உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். ***** ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்.
கவியரசர் பாரதியார் 1 நீராடிய ஈரக் கூந்தல் முடிச்சுக்களில் மலர்ச்சரங்களும், உதடுகள் முணமுணக்கும் தோத்திரங்களும், பட்டுச் சேலை - வியர்வைக் கசகசப்புக்களும் முன் மண்டபத்தில் வரிசை பிதுங்க நெருங்குகின்றன. ஆடவர் பெண்டிர் என்று தனித்தனி வரிசையில்லை. சட்டைக்கு மேல் ஒட்டியாணங்களாய்ப் பதிந்த உத்தரீயக் கோலங்கள் அதிகம். இந்த வரிசை தரும தரிசனம். தடுப்பின் இன்னொரு பக்கத்திலிருந்து, பணம் கட்டித் தரிசனம் செய்ய வந்த வரிசையும் இங்கே சங்கமமாகிறது. அருச்சனைத் தட்டுக்கள், பூமாலைகள், பால் செம்புகள் என்று முடிவேயில்லாமல் தொடர்கிறது. அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவில்லை. நடுவே தடுப்புக்குள், அழுக்கு வேட்டியும், கையில் மின்னும் மோதிரமுமாக ஒரு குருக்கள் இயந்திரம் போல் அருச்சனைத் தட்டுக்களை வாங்கி, தேங்காயை உடைத்துக் கீழே உள்ள அண்டாவில் ஊற்றுவதும், அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்துக் கம்பியில் குத்துவதும், 'என்ன பேர்', அருச்சனை யாருக்கு, கோத்திரம், நட்சத்திரம் என்று கேட்பதும், அந்த முகவரிகளைச் சொல்லி, பிரார்த்தனையை முணமுணப்பதுமாக இயங்குகிறார். இருண்ட கருவறையின் முன், வேண்டுவோர் தரும் காணிக்கைத் தட்டிலிருந்து, குங்குமம் பூவெடுத்து, அம்பாளை இனிய குரலில் கேட்பவர் மனம் ஒன்றி உருகத் தோத்திரம் செய்யும் ஒன்றைக் குருக்கள், இப்போது பலராகப் பங்கு போட்டுக் கொண்டு, குழுமும் பக்தர்களின் தேவைகளை நிரப்புகின்றனர். எனவே, முகவரியைச் சமர்ப்பித்துத் தேங்காய் உடைத்து, அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்து, கண்காணித்து, கூட்டத்தை முன் நகர்த்துகிறார் ஒருவர். அம்மனைப் பார்க்கக் கிடைக்கும் இடத்தில், தட்டிலுள்ள பூவையும் குங்குமத்தையும் எலுமிச்சம் பழங்களையும் எடுத்து அதற்கென்ற கூடைகளில் போட்டுவிட்டு, அங்கு இருக்கும் சமர்ப்பித்த பிரசாதங்களைத் தட்டுக்களில் மாற்றம் செய்கிறார் ஒரு குருக்கள். தேவியின் பக்கம் நின்று இன்னொருவர் மலர்களை அருச்சனை செய்ய அவ்வப்போது நெய்த்திரி தீபாராதனை காட்டுகிறார் மற்றொருவர். "ஏம்மா? மாலைக்குச் சீட்டு வாங்கல...?" "வாங்கியிருக்கிறேனே...?" "இது அர்ச்சனைச் சீட்டில்ல? மாலைக்குத் தனியா சீட்டு வாங்கணும்?" வயதான் ஓர் அம்மாள், "தனிச் சீட்டு வாங்கணும்னு தெரியாதய்யா..." இப்ப வரிசையில் இருந்து சீட்டு வாங்கப் போனால்... "சரி... நாலணா சில்லறையாக் குடுத்திட்டுப் போங்க..." அம்மாள் நாலணாச் சில்லறைக்குத் தேடுகிறாள். அபிராமி சட்டென்று தன் பர்சைத் திறந்து சில்லறையை எடுத்து வைக்கிறாள். "வெளில வந்ததும் தாரேம்மா! சீட்டு வாங்கணும்னு தெரியாது..." "அதனால