![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
8 கிழக்கு இந்தியக் கம்பெனிக்காரர் காலத்தில் கட்டினாற்போன்று தோன்றும் பங்களா அது. உருண்டையான சுதைத் தூண்களும் வளைவு வாயில்களும் ‘வெனிஷியன் ஷட்டர்’ எனப்பெறும் மரத்தடுப்புக் கதவுகளுமாக ஒரு காலத்தில், அந்த வெட்ட வெளிப் பிராந்தியத்தில் பொட்டல் நடுவே முளைத்த கனவு மாளிகையாக இருந்திருக்கக் கூடும். மின் தொடர் வண்டிப் பாதையும் பஸ் செல்லும் சாலையும் முன்னும் பின்னுமாக அமைந்திருந்த வசதி இருந்ததால், இடிந்து சிதைந்திருந்தாலும் அந்த மாளிகை காலியாயிருக்கவில்லை. அருகே சாலைக்கு அப்பால் அடுக்கு மாடிகளாக ஒரு ‘காலனி’ எழுப்பினாலும், இடிந்து சிதைந்த பழைய மரபுகளைப் போல் அந்தக் கட்டிடம் உயிர்த்திருக்கிறது. சுற்றியிருந்த வராந்தாக்களை மறைக்கும் சாக்கு - தகர மறைப்புக்களும், கயிறு அறுந்து குழிந்து தொங்கும் கட்டில்களும், நெறிகளும் வரமுறைகளும் தகர்ந்த ஆவேசங்களால் மோதிக் கொள்ளும் கூச்சல்களும் அந்த மாளிகைக்கு உரியவை. அந்தக் கட்டிடத்தின் உண்மையான அதிபர் யாரென்று பலருக்கும் தெரியாது. சுற்றுப்புரத்தில் தோன்றிய குடிசைகள், தேநீர்க்கடைகள் எல்லாவற்றிலும் இட வாடகை வசூலிக்க வரும் ஒரு நாயுடுதான் பங்களாவுக்கும் வாடகை வசூலிக்க வரும் ‘ஏஜண்டு’. ஐந்துக்கும் பத்துக்கும் வாடகைக்கு இடம் பிடித்துக் கொண்டவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாசம் செய்கின்றனர். நடுவே எவரேனும் மாற வேண்டி வந்தாலும் காலியான செய்தியே வெளியே தெரியாமலே ஆள் வந்துவிடுவார்கள். வெகுநாட்களாக மாறாதவர்கள் ஐந்து குடும்பத்தினர் தாம். நடுவிலுள்ள பெரிய கூடத்தை மூன்று அறைகளாக தடுத்துக் கொண்டு குடியிருக்கும் கோபிநாதனுக்குக் கிண்டியில் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை. முதல் மனைவிக்கு இரண்டு பெண்கள். இருவரும் ‘பத்தாவது’ என்ற எல்லையைக் கடக்காமல் கல்யாணத்துக்கு நிற்கின்றனர். இளையவளுக்கு இரண்டு பெண்களும் ஒரு பையனும் இருக்கின்றனர். அடுத்த பகுதியில் கோபிநாதனின் தங்கை மூன்று குழந்தைகளுடன் குடும்பம் நடத்துகிறாள். பின்புறத்தாழ்வரையைத் தடுத்த பகுதியில் ராமசுப்பு சாஸ்திரிகளின் குடும்பம் இருக்கிறது. சாஸ்திரிகளுக்கும் மூத்த, இளைய சம்சாரங்கள் வாயிலாக ஏழு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு மகளைத் திருமணம் செய்து கொடுத்து, அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமண வயதில் மூன்று பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஒருத்தி பத்தாவது படித்துவிட்டு ஆசுபத்திரிப் பயிற்சி எடுத்து, விழுப்புரத்திலோ, எங்கோ வேலையாக இருக்கிறாள். ஒரு பையன் படிப்பு ஏறாமல் தகப்பனும் வாரிசாகவும் போகாமல் சமையல் எடுபிடியாகப் போகத் தொடங்கி இருக்கிறான். மற்ற இரு பையன்களும் இளையவர்கள். வலப்புறத்துத் தாழ்வாரமும் தடுப்பு அறையும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜம்புநாதன் குடும்பத்துக்கு உரியவை. கோமளத்துக்கு இரண்டே செல்வங்கள். வாயிற்புறத்திலுள்ள பெரிய வரவேற்பு