலோக பதவியடைந்தார்" என்று முகமறியாத அந்த இன்னொருத்தியின் பிஞ்சு மகனின் பேரை வைத்து ஒரு அஞ்சலட்டை, அவளுடைய பள்ளி முகவரிக்கு வந்திருந்தது.

     அன்று பள்ளியில் வேலை பார்த்த சொர்ணமணிக்குக் கல்யாணம். எல்லோரும் மாலை விருந்துக்குப் போக ஏற்பாடாகியிருந்தது.

     சுந்தராம்மா இவளைக் கூப்பிட்டனுப்பினாள். கார்டைக் கிழித்து எறியாமல் வைத்துக் கொண்டிருந்தவளிடம், "அதை எதுக்கு வச்சிட்டிருக்கே! கிழிச்செறிஞ்சிட்டு வீட்டுக்குப் போய் முழுக்குப் போடு. சீனியையும் ஸ்கூல்லேர்ந்து கூட்டிப்போ. இன்னிக்கு நீ கல்யாணத்துக்கு வரவேண்டாம்!" என்றாள்.

     சீனியிடம் "குழந்தே, உன் அப்பா செத்துப் போயிட்டாருடா!" என்று சொல்லித் தலையில் தண்ணீரை ஊற்றினாள்.

     அவனுக்குப் பன்னிரண்டு வயசு. "இத்தனை நாள் இருந்தாராம்மா?" என்று கேட்டான்.

     அவள் அவனுக்காகவே பொட்டழித்துப் பாழ்த்திருநீறு வைத்துக் கொள்ளவில்லை. பொட்டின் வண்ணத்தை மட்டும் கரு நிறத்ததாக மாற்றிக் கொண்டாள். என்றுமே அவள் 'டேஞ்சர்லைட்' பொட்டு வைத்துக் கொண்டதில்லை. இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகக் குறியாகவே இருக்கும். எனவே அவளுக்கு எந்த விதமான புற மாறுதலையும், அல்லது அக மாற்றத்தையும் அவள் கணவனின் சாவு கொண்டு வந்து விடவில்லை.

     ஆனால் இந்தம்மா, உடலைச் சக்கையாக உழைத்து, அவருடன் தேய்ந்திருக்கிறாள். அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் தெம்பே கரைந்திருக்கிறது.

     "விடிஞ்சி விடிஞ்சி முப்பது வயிசு தானாயிருக்கு, என்னால அவருடன் குடும்பம் நடத்த முடியாதுங்கறா. நா, நயமா எடுத்துச் சொல்லியாச்சு, கேக்கல. சட்டம், ரூல்னு ஏதேதோ பேசறா. என்னை இப்படி விட்டுட்டு அவுரு போயிட்டாரு. என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா?" என்று மங்களம் கண்ணீர் பெருக்குகிறாள்.

     "...அடாடா... நீங்க ஏம்மா இவ்வளவு வருத்தப்படுறீங்க? நம்ம தலைமுறை வேறு; அவங்க தலைமுறை வேறு. நாம அநாவசியமா சகிச்சதை எல்லாம் அவங்க சகிக்கணுமா? சுஜி என்னை விட நிதானமா நடக்கிறவ, நீங்க வருத்தப் படாதீங்கம்மா...!..."

     சுஜி திரும்பும்போது மூன்று மணியாகிறது.

     வந்துதான் சாப்பிடுகிறாள்.

     "நல்ல வேளை அம்மா, நீங்களே வந்தீங்க. எனக்கு உங்ககிட்ட என்னென்னமோ நல்ல விஷயங்கள்ளாம் தெரியல; நீங்க சொல்லல. உங்ககிட்ட பாமான்னு ஒரு பொண்ணு படிச்சாளாமே! நினைப்பிருக்காம்மா?"

     அபிராமியின் விழிகள் வியப்பால் விரிகின்றன.

