உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
9 “என்னம்மா இது! நீ அவனை... ‘லவ்’ பண்றதால்ல நான் நினைச்சேன்?” ஜானிராஜ் சிரித்தவண்ணம் கேட்கையில் ரேகா கடுகிலும் கடுகாகக் குன்றிப் போகிறாள். உள்ளம் தளிரிலை போல் நடுங்குகிறது. “...இல்ல சார், அப்படி நினைக்கக்கூடத் துணிய மாட்டேன். எனக்கு...” குபுக்கென்று கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. ஒத்திக் கொள்கிறாள். “ஐ ஸீ... நான் தப்பா நினைச்சிட்டேனா? ரெண்டு பேரும் ஹின்டூஸ், சேந்து சாப்பிட்டீங்க, பேசுறீங்கன்னுதான் சாதாரணமா நினைச்சேன்...” அவளுக்கு ஆயிரமாயிரம் ஊசிகள் குத்தினாற் போலிருக்கிறது. “எங்க வீட்டில்... என் பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கிறவர் கூட யாருமில்ல. நல்ல விதமாகப் படிச்சு முன்னுக்கு வந்து நல்ல பதவிகளில் இருக்கும் எட்டிய உறவினரெல்லாம் எங்களுக்கு இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டனார் காலத்துக்குப் பிறகு அத்தகையவர் யாருமே எங்களுடன் தொடர்பாக இருக்கவில்லை. புரட்சிகரமாக இருக்க வேண்டிய அம்சங்களில் மாற மறுத்து, காலத்துக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பழைய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கும் குடும்பம் சார், எங்களுடையது. என்னை மேலே படிக்க வைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எதோ தெய்வதீனமாக பம்பாயிலிருந்து வந்த மாமன் இந்த வேலைக்கு வழி செய்துவிட்டுப் போனார். இதுவே புரட்சியாக இருக்கு... ஆனால்... நம்பி... நான் எப்படி சார் சொல்லட்டும்? அநாவசிய ‘லிபர்ட்டீசெ’ல்லாம் எடுத்துக்கறாரு. அவராக டிபன் பாத்திரத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கிறார் சார், நான் மறுக்கிறேன்; ஆனாலும் பயமாயிருக்கு சார். உங்களை என் தகப்பனார் மாதிரி நினைச்சுப் பேசுறேன் சார்...” கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். மனப்பளு சற்றே கரைகிறது. “ஐ ஸீ...!” என்று குனிந்து நிமிரும் ஜானிராஜின் கண்ணாடிக்குள் இணக்கமான அன்பின் கனிவு தெரிகிறது. “நீ பயப்படாதேம்மா. எனக்கு அஞ்சு டாட்டர்ஸ் இருக்காங்க. உன்னை மூத்த மகளா நினைச்சிக்கிறேன். நல்ல வேளையா நீ சொல்லிட்டே. நீ என்னை யோசனைன்னு கேட்டா, இந்த வேலையை விட்டுவிடுவது தான் சரின்னு சொல்வேன்...” “ஐயோ, வேற வேலை எங்கே சார் கிடைக்கும்? அதைச் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் சார். சொல்லப் போனா, நான் வேலை