உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
14 மூன்று மணியடித்துவிட்டது. என்றாலும் தெருக்களில் நடமாட்டமில்லை. பரந்தாமனார் வீதியில் ஒரு ஈ காக்கையைக் காணவில்லை. திண்டி கூட எங்கோ மரத்தடியில் படுத்துறங்குகிறது போலும்! ரேகா அந்நேரத்தில் வீடு திரும்பியதே இல்லை. பாட்டி வேலியோரம் வளர்ந்து வெடித்த ஆமணக்கு விதைகளை வெயிலில் காயவைத்துவிட்டு, வாசல் வராந்தாவிலேயே படுத்திருக்கிறாள். சின்னம்மா பஞ்சாயத்து நூலகத்திலிருந்து கொண்டு வந்த அட்டையில்லாத நாவலொன்றைப் படித்துக் கொண்டிருக்கையில் நிழலரவம் கண்டு வெளியே வருகிறார். ரேகாவா? அவள் மறுமொழியே கூறாமல் விருட்டென்று போகிறாள். “ஏன்? உடம்பு சரியில்லியா சொர்ணம்? ஆபீசிலேயிருந்து இந்நேரத்துக்கு வரமாட்டியே?” கைப் பையை அறையில் வைக்கிறாள். சாப்பாட்டு பொட்டலத்தைத் தாயிடம் நீட்டுகிறாள். “ஏம்மா? என்னமோ போல இருக்கே? சாப்பிடல?” தாய் நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறாள். பாட்டி இதற்குள் அலையக்குலைய வருகிறாள். “ஏம்மா? போகையிலே சொர்ணம் சொர்ணம்னு கத்தினேனே, இந்தக் கிழம் கத்தட்டும்னுதானே போனே? திரும்பிக் கூடப் பார்க்கல. அப்பவே நெனச்சேன். காச்சலிருக்குதா? தலை நோவுதா?” “ஒண்ணுமில்ல...!” “மூஞ்சியப் பாத்தா பேயடிச்சாப்பல இருக்கு? காலையில திருநீறு வச்சிக்காம போகுதேன்னு நினைச்சேன். நிதம் காலையில சொல்லுவேன். இன்னிக்குச் சொல்லலே. போனவ திரும்பி வந்தே. சொர்ணம் சொர்ணம்னு கூப்பிட்டா திரும்பிப் பாக்கிறதில்ல?” “படுக்கையப் போட்டுட்டுப் படுத்துக்க கண்ணு. சுக்குக் காப்பி வச்சித்தாரேன். நெத்திப் பொட்டு காயுறாப் போல இருக்கு பாருங்கத்தே!” பாட்டி திருநீற்றைக் கொண்டு வந்து நெற்றியில் இடுகிறாள். “ஒண்ணும் செய்யாது. முருகாண்ணு நினைச்சிட்டுப் படுத்துக்க.” ரேகாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அம்மா அடுப்பைப் பற்ற வைத்து சுக்கு காப்பி காய்ச்ச முற்படுகிறாள். அதுவும் வேறு எரிச்சலைக் கிளப்பும்! “எனக்கு சுக்குக் காப்பி வேணாம்மா, ஏற்கெனவே, எரிச்சலாயிருக்கு. சில்லுனு எதினாலும் குடு. பசிக்கிது...” “வாயு திரேகம். அப்பனைப் போல பொண்ணு. அவனுக்கு இப்படித்தான் வந்திரும். லேசா சுக்கத் தட்டிப் போட்டு, வெந்தயம் சீரகம் வெடிக்கவிட்டு, ஒரு கசாயம் கொடு நல்லாப் போகும். சோமுவோ ரமணியோ வரட்டும். ஸ்கூல்லேயிருந்து. மலையாளத்தான் கடையிலேருந்து ஒரு ரொட்டி வாங்கிட்டு வரச் சொல்றேன்...” பாட்டி “இந்த வேலைக்குப் போவதனால்தான் கெட்டுப் போச்சு” என்ற சொல்லைத் துவங்குவாளோ என்று எதிர்பார்க்கிறாள். அவள் சொல்லவேயில்லை. கசாயத்தைக் கொண்டு