சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 11 ...

201. குறிஞ்சி

அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகரிப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்று ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
202. மருதம்

நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது
அள்ளூர் நன்முல்லை

203. மருதம்

மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது
நெடும்பல்லியத்தன்

204. குறிஞ்சி

'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது
மிளைப் பெருங் கந்தன்

205. நெய்தல்

மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
உலோச்சன்

206. குறிஞ்சி

அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்;
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது
ஐயூர் முடவன்

207. பாலை

'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல்வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
செலவுக் குறிப்பு அறிந்து, 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழத்தியுரைத்தது
உறையன்

208. குறிஞ்சி

ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே.
வரைவிடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்

209. பாலை

அறந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாகக் கிழத்தியைத் தெருட்டியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ

210. முல்லை

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறுது -என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகள், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது
காக்கை பாடினியார் நச்செள்ளையார்

211. பாலை

அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன், இறந்தோரே.
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்? எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது
காவன் முல்லைப் பூதனார்

212. நெய்தல்

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்,
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.
குறைநேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது
நெய்தற் கார்க்கியன்

213. பாலை

நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெரித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது
கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

214. குறிஞ்சி

மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது
கூடலூர் கிழார்

215. பாலை

படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

216. பாலை

அவரே, கேடுஇல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
"அன்னள் அளியள்" என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே.
பருவ வரவின்கண், "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

217. குறிஞ்சி

"தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், என் இடும்பை நோய்க்கு?" என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையம் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது
தங்கால் முடக்கொல்லனார்

218. பாலை

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.
பிரிவிடை, "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கொற்றன்

219 நெய்தல்

பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
"ஆங்கண் செல்கம் எழுக" என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; முள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-"எந்நீரிரோ?" எனினே.
சிறைப்புறம்
வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

220. முல்லை

பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது
ஒக்கூர் மாசாத்தியார்