என்ன?..." "ஏம்மா, இந்த மாலை யாருடையது...?" அபிராமி சட்டென்று நிற்கிறாள். "ஏங்க, நாந்தான் கொண்டு வந்தேன்." "சீனிவாசன், மூல நட்சத்திரம்..." "இது உதவாது. இதில் ஏதேதோ பூவெல்லாம் வச்சுக் கட்டிருக்கு...?" அபிராமி திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். மாலை இங்கே கோயிலின் முன் வாங்கவில்லை. அவள் குடியிருக்கும் ஆழ்வார் நகர்ப் பக்கமிருந்த பஸ் நிறுத்தக் கடைவீதியில் பூக்கடையில் வாங்கி வந்தாள். மாலை நிராகரிக்கப்பட்டதும் துணுக்கென்றிருக்கிறது. "துருக்கசாமந்தி வச்சிருக்காங்க இல்ல...? அதைச் சேர்க்கமாட்டாங்க?" "இத பாருங்க, கொத்தரளி, மாசிப்பச்சை, இதெல்லாம் வச்சுக் கட்டினாத்தான் விசேஷம். ஜவ்வந்தி ரொம்ப சிலாக்கியம்..." பல்வேறு கருத்துரைகளுடன் கூட்டம் நகருகிறது. அபிராமியின் கையில் நிராகரிக்கப்பட்ட மாலையும், நெஞ்சில் கவியும் கவலையும் கனக்கின்றன. "ம்... போங்க... போங்க? நின்னிட்டே இருந்தால் எப்படி...?" வில்லை அணிந்த, அரசு அத்தாட்சிப் பணியாளர் இருவர் கருவரைக்கு முன் நிற்கின்றனர். அம்பாளின் கவசங்கள் - அலங்காரங்களை ஒரு குருக்கள் உள்ளே களைந்து கொண்டு இருக்கிறார். முன்னே நிற்பவர், யந்திரமாக எலுமிச்சம்பழம் குங்குமப் பிரசாதம், என்று இயங்குகிறார். அபிராமி பார்க்கையில் தேவியின் கைப்பகுதி, மார்புப் பகுதி, என்று வெள்ளிக் கவசம், பகுதி பகுதியாக ஒரு அகலப் போணியில் நிறைகிறது. "எண்ணிக்கப்பா? இருபத்தொண்ணு? இருபத்திரண்டு..." குருக்கள், விலை உயர்ந்த கவசப்பகுதிகளள எண்ணுவதுதான் அருச்சனையாகப் படுகிறது. இடையே, "போங்க! போங்க! மணியாயிட்டுது! நிக்காதீங்க!" என்ற விரட்டல்கள் சாட்டையடி போல் உக்கிரமாகின்றன. அபிராமி நகர்ந்து மறுபக்கம் நின்று, தேவியின் திருமுகத்தையே பார்க்கிறாள். பிரார்த்தனைகள் நெஞ்சுக்குள் அமுங்கி விடுகின்றன. குருக்கள் கண் மலர்களை நீக்குகிறார்; கழுத்தில் தவழும் ஆபரணங்களைக் களைகிறார்; பவளம் கோத்த பொட்டுத் திருமாங்கல்யம்... அதையும் கழற்றித் தட்டில் போட்டு, "எண்ணிக்கப்பா?" என்று சொல்கிறார். அபிராமிக்குக் கால்கள் தடுமாறுகின்றன. "போங்க... போங்கம்மா!..." கோயிலுக்கு அமைதி நாடி வருவதென்பது பொய்யா? மனம் குழம்பித் தவிக்கிறது. திருமாங்கல்யம் என்ற மங்கல சூத்திரத்துக்கு, எத்துணை மகத்துவம் கற்பிக்கப்பட்டு இருக்கிறது? கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு? தேவியின் திருவாபரணங்களை, திருமாங்கலியத்தையும், இப்படி எண்ணி எண்ணி வில்லைச் சேவகரிடம் ஒப்புவிக்கும் செயலுக்கு என்ன மகத்துவம்? இவர்கள் விரட்டப்படுகிறார்கள். வெளியே தேவியின் அபிடேகக் காட்சி பார்க்கத் தனியாகப் பணம் கட்டிச் சிறப்பு உரிமை பெற்ற கூட்டம் குழுமியிருக்கிறது. மண்டபத்துள், ஆற அமர அபிராமி அந்தாதி படிப்பவர்கள், சௌந்தரிய லஹரி பாடுபவர்கள், என்று