உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 பஸ்சில் ஏறி அமர்ந்தபின் கணக்காக நான்காவது நிறுத்தத்தில் இறங்கும் நிதானத்தில்தான் அவன் இறங்கினான். ஆனால் அப்போதுதான் அவனுக்குத்தான் தவறான இலக்கமுள்ள வண்டியில் ஏறி நகருக்கு வெளியே தொலைவில் வந்துவிட்ட உண்மை புலனாயிற்று. சாதாரணமாக அவன் கையில் கறிப்பொட்டலத்துடன் நடந்தே தன் இருக்கைக்குச் செல்வதுண்டு. மீண்டும் அவன் பஸ்சைப் பிடித்து ஏறிய இடத்தில் இறங்கி இருப்பிடத்துக்கு நடக்கிறான். தெருவில் நடந்தும் செல்ல முடியும். குறுக்கே புகுந்தும் செல்லலாம். வெட்ட வெளியையும் விரிந்த பசும் பரப்புக்களையும் நீரின் குளிர்ச்சியையும் நல்ல காற்றையும் துறந்து, வேலையும் பிழைப்பும் இருக்கிறது என்று பட்டணத்துச் சந்தியை நம்பி வந்து அங்கே வேர் பிடிக்காமலே தலைமுறைகள் காணும் குடும்பங்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தன. கூரை என்ற பெயரில் மழையையும் வெயிலையும் தாங்கச் சக்தியற்றாலும் அங்கே வாழும் பெண்களின் மஞ்சட் கயிறாம் காப்பைப்போல் அந்த வீடுகளைக் காத்த கூரைகள். உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று ஐயக்கோட்டில் கிடக்கும் எருமைக் கன்றுகள்; விளக்கை வைத்துக் கொண்டு மாவாட்டும் பெண்; கோலியாடும் பிள்ளைகள்; ஊர் நிலவரம் கட்சி நிலவரம் பேசிக் கொண்டு நிற்கும் ஆண் கும்பல்; டிரான்சிஸ்டர் கேட்டுக்கொண்டு இளம் பெண்களை ஏசும் இளவட்டங்கள்; கொஞ்சு மொழிகள்; அல் அயல் பெண்களின் சண்டைகளில் உதிரும் வசைமாரிகள் என்று ஒரு விசுவரூபக் காட்சியை அடக்கிக் கொண்ட சந்தைக் கடந்து அவன் செல்கிறான். ஒரு காடா விளக்கை வைத்துக் கொண்டு கிழிந்த பிளாஸ்டிக் துண்டுகளில் சாணி உருண்டைகளைத் தட்டிச் சுவரோரம் நிரப்பிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா. அவனைக் கண்டதும் எழுந்து கையைக் கழுவிக் கொண்டு வருகிறாள். “என்ன இன்னிக்கு இந்நேரம் ஆயிடிச்சு?” என்று கேட்டுக் கொண்டு பணிவுடன் அவனிடம் இருந்து பொட்டலத்தை வாங்கிக் கொள்கிறாள். அந்தக் குடிசைகளை ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு பழைய மாடி வீடு இருக்கிறது. வீட்டின் முன்புறம் அந்தப் பேட்டை வாசிகள் சாமான்கள் வாங்கும் கடை. கடை வாயிலில் கூட்டத்துக்குக் குறைவில்லை. சந்து வழியாகச் சென்று வீட்டின் பின்புறத்துக் கதவைத் திறக்கிறான். அந்தப் பகுதிதான் அவனுடைய இருப்பிடம். முத்தாயியின் மகள் வள்ளி வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து வாளியில் நீர் கொண்டு வைத்திருக்கிறாள். முத்தம்மாவுக்கு மூன்று பெண்கள்; இரண்டு ஆண்கள். அவளுடைய புருஷன் ஒரு அடிதடி சண்டையில் இறந்து போய் நான்கு ஆண்டுகள் ஆகின்றனவாம். மூன்று பெண்களில் இரண்டு பேரைக் கட்டிக்கொடுத்து, ஒருத்தி பல்லாவரத்திலும் இன்னொருத்தி பெரம்பூரிலும் வாழ்கின்றனர். பெரிய பையனும் ரெம்பூர் ஆலையில் வேலை செய்கிறான். வள்ளியும் கல்யாணமான பெண்தான். புருஷன் நோய் கண்டு இறந்து போனான். ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் தங்கியிருக்கிறாள். இரண்டாவது பையன் எல்லப்பன் பலபட்டறை. அந்த வீட்டை மொத்தமாக வாடகைக்கு எடுத்திருக்கிறான். மாடியில் ‘கிளப்’ நடத்துகிறான். முத்தம்மா இப்படித்தான் சொல்லிக் கொள்வாள். முன்புறத்துக் கடையை ஒட்டிய டீக்கடையும் அவனுக்கு உட்பட்டதுதான். இந்தப் பேட்டைக்குப் பின்னால் விரிந்து கிடக்கும் நிலவெளி எல்லைக் கற்களின் அணியுடன் ஓர் ‘ரியல் எஸ்டேட்ஸ்’ நகரின் சிறப்பையும் பெற்றிருப்பதில் எல்லப்பனுக்கும் தொடர்பு உண்டு. அந்த வட்டகையில் அவன் ஒரு சிறப்பான புள்ளி. விளக்குப் பித்தானை அமுக்குகிறான். அவனுடைய அந்தத் தாழ்வரை இருக்கையில் ஒரு பழைய நாளைய இரும்புக் கட்டிலில் கித்தான் சுற்றிய படுக்கையொன்று இருக்கிறது. அவனுடைய சட்டை நிஜார் தொங்கும் கொடி; ஒரு தகரப்பெட்டி. சுவரில் மாட்டிய சிறு கண்ணாடி; எண்ணெய்க் குப்பி, சீப்பு கொண்ட புரை, நீர் வைக்கும் மண் கூசா; உணவு கொள்ளும் பீங்கான் தட்டு; கண்ணாடி தம்ளர்கள் இவையே அவனுடைய உடமைகள். அவன் முகத்தைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு அந்தக் கட்டிலில் அமருகிறான். பீடியைக் கொளுத்திக் கொள்கிறான். கதவு மெல்லத் திறக்கிறது. எல்லப்பன் அவனுக்குப் பழக்கமான மதுக் குப்பியையும் தம்ளரையும் கொண்டு வருகிறான். அவன் பேசாமலே ஆணியில் தொங்கிய சட்டைப் பையில் கைவிட்டு ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்கிறான். ஒன்பது மணி சுமாருக்கு வள்ளி சோறும் கறிக் குழம்புமாக வருவாள். நிகழும் நடப்புகள். ‘உண்மை’ என்ற ஒரு நிலையை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சியே மயக்கங்களின் துணை நாடும் வாழ்வு. இன்று அவனுக்குத் திரை கிழிந்து ‘பிரத்தியட்சம்’ தோன்றினாற்போல் இருக்கிறது. ஒருநாள் கூடத் தவறான பஸ்சில் இத்தனை நாட்களில் அவன் ஏறவில்லை. இன்று அந்த உண்மைத் தரிசனம் மயக்கத்தின் திரையை சுட்டு ஒரு நிரந்தர வாயிலைத் தோற்றுவித்தாற் போலிருக்கிறது. இந்த வாழ்வை அவன் எதற்காக, யாருக்காக வாழுகிறான்? எல்லப்பனும் முத்தாயியும் வள்ளியும் சில ரூபாய்களைப் பெறுவதற்காகவா? அம்மம்மா! வாழ்க்கையின் சில கணங்கள் எத்தனை இன்பம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன! குண்டு முகத்தில் நெற்றியில் துளித்திருந்து தெரிய நின்ற அந்தப் பெண்... நெஞ்சுக்குள்ளிருந்து ஆவேசமாய் ஓர் எழுச்சி உந்தி உதடுகளின் சிறைக்குள் தாளாமல் துடிக்கிறது. அவள் புரிந்து கொண்டிருப்பாளோ? இயந்திரத்தின் உருளைகள் இயங்கும்போது அதில் போடும் பொருள் மாவாகிறது. பிறகு அதற்குப் பழைய உருக் கிடையாது. முழுமையான காத்திரமும் கூட்டுவதற்கு இல்லை. அவனுடைய வாழ்க்கையின் நாட்கள் அப்படி முழுமையின்றிக் கரைந்து போகின்றன. கனவுகள் அழிந்தவை; நினைவுகள் குரூரமாக அழிக்கப்படுகின்றன; நடப்பு... நடப்பு அதுவும் இயந்திரச் செயலாக உயிரற்று மாய்கிறது. அவன் இன்று அருவியாய் பொறுமைகளைக் குளிர்விக்கும் பழைய நினைவுகளை அழித்துக் கொள்ள விரும்பவில்லை. கையில் அகப்பட்டதையெல்லாம் படிக்கும் ஆர்வம் அவனுக்கு ஒரு காலத்தில் இருந்தது. பரீட்சையில் தேறப் படிக்க வேண்டும்; பட்டத்தைக் கொண்டு ஒரு வேலையில் தொற்றிக் கொள்ள வேண்டும். அது வற்றாத கறவைப் பசுவாக