     "யாரு...?... எத்தனையோ பாமா, எத்தனையோ ரமா, எத்தனையோ மீனா... குறிப்பா எதானும் சொன்னால்ல தெரியும்?"

     "ஒரு குருக்கள் பையன் விடலையோடு ஒம்பதாவது படிக்கிறப்ப ஓடிப்போகத் தீர்மானிச்சு, பஸ்ஸில உட்கார்ந்துட்டாளாம். நீங்க கூட்டி வந்து வீட்டில வச்சிட்டு, ரெண்டு நாளக்கப்புறம் அவம்மாப்பாகிட்ட எடுத்துச் சொல்லி, வேற ஸ்கூல், ஹாஸ்டல்னு விடச் சொன்னீங்களாம்..."

     "ஓ... அவளா?... ஏதோ தவறு நடந்துட்டது. அந்தப் பயலுக்கு இருபது வயசு. படிப்பில்ல. ஊர் சுத்திட்டிருந்தான். சினிமா கதையப் படிச்சு, அப்படி முடிவுக்கு வந்திட்டதுங்க. அவம்மா, இதை அந்தப் பயலுக்கே கட்டிவைக்கணும்னு ஒத்தக் காலால நின்னா. நாந்தான் பட்டிருக்கிறேனே? அவ படிக்கட்டும், ரெண்டு வருஷம் போகட்டும்னேன். ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வந்து, டாக்டராகப் போறன்னா - எல்லாப் பேப்பரிலும் ஃபோட்டோ வந்தது. என்னைப் பத்திக் கூடச் சொல்லியிருந்தா..."

     "அந்தப் பாமா, மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பரிசு வாங்கியிருக்காம்மா. இப்ப டெல்லில இருக்கா. ஒரு டாக்டரையே கல்யாணம் கட்டிட்டிருக்கா. ரெண்டு குழந்தைகள்..."

     "உனக்கெப்படிம்மா தெரியும்?"

     "நா ஒரு காரியமா தமயந்தியப் பார்க்கப் போனேன். அவ மாமாதான் அந்தப் பாமாவை மணந்த டாக்டர் காங்கேஷ். என்னை அவ மாமிக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணினா. நான் உங்க பேரைச் சொன்னேன்... உடனே ரொம்பப் புகழ்ந்தாங்க. உங்களை ஒருதரம் பார்க்க வரணும்னு ஆசையாச் சொன்னாங்க. நான் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரேன்னேன்..."

     குறும்பாகச் சிரிக்கிறாள்.

     அபிராமிக்கு வழிமாறி எங்கோ வந்து விட்டாற் போலிருக்கிறது. ஆனால் சந்தோஷமாக இருக்கிறது.

     "வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்கிறோம். ஆனால், குடும்பம், புருஷன், புள்ளைன்னு ஒரே கணிப்பில எல்லாப் பெண்களின் சக்தியும், தன்னம்பிக்கையும் ஒண்ணுமில்லாம போயிடுது... பொண்ணுன்னா சமையல் சாப்பாடு, புள்ளப் பேறு, புருஷனுக்கு எல்லாம் செஞ்சு அடங்கிப் போறதுதா குறிப்பாகிறது. இதுதான் பிரச்னை, இதுதான் வெற்றி. இதுதான் தோல்வி, எல்லாம்... சே!"

     "நீதா புதுமாதிரியாப் பேசுற. என்னிக்கிருந்தாலும் பொண்ணு பொண்ணுதா" என்று மங்களம் பேசு முன் சுஜி வெடிக்கிறாள்.

     "அம்மா, போதும், நிறுத்திக்க!... உங்க பிரலாபம், படிச்சு, சுய சம்பாத்தியம் உள்ள பெண்ணை, சுயமா சிந்திக்க வைக்காமலே குழப்பி விடுகிறது."