உட்கார்ந்து பக்தி செய்யும் பெண்கள் - ஆண்கள். தம் நேர்ச்சைக் கடன் முடித்து, பால் நிவேதனம் செய்து, அதைச் சேவார்த்திகளுக்கு வழங்கி நிறைவேற்றும் மக்களும் ஆங்காங்கு பால் செம்புடன் நின்று, தமக்குத் தோன்றியவர்களை மட்டும் அழைத்துக் கொடுக்கின்றனர். சுமையான மாலையை, அபிராமி கம்பத்தடியில் வைக்கிறாள். "டீச்சர்...? அபிராமி டீச்சரில்ல?... வாங்க... பால் வாங்கிக்குங்க?" சிறு தம்ளரில் பாலை ஒரு கரண்டி ஊற்றி நீட்டும் அம்மாளைப் பார்த்ததாக நினைப்பே அவளுக்கு வரவில்லை. என்றாலும் அப்போதைய நேரத்துக்கு அந்தப் பால், குங்குமப்பூ ஏலக்காய் போட்டு சுண்டக் காய்ச்சிய பால், மிகச் சுவையாக, ஆறுதலாக இருக்கிறது. இவள் அருகில் பரட்டைத் தலையுடன் ஓர் ஏழை நின்று "எனக்கம்மா?" என்று கேட்கிறது. ஒரு சொட்டு கரண்டியில் எடுத்து ஏழையின் உள்ளங்கையில் விடும் அந்த அம்மாள், "ஏன் டீச்சர்? சீனிக்குக் கல்யாண மாயிட்டுதுன்னு சொன்னாங்க, சௌக்கியமா?" என்று விசாரிக்கிறாள். "ஆயிட்டுதம்மா. ஒரு குழந்தை கூட இருக்கு... நீங்க..." "நாம் சுமித்ராவோட அம்மா டீச்சர், தெரியலியா?" "ஓ...! அடையாளமே தெரியாம தலை நரைச்சிப் போச்சே? இப்ப இங்கதா இருக்கீங்களா?" "ஆமாம். இவுங்க ரிடயர் ஆகிட்டாங்களே? அண்ணா நகர்ல வீடு கட்டிட்டோம்..." "சுமி மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டாளா,... இல்ல..." "அமெரிக்கா இல்ல? விசாவுக்காகக் காத்திட்டிருக்கா, அவளுக்காகத்தா ஆறு வாரம் கோயிலுக்கு வந்தேன். வாங்க டீச்சர் ஒரு நாளைக்கு?" "நாங்கூட ரிடயர் ஆயிட்டம்மா, ஒரு வருஷம் மேல ஆச்சி..." "அட...? டீச்சர், உங்களுக்கு ரிடயர் ஆக வயசாச்சு? தெரியவேயில்லை?..." "வயசு ஓடிப்போவுது..." "இப்ப... சும்மாதானே கோயிலுக்கு வந்தீங்க..." "ஆமாம். செவ்வாக்கிழமையாயிருக்கே, ஆடி மாசம்னு வந்தேன். நேரம் கழிச்சு வந்தா... கவசத்தை எல்லாம் கழட்டிட்டாங்க..." "நாங்களே எட்டு மணிக்கு வந்தோம். பால் கறந்து காய்ச்சி எடுத்திட்டுக் கிளம்ப அந்த நேரம் ஆயிட்டுது. அதற்குள்ள க்யூ. இந்நேரம் ஆச்சு..." "சீனி எங்கே வேலையாயிருக்கிறான்?..." "அதே, இன்ஜின் ஸ்பேர் பார்ட்ஸ்லதா ஸேல்ஸ் ரெப்ரஸன்டேடிவா இருக்கிறான். மருமக, கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸ்ல, இருக்கா...?" "ஓ, வொர்க்கிங் கர்ளா?" "ஆமாம்... வரெம்மா?" அபிராமி சிறு மூங்கில் தட்டைச் சுமந்து கொண்டு கோயிலை வலம் வருகிறாள். "சும்மாத்தான் வந்தீங்களா?" இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும், சும்மா வராதவர்கள்... "நேரம் பண்ணித் தொலைச்சுட்டான், பஸ்ஸில. கதவைப் போட்டுட்டா. இனிமே அபிடேகம் முடிந்துதான்!" "இந்த அம்பாளின் சக்தி தனி. எனக்குக் கண் கண்ட தெய்வம். ஜக்குவுக்கு ஹாப்கின்ஸ்ல, இடம் கிடச்சி எல்லாம் ரெடியாயாச்சு. விஸா கிடைக்கல. ஆறு