அவனுக்குப் பொருள் வளத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இலட் சியங்களை அவனுடைய தந்தையும், முகமறியா வயதில் அன்னையை இழந்தாலும், அந்த அன்னையின் தங்கையே வாய்த்த அன்னையாக அவனுக்கு அறிவுறுத்தியும் அவனுடைய உள்ளம் அந்த இலட்சியங்களைப் பற்றிக் கொள்ளவில்லை. கணக்குப் பாடத்தில் தோற்றான். ஆனால் படிக்க உட்கார்ந்தால் நேரம் போவது தெரியாது. நாள் கணக்கில் நூலகத்தில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களோடு மாடியில் அடைந்திருப்பான். “பரீட்சை எழுதும் எண்ணம் இருக்கிறதாமா உன் மகனுக்கு? உபயோகமத்த படிப்புப் படிச்சிட்டுப் பொழுதைப் போக்கினா இவனுக்கு எவன் வேலை கொடுப்பான்?” என்று தந்தை உறுமுவார். கல்லூரி இடைநிலை இரண்டாம் ஆண்டிலேயே சிவகாமியைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அவள் அடுப்படியிலேயே கிடப்பாள். நட்சத்திரங்கள் வாரி இரைத்தாற்போலிருந்த வானின் கீழ் மொட்டை மாடியில் அவள் கனவுக் கன்னிபோல் வர வேண்டும் என்று ஆசை. சத்திரம் போலிருந்த வீடு, தந்தையின் சோதரர், அவர் மக்கள், ஒன்றுவிட்ட சோதரியர், மாமன் மக்கள் என்று குழுமும் வீட்டில், அவளிடம் தனியாகப் பேசிவிட முடியுமா? இரவு ஓசை அடங்கியபின், இவன், எதோ ஓர் இரை விலங்குபோல் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருக்க வேண்டும். இதை அவன் வெறுத்தான். மனைவி குற்றேவலும், அடுக்களைப் பணியும் செய்து ஓய்ந்தபின் இரவில் உடற்பசியைத் தீர்க்கும் கருவியாக மதிக்கப்பெறுவதை உடைக்க வேண்டும் என்று கொதித்தான். ஒருநாள், பின்கட்டில், உண்டு கை கழுவச் செம்பில் நீர் மொண்டுத் தந்தவளின் செவியோடு, “மாடிக்கு வா, தெற்கோரம் மொட்டை மாடியில்...” என்று பட்டாளத்துக்காரன் அடையாளம் கூறுவதுபோல் கூறினான். “என்னத்தான்? இங்கே ஓரமா வந்து படுத்திட்டீங்க? நானும் இங்கேயே படுக்கட்டுமா?...” இங்கிதம் தெரியாத மாமன் மக்கள்; பெரியப்பன் சிற்றப்பன் வாரிசுகள்... எல்லாம் மொட்டைக் கனவுகள். எத்தனையோ நாட்களில் அவனுடைய கனவுகளில் வானிலிருந்து நட்சத்திரம் சிவகாமியாக வருவதுண்டு. காலம் என்ற ஒன்று மூப்பு, வறுமை என்ற துன்பங்களாகிய போர்வைகளை உரித்தெறிந்துவிட்டு அவனிடம் சரணடைந்ததுண்டு. ஒருநாள் இருளில் அவள் கையைப்பற்றி மாடிக்கு இழுத்து வந்திருக்கிறான். “சிவகாமி, உன்னை இந்த வீட்டைவிட்டு நான் ஒரு லட்சிய உலகுக்குக் கொண்டு போகப் போறேன். துன்பமேயில்லாத உலகம். அங்கு மூப்பு, பிணி ஒன்றுமே கிடையாது.” “சீ, என்னங்க இது? யாரானும் பார்த்தால் என்ன நினைப்பாங்க? அத்தையும் மாமாவும் பார்த்தா என்ன நினைப்பாங்க? கனகு முழிச்சிட்டிருந்தா, எனக்கு வெக்கமாயிருக்குது...” “நான் விடமாட்டேன். நீ என்னுடையவள்தானே?” “நல்ல பயித்தியம் புடிச்சிது. மானக்கேடு! உங்க தம்பி கூட வேலைக்குப் போகத் தொடங்கிட்டார். எனக்குன்னு ஒரு சேலை வாங்கிட்டுவர உங்களால் ஆகாது. விடுங்க என்னை!” அவனுடைய பிடியிலிருந்து விடுபட அவள் போராடினாள். கனவுகள் பூச்சழிந்து பல்லிளித்தன. நிலையாமையையும் துன்பத்தையும் வென்றதாகக் கருதிய காலம் கூடப் பொய். சினிமாப் படப்பிடிப்பின் அட்டைச் சந்திரன். அவள் அவனுக்குக் காலத்தை வெல்லும் இலட்சிய அணங்காக