14

     காலையில் எழுந்ததும், ஒரு புதிய தீர்மானம் முகிழ்த்திருக்கிறது.

     பணத்தை எடுத்துக் கொண்டு, சுந்தராம்மாளிடம் செல்ல வேண்டும். குழந்தைக்கு ஏழெட்டு சவரனுக்கு நகைகள் வாங்க வேண்டும்...

     சுறுசுறுப்பாக இருக்கிறது.

     நகை வாங்கி எடுத்துக் கொண்டு, அவளுடைய பீரோ, பாத்திரப் பெட்டி இரண்டையும் அவள் வீட்டில் கொண்டு போட ஏற்பாடும் செய்து விட்டு...

     வண்டிக்காரனை அவளே கோயில் சந்தில் சென்று விசாரிக்கிறாள். கந்தப்பன் தெரிந்த ஆள்தான். கைவண்டி வைத்திருந்தான்; இப்போது மூன்று சக்கர டெம்போ வைத்திருக்கிறான்.

     "அட்ரஸ் குடுத்திடுங்கம்மா, சுகுரா கொண்டு சேத்திடுறேன்..."

     "என்ன கேக்கிற?..."

     "என்னம்மா, உனுக்கு தெரியாதா?"

     "என்ன குடுக்கிறனோ அத்தை வாங்கிப்பியா?..."

     "குடு... என்னம்மா நீ?..."

     இப்படி ஏறக்குறைய முப்பது வருஷம் வாழ்ந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து போகப் போகிறாளா?...

     ஆஞ்சநேயர் கோயிலில் ஏறி ஒரு சுற்றுச் சுற்றுகிறாள். இப்போது தான் நினைவு வருகிறது. சீனி பிழைத்து எழுந்தால் வடைமாலை சார்த்துவதாக வேண்டிக் கொண்டாள்.

     அவன் நல்லபடியாகப் புதிய முயற்சியில் புதிய வாழ்வில் வெற்றி பெறட்டும்...

     பட்டாசாரியார், தளர்ந்த உடலில் துவாதச நாமங்கள் விளங்க இவளைக் குசலம் விசாரிக்கிறார்...

     "வடை மாலை சாத்தணும்..."

     "என்னிக்கு?..."

     "என்னிக்கு வேணா..."

     "நாளைக்கு வியாழக்கிழமை சாத்தலாமா?..."

     "ஆகட்டுமே...?" என்று முப்பது ரூபாயை எண்ணிக் கொடுக்கிறாள்.

     புதன்கிழமை, நகை வாங்க - எதுவும் சுபமாகச் செய்ய ஏற்ற நாள்... வீட்டுக்கு வந்து, பெட்டியைத் திறந்து செக் புத்தகத்தில் தொகையை எழுதிக் கொண்டு வங்கிக்கு வருகிறாள்.

     கல்லாத் தடுப்புக்குள், தொங்கு மீசையுடன் ஒல்லியான இளம்பிள்ளைதான் இருக்கிறான். வழக்கமாகக் காட்சி தரும் பூமாவைக் காணவில்லை.

     வில்லை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் காத்து இருக்கிறாள்...

     ...இவள் முறை வருகிறது. இருபது நிமிடத்துக்குள்.

     அவள் புத்தகத்தையும் காசோலையையும் நீட்டுகிறாள்.

     அவன் திருப்பிவிட்டு... அவளை விரித்துப் பார்க்கிறான்.

     "அம்மா, எல்லாம் 27ந் தேதியே எடுத்திருக்கிறீங்களே?... நீங்க போட்டிருக்கும் தொகை இல்லையே?..."

     மூச்சு நின்று போகிறது ஒரு கணம்.

     "என்னது?..."

     "நாலு நா முன்ன உங்க ஸன் தானே செக் கொண்டுட்டு வந்து வாங்கிட்டுப் போனார்...!" உடல் முழுதும் ஆவியாய்ப் போகிறது. அவள் தொய்ந்து துவள வாயிலைப் பற்றிக் கொள்கிறாள்.