அறைப்பகுதிதான் நம்பியும் தமக்கையும் குடியிருக்கும் இடம். உயர்ந்த வாயில்களும் சன்னல்களுமான இருபதுக்குப் பதிநான்கு அறை. காரை பொடிந்து உதிர்ந்தாலும் உயர்ந்த வளைவில் வண்ணக் கண்ணாடிகள் உடைந்தாலும் பழைய பெருமைகள் பார்த்த மாத்திரத்தில் தெரியும் அறை. ஒரு பழைய பீரோ அறையைத் தடுத்து மறைக்கும் சுவராக நிற்கிறது. சுவர் முழுதும் பென்சில் கிறுக்கல்கள், பால் கணக்குப் புள்ளிகள், மைதீட்டிக் கொண்டும் வெற்றிலைப் போட்டுக் கொண்டும் விரல் துடைத்த அடையாளங்கள் என்று வரலாற்றுப் படிவமாயிருக்கிறது. சன்னலை ஒட்டி ஒரு நாடாக்கட்டிலில் ஜமக்காளப்படுக்கைச் சுருட்டுகள். புதிய தையல் இயந்திரமும், அலமாரியில் அடுக்கிய காகித வெட்டுக்களும் நம்பியின் தமக்கை சவுந்தரம் அந்த அறையில் தையல் பள்ளி நடத்துவதைக் கூறுகின்றன. அந்த ஒரே அறையில் அக்காவும் இரு குழந்தைகளும் நம்பியும் வாழ்கின்றனர். நம்பியின் தந்தையும் ஜம்புநாதனைப் போல் துவக்கப் பள்ளி ஆசிரியராகத்தான் இருந்தார். சவுந்தரம் மூத்தப் பெண். அடுத்தவள் மதுரம். அவளைத் தஞ்சைக்கருகே ஒரு கிராமத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். சவுந்திரத்தின் கல்யாணத்துக்கே கடன்பட்டிருந்த அவர், மதுரத்தையும் வாழ்க்கை படுத்திய பிறகு நோயிலும் வீழ்ந்தார். நம்பியின் தாய் ஏற்கெனவே நோயாளி. இருவரும் ஒரே ஆண்டில் கண் மூடிய பின்னரே சவுந்தரம் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு குங்குமத்தை இழந்து வந்தாள். அவளைக் கொண்டவன் குணநலமில்லாதவள். வாழ்ந்த நாளெல்லாம் வண்மை வரிசையில்லை என்று புகுந்த வீட்டில் இடிபட்டபின், கணவன் இறந்ததே விடுதலை என்ற நிலையில் பத்தாயிரம் ரூபாயுடன் நம்பியை அண்டி வந்திருக்கிறாள். புலன் இன்பங்கள் என்ற அடிப்படையில் கிளர்ந்து வரும் எல்லா ஆசைகளுக்கும் அடக்கத்தைப் பூணவேண்டும் என்பதையே வாழ்க்கை பின் குறிக்கோளாக வலியுறுத்தும் வகுப்பில் பிறந்தவர்களே அந்த மாளிகையில் வாழ்ந்தார்கள். ஆனால், நம்பியைப் போன்ற இளைஞனுக்கும், பெண்களுக்கும் இயல்பான ஆசைகளுக்கு, உளுத்துப்போன நெறிமுறைகளும் வறுமையும் விலங்கிட்டாலும், விலங்குத்தடத்தைக் கொடுமை என்று உணர்த்தும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான வெளியுலக ஆசைகள் இனம் காட்டி இழுக்காமல் இல்லை. ஒரு சமுதாயம் முழுதும் கால ஓட்டத்தில் உயிரான இலட்சியங்களை மீறிப் பாசி பிடித்துப்போன பழக்க வழக்கங்களை மட்டுமே பற்றிக் கொண்டும், மேல் பூச்சுப் பூசிப் புதுப்பித்தும் இலட்சியங்கள் இருந்த இடங்களில் மாறான சுயநலங்களைப் பேணியும் ஒரு போலியான இரட்டை வாழ்வு வாழப் பழகிவிட்டது. நாச் சபலத்துக்கு அடுத்த தோட்டத்துக் கனியை எடுப்பதில் தவறில்லை. அக்காலத்தில் நம்பி வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வருவான் என்று பெற்றோர் பெருமையடித்துக் கொண்டனர். அவனுடைய தோற்றமும் சிரித்துப் பேசும் இயல்பும் பலபல நண்பர்களை அவனுக்குத் தேடித் தந்திருக்கின்றன. “பரீட்சை சமயம், சினிமாவுக்கா போனான்?” என்று தந்தை கடிந்தால், “நீங்களா காசு கொடுத்திய? சிநேகிதா கொடுத்து அழைச்சிண்டு