உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 20 ... 381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, பசலை ஆகி, விளிவது கொல்லோ- வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, விலங்கு திரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை
இயற்பழித்தது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப் பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, கார் இது பருவம் ஆயின், வாராரோ, நம் காதலோரே? வரவின்கண் வேறுபட்ட தலைமகனைத் தோழி, பருவம் அன்று, வம்பு
என்று வற்புறீஇயது
குறுங்கீரன்
383. பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து, குறி நின்றனனே, குன்ற நாடன்; 'இன்றை அளவைச் சென்றைக்க என்றி; கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் தீ உறு தளிரின் நடுங்கி, யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே. உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை,
நாணும் கெடச் சொல்லியது
படுமரத்து மோசி கீரன்
384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் நலன் உண்டு துறத்தி ஆயின், மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. 'நின் பரத்தையர்க்கு நீ உற்ற குளுறவு நன்றாயிருந்தது!'
என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது
ஓரம்போகியார்
385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் அன்றை அன்ன நட்பினன்; புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. வேற்று வரைவு மாற்றியது
கபிலர்
386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் தண்ணந் துறைவன் தணவா ஊங்கே, வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் மாலையே அறிவேன்மன்னே; மாலை நிலம் பரந்தன்ன புன்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர்
அழிந்து கூறியது
வெள்ளிவீதியார்
387. முல்லை
எல்லை கழிய, முல்லை மலர், கதிர் சினம் தணிந்த கையறு மாலை, உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், எவன்கொல் வாழி?-தோழி!- கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர்
அழிந்து கூறியது
கங்குல் வெள்ளத்தார்
388. பாலை
நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடாதாகும்; கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், யானை கைம்மடித்து உயவும் கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே. தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன் சுரத்து
வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி
அழுங்காமற் கூறியது
ஒளவையார்
389. குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக ஆர்பதம் பெறுக-தோழி!அத்தை- பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் 'நன்றோ மகனே?' என்றனென்; 'நன்றே போலும்' என்று உரைத்தோனே. தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது
வேட்ட கண்ணன்
390. பாலை
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்- செல்லாதீமோ, சிறுபிடி துணையே!- வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, வளை அணி நெடு வேல் ஏந்தி, மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது
செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது
உறையூர் முதுகொற்றன்
391. முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலை, பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம்நீர் நனந்தலை புலம்பக் கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! பிரிவிடை, 'பருவவரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி அழிந்து சொல்லியது
பொன்மணியார்
392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ-அரசர் நிரை செலல் நுண் தோல் போலப் பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச்
சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
தும்பிசேர் கீரனார்
393. மருதம்
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது
பரணர்
394. குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, முன் நாள் இனியது ஆகி, பின் நாள் அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, பகை ஆகின்ற, அவர் நகை விளையாட்டே. வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை
இயற்பழித்துக் கூறியது
குறியிறையார்
395. பாலை
நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே, அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; அருவ நுங்கு மதியிற்கு இவணோர் போலக் களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் அளிதோதானே நாணே- ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, நாம் ஆண்டுச்
சேறும் எனத் தோழிக்கு உரைத்தது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
396. பாலை
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, எளிது என உணர்ந்தனள் கொல்லோ-முளி சினை ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் கழை திறங்கு ஆர் இடை, அவனொடு செலவே? மகட்போக்கிய தாய் உரைத்தது
கயமனார்
397. நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, 'அன்னாய்!' என்னும் குழவி போல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என்தோழி; தன் உறு விழுமம் களைஞரோ இலளே. வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது
அம்மூவன்
398. பாலை
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, மெய்ம் மலி உவகையின் எழுதரு கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி
வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று உலகியல் மேல் வைத்து உரைத்தாட்கத்
தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ
399. மருதம்
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை-காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பரணர்
400. முல்லை
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! இன்று தந்தனை தேரோ- நோய் உழந்து உறைவியை நல்கலானே? வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது
பேயனார்
401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், நக்கு விளையாடலும் கடிந்தன்று, ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது
அம்மூவன்.
|