     உள்ளிருந்து கணக்காயரோ, யாரோ வருகிறார்கள். பெரிய பெரிய லட்ஜர் புத்தகங்கள்... இவளுக்குத் தலை சுழலுவது போல் தோன்றுகிறது. நாக்கு உலர்ந்து விட்டது. "ப்ளீஸ் கம் இன்... வாங்கோம்மா? நீங்க தானே செக் குடுத்திருக்கீங்க?... பாருங்க...?"

     ஆம்... அவள் கையெழுத்துதான்... அபிராமி. சாய்த்துச் சாய்த்து... எம், தலைகீழ் விழுவது போல் வளையங்களாய் அபிராமி... அவள் கையெழுத்துதான்...

     நடுத்தர வயசுள்ள அந்தக் கணக்காயர் அவளை உன்னிப்பாகப் பார்க்கிறார்.

     "நீங்க கையெழுத்துப் போட்டுக் குடுத்தது தானம்மா?"

     "...ஆமாம்... எனக்கு நினைவேயில்ல...அ..."

     உடலில் ஏதோ அருவருக்கத்தக்க பூச்சி ஓடும் உணர்வுடன் அசட்டுச் சிரிப்பை நெளிய விடுகிறாள்.

     "...ஸாரி... எக்ஸ்க்யூஸ்மி ஃபார்த ட்ரபிள்... எனக்கு நினைப்பே யில்ல..."

     அவர்களுடைய பார்வை தன் முதுகைத் துளைப்பது போல் உணருகிறாள். பூரான் ஓடுவது போல நெருப்பு எரிவது போல...

     வாசலில் பல்வேறு மக்கள். ஆடவர் பெண்டிர்... ஸ்கூட்டர்கள். ஆட்டோ, அந்தக் கட்டிடத்தில் பணம்... பணம் புழங்குகிறது...

     ...இவன் அவள் பிள்ளை, அவள் கையெழுத்தைப் போட்டுப் பணம் வாங்கிக் கொண்டு போய் இருக்கிறான்.

     கடைசியோ கடைசி... ஒரு முன்னூற்று சொச்சம் ரூபாய் அவளுக்குப் பிச்சை வைத்து விட்டு...

     அவன் இவள் பிள்ளை என்று எல்லோருக்கும் தெரியும்.

     அங்கே வங்கிக்கிளை ஆரம்பித்த நாளிலிருந்து இவள் கணக்கு வைத்திருக்கிறாள்.

     இல்லை... நான் செக் கொடுக்கவில்லை. அவன்... மோசடி செய்து விட்டான்... கூட்டுக்குள்ளிருந்து ஓலமாக ஒரு குரல் வெடித்து வர முட்டி மோதுகிறது. ஆனால், வெளிவரவில்லை.

     பாவி... பாவி... நீ பிள்ளையா? தாலிகட்டி நடுத்தெருவில் விட்டவனைப் பதின் மடங்கு நல்லவனாக்கி விட்டாயே?...

     வீட்டுக்கு எப்படி வருகிறாள் என்று புரியவில்லை.

     வீட்டில் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அளவு நாடா, ஸ்கேலுடன்... ஒரு லாரியில் செங்கல் வந்து இறங்குகிறது.

     ஒன்றுமே புரியவில்லை.

     சில்லென்ற நீரைக் குடித்து விட்டுச் சற்றே உட்காருகிறாள்.

     உட்காருவதற்கு இனி இடமில்லை...

     காஸ் - அடுப்பு - சிலிண்டரைக் கழட்டி ஓரமாக வைத்திருக்கிறாள். அடுப்பை சுஜாவின் சாமான்களோடு அனுப்பி விடுவாள்...

     அனுப்பிவிட்டு?

     ...சுஜா... நான் மோசம் போயிட்டேம்மா! உன் முகத்தில் முழிக்க எனக்குத் தகுதி இல்லை... முப்பத்திரண்டு வருஷம் அவனுக்குச் சோறு போட்ட என்னால் புரிஞ்சு கொள்ள முடியல. நீ எடைபோட்டு வச்சிருக்கே...

     யாரிடம் சொல்லி அழ?...

     சுந்தராம்மாளிடம் தான் ஓடி வருகிறாள்.

     மணி இரண்டு.

     சுந்தராம்மாள் இந்த நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.