வரும் தாயிடம், “ஏம்மா? தொரை மாமன் எங்கே போயிருக்காரு?” என்று வினவுகிறாள். “அவுரு உங்க சித்தப்பாரைக் கூட்டிட்டு பட்டணம் போயிருக்காரு. ஏம்மா?” “அம்மா, கீதாவை நான் பார்த்தேன். இங்கே வந்திருந்தா. அப்ப எனக்கு தொரை மாமன் மகன்னு தெரியாது.” “இந்த வீட்டுக்கா?” “இல்ல. இந்த பஸ் ஸ்டாண்டில பார்த்தேன்.” “அப்ப? வீட்டுக்கு வான்னு கூப்பிடலியா நீ?” “எனக்கு யாருன்னே தெரியாதே? ஆனா, அவ சொன்னதெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அம்மா? இந்த வீட்டுக்குள்ள இருக்கிற உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. வெளி உலகம் ரொம்ப மோசம். உன் பொண்ணு வேலைக்குப் போயிட்டு வாரான்னு நினச்சிருப்பே. ஒவ்வொரு நாளும் ஒரு கண்டம். இன்னிக்கு என்ன நடந்திச்சி தெரியுமா?” சிவகாமி விக்கித்துப் போனாற்போல் பார்க்கிறாள். “நான் வேலை செய்யிற இடத்து முதலாளி ரொம்ப மோசம். அப்புறம் இன்னொருத்தனும் மோசம். எனக்கு இன்னிக்கு வாட்ச் வாங்கிக் குடுத்து கட்டிக்கன்னான். நான் மாட்டேன்னேன். வேலையை விட்டு நீக்கிட்டான்...” தாயின் உள்ளத்துக்கு பெரும் அதிர்ச்சியாகத் தானிருக்க வேண்டும். ஆனாலும் பேசவில்லை. ரேகா சட்டென்று தலையணையில் படுத்துப் போர்த்துக் கொள்கிறாள். “என்னாது? வேலை போயிடிச்சா? ஏண்டி? என்ன நடந்திச்சி? நேரங்கழிச்சிப் போனதாலா?” பாட்டி, சின்னம்மா, அத்தை எல்லோருமே அவளைச் சூழ்ந்து கொள்ள வருகின்றனர். “போனாப் போவுதுன்னாலும் படியரிசி ஆறரை பா விக்கிதேன்னு பாத்தேன். நம்ம கையில என்ன இருக்கு? அந்தப் பாவி வீட்டுக்காகாம போயிட்டான். சரசுவதி அன்னிக்கே சொல்லிச்சி. சிதம்பரம் வேலைக்கு போயிடட்டும்னு இருக்கிறேன். எனக்கும் கட்டி வச்சிடணும்னு இருக்கு. அது வேலைக்குப் போறதை வாணாங்காதீங்க. அது பாட்டில வேலைக்குப் போகட்டும். ஆசைப்பட்ட பொடவையோ ஜாக்கெட்டோ வாங்கிக்கும் என்று சொல்லிச்சி. சரேல்னு நூத்து நாப்பது ரூபா குறைஞ்சா கஷ்டம்தான்...” பாட்டி முண முணத்துக் கொண்டு போகிறாள். கனத்த படுதா விழுந்தாற் போன்ற மவுனம் தொடருகிறது. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் கூச்சலும் ஓட்டமுமாக வருகின்றனர். மாமாவின் குரலும் கேட்கிறது. காலையில் துரை மாமன் வாங்கி வந்திருப்பார் போலிருக்கிறது. பிஸ்கோத்து பாக்கெட்டைப் பிரித்து பாட்டி கவனமாகப் பங்கு வைக்கிறாள். “ஏய், அது சொர்ணத்துக்கு! தொட்டே, கைய ஒடிச்சிருவேன்!” என்று சுந்தரத்துக்கு ஒரு குரூரமான தண்டனையைக் கூறி அச்சுறுத்துகிறாள். “எனக்கொரு பிஸ்கோத்து வாங்கிட்டு வாடா. போயும் போயும் பிஸ்கோத்தை வாங்கிட்டு வாரான். நாளு படி வேர்க்கடலை வாங்கியாந்தாலும் புண்ணியமுண்டு...” என்று