போறா!” என்று தாய் பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். “எங்க நம்பிக்குச் சித்த நேரம் ஒழியறதில்ல. வாசலில் யார் யாரோ சைகிளில் வந்து கூப்பிடறா...” என்று பெருமை தாங்காமல் பூரித்தாள். கல்லூரி மாணவர் தேர்தல், விளையாட்டு அரங்கம், எல்லா முனைகளிலும் நம்பிக்குச் செல்வாக்கு உண்டு. பணக்காரர்களான பல தோழர்களில் கோகுலும் ஒருவன். நம்பி முதன் முதலில் புகை குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டான் என்று அறிந்த தாய் அவனை கண்டிக்கவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் சங்கடப்பட்டதை சவுந்திரம் அறிவாள். ஆனால், அவன் ஊராரையும் அறிந்தவர் தெரிந்தவரையும் ஏமாற்றுவதில் வல்லவனாக இருந்தான். உபந்நியாசம், கதாகாலட்சேபம் ஏற்பாடு செய்யக் கூட்டம் கூட்டவோ, வசூல் செய்யவோ, தட்டெடுக்கவோ தயங்க மாட்டான்... சாயி பஜனை, ஐயப்ப கோஷ்டி எங்கும் நம்பியைக் காணலாம். திருமண் இட்டுக் கொண்டு, மார்பில் குறுக்கே முப்புரிநூல் துலங்க, மேல் வேட்டியைப் பணிவுடன் இடுப்பில் வரிந்து கொண்டு அவன் சுருதி போடும் போதோ தட்டெடுக்கும் போதோ, கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு தெரிந்தவர் கைகளில் இருந்து தேங்காய் பழத்தட்டை வாங்கிச் செல்லும் போதோ யார் தாம் பாராட்ட மாட்டார்! “மாமி! உங்க நம்பி ஸ்டேஷன் பக்கம் சிகரெட் குடிச்சிண்டு வர போற பெண்ணை எல்லாம் சீண்டுறான். ஒருநாள் உதைபடுவான்!” என்று ஒரு நாள் அங்கு குடியிருந்த வெங்கிடாசலம் கூறியபோது நம்பியின் தாய் அவனைச் சொல்லாலே கிழித்து மாட்டினாள். “அவன் தறிதலையாகத்தான் திரியிறான். நீ இடம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டே! வீட்டில ஒரு பைசா வச்சா தங்கறதில்ல” என்று தந்தை கடிந்து கொண்டால், தாய் மவுனம் சாதிக்கத் தொடங்கினாள். அவன் குடிக்கவும் கற்றுக் கொண்டான் என்று அவள் புரிந்து கொண்டதே அவளைப் படுக்கையில் தள்ளப் போதுமான காரணமாயிற்று. பெற்றோர் என்ற ஒரு சிறு காப்பும் அழிந்த பிறகு அவனைத் தட்டிக் கேட்பவர் எவருமில்லை. இன்னொரு குடும்பம் அந்த பங்களாவின் ஒருகாலச் சமையற்கட்டாக இருந்த பகுதியில் வாழ்கிறது. வாகீசக் குருக்கள் அந்த வட்டத்திலுள்ள பழைய திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் ஒரு காலத்தில் பூசனை செய்தவர். அப்போது கோயிலில் இருந்த சிலைகள் மாயமாகப் போகாத காலம். கோயில்களையே யாரும் அவ்வளவாகக் கவனித்துப் பொருட்படுத்தியிராத அந்நாட்களில், அவர் கைக்கும் வாய்க்கும் எட்டாத குடும்பம்தான் செய்ய முடிந்தது. தம்பியைப் படிக்க வைத்தார். அவன் பிலாயில் ஒரு தட்டெழுத்துக்காரனாக வேலைக்குச் சேர்ந்தான். அவன்தான் அவருடைய மூத்த பிள்ளைக்கும் அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தான். மூத்த பெண்ணுக்கும் அவர்களுடைய உதவியில்தான் கல்யாணம் செய்தார்கள். அடுத்த பையன் நன்றாகப் படித்தான். அவன் எடுத்த எடுப்பில் ஆயிரம் சம்பளம் வாங்கப் படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவன் பத்தாவது படிக்கும் போதே அவருக்குக் கால் விளங்காமல் போக ‘பாரிச வாத’ நோய் பிடித்தது. பெரிய பையனுக்கும் தம்பிக்கும் அவரவர் குடும்பங்கள் தடையாயின. ஒரு மருந்துக் கம்பெனியில் வேலைக்குச் சென்ற இளையவன் சம்பாத்தியமே போதாதபடி செலவு செய்யக் கற்றுக் கொண்டான். குடிப்பழக்கத்துக்கும் சீட்டாடும் பழக்கத்துக்கும் அவன் அடிமையானான். கடைசிப் பெண் மங்களா, பத்து முடித்துத் தேறினாள். ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது? தானும் வேலைக்குச் செல்ல வேண்டும், ஹான்ட் பேக், ரிஸ்ட் வாட்ச், க்யூடெக்ஸ், குதிவைத்த மிதியடிகள், வெளிநாட்டு நைலக்ஸ் ரகங்கள், கறுப்புக் கண்ணாடி என்று விசாலமாகக் கனவு காண்கிறாள். அழகில்லை என்று சொல்ல முடியாத பருவம். அன்றாடப் பிழைப்புக்கே வருமானம் இல்லாமல் ஓய்ந்து போனபின் மங்களா, புதிதாக எதிரே எழும்பியிருக்கும், அடுக்குமாடி வீடு ஒன்றில் ‘ஆபீஸ் இல்லாத பணி’ புரியச் செல்கிறாள். அந்த வீட்டுக்காரர் நகரில் ஏதோ ஒரு கல்லூரியில் ஆராய்ச்சி செய்கிறார். மனைவி நகரத்து மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர். ஒரே பையன், குழந்தை. வீட்டில் காலைச் சிற்றுண்டி செய்து வைக்க வேண்டும். பகலில் அருகிலுள்ள நர்சரிக்குச் செல்லும் குழந்தைக்கு மட்டும்தான் உணவு. ஒரு காய்க்கலவை - இரசம் - பருப்பு - தயிர்சோறு செய்து கொண்டு குழந்தைக்கு கொடுக்க வேண்டும். மாலையில் டாக்டரம்மா வீடு திரும்பிய பின்னர் அவளே சமையல் செய்வாள். மங்களா உதவுவதுடன் சரி. அந்த நவ தம்பதி பழகும் நெருக்கங்களையும், வகைவகையான ஆடை அலங்காரங்களையும் வளமான உணவுப் பொருள்களையும் நெருங்கி இருந்து பார்க்கும் மங்களாவுக்குத் தன்னையறியாமலே தடைகளைத் தகர்த்துக் கொண்டு கிளர்ச்சிகளும் கற்பனைகளும் எழும்பும் வீட்டுக்குத் திரும்புகையில் இருட்டு அறையும், கோலின் உதவியின்றி எழுந்திருக்கவே இயலாத தந்தையும், பாதிப் பொழுதும் பிறரைப் பற்றி அவதூறுகள் பேசியே காலம் தள்ளும் தாயும் அவளுடைய ஆற்றாமையைக் கிளறி விடுவார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், காலை நேரத்துக்குப் பிறகு மங்களாவுக்கு வேலை கிடையாது. அவர்கள் ஓய்வாக உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார்கள். இரவு வெளியே உணவு கொள்வார்கள். மங்களாவுக்குக் கோபிநாதன் வீட்டாருடனும் சாஸ்திரியார் வீட்டுடனும் இணக்கம் கிடையாது. சவுந்தரத்துடன் மாலையில் ஏதேனும் சினிமாவுக்குப் போகும் ஆசையுடன் வருகிறாள். அப்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஏழுமலை சவுந்தரத்திடம் ஒரு காகிதப் பாக்கெட்டைக் கொடுத்து விட்டுப் போனான். அதைப் பிரித்துப் பார்க்குமுன் மங்களா வந்து விட்டாள். எனவே, சவுந்தரம் அதைப் பீரோவுக்குப் பின் கொண்டு வைத்துவிட்டு வந்தாள். “கம்முனு சந்தன சோப் வாசனை வருதே! சோப்பு வாங்கினாயா சவுந்த்ரம்? ஜலீஸ் ஸ்டோரில் சந்தன சோப் குடுக்கிறான்னு சாவித்திரி சொன்னாளே, அதுவா?” “என்னென்ன யோசனைடிம்மா, அதுக்குள்ள? இது எதோ சிகாமணி புத்தகமோ என்னமோ குடுத்தனுப்பியிருக்கிறான், நம்பிக்கிட்டக் கொடுக்கச் சொல்லி. இல்லாட்டா அவன் எதுக்கானும் விதை