     முன் அறையில் வெங்கடாசலபதி, சங்கராசாரியார் - பள்ளிக்கு வந்த படம், முன்னாள் ஜனாதிபதி விஜயம் செய்த படம், எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறாள் அபிராமி.

     "யாரு?... அபிராமியா?"

     "நான் மோசம் போயிட்டேன் மேடம்... அந்தப் பாவி என்னை உரிச்செடுத்து நடுத் தெருவிலே விட்டுட்டுப் போயிட்டான்..."

     சுந்தராம்மாள் இவள் அழுகையை ஏற்பது போல் தெரியவில்லை. எதிரே உட்கார்ந்து கொள்கிறாள். "இப்ப எதுக்கு அழற? என்ன ஆச்சு?"

     படபடவென்று கொட்டுகிறாள்...

     "இதபாரு அபிராமி, நீ முதல்லேந்தே உம்பிள்ளையப் புரிஞ்சிட்டு நடக்கல. அவன் சுபாவம் தெரியும். அதுக்கேத்த மாதிரி ஒரு பெண்ணைக் கொண்டு வரல. சரி, அப்புறம், உனக்கு ஒரு மாமியாரா நடந்துக்கத் தெரிஞ்சிதா?..."

     "நீ பண்றது சரியேயில்ல. அந்த லீலா, இங்க பள்ளிக்கூடத்தில் திருடிட்டு கெட்ட பேர் வாங்கிக் குடுத்தது. நான் டி.ஸி. குடுத்தனுப்பிச்சேன். அது எங்கெங்கோ லோல் பட்டுட்டு, இப்ப ஏதோ, இயக்கம் மண்ணாங்கட்டின்னு திரியுது... இத பாரு, இதெல்லாம் நிசம்தானா?"

     அவள் ஒரு 'புதிய பார்வை' பத்திரிகையைக் கொண்டு வந்து போடுகிறாள்.

     இந்த வாரம் 'புதிய பார்வை'க் கூட்டம் ... இல்லத்தில் ஒரு சிறப்பு உரையாடலாக நடைபெற்றது. ஆசிரியப் பணி புரிந்து, புதிய பார்வையுடன் தமது வாழ்க்கையில் பல திருப்பங்களில் தனியே நின்று வெற்றிகரமாக சகாப்தங்களைக் கடந்து வந்திருக்கும் ஆசிரியை அபிராமியைப் பாராட்டி கௌரவிக்கும் வாய்ப்பாக இது நிறைவேறியது. இது வித்தியாசமான விழாவாக இருந்தது. பெண் தான் முதலும் கடைசியுமாக இந்த மானிட சமூகத்தின் தலையாய பொறுப்புக்களை, அதன் பலாபலன்களில் முக்கியமாகத் துன்பங்களை ஏற்கிறாள். ஆனால் அது தியாகம் என்று திணிக்கப் பெற்று, அவள் தனக்குரிய மதிப்பையும், கணிப்பையும் பெற வாய்ப்பில்லாதவளாகவே மாய்கிறாள்...

     இந்த அடிப்படையில், மனைவி, தாய், என்ற நிலைகளிலேயே பெண் இயங்குகிறாளே ஒழிய, அவளுக்கென்ற தனியான ஒரு ஆளுமை மலருவதற்கே இடம் இல்லை. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் உடல் பரமான தொடர்பு தவிர, நட்புறவே இருக்கலாகாது என்றும் நெறிப்படுத்துகிறது. 'உடுக்கையிழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்று வள்ளுவர் எழுதி வைத்ததாகத் தம்பட்டம் போடுகிறார்கள். ஆனால் பெண்ணுக்கு இத்தகைய நட்பே கிடையாது. 'உடுக்கையவிழ்க்கும் தொடர்புதான்!' நியாயப்படுத்தப்படுகிறது.

     பெண்களே, நினைத்துப் பாருங்கள்! பெண்ணுக்கு ஒரு பெண்ணும் நட்பாக இருக்க முடியாது; ஓர் ஆணும்... மூச்!

     பெண் அடிமை ஜீவியாக இருக்கவே காலம் காலமாக, எல்லா நெறிகளும் நீதி நூல்களும் வரையறை செய்கின்றன. அறிவு ஜீவி...? மூச்!