     "டீச்சர், உங்களுக்கு தெரியுமா? 'ஐயோ, உன்னோட படிச்சவங்க எல்லாருக்கும் கலியாணம் ஆயிட்டுதே?... பாவம், இளையா பொண்ணு அம்பதும் அறுபதும் சேத்துக் கலியாணம் எப்படிப் பண்ணுவா?...'ன்னு பார்க்கிறவங்க கேட்கிறவங்க நான் ஏதோ பயங்கரமானவப் போல பிரலாபிப்பாங்க. இப்படி எல்லாம் கொட்டிக் கொட்டிக் குளவியாக்கறப்ப, கல்யாணம்னு வந்தாலே போதும்னு தோணும்படி ஒரு மனசு வந்துடுது. இந்த ஆளு எப்பேர்ப்பட்டவன், இவங்க கூட வாழ முடியுமான்னெல்லாம் யோசிக்கவே முடியாமப் போயிடுது...சீ!"

     அபிராமிக்குப் பேச என்ன இருக்கிறது?

     அவள் உருப்போட்ட வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போகின்றன.

     "என்ன சமாசாரம் கொண்டு வந்திருக்கிறீங்கம்மா? அவன் ஊரிலியா இல்ல வெளிலியா?"

     அவளாகத்தான் கேட்கிறாள்.

     "இல்ல, ஊரிலதா இருக்கிறான்."

     "நிதம் குடிச்சிட்டுப் பாதிராவுல வரானா!"

     "இல்ல. பொழுதோட வரான். அவ்வளவா குடியும் இல்ல."

     "சவூதிக்குப் போறது என்ன ஆச்சி?"

     "நான் கேக்கலம்மா. எனக்கு நீயும் குழந்தையும் இல்லாம இருக்கிறது பித்துப் புடிச்சாப்பல இருக்கு. எப்ப வர்ரன்னு கேக்கத்தா வந்தேன்..."

     "ஒரு ஆறு மாசமானும் ஆகட்டும். பார்க்கலாம்..."

     "ஆறுமாசம்... அதென்னம்மா கணக்கு?"

     "அம்மா, கலியாணம் ஆகலியே, ஆகலியேன்னு எல்லாரும் உருகவச்சி, கலியாணம்னு ஒண்ணைப் பண்ணிக்கிட்டப்புறம் வேணுன்னு குடும்பத்தை உதறணும்னு ஆசைப்படல நான். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு பொறுக்கிற எல்லை உண்டு. தனக்கும் குடும்பங்கற பொறுப்பு இருக்குன்னு அவன் உணருகிறானான்னு பாக்கத்தான் அந்த ஆறுமாசம்..."

     இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண்படச் செய்யும் சிக்கல்களைப் பிரிக்க வேண்டும் என்று குழந்தைத் தனமாக நினைத்திருக்கிறாள். ஆனால், இவளைப் பார்த்த பின், அவனுடைய கயமைகள் சிறுமைகளாகத் தைத்து அவளைக் குறுக்கச் செய்து விடுகின்றனவே?

     அபிராமி வீடு திரும்பும் போது மாலை குறுகி வரும் நேரம். வாயிற்படியில் கால் வைக்கும் போதே, தனம்மாள் இவளுக்காகவே காத்திருப்பதைச் சொல்லிக் கொண்டு வருகிறாள்.

     "டீச்சரம்மா, சீனி ஆபீசில ரத்தமா வாந்தி எடுத்தாராம். பாவம், நர்சிங் ஹோமில சேர்த்திருக்காங்களாம். ஆள் வந்து சொல்லிச்சு. இவங்க உடனே போயிருக்காங்க. பூந்தமல்லி ஐரோடிலோ வேற எங்கியோ நிச்சயமாத் தெரியல விசாரிச்சிட்டுப் போறேன்னு போனாரு..."

     வயிற்றைச் சுருட்டிப் பிசையும் சங்கடத்துடன் அபிராமி நிலைப்படியில் சாய்ந்து நிற்கிறாள்.