ஒரு கணம் கூடத் தோற்றவில்லை. இரத்தமும் நிணமும், பாரம்பரியமான வழக்கங்களும் பேதைமைகளும் அஞ்ஞானங்களும் மவுடீகமும் வேரூன்றிய பெண். கல்வியென்பது அடுக்களை ஞானமும், மலர்ச்சி என்பது தாய்மைக் கொடியில் முகிழ்க்கும் அரும்புகளும் என்ற சித்தாந்தத்தில் விளைந்தவள். அவனுடைய மென்மையான உணர்வுகளை அவள் உணரவில்லை. கன்றுக்குட்டி பாலும் புல்லும் அருந்தியே பசுவாகும். பருப்பும் சோறும் இட்டாலும் அதற்குத் தனியான சுவை தெரியாது. இவனுடைய கிளர்ச்சிகள், ஆசைகள் அவளுக்குத் தொடக்கத்தில் பருப்பும் சோறுமாகத் தோற்றியிருக்க வேண்டும். தந்தை யிடம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்று, அவளுக்குப் பூக்கள் அச்சிட்டதொரு வாயில் சேலையும், ரவிக்கையும் வாங்கி வந்தான். வீட்டில் பூகம்பம் உண்டாயிற்று, வெறும் சுவையில் கரைந்துபோகும் தீனி வயிற்றை நிரப்பப் போதுமா? அவள் அவனுக்குப் புல்லுக்கட்டானதோர் சுமையை வற்புறுத்தி அவனைப் பற்றித் தள்ளினாள். வெருட்டினாள். அவன் புல்லுக்கட்டைத் தேடித் தேடி அலைந்தான்; திரிந்தான். அது கிடைக்கவில்லை. அலைந்து ஓய்ந்த நிராசையில் பருப்பும் சோறும் தந்த உணர்வும் சுவையும் மறந்து போயிற்று. கிடைத்ததைப் பற்றிக்கொள்ள வேண்டிய நிலை வந்தது. “கை வளையல் எங்கேன்னு அத்தை கேட்டாங்க. கிணத்துக் கயித்தில மாட்டி இழுத்து ஒடிஞ்சிபோச்சி. கழட்டிருக்கேன்னு பொய் சொன்னேன். ஒரு ஆண் பிள்ளை, ரோசமில்ல உங்களுக்கு? மூட்டை தூக்கின்னாலும் நாலு காசு சம்பாதிக்கணும்னு சொல்லுவாங்க. என் தலைவிதியா நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கிறீங்க? ஒரு பொண்ணு குழந்தை பிறந்தப்புறமும் பழைய கணக்கிலியே பொறுப்பில்லாம இருக்கிறீங் களே?” அந்த வேலை தேடி அலைந்த விவரங்கள் கசப்பானவை. ஒரு வீட்டில் நான்காம் வகுப்புப் பையனுக்கும் ஆறாம் வகுப்புப் பெண்ணுக்கும் இருபது ரூபாய்ச் சம்பளத்துக்கு பாடம் கற்பிக்கச் சென்றான். “பிள்ளைங்க எந்திரிக்குமுன்ன கொஞ்சம் மார்க்கெட்டுக்குப் போய் வந்திடுங்க...” என்று பையையும் ஒரு ரூபாய் நோட்டையும் கொண்டு வந்து போட்டாள் வீட்டு அம்மாள். அவன் பிறகு அந்தப்படி ஏறவில்லை. “மார்க்கெட்டுக்குப் போனா என்ன தப்பு? வீட்டில யாரும் இருந்திருக்க மாட்டாங்க. பெரிய வீட்டுப் பொண்ணு அது...” என்று தாயே தன் சிபாரிசில் பிடித்த வேலையை விட்டுவிட்டானே என்று ஏசினாள். வேலைக்கான விண்ணப்பத்தைக் கண்முன்பே குப்பைக் கூடையில் போட்டார் ஒரு பெரிய மனிதர். பத்து நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்லிவிட்டு, “எங்களுக்கு உன் திறமை அதிகம். நீ ஏற்ற இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம்” என்று பாதிச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பினார்கள் ஓரிடத்தில். மருந்துக்கடைச் சேவகன், வக்கீல் எழுத்தன், டியூஷன் வாத்தியார்... அவனுக்குச் சொந்தமாக எந்த வேலையும் பொருந்தவில்லை. ஊரிலிருந்த சிலரைச் சேர்த்துக் கொண்டு கலாரங்கம் என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தினான். ஒரு மாதம் வீணைக் கச்சேரி; ஒரு மாதம் நாடகம்; ஒரு மாதம் கலை - இலக்கிய விவாதம்; பழைய