     அபிராமி நிமிர்ந்து பார்க்கு முன் சுந்தராம்மா வெடிக்கிறாள்.

     "...இந்தக் குப்பைகளை எல்லாம் ஸ்கூலில் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போயிருக்கு... நேத்து சௌமினி வந்து சொல்லிக் குடுத்துட்டு, இதுக்கு என்ன மேடம் பண்றது. டென்த்லேந்து பொண்ணுகளை கவர் பண்றா..."ன்னா... வள்ளுவர் நீதியை, இன்னும் காலம் காலமா பெரியவங்க பண்ணி வச்ச நெறியையெல்லம் தூக்கி எறின்னு கிளம்பியிருக்குதுங்க. சமுதாயம் என்ன ஆறது? ஏற்கெனவே இதுங்க ட்ரஸ்ஸும் வர்ச்சா வர்ச்சமில்லாம நடக்கிறதும் சகிக்கல... இன்னும் என்ன உரிமை வேணும்? தாலி வேணாம், தங்கம் வேணாம்னு, கெட்டுக் குட்டிச்சுவராகறதுக்குக் கிளம்பியிருக்கு. அதில நீயும் போய் விழுந்து மாட்டுப் பொண்ணுக்கு வால் புடிக்கிற. கட்டின புருஷன் அவளை மதிக்காம, அவ மாமியாருக்கு ஃபெலிஸிடேஷன் பண்றாளாம், நீயும் புள்ளய விட்டுட்டுப் போயிருக்கே. பண்றது பூரா முட்டாள்தனம், வந்து உக்காந்துண்டு மூசுமுசுன்னு அழற...?"

     பத்து வயசுச் சிறுமியை நாலாம் வகுப்பு ஆசிரியை கண்டிப்பது போல் வெருட்டுகிறாள்.

     ஆண்டாண்டுக் காலமாக அவளை எதிர்த்துப் பேசியறியாத, தன் விஷயத்திலேயே சுயமாக முடிவு எடுக்கத் துணியாத பேதையாகவே பழக்கப் பட்டவள் இப்போதும் 'புதிய பார்வை' நெறிகளுக்காக வாதாடச் சக்தியில்லாமல் நிற்கிறாள்.

     "இப்ப என்ன, உன் பிள்ளை தானே எடுத்திட்டுப் போயிருக்கிறான்? நேராகக் கேட்டால் கொடுக்க மாட்டே, புதிசா, பிஸினஸ்னு 'வென்ச்சர்' பண்ணத் தான் போயிருக்கிறான். நீ நாளைக்கு கொடுக்கறதை இன்னக்கே அவன் எடுத்திட்டிருக்கிறான். எம்பிள்ளை என்னை மோசம் பண்ணிட்டான்னு தூத்திட்டுத் திரியாதே, இதான் சாக்குன்னு. பாங்க்ல ஒண்ணும் சொல்லலியே?..."

     "இல்ல...?"

     "பின்ன கம்னு இரு. உனக்கு வேற அக்குபிக்கு இல்ல. உன் மாட்டுப் பொண் ஒரு தறுதல. முன்னியே அது சங்காத்தியம் தெரியாம, போய் விழுந்துட்டே. வேலை பண்றதுன்னா... ஆஹாஹான்னு மயங்கிடுறீங்க. ஏதோ கல்யாணமாற வரைக்கும் நல்ல இடத்தில வேலைக்குப் போகட்டும். இல்ல டீச்சர் பரவாயில்ல... டாக்ஸ் ஆபீஸ்னா, சகல சமாசாரமும் இருக்கும். இந்த ஆபீசுக்குப் போற பெண்கள் யோக்கியமா இருக்குமாங்கறதே புரியல. கண்ட மானிக்கும் சிரிக்கறதும் பேசறதும் எவங்கூட வேணாலும் ஸ்கூட்டர்ல உக்காந்து போறதும்..."