உரம்னு வாங்கிட்டு சரியில்லைன்னு திருப்பியிருப்பான்!” சவுந்தரம் இவ்விதமாக சேற்றைப் பூசி மறைக்க முயன்றது வீணாயிற்று. பீரோ மறைவுக்கு அப்பாலிருந்து, “ஐயோடி, அம்மா!” என்ற வியப்பொலியுடன் அவளுடைய அருமைச் செல்வி பேபியும், செல்வன் சீமாச்சுவும் கைக்கொரு சந்தன சோப்பை முகர்ந்து பார்த்துக் குதித்துக் கொண்டு ஓடி வந்தார்கள். “அம்மா, மணக்கறதும்மா! ஒண்ணு, ரெண்டு, மூணு அஞ்சு சோப்பு! எனக்கு உனக்கு நம்பி மாமாக்கு” சவுந்தரம் பளார் பளாரென்று ஆளுக்கு இரண்டு அறைகள் கொடுத்து அந்த உற்சாகத்தைக் கெல்லி எறிந்தாள். “சனியனே! நீங்கல்லாம் பிறக்கலேன்னு யார் அழுதது? காலம்பரக் கால் கடுக்க நான் நின்னு அவனை நிக்கச் சொல்லிக் கெஞ்சி சோப்பு வாங்கி வச்சா, உடனே தூளி பண்றீங்களே?” இரண்டு பேரும் தொண்டை கிழியக் குரல் கொடுக்கலானார்கள். “ஜலீஸ் ஸ்டோரிலா வாங்கித்து? சாவித்திரி ஒண்ணுகூடக் கிடைக்கலேன்னாளே?” “கிடைக்காதா பின்ன? நம்பி அவன் சிநேகிதன் மூணுபேரை நிக்கவச்சேன்னான். அதைக் கொண்டு வந்து ஒளிச்சு வச்சேன். பீடைக் கண்ணில் பட்டிருக்கு, பீடைகள்...” கடைசி வரி தனக்குத்தான் ஏவிய கணை என்பதை மங்களா புரிந்து கொள்ளமாட்டாளா? வெறுப்பும் நிராசையும் மண்டுகிறது. வீடு திரும்புகையில் ஒரு சந்தன சோப்பு, ஒண்ணு தொண்ணூறுக்குக் கொடுத்தான். அதை வாங்கிக் கொடுக்க வழியில்லாத பெற்றோர்! அவள் சம்பாதிக்கும் முப்பத்தைந்து ரூபாயைக் கூட ஆசைப்பட்ட பொருளை வாங்கச் செலவழிக்க முடியவில்லை. வெடுவெடு என்று படியேறியவளைத் தாய் கடிந்தாள். “விளக்கு வைக்கிற நேரத்தில் அங்கே என்ன வேலை?” “ஆமாம். இந்த ஜன்மத்துக்கு ஒண்ணு கிடையாது. ஊரில் எல்லாம் நாலு அஞ்சுன்னு கியூவில் நின்று சந்தன சோப்பு வாங்கி அக்கா தங்கைக்குக் குடுக்கிறான். எனக்கு ஒரு சந்தன சோப்பு, கேவலம் ஒரு சோப்பு வாங்கிக் கொடுக்க உனக்கு யோக்கியதை உண்டா?” “சந்தன சோப்போ? வெறும் சுண்ணாம்பைக் கொடுத்து ஆளை ஏமாத்தறான், அந்தக் கடையில்!” “கையாலாகாத பேச்சுப் பேசாதே! என் தலை விதி!” என்று கத்தினாள் மங்களா. “யாரு, சவுந்தரம் வாங்கியிருக்காளா? அங்கே எதுக்குப் போனே நீ? அந்தத் தடியன் நம்பிக்கு கண்ட சிநேகிதமும் இருக்கு. இவ இளிச்சு இளிச்சுப் பேசறா. புருஷனோ போயாச்சு. சந்தன சோப்பு என்ன கேடு? முந்தாநாள் பார்த்தேன். அந்தத் தடியன் சிகாமணி சிகரெட்டும் குடிச்சிண்டு உக்காந்திருந்தான். பஞ்சாயத்து மெம்பர்னா இப்படி உபசாரமா?” “உங்களால் முடியாதபோது நீங்க அவ மண்டையை ஏன் உருட்டறேள். உன் பிள்ளை பரம யோக்கியம்! அவன் சிகரெட் குடிச்சானாம், நீ இப்படிப் பேசிண்டே இரு. நானும் ஒருநாள் யாரோடானும் ஓடிப் போயிடப் போறேன். இப்படி எங்கேயோ சமையல் பண்ணியேனும் சம்பாதிச்சுக் கொடுப்பேன்னு நினைக்காதே!” “பார்த்துக்குங்கோ இவ பேச்சை? பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு கூச்சநாச்சம் அடக்கம் இருக்கான்னு பாருங்கோ நீங்களே!” படுக்கையில் இருக்கும் குருக்கள், “சிவராஜா, சிவராஜா...” என்று பெருமூச்செறிந்து எங்கோ கைலையங்கிரியில் இருப்பவனைக் கூப்பிடுகிறார். “எனக்குக் கூச்ச