உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 2 ... 21. முல்லை
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் கானம், "கார்" எனக் கூறினும், யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, "அவர் வரல் குறித்த
பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?" என்று தன்னுள்ளே கவன்றாட்கு,
அவளது குறிப்பு அறிந்த தலைமகள், "கானம் அவர் வரும் கார்காலத்தைக் காட்டிற்றாயினும்
யான் இது கார்காலம் என்று தேறேன். அவர் பொய் கூறாராகலின்" எனத் தான்
ஆற்றுவல் என்பது படச் சொல்லியது
ஓதலாந்தையார்
22. பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, யாரோ பிரிகிற்பவரே?-சாரல் சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும் தேம் ஊர் ஓண்ணுதல்!-நின்னோடும், செலவே. செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
சேரமான் எந்தை
23. குறிஞ்சி
அகவன்மகளே! அகவன்மகளே! மனவுக் கோப்பு! அன்ன நல் நெடுந் கூந்தல் அகவன்மகளே! பாடுக பாட்டே; இன்னும், பாடுக, பாட்டே-அவர் நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே. கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தொடு நின்றது
ஒளவையார்
24. முல்லை
கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர் என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவந்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழைய, கொடியோர் நாவே, காதலர் அகல, கல்லென்றவ்வே. பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது
பரணர்
25. குறிஞ்சி
யாரும் இல்லை; தானே கள்வன்; தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினை தாள் அன்ன சிறு பசுங் கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கபிலர்
26. குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் தகாஅன் போலத் தான்தீது மொழியினும், தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய் வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும், அக் கொடியோனையே. நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, "இஃது
எற்றினான் ஆயிற்று" என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக்காண்கின்ற
காலத்து, "தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம்" என்றுக்
கூறக் கேட்டு, தோழி அறத்தொடு நின்றது
கொல்லன்அழிசி
27. பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும்- திதலை அல்குல் என் மாமைக் கவினே. பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
வெள்ளி வீதியார்
28. பாலை
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு, "ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?- அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஒளவையார்
29. குறிஞ்சி
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு மகவுடை மந்தி போல அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், "இவர் எம்மை மறுத்தார்"
என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை
நோக்கிக் கூறியது
ஒளவையார்
30. பாலை
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், பெய்வலாளன் மெய் உற மரீஇய வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, அமளி தைவந்தனனே; குவளை வண்டு படு மலரின் சாஅய்த் தமியேன்; மன்ற அளியேன் யானே! "அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ
ஆற்றியிராது, ஆற்றா யாகின்றது என்?" என வினாய தோழிக்குத் தலைமகள்,
"யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலிந்தது, எனக்
கூறியது
கச்சிப்பேட்டு நன்னாகையார்.
31. மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும், மகளிர் தழீஇய துணங்கையானும், யாண்டும் காணேன், மாண் தக்கோனை; யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது
ஆதிமந்தி
32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும், ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் பொழுது இடை தெரியின், பொய்யே காமம்; மா என மடலொடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே; வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. பின்னின்றான் கூறியது
அள்ளூர் நன்முல்லையார்
33. மருதம்
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? இரந்தூண் நிரம்பா மேனி யொடு விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள்
வாயில் நேர்வாள் கூறியது
படுமரத்து மோசிகீரன்
34. மருதம்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், தமியர் உறங்கும் கெளவை இன்றாய், இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் குட்டுவன் மரந்தை அன்ன எம் குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது
கொல்லிக் கண்ணன்
35. மருதம்
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ நுண் உறை அழிதுளி தலைஇய தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது
கழார்க் கீரன் எயிற்றி
36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், நெஞ்சு களன் ஆக, "நீயலென் யான்" என, நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் தாவா வஞ்சினம் உரைத்தது நோயோ-தோழி!-நின் வயினானே? "வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்" எனக் கவன்று வேறுபட்ட
தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது
பரணர்
37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; பிடி பசி களைஇய பெருங் கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும் அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. தோழி, "கடிது வருவர்" என்று, ஆற்றுவித்தது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
38.குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் நீரொடு ஓராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக்
கூறியது
கபிலர்
39. பாலை
"வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலையுடை அருஞ் சுரம்" என்ப-நம் முலையிடை முனிநர் சென்ற ஆறே. பிரிவிடை "ஆற்றல் வேண்டும்" என்ற தோழிக்கு, "யாங்ஙனம்
ஆற்றுவேன்?" எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது
ஒளவையார்
40. குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக்
கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது
செம்புலப்பெயனீரார்.
|