வாரம் கோயிலுக்கு வரேன்னு, அவனையும் கூட்டிண்டு வந்தேன். எலுமிச்சம்பழம் வாங்கிண்டு போனோம். நாலே வாரத்துல விஸா வந்துடுத்து. கடைசி வாரம் முடிக்கக் கூட அவன் இல்ல. நான் தான் முடிச்சு, பிரசாதம் அனுப்பினேன்?" ஒரு வயிரத் தோட்டம்மாள், இன்னொரு பட்டுப்புடவையுடன் பேசிக் கொண்டு சுற்றுகிறாள். "கல்யாணம் நிச்சயமாயிட்டுது. ஆனா, பணம் எப்படிப் புரட்டுவதுன்னு புரியல. அம்பாள் பேரில் தான் பாரம். அவ எப்படியோ வழி காட்டுவா..." வயசுக்கு வந்து வாழ்வுக்குக் காத்துக் காத்துத் தவம் இருக்கும் பெண்கள், வந்து கல்லின் மேல் போட்ட மஞ்சள் சரடுகள் அவள் கண்களை உறுத்துகிறது. இந்தக் கட்டுப்பாட்டு யுகத்திலும் மஞ்சட் கயிற்றில் சிறு தொட்டில்கள் ஆனந்தமாகத் தொங்குகின்றன... "இந்தாங்கம்மா? உங்களை அங்கெல்லாம் தேடினேன்?" கால் ரூபாய் சில்லறையை அந்த அம்மாள் நீட்டுகிறாள். "இருக்கட்டும்மா?... சாமிக்குக் குடுத்தது போயி..." "நீங்க வேற மாலை வாங்கிப் போட்டீங்களா?" "நேரமில்லையே? நடய அடச்சிட்டாங்கல்ல?..." "இந்த மாதிரி முன்னல்லாம் ஒண்ணுமில்லீங்க. எங்க வீட்டுக்காரருக்குப் பூர்வீகம் இந்த ஊருதா. இங்க மாரியம்மன் கோயில் தீமிதி விசேசம். இந்தக் கோயிலுக்கு இப்படி ஒரு மகிமை கெடையாது. சின்ன உள் மண்டபந்தா. பஞ்சலோக விக்கிரகம் கூட வெளிலதா வச்சிருந்தா. எங்க மாமனாரு முன்ன சொல்வாரு, அது ரொம்ப நாளைய விக்கிரகம்னு... இப்பதா குடும்பம் கிராமத்த விட்டுப் போயிடிச்சி. வீடு வாசல்லாம் வித்துட்டா... மனுசங்களுக்கு வராப்பல சாமிக்கும் கோயிலுக்கும் கூட மகிமை, நேரம் காலம்னு ஆயிப்போச்சி..." "மனுசந்தானே சாமிய உண்டு பண்ணி எல்லாம் செய்யிறான்னாலும், முன்னயும் நா வந்திருக்கே. ஜனங்கல்லாம், ஏதோ ஒரு நம்பிக்கயப் புடிச்சிட்டு வராங்க. அருச்சனை எல்லாம் கொஞ்சம் நல்லாச் செய்யக் கூடாதா?... அல்லாம் கழட்டிக் கழட்டி போகணில போட்டா. சுருக்குன்னுது...?" "சினிமாக் காரங்க வந்துதா இங்க ரொம்பப் பிராபல்யம், பணம், எல்லாம். ஆத்மார்த்தம் போயிட்டுது. ஆனா அத்தினி பேரும் ஏதோ சக்தி, காரியம் நடக்குதுன்னதா வாராங்க. வேலையில்லாத இருக்கிற பிள்ளைங்க எத்தினி வருது பாருங்க. அவங்க, கலியாணமாகாத பொண்ணுங்க. இவங்கதா ஜாஸ்தி..." "நீங்களும் அப்பிடித்தான் வந்தீங்களா?" "...அப்பிடீனில்ல. எங்க பொண்ணுக்குத் திடீர்னு உடம்பு சுகமில்லாம, ரத்தம் கெடுதல்னு சொல்லிட்டா. கிலியாப் போயிடுச்சி. அவ வூட்டுக்காரருக்கு ரொம்ப நம்பிக்கை... டெஸ்ட்ல ஒண்ணில்லாம இருக்கட்டும்னு வேண்டிக்கிட்டுப் போய்வான்னா, வந்தேன்... நீங்க... மகன், மகள் இருக்காங்களா?" "ஒரே மகன் தான்..." சட்டென்று அபிராமி முடித்துக் கொள்கிறாள். "வரேம்மா? பஸ் போயிடறானோ என்னமோ?..." கோயிலில் நின்று இவ்வாறு பேசித் தொடர்பு கொள்வதும் கூட இந்த நேரத்துக்கு உறுத்தலாக