எதுவும் செய்து சம்பாதிக்காம இருந்த நாளில் எல்லாம் ஒரு மாதிரி வறுமையைச் சமாளிச்சோம். மேலுக்குக் கவுரவமாக வாழுகிறோமே ஒழிய, பாதி நாட்களில் அன்றாடச் சமையலே பிரச்சினையாகிவிடுகிறது. இப்ப இந்தச் சம்பளம் வந்த பிறகு நானாக வேலையை விடுவதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டாக சார்! நீங்க எப்படின்னாலும் பெரிய முதலாளியிடம் சொல்லி, என்னை அவுங்க மவுன்டு ரோட் ஆபீசில் எடுத்துக்கச் சொல்ல முடியாதா? அங்கே என்னைப்போல் இரண்டு பெண்ணிருந்தா, அதுவே ஒரு தெம்பாக இருக்கும்...” “உனக்கு குவாலிபிகேஷனும் இல்லியேம்மா? ஸ்டெனோ, டெலிபோன் ஆபரேடர் பஞ்ச் அபரேடர்னு எந்த வகையிலும் போடுறதுக்கில்லையே?” பற்றிக்கொள்ள எண்ணி முயன்றவளுக்கு ஒரு தும்பும் கிடைக்கவில்லை. “எனக்கு என்ன செய்வதுன்னு புரியல சார், நால் நாள் முன்ன பாருங்க சார், நீங்க அன்னிக்கு வேறெங்கோ வேலைன்னு போயிட்டீங்களா? இவர் பகல்ல குடிச்சிட்டு வந்திருக்கிறார். சொல்றாரு, ‘ஆர்ச்சர்டில’ நான் படுத்துத் தூங்கப்போறேன். எனக்கு உடம்பு சரியில்ல. நீ வந்து ரூம் கதவைப் பூட்டி வெளியே சாவி வச்சுக்க. அஞ்சு மணிக்குத் திறந்துவிடு’ன்னாரு. எனக்கு ரொம்ப பயமாப் போச்சு. உண்மையில ‘ஆர்ச்சர்டு’ன்னு உள்ள செஸ்ட் ஹவுஸ் எதோ இருக்குன்னு தெரியுமே ஒழிய, இந்த கிணத்துக்கப்பால நான் போனதில்ல. உள்ள நடுங்கினாலும், தைரியமா, ‘சார் இந்த வேலயெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதிங்’கன்னேன். நல்ல வேலையா அப்ப ராமசாமியும் சம்பங்கியும் வந்தாங்க. போயிட்டாரு. எனக்குப் பயமா இருக்கு சார், ஒருநாள் போவது ஒரு கண்டமாயிருக்கு சார்...” “சே, சே... அவன் மகா மட்டமான ஆளு. உசந்த ஜாதின்னு சொல்லிக்கிறாங்க, இந்த கோகுல் பெரிய இடம். நமக்குச் சம்பளம் போடுகிறாங்கதான். ரொம்ப மோசம். இவனுக்கு அவன் வேண்டியவன், நமக்கென்ன வேணும்னு நான் பாக்காம போயிடுறேன். இந்த ஆர்ச்சர்டு பங்களா தோட்டம் வாங்கும் போதே இருந்தது. அதுக்கு ஐம்பதாயிரம் செலவு பண்ணி ஜோடிச்சான். எல்லாம் கண் மறைவு நாடகத்துக்கு. பெரியவருக்கு இதெல்லாம் கவனிக்க நேரம் கிடையாது. எப்பிடியோ போவுது!... ஏம்மா, உங்கப்பாவுக்கு... எதானும் சீக்கா? ஆஸ்பத்திரில எங்கானும் இருக்காரா?” புருவம் நெருங்க ஜானிராஜ் குனிந்து கேட்கும் போது அவளுடைய கால் விரல்கள் நிலத்தைச் சீந்துகின்றன. கண்ணீர் மளமளவென்று பெருகுகிறது. “...