பத்திரிகை புத்தகங்களைச் சேர்த்து நூலகம் நடத்தினான். அது ஒருநாள் தீ விபத்துக்கு ஆளாயிற்று. வீடு போர்க்களமாயிற்று. மனமொடிந்து எங்கெங்கோ அலைந்தான், ஏதேனும் ஓர் வேலையில் ஐந்தாறு மாதங்கள் இருப்பான்: வீட்டுக்கு வருவான். பணமில்லை என்ற காரணத்தைக் காட்டி இரகசியமாக இடிக்கும் மனைவி; தாய்... தந்தையின் மரணம் கூட அவனைப் பொறுத்த மட்டில் பாதிக்காத சடங்காகத்தானாயிற்று. அப்போது மூன்று நாளைய முழுச் சாப்பாடு இல்லாப் பட்டினியில் சோர்ந்து இருந்தான். அவன் அப்போது கடைசியாக ஒரு கட்டிட கண்டிராக்ட்காரரிடம் கூலிக் கணக்கு எழுதி சம்பளப் பட்டியல் போடும் வேலையை ஒரு நாளைக்கு இரண்டரை ரூபாய் கூலிக்குச் செய்தான். தொழிலாளர் வேலை நிறுத்தம், அடிதடி காரணமாக யார் செய்த தவறோ அவன்மீதில் விழ, அவனுக்கு வேலை போயிற்று. இவனால் அறிவுபூர்வமாக இவனுக்குச் சமமில்லாதவர்களுக்குத் தலைவனாகவும் இயலவில்லை. அறிவுபூர்வமாக இவனுக்குச் சமமானவர்களுடன் தோழமை கொள்ளும் பொருள் நிலை அந்தஸ்தும் இல்லை. தானாகத் தாழ்ந்து, கூலிக்காக எதையும் செய்யும் மனக்கோட்டமும் இல்லை. ஓர் இலட்சியத்தை எண்ணி அதற்காக உழைக்கும் உறுதி இருந்திருந்தாலும் அவன் தன்னை மிகப் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்க மாட்டான். எல்லாமே காலங் கடந்துவிட்ட நிலை. தேநீர்க்கடை நாயரிடம் இனி கடன் கேட்க முடி யாது. அடுத்த வேலை எங்கே போய்த் தேடுவது? அடையாற்றை ஒட்டிய பூங்கா மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்திருந்தான். மனச்சோர்வு; உடல் சோர்வு; பசிச்சோர்வு. கனவு கண்டாற்போல் பேச்சொலி கேட்டது. “உருப்படிக்குப் பத்து பைசாக்கு மேலேயே தரேன்றேன். வேலைக்கு ஆள் கிடைக்கலப்பா. தேடிட்டிருக்கிறேன்...” “கேட்டுச் சொல்றேன்...” “ஒரு நாளைக்கு முந்நூறு, முன்னூத்தம்பது, நானூறு கூட வரும், ஆள்தான் கிடைக்கல. ஜட்கா வேலைன்னாக் கூடப் பரவாயில்லை...” அவனுடைய செவிகள் சிலிர்த்துக் கொண்டன. தேனை ஏந்தும் கிண்ணங்களாயின. “வாரவன் பத்து எட்டு உருப்படியோட போயிடறான். நாலு பேர் வந்து தாக்குப்புடிக்காம போயிட்டான். என்னாலயே பார்க்க சிரமமாயிருக்கு. மாமூது போன பிறகு நிலையா ஆளில்ல...” இவன் விசுக்கென்று தலைநிமிர்ந்தான். அந்த வெயிலில் பீடி குடித்துக்கொண்டு முட் செடியின் அருகில் ஒரு தொப்பி வைத்த சாய்பு நின்றார். அருகில் மேனியில் சட்டை இல்லாததொரு கூலிக்காரன் இருந்தான். “என்ன வேலைங்க? நான் வரேன்...” அவன் அவர் முன் நின்றபோது அவர் சற்றே திடுக்கிட்டாற்போல் பார்த்தார். “...யாரு...யாரப்பா நீ?” “வேலை ஒண்ணும் இல்லாம இருக்கேன். என்ன வேலைன்னாலும் செய்வேன்...” அவர் பார்ப்பதற்கு கண்ணியமானவராக இருந்தார். அவனை ஏற இறங்க நோக்கினார். “உன்னைப் பார்த்தால் படிச்சவன் போல இருக்கு? படிச்சவங்க செய்யும் எழுத்து வேலையில்ல இது...” அவன் மனதை உறுதியாக்கிக் கொண்டான். வேலை கைவரையிலும் வந்து நழுவிவிடக் கூடாது. எட்டாமல். ஒரு உருப்படி தோய்க்க, துவைக்க, சலவை செய்யப் பத்துப் பைசாவா? துவைக்கலாமே? உடலுழைத்து எந்த வேலை செய்தால் என்ன? பிறகு ஜட்கா வண்டியில் ஏற்றிப் போக வேண்டுமா? அல்லது கழுதையின் மேலேற்றிக் கொண்டு