கேட்கும் மாமனின் குரல் கேட்கிறது. “எப்ப வரேன்னு சொல்லிட்டுப் போனாங்க?” “எப்ப வரானோ? இல்லே அவனை விட்டுட்டு இவன் மட்டும் வரானோ?” “தொரை ராவுக்கு வரதில்ல?” “அவன் சம்பந்திக்காரங்க வீடு நுங்கம்பாக்கத்தில இருக்கு. மருமகனுக்கு மாமன் ஆவடி கோட்டர்சில இருக்கான். இங்கே வருவானா? என்னமோ இவனுடைய மாமனார் வீட்டு சம்பந்த உறவாச்சே, அந்தப் பையனைப் போயி விசாரிக்கலான்னு வந்திருக்கிறான். பொண்ணுங்களைக் கண்ணு மண்ணு தெரியாம எடம் கொடுத்து வுட்டுட்டு இப்ப கெடந்து முழிச்சிக்கினு தவிக்கிறான். அவ்வளவுக்கு மீட்டிங்கு பேசி, தெருவிலே பத்து பேருக்கு முன்ன ஊர்கோலம் போற பொண்ணை யாரு கட்டுவாங்க? பப்ளிக்கா வந்த பெறகு மூடி வக்கிறதெப்படி? தெருவில பொண்ணு போகுதுன்னா அல்லாம் வாயப் பிளந்துகினு பார்ப்பான், பேசுவான். ஆனா நம்ம வூட்டுக்கு மருவன்னு வரது அப்படி இருக்குதுன்னா வாணாம்பான். அது ஒலக நாயம்...” “நான் நம்ம தங்கச்சி சொர்ணாவுக்கு அந்த சேட்டைப் பார்த்து கூட அம்பது ரூபா சம்பளம் கூட்டிக் கேக்கச் சொல்லணும்னு பாக்கிறேன்...” ரேகாவுக்குப் படுக்கையில் பொருந்தவில்லை. நெஞ்சம் துடிக்கிறது. “அதான் வேலையத் தொலச்சிகினு வந்திடிச்சே!” பாட்டி மிக மெதுவான குரலில்தான் பேசுகிறாள். ஆனாலும் ரேகாவுக்கு அது செவிகளில் துல்லியமாக விழுகிறது. தொலச்சிகினு... “வேலைக்கு அனுப்புவது முறைகேடு” என்று பலரையும் குற்றமாகப் பேசிவிட்டு, அதற்காக வருந்துவதுபோல் தன் இயலாமையை எதிர்மறையாகப் பேசுவதன் வாயிலாக ஈடு செய்து கொள்ளும் பாட்டிக்காக மனம் இரங்குகிறாள். உண்மையில் பொருள் இழப்பைப் பொருட்படுத்தாமலிருக்க முடியவில்லை. வேலையைத் தொலைத்துக் கொண்டு அவள் வந்திருப்பதாகப் பேசுகிறாள். பிறகு மாமியும் மருமகனும் பேசிய விஷயங்களை அவளுடைய செவிகள் கேட்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டில் அவளுடைய தந்தையின் மீதுள்ள கோபத்தை அவருடைய வாரிசென்று அவளிடம் காட்டுபவர் அவர்தாம். “என்னது? வேலையைத் தொலைச்சிட்டாளா? என்னாம்மா? என்ன சமாசாரம்?” அவள் எழுந்து கைப்பையைத் திறந்து அந்தக் காகித உத்தரவை அவரிடம் நீட்டுகிறாள். “நான் தொலைச்சிக்க எனக்குப் பைத்தியமில்ல. அந்த ஆபீசில ஒரு நாள் ஒரு கண்டம். முறைகேடு நடக்க, கத்தினா வெளியே கேட்கக்கூட ஆள் கிடையாது. நான் சொல்லப் பயந்து, வேலை இருக்கணும்னு அஞ்சிருந்தேன். உங்கள் எல்லாரையும் விட, எனக்கு வேலை போகக்கூடாதுன்னு கவலை மாமா!” மாமன் அந்தக் கடிதத்தைப் பார்க்கிறார். புருவங்கள் சுருங்குகின்றன. அவர் தமிழாசிரியர் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது அவளுக்குப் பிறகுதான் புரிகிறது. “ஏம்மா? இத்தை