     "அதாம் பாக்கிறமே? நடக்கிறதைத்தானே சினிமால கதைல எடுத்துப் போடுறாங்க?... இதுங்கல்லாம், மேலாளருக்கு சிகரெட் கொளுத்திக் குடுக்கறதும் 'வொயின்' ஸர்வ் பண்றதும் வாடிக்கையாம். சீனிக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா?... எனக்கும் இந்தக் கதைகளை எல்லாம் படிக்கிறப்ப தான், சமூகம் இப்படி இருக்குன்னு தெரியறது... அதனால, நீ பிள்ளையோட உறவை இத்தனை கெடுத்திட்டு, அவனைக் கசக்க அடிச்சது போதும். ஒண்ணும் குடி முழுகிப் போகல. நாளைக்கே அவன் நாலு காசு சம்பாதிச்சு நல்லபடியா இருக்கப் போறான். அப்ப, இதைத் தொலைச்சு, முழுகிட்டு, நல்ல பொண்ணாப் பாத்துப் பண்ணிவை. எத்தனையோ ஏழை பாழைக, படிச்சிட்டு, உத்தியோகம் இல்லாம இருக்கு..."

     சுந்தராம்மா மூச்சு விட நிறுத்துகிறாள்.

     அபிராமிக்கு சிந்தனையே மரத்துப் போனாற் போல் இருக்கிறது.

     "இப்போது... இனி... நான் இப்ப என்ன செய்வது மேடம்... வீட்டை வித்து... இன்னொருத்தர் வாங்கின பிறகு, அங்கே இருக்க முடியலயே? இப்ப வாடகைக்கு வீடெடுக்கறதா, நூத்தம்பது இருநூறு வாடகை குடுக்க முடியுமா, என் பென்ஷன்ல? நகை நட்டு, ஒரு திருகாணி கூட இல்லாம வறண்டு போயி நிற்கறனே?..."

     "எல்லாம் உன்னோட முட்டாள்தனம். நீ என்னைப் பாத்துண்டு இருந்தா, அப்பிடிச் செய், இப்படிச் செய்னு கொட்டிண்டே இருப்பேன். ரெண்டு வருஷமா தொடர்பே இல்ல. நீ எடுப்பார் கைப்பிள்ளை. மாட்டுப் பெண் உன்னை வசமா மாத்திருக்கா. அந்தப் புள்ளய இப்படி வெறுக்க அடிச்சிட்டிருக்கே. இப்ப அதைச் சொல்லிப் பிரயோசனமில்ல... நான் ஒண்ணு சொல்றேன்... பேசாம, அமைதி ஆசிரமம்னு இப்ப ஆசாரியாள் ஆக்ஞைப்படி 'ஹோம்' ஒண்ணு கட்டியிருக்கா, கொளத்தூரில... தாம்பரத்துக்குப் பக்கம் தான். நாப்பது பைசா சார்ச்சு... சாரதாவை எனக்குத் தெரியும். நீ கூடப் பார்த்திருப்பே... அவதான் இந்தத் தொண்டை எடுத்து நடத்தறா. ரொம்பப் பிரமாதமாக செய்யறா. கிராமம் போல இருக்கு. கோவில் குளம்னு இந்த நகரத்து சந்தடிக்கு அப்பால தள்ளி இருக்கறதே அமைதியா இருக்கு. சுவாமிகள் வந்து திறந்து வைக்கிற அன்னிக்குப் போயிருந்தேன். 'நான் கூட இதில வந்து இருந்திடலாம் போல இருக்கு சாரதா'ன்னேன். 'பேஷா வாருங்க...'ன்னு சிரிச்சா. நான் லெட்டர் தரேன். போய், உன் பென்ஷன் பணத்தைக் குடுத்திட்டு கிருஷ்ணா, ராமான்னு கிட!"

     அபிராமிக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

     எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். இவள் மீண்டும் சுஜாவின் முன் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மீண்டு விட்டாள்.

     சுந்தராம்மாள் கடிதம் எழுதிக் கொடுக்கிறாள். நன்றி தெரிவித்து விட்டு வருகிறாள்.

     "நீ அங்கே போயிட்டாலும், எனக்கு அடிக்கடி சேதி சொல்லு... ஆனாலும் பாவமா இருக்கிற, அபிராமி. உன்னை நானும் கவனிச்சுக் கேக்காம இருந்துட்டேனேன்னு இருக்கு!"