சே... வேணாம்மா, அழுவாதே, உனக்குச் சொல்லக் கஷ்டமாயிருந்தால் சொல்ல வேண்டாம்...” “இல்ல சார், உங்ககிட்ட சொல்லத்தான் போகிறேன். சீக்கான்னு கேட்டீங்களே, அப்படி எங்கேயானும் தீராத நோய்னு ஆஸ்பத்திரியில் இருந்தாக்கூட தேவலேன்னு நினைக்கிறேன். அவர் ஒரு பிரச்சினை. என்னுடைய இன்றைய இந்தக் குழப்ப நிலைக்கே அவர்தான் காரணம்னு சொல்லலாம். நான் எப்போதும் தனியே இருந்து இருந்து அவரைப் பத்தியும் எங்க வீட்டைப் பத்தியும் நினைச்சு நினைச்சு பார்ப்பேன். அவர் எங்க தாத்தா நாளிலேயே ஒரு புரட்சிக்காரர்னு சொல்லணும். எனக்குத் தெரிஞ்சு சண்டை போட்டிருக்கிறார், படிப்பை முடிச்சு எல்லோரையும் போல் ஒரு வேலையில் அமர்ந்து குடும்பத்துக்கு சம்பாதிக்கல. எனக்கு நினைவு தெரிஞ்சு திடீர்னு புயல்போல் வருவார். ஒரே சந்தோஷமாயிருக்கும் எனக்கு. ஒரு மாசம் தங்குவார். அதற்குள் சண்டை வந்திடும். அம்மா அழும். பழையபடி ஒரு நாள் போயிடுவார். வந்து தங்கும் நாளில் எப்பவும் அம்மா அழுவதும் கெஞ்சுவதும் தான் எனக்கு நினைவிருக்கு. அவர் போன பிறகு கல்லுமாதிரியாவிடும் எங்கம்மா முகம். ஒரு தடவை, நான் நைன்த் படிக்கிறப்ப... பொங்கலுக்கு முன்னன்னு நினைப்பு, வந்தார்...” சட்டென்று இதெல்லாம் இவரிடம் சொல்லலாமா என்ற நினைவு குறுக்கிட்டாற்போல் அவள் நிற்கிறாள். அந்தத் தடவை அவள் ஓடி வந்து அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொங்கவில்லை. ஏனெனில் அந்த இடைவெளியில் அவள் பிள்ளைப் பருவத்தைக் கடந்து நாணம் குலவையிட மாற்றம் பெற்றிருந்தாள். அவர் அந்தப் புதுமையை பார்வையிலேயே உணர்ந்து வியந்தவராக நின்றார். “ஓ!” என்ற வியப்பு புன்னகையாய் அவிழ்ந்தது. ஜானிராஜ் “அப்புறம்?” என்று அவளை நிகழ்கால வரைக்குள் கொண்டு வருகிறார். “அதான் ஒரே சண்டை. பெண்ணு வளந்து நிக்கிது. நீ என்னடா, மானம் ரோசம் உள்ளவனா நடக்கிறயா? என்ன மனசில நினைச்சிட்டிருக்கேன்னு திட்டினாங்க?” “எப்போதும் அவர் வந்தால் உரிமையுடன் என்னை வெளியே பாட்டுக் கச்சேரி, நாடகம்னு கூட்டிப் போவார். ஓட்டலுக்குக் கூட்டிப் போவார். பூ வாங்கித் தருவார். இப்ப நானும் போகக்கூடாதென்று தடைபோட்டார்கள். அவர் மனசு ரொம்ப நோகும்படி பேசிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்தத் தடவை அவர் சொல்லிக்காமலே போயிட்டார். எனக்கு அவர் பொங்கல் வாழ்த்து அனுப்பாமலே இருக்கமாட்டார். அதுக்கப்புறம் அவர் எந்தத் தொடர்பும் வச்சுக்கல...” “உன் மம்மி கவலையே படலியா?” “அதான் சார் புத்தி. எங்கம்மா கல் யந்திரன்னு வச்சுக்கலாம். அவளிடம் சலனமே கிடையாது. உணர்ச்சி பூத்து நான் பார்த்ததில்ல. புருஷன் எப்படி