அவங்க நீட்டினா நீ வாங்கிக்கினு வரலாமா? ‘டிஸ்மிஸ்’னு எழுதியிருக்குதே? வேலை வேணான்னா டெர்மினேடட் என்றுதானே எழுதியிருக்கணும்! பைத்தியம் போல இதை வாங்கிக்கினு வந்தியே? வேற எங்கேயும் வேலை கிடைக்க இந்த ‘எக்ஸ்பீரியன்ஸ்’ அனுபவம் உதவாதே? என்னம்மா இத்தினி மக்காயிருக்கிறே? எதுக்காக உன்னை டிஸ்மிஸ் செய்யணும்?” மலை உச்சியிலிருந்து சரிந்துவிட்ட அதிர்ச்சி இப்போதுதான் அவளை ஊமையாக்குகிறது. “சாதாரணமா வேலை வேண்டாம்னா, சர்வீசஸ் டெர்மினேடட்னு தான் எழுதுவாங்க. நஷ்டம் வரலாம்; ஆள் குறைப்பு செய்யலாம்; வேற வேலைக்குப் போறப்ப முன் அனுபவம்னு இத்தைக் காட்டலாம். இப்ப இது பிளாக்மார்க்கல்ல? என்ன ஆச்சு?” அவள் தலை குனிந்துகொண்டு நிலத்தைக் கால் விரலால் தேய்க்கிறாள். கண்கள் குளமாகின்றன. “ஏன்? எதுக்காக டிஸ்மிஸ் பண்ணான்? அந்த நம்பிங்கற புள்ளாண்டான் நல்ல மாதிரிதானே இருந்தான்?” “ஒண்ணுமில்ல. அவன் ரொம்ப லிபர்டீ கொடுத்திட்டான். குடிச்சிட்டே ஆபீசுக்கு வருவான். இன்னிக்குக் காலையிலே ஒரு வாட்சை வாங்கிட்டு வந்து முதலாளி கட்டிக்கன்னாரு. நான் வேணான்னேன். அதுக்காக இது...” அவளுடைய பிரச்சினையை, சங்கடமான உண்மையை அவர்களுக்குத் தெரிய வைக்க இதற்கு மேல் சொல்லாற்றலில்லை அவளுக்கு. “என்னது? வாட்ச் வாங்கிட்டு வந்து முதலாளி கட்டிக்கன்னா கட்ட வேண்டியதுதானே? இதில் என்ன தப்பு? ஆறு மாசமா வேலைக்குப் போறே. என்னம்மா பயித்தியக்காரப் பொண்ணா இருக்கியே?” இதை அவள் எதிர்பார்க்காமல் இல்லை. “பிறகு இன்று ஏழு மணி வரை இங்கு இரு என்பார். இருக்கலாமா, மாமா? ‘சினிமாவுக்குப் போகலாம்’ என்று கார் கதவை திறந்து விட்டு, ‘ஏ’ படத்துக்கு அழைப்பார், போகலாமா மாமா?” “ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாப் பேசுறே நீ. வாட்ச் வாங்கித் தந்து கட்டிக்கன்னுதானே சொன்னாரு? நீயாகவே ஏன் மேலமேல கற்பனை பண்ணுறே?” “உங்களுக்கு தெரியாது. உங்களால் ஊகிக்கக் கூட முடியாது மாமா. என் போன்ற பெண் அங்கே பத்திரமாக வேலை செய்ய முடியாது.” “அப்பாவைப் போல்தான் மகளும் இருக்கு. சரி, எப்படியும் போங்க. ஆனா ஒண்ணு. நாளைக்கே போயி, இந்த ஆர்டரின் வாசகத்தை மாத்திட்டு வந்து சேரு. தொரை வந்தாக்கூட இதைத்தான் சொல்வாறு. ஒரு வேலை கிடைக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு? என்ன?” பொறியிலிருந்து மீண்ட பின் மீண்டும் இன்னொரு பொறிக்குள் அகப்பட்டிருக்கிறாள். இரவெல்லாம் ஏதேதோ நினைப்புகள். காலை அழுத்துவதைப் போலும் நம்பி கையை அழுத்துவதைப் போலும் உணர்வுகள் தோன்ற தூக்கத்தில் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறாள். துரைமாமன் இரவு வரவில்லை. |