போக வேண்டுமா? அதைத் தான் ஜட்கா என்று இடக்காகச் சொல்கிறார்களோ! கழுதையின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு போனால்தானென்ன? மனதோடு சுவையூறும் நகை மின்னல் நெளிய அவன், “படிச்சவன் இல்லைய்ய நான். படிச்சாக்கூட எல்லாருக்கும் எழுத்து வேலைதான் செய்யணும்னா கட்டுபடியாகுமா? எந்த உடலுழைப்பு வேலைனாலும் நான் செய்வேன். எனக்கு வயிறு இருக்கு; பசி இருக்கு; அதுக்குமேல குடும்பம்னு வேற ஒண்ணு இருக்கு. எந்த வேலையானாலும் செய்வேன், பாய்!” “எந்த வேலைனாலும் செய்வே?” என்றார் அவர் மறுபடியும். “பொய் புரட்டு, பித்தலாட்டம் இல்லாத வேலை எதையும் செய்வேன். எந்த வேலையைச் செய்தாலும் நேர்மை மாறாததுன்னா அதில் குறைச்சலுக்கு ஒண்ணுமில்ல. நான் வேலை செய்யாம யாரிடமும் கூலி கேட்கமாட்டேன். கூலிக்குன்னு நேர்மை இல்லாததைச் செய்யமாட்டேன்...” “பொய் புரட்டெல்லாமில்ல. ஆனா நீ ரெண்டு உருப்படி கூடச் செய்ய முடியுமான்னு தெரியல. செய்யிறதானா நாளைக் காலமே இங்கியே வா. இந்த ஆளே உன்னை இட்டாருவான்...” அன்றிரவு அவன் வழக்கமாகப் படுத்துறங்கிய தேநீர்க் கடைச் சந்தில் உறக்கம் பிடிக்கவில்லை. ஊரார் மாசு கழுவும் பணி, துணி துவைத்தல். எந்தத் தொழில் செய்தாலென்ன? தொழில் மேன்மையானது. அதுவும் ஊரார் அழுக்கைக் கரைத்து உன் மன அழுக்கைக் கரைக்கிறாய்; உன் மன அழுக்கு; உன் மன அழுக்கு. ஆற்றில் அலசி அலசிக் கரைத்தபின் வெளுத்த சுமையைக் கழுதை மீது போட்டுக் கொண்டு செல்வான். பாவ அழுக்கு ஒட்டாத பேதைமை, கழுதை... சிவகாமி! உன் புருஷன் உச் உச்... உச்சென்று அறைந்து அறைந்து தன் அகங்காரத்தைத் தொலைப்பான். ஒரு உருப்படிக்குப் பத்து காசு. முந்நூறு - முப்பது ரூபாய்... ஒரு நாளைக்கு முப்பது ரூபாய்! ஒரு நாளைக்கு நானூறு ஐநாறு துணி துவைத்தால் ஐம்பது ரூபாயா? ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாயானால் ஒரு மாசம் ஆயிரத்து ஐநாறு ரூபாய்...! உடலுழைப்பின் மகத்துவத்தை இந்நாள் உணரவில்லையே அவன்! துணி துவைக்கும் தொழிலில் இப்படி ஒரு நிதியம் கொட்டிக் கிடக்கிறதா? உலக அனுபவத்தின் கசப்பான துளிகளைச் சுவைத்திருந்தும் அவனுடைய சிந்தனையில், இப்படிச் கொட்டிக் கிடக்கும் ஓர் தொழிலுக்கு தொழிலாளன் பஞ்சம் வந்திருக்குமா என்ற முடிச்சு தட்டுப்படவில்லை. “எனக்கு வேலை கிடைச்சிட்டது நாயரே, உங்க கடனை சீக்கிரமே கொடுத்திடுவேன்” என்று கூறித் தேநீர் அருந்திவிட்டுக் காலையில் கிளம்பினாள். அந்தக் காலை நேரம் மிக இனிமையாக இருந்தது. அப்போது, மண்காய்ந்தபின் வானிலிருந்து விழும் அமுதத் துளிகளை உள் வாங்கிக் கொண்டு பச்சை பூரிக்கும் பொற்காலம். அவன் பாலம் கடந்து வருகையில் சலவையாளர் துறையைப் பார்க்கையில் என்னவெல்லாம் நினைத்தான்! நீர் இனிமை; மக்களின் மாசெல்லாம்கூட இனிமை. ஒரு பெண் வளைக்கையை ஓங்கி ‘உச் உச்’ சென்ற ஒலியுடன் துணியைக் கல்லில் அறைத்தாள். மின்னல் வீச்சைப் போன்ற அவளுடைய அசைவும், பிறகு ஓசையும், ஓர் இன்னிசை நாட்டியக் கச்சேரியின் தாளக் கட்டில் பிறக்கும் இனிய உணர்வுகளைக் கிளர்த்தின. வேலை கிடைத்ததும் சிவகாமிக்கு வளையலை வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். எத்தனை