சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 10 ...

181. மருதம்

இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?
தலைமகள் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது
கிள்ளிமங்கலங்கிழார்

182. குறிஞ்சி

விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது
மடல் பாடிய மாதங்கீரன்

183. முல்லை

சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கன், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஒளவையார்

184. நெய்தல்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது
ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

185. குறிஞ்சி

'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இராவந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, 'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

186. முல்லை

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே.
பருவ வரவின் கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஒக்கூர் மாசாத்தியார்

187. குறிஞ்சி

செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
கபிலர்

188. முல்லை

முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

189. பாலை

இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது
மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

190. முல்லை

நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பூதம்புல்லன்

191. முல்லை

உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

192. பாலை

'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது
கச்சிப்பேட்டு நன்னாகையார்

193. முல்லை

மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது
அரிசில் கிழார்

194. முல்லை

என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?
பருவ வரவின்கண் 'ஆற்றாளாம்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கோவர்த்தனார்

195. நெய்தல்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து ஏழுதரு பையுள் மாலை
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ-
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது
தேரதரன்

196. மருதம்

வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
ஐய!-அற்றால் அன்பின் பாலே.
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது
மிளைக் கந்தன்

197. நெய்தல்

யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கச்சிப்பேட்டு நன்னாகையார்

198. குறிஞ்சி

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது
கபிலர்

199. குறிஞ்சி

பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கைவள் ஒரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது
பரணர்

200. நெய்தல்

பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசுமந்து வந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன்இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்ற வழி, தலைமகள் சொல்லியது
ஒளவையார்