இருக்கிறாரோன்னு கவலைப்படாத போனாலும் கட்டுக் கழுத்தியாக இருக்கணும்னு விரதம் இருப்பாள்!” “ஆனா, இப்ப உன் பாதர் எங்க இருக்கிறார்னு தெரியாது?” “அதான் சார் சொல்ல வந்தேன். அவர் இந்த பஸ்சில் ஒரு நாள் பிரயாணம் செய்தார். அவர்தான்னு எனக்குப் பார்த்த உடனே எதோ ஒண்ணு மனசில சொல்லிச்சு. சார், ஒரு ஈக்குக்கூடக் கேடு நினைக்கத் துணியாத மனிதர். வருஷக்கணக்கில் கொலைத் தொழில் செய்தா எப்படியிருப்பார்?” என்று கேட்டுவிட்டு ரேகா அவரை நிமிர்ந்து பார்க்கிறாள். “கொலைத் தொழிலா?” “ஆமாம் சார். அவர் ஒரு ஸ்லாட்டர் ஹவுசில் வேலை செய்கிறார்னு புரிந்தது. எப்படிப் போனார்னு தெரியாது. அதுக்காக குடிக்கப் பழகியிருக்கிறார். ஆள் ஹெப்டியா - கனமா அடையாளம் தெரியாம மாறிப் போயிட்டார். முகமெல்லாம் ஒரு கருமை. அழுத்தமாப் பதிய திட்டுத் திட்டாயிருந்தது. எனக்குத் திடுக்கிட்டுப் போச்சு. அவரை நான் புரிஞ்சிட்டாப்பல, அவரும் என்னைப் புரிஞ்சிட்டிருக்கிறார். அவர் அதற்குப் பிறகு அஞ்சாறு நாள் கழிச்சி எங்க வீட்டுக்கு வந்தார். அதாவது நான் போன அதே பஸ்சில்தான் வந்திருக்கிறார்.” “ஈவினிங்கா?” “ஆமாம். ஏழு மணிக்கு மேல இருக்கும். இருட்டு, வீட்டு வாசல் வராந்தாவில் நின்னு கூப்பிட்டார். பாட்டி, அம்மா, அத்தை எல்லாரையும் கூப்பிட்டார். ஆதரவில்லாத குழந்தைபோல் மன்னிக்கச் சொல்லி அழுதார் சார்...” இதைக் கூறும்போது அவள் குரல் நெகிழ்கிறது. “‘சிவகாமி, என்னை மன்னிச்சிடு. நான் எப்படியோ, விதி வசத்தால் குழியில் விழுந்திட்டேன்’னு சொல்லி அழுதார். அப்ப அவர் குடிச்சிருந்தார்னு நான் சொல்லமாட்டேன். அப்ப... அப்ப... சார், எங்க மாமனும் சித்தப்பாவும் அவரை யாரோ திருடன்னு அடிச்சித் தூக்கிட்டாங்க, சார்!” ஜானிராஜ் திடுக்குற்றாற்போல் பார்க்கிறார். “ரியலி? இதென்னம்மா, கதைபோல இருக்கு?” “ஆமாம் சார், எங்கம்மாவும் பாட்டியும் அப்ப கல்லுப்போல நின்னாங்க. அந்த சமயத்தில் அம்மா, ‘அவரை எப்படி அவர்தான்னு நம்பட்டும்’னு சந்தேகமாகப் பேசினாங்க. பிறகு நான் கேட்டப்ப, அப்படிக் குடிச்சிட்டு கசாப்பு வேலை செஞ்சவர்னு தெரிஞ்சா, உன்னை யார் வந்து இந்த வீட்டில் கல்யாணம் கட்டுவாங்கன்னு கேட்டாங்க சார். நான் துடிச்சுப் போறேன். கல்யாணம், குடும்பம், வாழ்வு எல்லாம் எனக்கு வெறுத்துப் போச்சு சார்...” கடைசியாக வரும் சொற்கள் வெறுப்பில் கிளர்ந்தெழுபவை. “இப்படிக்கூடவா இருப்பாங்க? எல்லாருந்தான் குடிக்கறாங்க. இத, நம்பி என்னென்னமோ செய்கிறான். ஆனா