இருக்கிறது. அம்மனின் திருமாங்கல்யம் பொட்டைக் கழற்றிப் போட்டார். எல்லாம் மனிதர்கள் தாம் செய்கிறார்கள். சாதாரண காரியங்களுக்கு அற்பங்களுக்கு மகத்துவம் ஏற்றுகிறார்கள். ஆனால் அதைச் சுமந்து பொறுப்பேற்றவர்கள், மிகவும் அற்பமாக அந்த செயல்களின் முக்கியத்துவத்தைக் கழற்றி விடுகிறார்கள். மஞ்சள் நூல் கற்பீடத்தில் எத்தனை விழுந்திருக்கின்றன. இத்தனையும் நேர்ந்து கொண்டவர்களின் மன ஆதங்கத்தையும், எப்படியேனும் தாலி கழுத்தில் விழாதா என்ற தவிப்பையும் புலப்படுத்துகின்றன. உலகம், மூட நம்பிக்கைகளையும் பழைய அறிவுசாராக் கோட்பாடுகளையும் உதறிவிட்டு, முன்னேற வேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் கொண்டு வந்தாலும், மக்களின் மனங்கள் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான நம்பிக்கைகளைக் கெட்டியாக ஏன் பிடித்துக் கொள்கின்றன? அபிராமி மஞ்சள் நூல்களை வெறித்துப் பார்க்கிறாள். அவளும் அத்தகைய நம்பிக்கைக்குத் தன்னுள் இடம் கொடுத்திருக்கிறாள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் சுஜியின் தாயார் மங்களாம்பிகையைச் சந்தித்தாள். சாதாரணமாக, நூலைச் சாத்த, வாராவாரம், அந்தக் கன்னிப் பெண்களே தாம் வருவார்களாம். இதைப் பற்றி அபிராமிக்குத் தெரியாது. அதிகமாகக் கோயில் குளம், என்று அவள் சென்றதே இல்லை... பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியையான சுந்தரம்மா தான் சொன்னாள். "அபிராமி, இப்படித் திண்டாடுறியே? அவனுக்கும் முப்பது வயசாகுது. ஒரு கல்யாணம், கால்கட்டுன்னு விழுந்தா, பையன் திருந்திடுவான். நான் சொல்றேன் கேளு. ஒரு மண்டலம் மாங்காட்டு அம்மனைச் சேவித்து நேர்ந்து கொள். ரொம்ப சக்தி" என்ற பீடிகையுடன் எவர் எவர் கஷ்டங்கள் எல்லாம் மலையாய் வந்ததெல்லாம் பனியாய் விலகிப் போயின என்று பட்டியல் விரித்தாள். அப்போது அபிராமிக்கு அதைப் பற்றிக் கொள்வது சரி என்று தோன்றியது, வந்திருந்தாள். எலுமிச்சம் பழம் வாங்கி வந்து, அம்மனின் பிரதிநிதி போல் பெற்று, காலையும் மாலையும் குங்குமமிட்டு வணங்கி, வாராவாரம் சிரத்தையுடன் கோயிலுக்கு வந்தாள். மூன்றாம் வாரத்தில் தான், அந்தக் கற்பீடத்தின் அருகில் மங்களத்தைப் பார்த்தாள். கண்களில் ஓர் ஆச்சரியக் குறி. பச்சென்று மஞ்சட் பூசிக் குளித்து, நெற்றியில் பெரிய குங்குமம் துலங்க, முக்காலும் நரைத்த கூந்தலில் பூ விளங்க இந்த அம்மாள் மஞ்சட் கயிறு போடுவது யாருக்காக? மகனின் திருமணமா, மகளின் திருமணமா? "... இந்தப் பிரார்த்தனை..." "எம் பொண்ணுக்குத்தா. இருபதெட்டு வயசாகுது. ஆபீஸ்ல வேலையா இருக்கா. பி.