நாச்சம் இல்லை. அதற்கு என்ன செய்யப் போறீங்க இப்ப?” “நாளையிலேருந்து நீ போக வேண்டாம். நீ அப்பாவைப் பார்த்துக்கோ, நான் போய் அங்கே காப்பி போட்டு தோசை வார்த்து சமைச்சு வைக்கிறேன். சுலோசனா என்னை வேண்டான்னு சொல்லமாட்டா!” “உன் மூஞ்சியைப் பார்த்து அவ கூப்பிடுவ? நாயை அவிழ்த்து விடுவா! ஒரு நாள் குளிக்காம, மூஞ்சி பிரஷ்ஷா இல்லாம போனா சமையல் ரூமுக்குள்ளேயே விடமாட்டாள். டேபிளில் பிரக்பாஸ்ட் எடுத்து வச்சிட்டு ஒதுங்கிடனும். போனதும் ஏப்ரனை மாட்டிக்கலேன்னா அதட்டுவ!” “என்னை அதொண்ணும் சொல்லமாட்டா!” “நினைச்சிண்டிரு! நக இடுக்கில் அழுக்கிருக்கா, கழுத்துப் பட்டியில் வேர்வை இருக்கான்னெல்லாம் கவனிச்சிடுவ. முப்பத்தஞ்சு ரூபாக்காசு, என்னிக்கானும் அவன் முன்ன வந்துட்டா ஆயிரம் கேள்வி கேட்டுத் துளைப்ப. அத்தனை சந்தேகம். அந்தப் பிள்ளை, பிள்ளையா அது, எல்லாத்தையும் உடச்சுப்பறத்திட்டு “மங்களாதான் உடச்சா!”ன்னு பழியைப் போடும். எனக்கு என்னிக்கு ஒரு வீடு, வாசல்னு விடிவு காலம் வரப்போறது?” மங்களா பொருமிக் கொட்டுகையில் குருக்கள் மேலும் மேலும் பரமேசுவரனைச் சரணடைகிறார். “எத்தனை பேருக்கோ ஆபீசில் வேலை கிடைக்கலியா? சாஸ்திரிகள் பொண்ணுக்குக் கூடக் கிடைச்சிருக்கு...” “ஆமாம். பெரிய பெரிய எம்.ஏ., பி.எச்.டி. படிக்கவச்சுக் கிழிச்சிட்டே. வேலை கிடைக்கல. சாஸ்திரி எங்கெல்லாம் சிபாரிசு பிடிக்கிறது தெரியுமா? சிபாரிசா மண்ணா?” “சுண்டைக்காய் எஸ்.எஸ்.எல்.சி. அதுவும் தமிழ் மீடியம் ஸ்மார்டா கட்டிக்க ஒரு சாரி கிடையாது. ஒரு நல்ல சோப்பு, பவுடர், ஒரு செருப்பு கூட நல்லதாகக் கிடையாது. காதறுந்த செருப்பை நானே ஒட்டுப் போட்டுப் போட்டுக்கறேன். தலையெழுத்து, நீங்க பார்த்திண்டே இருங்க, நான் ஒரு நாள் ஓடிப்போகத்தான் போறேன்!” வாசலில் சுற்றுப்புறச் சுவர் இடிந்து பெரிய அழிக் கதவு மட்டும் தொத்திக் கொண்டிருக்கிறது. ஒரு கதவு எப்போதும் திறந்து கிடக்கிறது. அதை மூட முடியாது. சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் குறுந்திண்ணை போன்ற கட்டிடமும் இடிந்திருந்தாலும், அதில் உட்கார்ந்து சாலையைப் பார்க்கலாம். மங்களா வெறுப்புடன் அங்கே வந்து அமருகிறாள். எல்லோரும் உறங்கிய பிறகு கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றுகிறது. சவுந்தரத்துக்குக் கூட தம்பி அருமையாக இருக்கிறான். அவளுக்கு உடன்பிறப்புக்கள், பெற்றவர்கள் இருந்தும் பயனில்லை. நம்பி இருந்தால் அங்கே போகக்கூடாதாம். பேசக்கூடாதாம், கட்டுப்பாடு! இருள் பரவி வருகிறது. சாஸ்திரியார் வீட்டிலிருந்து பெண்கள் சஹஸ்ரநாமம் பாடும் ஒலி கேட்கிறது. இதில் ஒரு குறைச்சலுமில்லை! உடனே போட்டியாக கோபியின் பெண்கள் மூலைக்கொருவராக அபிராமி அந்தாதியோ, கந்தன் பாடல்களோ பாட ஆரம்பிப்பார்கள்! ஜம்புநாதன் தம்பதி வெளியே செல்கின்றனர். காலனியின் புதிய கோவிலில் யாரோ இராமாயணம் பிரவசனம் செய்கிறாராம். ஒருவேளை நம்பி அங்கே இருப்பானோ? ஞாயிற்றுக்கிழமை... குபீலென்று புளித்த பழவாடையை வீசிக் கொண்டு இருட்டில் நம்பி வருவது தெரிகிறது. “ஏண்டி இந்த ராங்கி உனக்கு...” சொர்ண ரேகா, குங்கும ரேகா, மங்கள பஞ்சம லோகா... அவள் துணுக்குற்று எழுந்து நிற்கிறாள். இந்த ஆண்களுக்கு, “டென்ஷன்” ஆற்றாமை எல்லாம் கரைய எத்தனை சாதனங்கள்! பெண்ணுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளும்! “ஏ...