அவனும் சிஸ்டர் கூட இருக்கிறான். இதுக்காக, வீட்டைவிட்டு அடிச்சித் துரத்துவதா?” “அப்படிச் சொல்லிட முடியாது சார். நெறிமுறைகளை உடைக்கத் துணிவு இருப்பவர், நெறிகள் வெறும் விலங்காயிருந்ததுன்னு நிரூபிக்கணும். வாழ்க்கையை அதை உடைச்சதால் நான் மேன்மையாக்கிட்டேன்னு நிரூபிக்கணும். அவர் அந்தக் காலத்தில் பொருந்தி வேலை செய்யலே. ஆனா, அவர் ஒரு பெரிய கவிஞராவார்; இல்லாட்டி கலைஞராவார்னு நான் மனசிலே உள்ளூற ஒரு நம்பிக்கை வச்சிட்டிருந்தேன். என்னாலேயே இதை அவ்வளவு இலகுவா செமிக்க முடியலே சார். அவங்க... அந்த வீட்டுக்கப்பால உலகம் ஒண்ணு இருக்குன்ற உண்மையைப் பத்திக் கவலையே படாம காலத்தை ஓட்டிட்டவங்க. பாசம, பரிவு இணக்கம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்ட வெறும் வழக்கம்தான் சார் இருக்கு...” “வாட் எ பிடி!” ஜானிராஜ் அவளை மிகவும் அனுதாபத்துடன் நோக்குகிறார். “நீ கவலைப்படாதேம்மா. நான் சம்பங்கி, ராமசாமி, இன்னும் எல்லா ஆளிடமும் இந்தப் பக்கம் உன்னைப் பார்த்துக்கணும்னு சொல்லி வைக்கிறேன். நானும் உன்னை அவசியமா ஒவ்வொரு நாளும் வந்து பார்த்துக்கிறேன். நீ தைரியமாயிரு.” “ரொம்ப ஆறுதலாயிருக்கு சார். நீங்க வித்தியாசமா நினைக்க மாட்டீங்கன்னு எல்லாம் கொட்டிட்டேன். எனக்கு அந்தரங்கமா நினைச்சு சொல்ல ஒரு தோழி அக்கா தங்கச்சின்னு கூட யாரும் இல்ல...” “இதெல்லாம் என்னம்மா, நீ ஒண்ணு...” “சார், எனக்கென்னமோ, அந்த ராத்திரில அவங்க எல்லாம் அப்பாவை துரத்தினதிலேந்து அப்பா நினைப்பாகவே இருக்கு. அவரைப் போயிப் பார்க்கணும். அவரை நான் புரிஞ்சிட்டேன்னு சொல்லி அவர் பிச்சை கேட்ட அன்பை மறுக்கலேன்னு சொல்லணும்னு துடிப்பா இருக்கு. ஆனா, முன்பின் தெரியாத நான் எந்த இடத்தில் எப்படிப் போயி அவரைத் தேடுவேன்?...” “எங்கே இருக்கு அந்த ஸ்லாட்டர் ஹவுஸ்ன்னு தெரியுமா உனக்கு? நான் விசாரிச்சிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.” “இந்தப் பக்கம் எங்கேயோதான் இருக்கணும். ஒருநாள் முந்நூறு நானூறு ஆடுங்கன்னா...” “இங்கே பழைய கன்டோன்மென்ட் பக்கம் ஒரு ஆட்டுத் தொட்டி இருக்கு. ஆர்மி கன்ட்ராக்ட். மியான் சாயபுடையது. அதுவா?” “தெரியாதே சார் எனக்கு?” “நான் விசாரிக்கிறேன். நீ கவலையே படாம தைரியமா இரு. போம்மா...” இடைவேளை நேரத்தில் பல நாட்களாகத் துடித்த விவரங்களை ஜானிராஜிடம் இறக்கிய பிறகு சற்றே நிம்மதியாக இருக்கிறது. நம்பி அன்று அலுவலகத்துக்கு வந்து, உடனே கோகுலுடன் வெளியே போய்விட்டான். அதுதான் வாய்ப்பு. |