காம் படிச்சிட்டு ஏழு வருஷமாச்சு. ரெண்டு பொண்ணு. எல்லாம் கட்டிக்குடுத்துப் போயிட்டாங்க. பையன் பெரியவன், அவனும் குடும்பமா வெளிநாட்டில இருக்கிறான். அவருக்கு வயசாயிப் போச்சு. வெளி நடமாட்டம் கிடையாது... என்னமோ சொன்னாங்க. முதவாரமும் கடைசி வாரமும் மட்டும் அவ வந்தாப் போதும்னு சொன்னாங்க. அவகிட்ட சொன்னா, என்னம்மா இதெல்லாம் கேலிக் கூத்தும்பா. இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு, எல்லாம் கேலிதா. வரதட்சணை குடுக்கக் கூடாது; அவங்களா வந்து, எனக்குப் புடிச்சா கட்டிப்பேங்கறா. ராப்பகலா இவ கவலை தான்..." ஒரு சில விநாடிகளில் மொத்தமான விவரங்களை அந்த அம்மாள் கொட்டி விட்டாள். "நீங்க..." இப்படித்தான் அம்மனின் கிருபை கை கூடுமோ? அபிராமி, தன்னைப் பற்றிச் சொன்னாள். பூர்வீகம் வேலூர்ப் பக்கம். பெரிய குடும்பத்தில் தான் பிறந்தாள். அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் வடக்கே இருக்கிறார்கள். எல்லோரும் மூன்றாம் தலைமுறையைக் கண்டாயிற்று; தொடர்பில்லை. இவள்... இவள் புருஷனுடன் குடும்பம் நடத்திய பத்து மாசத்தில், இந்தப் பையனுக்குத் தாயாகும் ஒரே பலன் தான் கண்டாள். ஏனெனில், பங்களூரில் அவன் வேறொரு குடும்பமே வைத்திருந்தான். குழந்தைக்கு ஒன்றரை வயசு வரை சண்டையும் பூசலுமாக இருந்தது. பிறகு, இவள் வேறாகி விட்டாள். படித்துப் பட்டம் பெற்று ஆசிரியைப் பணி செய்து ஓய்வு பெறும் நிலைக்கு வர இருக்கிறாள். பையனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும்... ஒரு சிறு சிக்கல்... மங்களம்மா, அந்தச் சிக்கலை முதலிலேயே சொல்லி விட்டாள். "அந்தக் காலத்தில, அவருக்கு நா ரெண்டாந்தாரம். ரெண்டு பேரும் சாதி வேற வேற. அப்ப, எனக்கு ஆரும் நாதியில்ல. அம்மா, ஏதோ தொழில் செய்துதா பிழைச்சாங்க. இவரு முதத்தாரம் இறந்து மூணு பிள்ளைகள வச்சிட்டு சிரமப்பட்டாரு. அப்ப கட்டிட்டாரு. பின்னால, சாதி சொல்லாம இருந்துட்டாங்கன்னு இருக்கப்படாது பாருங்க?..." "நீங்க இப்படி வெளிப்படையாச் சொல்லுவதே ரொம்பப் பிடிச்சிப் போச்சி. சாதியாவது இன்னொண்ணாவது? இப்ப எனக்கு அண்ணன் தம்பி இருக்காங்கள்னுதாம் பேரு. ஊருல இருக்கிற வீடு எனக்குன்னு அப்பா சொல்லியிருந்தாரு. அவுரு போன பிறகு, அத வித்து, பிரிவினை செய்ய வந்த அண்ணன் இன்னும் நான் என்ன செய்றேன்னு கேக்கல. அவங்க அவங்க பக்கத்தில, சிநேகமா இருக்கிறவங்கதா மனுஷங்கன்னு ஆய்ப் போச்சு. எப்பவானும் இங்க வந்தா ஓட்டல்ல தங்கிட்டு வந்து எட்டிப் பாப்பாங்க. அவ்வளவுதான்...?..." அதற்கடுத்த மறுவாரமே சுஜியைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். ஒடிய ஒடிய உயரமாக, மாநிறமாக, வட்ட முகத்துடன் பெண் இலட்சணமாக இருந்தாள். ஈரக் கூந்தலைத் தழையப் பின்னலிட்டுப், பூச்சூடி, நெற்றியில் குங்குமமும் கீற்றுத் திருநீறுமாகப் பாங்காகத் தெரிந்தாள். இது தெய்வத்தின் அருளால் கூடும் திருமணம் என்று பாரத்தை தெய்வத்தின் மீது போட்டாள். இப்போது அம்மனின் வெறுமைக் கோலம், நெஞ்சை உறுத்துகிறது. வெளியே பஸ் போய்விட்டதைக் கூடக் கவனியாமல் குழம்பி நிற்கிறாள். |