ண்டி!...” என்று அவள் அருகில் வந்து நம்பி இழுக்கிறான். குரல் குழைகிறது; கால்கள் தடுமாறுகின்றன. நம்பி குடித்துவிட்டு வருவது புதிய காட்சி அல்ல. ஆனால், மங்களா அவ்விதம் உட்கார்ந்திருக்க மாட்டாள். “கடன்காரா!” என்ற கூவலுடன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வாள். இன்று அவள் அசையவில்லை. ஆனால் அவளுடைய தாய்தான், அவளைத் தேடி வந்தவள், இதைப் பார்த்துக் கூக்குரலிடுகிறாள். “இந்தத் தடியனை வீட்டைவிட்டு ஒழிக்கக் காலம் வரலியே? இப்படி வயசுப் பொண்க இருக்கிற இடத்தில் தண்ணியப் போட்டுட்டு வந்து கூத்தடிக்கிறானே?... அடி, நம்பி குடிச்சிட்டு வரான்! எல்லாரும் கதவைச் சாத்திட்டு உள்ளே போங்கோ; ஒழிச்சாச்சு அது இதுன்னா, இங்கே ஒழியலியே?...” மங்களா அசையவில்லை. “ஐயையோ, கதவைச் சாத்திக் கொள்ளணுமாம். நிசமா என்னைக் கண்டு பயப்படாதேடி, நான் ஒண்ணும் செய்ய மாட்டேண்டி...” அவனுடைய உள்ளங்கை அவளுடைய மோவாயைத் தாங்க வருகிறது. மங்களா மெள்ளத் தள்ளுகையில் அவளுடைய அம்மா இன்னும் பெரிதாகக் கத்துகிறாள். “கடங்காரா என்ன அழுத்தம்டா உனக்கு? அடி பாவி மங்களா! உள்ளே வாயேண்டி!” அப்போது சவுந்தரம் அங்கே விரைந்து வருகிறாள். “எதுக்கு எல்லாமாச் சேந்து கூப்பாடு போடணும்? அவாவா வீட்டில் ஒழுங்கு போல!” என்று எல்லாக் குடும்பங்களையும் மங்களாவையும் ஒன்று சேரத் தாக்கிக் கொண்டு, நம்பியின் கையைப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்கிறாள். “அது என்ன ஆபீசோ, இழவு பார்ட்டியோ, இப்படிக் குடித்துத் தொலைச்சிடறா!” என்று அவனுடைய அலுவலகத்தின் மீது பழியைப் போட்டு அவனை உள்ளே தள்ளிக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்கிறாள். இரவு ஓசைகள் அடங்க, மின்வண்டி போகும் ஒலியும் நின்று போகிறது. மங்களா விழித்துக் கொண்டிருக்கிறாள். நம்பி அவளுடைய கன்னத்தைத் தீண்டியபோது அவளுடைய வெறுப்பை மீறிக் கொண்டு உடல் சிலிர்த்தது. ஓர் ஆடவன் அதுவரையில் அவளை அவ்விதம் தீண்டியதில்லை. முதன்முதலாக அவன் அவளைக் கொஞ்சும் பாவனையில் தீண்டினான். அவளை அந்தவகையில் உரிமையுடன் தீண்ட என்று ஒருவன் வரப்போகிறான்? சோற்றுக்கும் துணிக்குமே பற்றாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இவர்கள் எங்கிருந்து மாப்பிள்ளை தேடப் போகிறார்கள்? இவர்கள் பெற்ற பிள்ளைகள் இருவரும் இவர்களைப் பற்றிக் கவலைப்படாதபோது, இவள் மட்டும் எதற்காக, யாருக்காகப் புனிதம் காத்துக் கொண்டு சம்பாதித்துப் போட வேண்டும்? கடமையாம் கடமை! அவளுக்குப் பிறப்பு அளித்தவர்கள் அவளுடைய அற்ப ஆசையைக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். நம்பி வைஷ்ணவன் என்ற பெயர். இந்நாளில் இந்தப் பிரிவுகளெல்லாம் பெயரளவுக்குத்தான் ஒட்டிக் கொள்கின்றன. அவள் நம்பியைக் கல்யாணம் செய்து கொண்டால் குடி முழுகி