     இந்த மகத்தான உதவியை, இன்று பகலுக்குள் இவள் பள்ளி முழுவதும் பரவ விடுவாள் என்று அபிராமிக்குத் தெரியும். ஆனாலும் நியாயம் தான் என்று தான் எடுத்துக் கொள்கிறாள்.

     காலம் காலமாக வந்த மரபுகளை உடைக்கும் அந்தச் சங்கத்தில் அவளால் போய் இனி ஒட்ட முடியுமா?

     வெளிப்பார்வைக்கு, பிரேம்குமாருடன் அவள் இரவு பகல் பாராமல் செல்வதை, மற்றவர் தவறாகத்தானே எடுத்துக் கொள்வார்கள்?...

     சுந்தராம்மாளின் கூற்றுக்களும் நியாயம் என்று மனதில் எதிரொலிக்க, அவள் அமைதி இல்லத்தை நாடிச் சொல்கிறாள். தாம்பரம் மின் வண்டி நிலையத்தில் இறங்கி, நாற்பது பைசா டிக்கெட்டுக்கு பஸ் பிரயாணம் செய்து, அமைதி ஆசிரமத்தைக் கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை.

     கிராமத்தின் பழைய தெருவில் மார்கழிக் கடைசியை விளக்கும் பெரிய பெரிய புள்ளிக் கோலங்கள். அந்த வீடு, மாடி வீடாக, ஆனால் பழைய கட்டிடமாக இருக்கிறது. வாசலில் பூச்செடி கொடி ஒன்றும் இல்லை. செங்கல் மணல் வந்து கிடக்கிறது. இன்னும் கட்டப் போகிறார்கள் என்று அறிவிக்கின்றன. அவள் வந்த நேரம் மாலை ஐந்து மணி இருக்கும்.

     சொன்ன மாதிரியே அமைதியாக இருக்கிறது. சுற்றுச் சுவர் இல்லாமல் முள்வேலிப் படல் தான். சில காட்டுச் செடிகளுடன் ஆங்காங்கு பசுமை காட்டுகிறது.

     அபிராமி நடையில் சென்று "அம்மா...? அம்மா?..." என்று கூப்பிடுகிறாள். உள்ளிருந்து, இளையவளாக, வேலைக்காரி போல் தெரியும் ஒரு பெண் வருகிறாள்.

     "யாரம்மா? யாரைப் பாக்கணும்?"

     "இந்த ஆசிரமம் நடத்தறவங்களைப் பார்க்கணும். இதில சேர வந்திருக்கிறேன்."

     "அப்படீன்னா, சாரதாம்மா வீட்டுக்குத்தான் போகணும். அவங்க இங்க இல்லையே?"

     "எங்க இருக்காங்க?..."

     "பஸ் வந்து இறங்கினிங்கல்ல? மெயின் ரோட்ல, பங்களா மாதிரி பெரிய காம்பவுன்ட்ல் இருக்குதே, அதா வீடு. ஆனா, இந்நேரத்தில் வீட்டில இருக்காங்ளோ என்னமோ, நீங்க ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கலாமே?"

     "இப்ப போயி இருக்காங்களான்னு பார்க்கலாம் இல்ல?"

     "பாருங்க..."

     அபிராமி குறிப்பிட்ட பங்களாவுக்கு வருகிறாள். 'நாய்கள் ஜாக்கிரதை' என்பதை இவள் பார்க்கவில்லை. இரண்டு அல்சேஷன்கள் பக்கத்துக்கு ஒன்றாகப் பாய்ந்து வர, தொடர்ந்து ஒரு பணியாளன் 'ஹே அர்ஜுன்...' என்று கூப்பிட்டுக் கொண்டு வந்து அவள் மீது பாயாமல் தடுக்கிறான். சங்கிலியை இழுத்துக் கட்டுகிறான்.

     "சாரதாம்மா..."

     "இருக்காங்க. உள்ளே போய் உக்காருங்க...!"

     அப்பாடி!

     முன்னறை,... விரிப்புக்களும், இருக்கைகளும், கண்காட்சியாக விரிந்திருந்த கலைப் பொருள்களும்...