நாளாகச் சொல்லிக் காட்டுகிறாள்? ரேகா... சுவர்ண ரேகா என்று அவன்தான் தன் செல்வக் குழந்தைக்குப் பெயரிட்டான். அவள் சிறுமிப் பருவம் கடந்து பொற்கொடியாகத் திகழ்கிறாள். அவனுக்குப் பொறுப்பு அதிகம். துருவெடுத்தால் குபுகுபென்று பொங்கி வரும் நீரைப்போல் அன்று அவனுடைய உள்ளத்தில் பாசம் பொங்கி வந்தது. தன்னுடைய சின்னஞ் சிறு உலகைப் பேணி இன்பம் காணத் தெரியாதவனால் உலகை எப்படி ஒப்புரவோடு காண முடியும்? என்ன பேதைமை? அவன் படித்த படிப்பு அவனைப் பிழைக்கத் தெரியாதவன் ஆக்கிவிட்டதா, அல்லது அவன்தான் தான் பெரிய கல்வியும் கலையுணர்வும் கொண்டவன் என்று ஆணவக் கூட்டில் ஒதுங்கிப் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டானா? இந்த உடலைச் செருப்பாக்கி உழைத்துப் பொருள் தேடி மனைவியையும் மகளையும் மகிழ வைப்பேன்; தாயின் முகம் மலரச் செய்வேன்... என்றெல்லாம் அன்று தன்னைப் பணியிடத்துக்கு அழைத்துச் செல்பவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் வந்தான். பணியிடத்தைக் காட்ட அழைத்துச் சென்றான். கொட்டகை வாயில். ஆடுகள்...ஆடுகள்... ஆடுகள். முத்திரைச் சின்னங்களுடன் கொத்துக் கொத்தாய், கறுப்பும் வெளுப்பும், பழுப்புமாக ஆடுகள். மலையான நம்பிக்கை உறுதிகள் சரிந்து நொறுங்கினாற்போன்ற அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமலே நின்றான். “என்னப்பா? சம்மதமா?...” என்று கேட்ட ‘பாய்’ வேலை மும்முரத்தில் இருந்தார். வெண்மையான அடிப்புறங்கள் வானை நோக்க, கழுத்தில் குரல்வளை நாளத்தில் செங்குருதி பீச்சிட... சடங்குக்குக் காக்கி உடுப்புக் கால்நடை மருத்துவ அதிகாரி சாட்சியமாகி நிற்கிறார். இரத்தம் பீறிடவிட்டு, தலைவேறு முண்டம் வேறானபின் உயர மேடையில் கொக்கியில் மாட்டி. நிணத்தை வேறாக்கி மீண்டும் அவர் பார்வையிடக் காட்டுகின்றனர். அவன் அடித்து வைத்த சிலைபோல் குவிந்த தலைகளை, உடல்களைப் பார்த்தான். நெஞ்சு சில்லிட்டுப் போயிற்று. ஒரு உருப்படிக்குப் பத்து பைசா... ஒரு உருப்படி, ஒரு உருப்படி, ஒரு ஆடு... அவன் நிற்கையில், பாய் அவனைத் தலையை ஆட்டி அழைத்தார். “வரியா? புடிச்சிக்க...” “ஐயோ, வேண்டாங்க... நான்... உசந்த குலத்தில் பிறந்தவன்” என்று உள்ளம் ஒதுங்கியது. ஆனால்... அவன் தன்னையறியாமல் சென்று முன்னங்கால்கள், பின்னங்கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவர் “பிஸ்மில்லா...” என்று ஏதோ முணமுணத்துவிட்டு கைக் கத்தியை இழுத்தார்... இந்தக் கார்த்திகைப் பொழுதிலும் அவனுக்கு இறுக்கமாக இருக்கிறது! தாழ்வரையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறான். நினைவுகளை வெருட்ட முடியவில்லை. கதவுத் தாழை அசைத்து ஒலியெழுப்பிக்கொண்டு வள்ளி வருகிறாள். சிலும்பல் தெரியாமல் வாரி கூந்தலை வட்டக் கொண்டையாக முடித்திருக்கிறாள். நெற்றியில் குங்குமமில்லை. ஆனால் காதுகளில் லட்டுத் தோடும், மூக்கில் அன்ன மூக்குத்தியும் அணிந்திருக்கிறாள். நல்ல சிவப்பு ரவிக்கை; வெங்காயச்சருகு போன்ற ரோஸ் நைலான் சேலை. கையில் தட்டில் சோறும், கிண்ணத்தில் குழம்பும் இறைச்சி வறுகலும் கொண்டு வருகிறாள். கீழே