விடாது. அவன் தன்னை மறந்த அறிவு தடுமாறிய நிலையில் அவளை அணுகியதே அவள் மீதான ஆசையை ஒளித்து வைத்திருக்கிறான் என்று புலனாகிறது. இந்த உண்மையின் வெளிச்சம் இதமாக, கதகதப்பாக, இனிமை கூட்டும் இரகசியமாக இருக்கிறது. நம்பி அரைச்சராய் அணிந்துகொண்டு தெருப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு பம்பரம் ஆடியது அவளுக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. நம்பியின் மீது அந்தக் கட்டிடம் முழுவதும் உயிராக இருந்த காலம் அது. “மாமி போஸ்டாபீசுக்குப் போகணுமா? சர்க்கரை வாங்கிண்டு வரணுமா?” என்று கேட்டுக் கொண்டு சைகிளில் சென்று வாங்கி வருவான். பெரும்பாலும் பெண்களாகவே இருந்த அந்த வீட்டுச் சூழலில், எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றிய அவன் மீது அவர்கள் எல்லோரும் பிரியம். கொலு வைத்து ஜோடனை செய்ய கோபிநாதன் வீட்டில் நம்பிதான் உதவி செய்வான். அவளுடைய அப்பா கீழே முதன் முதலில் ‘ஸ்ட்ரோக்’ வந்து விழுந்தபோது நம்பிதான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான். எங்கோ ஓடி டெலிபோன் பேசி, அநாயாசமாக ‘ஆம்புலன்ஸ்’ வரவழைத்து விட்டான். இரவில் அவன் தான் துணை படுத்துக் கொண்டான். “போன ஜன்மத்தில் நீதான்டா பிள்ளை எங்களுக்கு” என்று அம்மாவே சொல்லி இருக்கிறாள். “என் அம்மாவும் அப்பாவும் சீக்கில் விழுந்து என்னைப் பயப்படாதபடி பழக்கியிருக்கா மாமி!” என்று சிரித்தான். அவ்வளவு நல்ல பிள்ளை, ஊரெல்லாம் சிநேகிதர்களாகவே இருக்கப் பழகியவன், பொறுப்பற்றவனாக எப்படி மாறிப் போனான்? சொல்லப் போனால் நம்பிக்குக் குடிக்கவும் மற்றவற்றுக்கும் பழக்கி வைத்தவனே அவளுடைய அண்ணன் தானோ? அவன் பறங்கிமலையில் இருந்து பாட்டிலை மறைத்துக் கொண்டு வருவான். நம்பியைக் கல்யாணம் செய்து கொண்டால் திருத்திவிடலாம் என்று தோன்றுகிறது. சவுந்தரம் முதலில் கத்துவாளாக இருக்கும். கொஞ்ச நாட்களுக்குப் பின் சரியாகப் போய்விடும். ஒரு கால் சந்தன சோப்பு அவளுக்கும் சேர்த்துத் தான் வாங்கியிருப்பானோ? அந்த பங்களாவுக்குள் சொல்லப் போனால் அவள் தான் மாநிறமானாலும் நல்ல களையுள்ள தோற்றமுடையவள். கோபியின் வீட்டுப் பெண்கள் முழுக் கறுப்பு. சாஸ்திரி வீட்டில் எல்லாம் உள்ளாங்கண் கும்பல். ஒருநாள் காலையில் டாக்டரைத் தேடி யாரோ வந்தபோது மங்களா வாயிலுக்கு வந்து கதவைத் திறந்தாள். “குட்மார்னிங் டாக்டர்” என்று அவள் பேசத் தொடங்கிய போது மங்களாவுக்கு உள்ளூரக் கர்வம் ஓங்கியது. டாக்டர் உள்ளே இருப்பதாகக் கூறி உட்கார வைத்துவிட்டு வந்தாள். அவள் சுலோசனாவிடமே “அந்த ஸ்மார்ட்கர்ள்” என்று குறிப்பிட்டது மங்களாவின் செவிகளில் விழுந்தது. உள்ளே வந்து “ஏப்ரனைப் போட்டுக்கொள்” என்று சுலோசனா அதட்டினாள். அந்த அணி அவளுடைய வீட்டில் மங்களா வெறும் பழையப் பெண் என்று அறிவிக்கும் அடையாளம். அதை உதறி எறிந்துவிட்டு நம்பியின் கையைப் பற்றிக்கொண்டு மேக மண்டலத்தில் உலாவ வேண்டும். சந்தனசோப்பு, ஸ்நோ, காம்பேக்ட் பவுடர், விதவிதமான சாந்துகள், வாசனைகள், கூந்தல் தைலங்கள், நைலக்ஸ் ரகங்கள், மிதியடிகள், கைப்பைகள்... |