சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 6 ...

101. குறிஞ்சி

விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காகினார் கேட்பச் சொல்லியது; வலித்த செஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம்
பருஉமோவாய்ப் பதுமன்

102. நெய்தல்

உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம்மரீஇயோரே.
"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, "யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?" என்றது
ஒளவையார்

103. நெய்தல்

கடும்புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வாயிலான் தேவன்

104. பாலை

அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குக் கூறியது; "சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?" என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம்
காவன்முல்லைப் பூதனார்

105. குறிஞ்சி

புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்

106. குறிஞ்சி

புல்வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
"தான் மணந்தனையம்" என விடுகம் தூதே.
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது
கபிலர்

107. மருதம்

குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது
மதுரைக் கண்ணனார்

108. முல்லை

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகன் தோழிக்குக் கூறியது
வாயிலான் தேவன்

109. நெய்தல்

முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!
தலைவன் சிறைப்புறமாக தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது
நம்பி குட்டுவன்

110. முல்லை

வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம்
கிள்ளிமங்கலங் கிழார்

111. குறிஞ்சி

மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
"வென்றி நெடு வேள்" என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூடை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதியது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
தீன்மதிநாகன்

112. குறிஞ்சி

கெளவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஆலத்தூர் கிழார்

113. மருதம்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே;
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது
மாதீர்த்தன்

114. நெய்தல்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே.
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது
பொன்னாகன்

115. குறிஞ்சி

பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரோ?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது
கபிலர்

116. குறிஞ்சி

யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
இளங்கீரன்

117. நெய்தல்

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது
குன்றியனார்

118. நெய்தல்

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்புக் கடவுநர்,
"வருவீர் உளீரோ?" எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது
நன்னாகையார்

119. குறிஞ்சி

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது
சத்திநாதனார்

120. குறிஞ்சி

இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.
அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்
பரணர்