உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 5 ... 81. குறிஞ்சி
இவளே, நின்சொல் கொண்ட என் சொல் தேறி, பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறைப் புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
82. குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, "அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்; யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் கொழுங் கொடி அவரை பூக்கும் அரும்பனி அற்சிரம் வாராதோரே. பருவங் கண்டு அழிந்த தலைமகள், "வருவர்" என்று வற்புறுத்தும்
தோழிக்குச் சொல்லியது
கடுவன் மள்ளன்
83. குறிஞ்சி
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- தம்இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின் ஓங்கு மலை நாடனை, "வரும்" என்றோளே! தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழிவாழ்த்தியது
வெண்பூதன்
84. பாலை
பெயர்த்தனென் முயங்க, "யான் வியர்த்தனென்" என்றனள்; இனி அறிந்தேன், அது தனி ஆகுதலே- கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
மோசிகீரன்
85. மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் நாறா வெண் பூ கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே. வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில்
மறுத்தது
வடம வண்ணக்கன் தாமோதரன்
86. குறிஞ்சி
சிறை பனி உடைந்த சேயரி மழைக்கண் பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி, பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து, ஊதை தூற்றும் கூதிர் யாமத்து, ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது
வெண்கொற்றன்
87. குறிஞ்சி
"மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம்" என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; பசைஇப் பசந்தன்று, நுதலே; ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது
கபிலர்
88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் தொல் முரண் சொல்லும் துன் அருஞ்சாரல், நடு நாள் வருதலும் வரூஉம்; வடு நாணலமே-தோழி!-நாமே. இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது
மதுரைக் கதக்கண்ணன்
89. மருதம்
பாஅடி உரல பகுவாய் வள்ளை ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; அழிவது எவன்கொல், இப்பேதை ஊர்க்கே?- பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய நல் இயல் பாவை அன்ன இம் மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச்
சொல்லியது; தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம்
ஆம்
பரணர்
90. குறிஞ்சி
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்
தோழி கூறியது
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
91. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்துறை ஊரன் பெண்டினை ஆயின், பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! ஓவாது ஈயும் மாரி வண்கை, கடும்பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி கொன் முனை இரவு ஊர் போலச் சில ஆகு, நீ துஞ்சும் நாளே! பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி,
தன்வரைத் தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி தலைமகள்
அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்த வழி வேறுபட்ட
கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம்
ஒளவையார்
92. நெய்தல்
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து- அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை, இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின், விரையுமால் செலவே. காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு சொல்லியது
தாமோதரன்
93. மருதம்
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய், இன்உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது
அள்ளூர் நன்முல்லையார்
94. முல்லை
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வென்?-தோழி!-பானாள் இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும் என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?- அருவி மா மலைத் தத்தக் கருவி மா மழைச் சிலைதரும் குரலே. பருவங் கண்டு ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்'
என்பதுபடத் தலை மகள் சொல்லியது
கதக்கண்ணன்
95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற் சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள் நீர் ஓரன்ன சாயல் தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கபிலர்
96. குறிஞ்சி
"அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு யான் எவன் செய்கோ?" என்றி; யான் அது நகை என உணரேன் ஆயின், என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள்
இயற்படச் சொல்லியது
அள்ளூர் நன்முல்லை
97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே ஆனா நோயொடு கானலஃதே துறைவன் தம் ஊரானே; மறை அலர் ஆகிய மன்றத்தஃதே. வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வெண்பூதி
98. முல்லை
"இன்னள் ஆயினள் நன்னுதல்" என்று, அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை நீர் வார் பைம் புதற் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே. பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்து
கோக்குளமுற்றன்
99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, நினைந்தனென் அல்லெனோ பெரிதே? நினைந்து, மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே? நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உணச் சென்று அற்றாங்கு, அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே. பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், "எம்மை நினைத்தும் அறிதிரோ?"
என்ற தோழிக்குச் சொல்லியது
ஒளவையார்
100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள் அம் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே- மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. பாங்கற்கு உரைத்தது; அல்லகுறிப்பட்டு மீள்கின்றான் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
கபிலர்
|