     அபிராமிக்கு எதையும் ரசிக்கும் மனநிலை இல்லை. சோபா விளிம்பில் தனது கைத்தறிப் புடவையுடனும், மலிவான கைப்பையுடனும் உட்கார்ந்திருக்கிறாள்.

     நடுத்தர வயசில்... சாரதாம்பா வருகிறாள்... பார்த்துப் பரிச்சயமான முகமாகத் தோன்றுகிறது.

     கைகுவிப்பு...

     சுந்தராம்மாளின் கடிதத்தை மௌனமாக நீட்டுகிறாள்.

     அவள் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பார்க்கிறாள்.

     காது, மூக்குகளில் சுடர்விடும் வயிரங்கள் மின்னுகின்றன. விசேஷமாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். கழுத்தில் பச்சையும் முத்துக் கட்டின தொங்கட்டான்களுடன் ஒரு சரம்... கைகளில் அதற்கிணைய அதே பச்சை முத்து வளையல்கள்; மோதிரம்...

     பச்சையில் மஞ்சட் கரை போட்ட காஞ்சிபுரம் பட்டு அணிந்திருக்கிறாள். கொண்டையில் குலுகுலுவென்று கனகாம்பரம் வளைவாக மகுடம் சாத்திய கோலம்.

     "...சரி... சந்தோஷம். நீங்க... எந்த மாதிரில இருக்க இஷ்டப்படறேள்னு தெரியல. எங்ககிட்ட மூணு டைப்காராளுக்கு இடம் வச்சிருந்தோம், டார்மிடரின்னா ஹால்ல... அதில இப்ப இடம் இல்ல. கட்டில் கிடையாது; வெறும் படுக்கைதான். பொதுவா ரெண்டு பாத்ரூம்... அதுக்கு முன்னூறு ரூபா தான்."

     "ரூம்ல மூபேர் - ரெண்டு பேர்னு ஒரு டைப். மூணு பேர் ரூம் பெரிசு. ரெண்டு பேர் ரூம் சின்னது. இதுகளுக்குத் தனியா பாத்ரூம் வசதி இருக்கு. முன்னூற்றைம்பது... முதல்ல ஐநூறு ரூபாய் டொனேஷன் குடுத்துடணும். பிறகு ஒரு மாச அட்வான்சும் வாங்கிக்கறோம். உங்களுக்கு யாரும் ஆதரவு இல்லன்னா, எங்ககிட்ட உங்களை ஒப்பிச்சிட்டா, சகலமும் நாங்களே செய்து விடவும் வசதி இருக்கு... உங்க அதிர்ஷ்டம், ஒரே ஒரு பெட் - இடம் தான் இப்ப காலி இருக்கு. அங்க இருந்த அம்மாவை, பிள்ளை ஊரோடு வந்து விட்டதால, கூட இருக்கட்டும்னு கூட்டிண்டு போயிட்டான்...

     இதுவே, சுப சூசகமாக அவளுக்குப் படுகிறது.

     ஆனால், பென்ஷன் பணம் எல்லாமே கொடுத்து விட வேண்டியிருக்கும்...

     ஆமாம், எல்லாப் பந்தங்களும் விடுபட்ட நிலையில் இங்கு வந்து ஒதுங்குபவளுக்கு, யாருக்கு மீதி வைத்துச் சேர்க்க வேண்டும்?

     "நீங்கள் இன்னும் உள்ளே போய் ஆசிரமத்தைப் பார்க்கவில்லையே...?"

     "இல்லை..."

     "வாருங்கள், பார்க்கலாம்... பார்த்துவிட்டு, ஃபாரம் தருகிறேன், பூர்த்தி செய்து கொண்டு வந்து தாருங்கள், சேர்த்து விடலாம்..."

     சாரதா சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்.

     சற்றைக்கெல்லாம் ஒரு வேலைக்காரப் பெண், எவர்சில்வர் தம்ளரில் எலுமிச்சம்பழ சர்பத் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

     அபிராமிக்கு அது ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது.

     குடித்துவிட்டு நிறைவுடன் எழுந்து நிற்கிறாள். சுந்தராம்மாளை நன்றியுடன் நினைத்துக் கொண்டு, சாரதாவுடன் இல்லத்துக்குள் நுழைகிறாள்.