தட்டை வைத்துப் பரிமாறும் போது சொல்லி வைத்தாற்போல் அம்புலிப் பயல் வருகிறான். வள்ளியின் ஐந்து வயசு மகன். “ஏண்டா வந்தே? சோமாறி! வூட்டுக்குப்போடா!” “நீ ஏன் அவனை எப்பவும் விரட்டிட்டே இருக்கே?” அவன் குழம்பைப் பிசைந்து சோற்றில் ஒரு உருண்டையையும் கறித்துண்டையையும் கொடுக்கிறான் பையனிடம். “நீங்க என்னங்க, அந்தப் பயலுக்குத் துன்றது தவிர ஒண்ணில்ல. அங்கியும் துண்ணுவான். தம்பி வந்தாலும் இதே கதிதான். போடா போ.... ஆயா வந்திச்சா போயிப்பாரு!” “பின்ன ஏன் சோனியாயிருக்கிறான்? நான் சொல்றேன் கேளு. அவனை இஸ்கோலுக்கு இப்ப அனுப்பாதே. ஒரு வருசம் போகட்டும்!” “வயிசாயிட்டுதுங்க அதுக்கு! அதும் அப்பன் சாவறச்சே ஒரு வயசுப் பய. அதும் அப்பன் அப்பிடித் தானிருக்கும். முக்காப்படி அரிசிச் சோறு துண்ணாலும் போன எடம் தெரியாது! போடாலேய்!” பையனை விரட்டிவிட்டு அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். “ஏங்க, அப்பிடியே வச்சிட்டீங்க? நல்லால்லியா? ஆயாதான் ஆக்கிச்சி...” “போதும் போ...” கையைக் கழுவிக் கொள்கிறான். அவன் வெளியே சந்துப் பக்கம் சென்று புகை குடித்துக் கொண்டு நிற்கிறான். கடைவாயிலில் கூட்டமில்லை. வாயிலில் ஒரு ஸ்கூட்டர் வந்து நிற்கிறது. அதில் ஒரு இளம்பெண்ணும் ஆணும் இருக்கின்றனர். இளைஞன் வண்டியைத் தள்ளிக் கடையோரமாக நிறுத்துகிறான். இருவருமாகச் சந்துக்குள் வருகின்றனர். பெண் முக்காடிட்டுக் கொண்டிருக்கிறாள். அவர்கள் மாடிக்குச் செல்கின்றனர். யாரோ? யார் யாரோ வருகின்றனர்; செல்கின்றனர். வள்ளி, முத்தாயி, எல்லப்பன், யாருமே பந்தமில்லை. இரத்த பந்தங்களாக இருந்த பாசங்கள், பிறப்பின் பாரம்பரியங்களுடனும், சூழலுடனும் பழக்க வழக் கங்களினின்றும் அறிவில் மலர்ந்த சிந்தனைகளுடனும் தொடர்பான இயல்புகள் எல்லாமே குரூரமாக அழிக்கப்பெற அவன் வாழ்கிறான். இந்த நாட்களில், அவனுக்கு நாட்டு நடப்பு தெரியாது; அரசியல் தெரி யாது. விலைவாசி தெரியாது; அவனுடைய மென்மையான உணர்வுகளெல்லாம் ஒரு சில விலங்குத் தேவைகளிடம் விடை பெற்றுக் கொண்டு அவனை விட்டு அகன்றுவிட்டன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமான ‘யாருக்கு’ என்ற மூலமே அழிந்துவிட அவன் உயிர் வாழுகிறான். ‘அவன்’ அவனா உயிர் வாழுகிறான்? ‘அவன்’ அந்த அவன் இறந்து போய்விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மென்மைகளை, உயிர்ப்புக்களுக்கு மூலாதாரமான ஊற்றுக்களை அழித்துத் தன்னையே கொன்று கொண்டான். இன்று அந்த இழப்பின் சோகம் குபீலென்று அவனுள் குழி பறிக்கிறது. புருவங்களின் நடுவே துளி திருநீறும் ஒரு பொட்டு குங்குமமுமாகத் தோன்றிய அந்த இளம்முகம் அவனுடைய கண்களை விட்டகல மறுக்கிறது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழியாததென்ற உணர்வை அக்குடும்பத்தில் பிறக்கும் போதே அறிவுறுத்த அவர்களுடைய வீட்டுச் சுற்றிலே சமாதி இருக்கிறது. சிவராத்திரிக்கு முன்பாகப் பசுவின் கருக்காய்களைப் புடம்போட்டுத் திருநீறு எடுத்து வைப்பார்கள். அந்தத் திருநீறு அவளும் புருவத்தில் வைத்திருந்தாள். அந்தக் குழந்தை அவளைப் புரிந்து கொண்டிருப்பாளோ? இந்நேரம் அவள்... சிவகாமி...? |