சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய

குறுந்தொகை

... தொடர்ச்சி - 15 ...

281. பாலை

வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர் கொல்லோ-சேயிழை!-நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது
குடவாயிற் கீரத்தன்

282. பாலை

செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவ அல்ல என்பர் கொல்-நமரே?
வினைவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது
நாகம்போத்தன்

283. பாலை

"உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு" எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறு பட்டேன்" என்று, கிழத்தி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ

284. குறிஞ்சி

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது
மிளைவேள் தித்தன்

285. பாலை

வைகல் வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பருவங்கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து, தலைமகள் சொல்லியது
பூதத் தேவன்

286. குறிஞ்சி

உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்
எயிற்றியனார்

287. முல்லை

அம்ம வாழி-தோழி!-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, "நம்மைத் துறந்து வாரார்" என்று கவன்றாட்கு, பருவங்காட்டி, தோழி "வருவர்" எனச் சொல்லியது
கச்சிப்பேட்டு நன்னாகையார்

288. குறிஞ்சி

கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, "நம்பெருமான் நமக்கு அன்பிலன்" என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்

289. முல்லை

வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக் கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
"காலம் கண்டு வேறுபட்டாள்" எனக் கவன்ற தோழிக்கு, "காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லேன்; அவரைப் புறத்தார், "கொடியர்" என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்" என்று, தலைமகள் சொல்லியது
பெருங் கண்ணனார்

290. நெய்தல்

"காமம் தாங்குமதி" என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனைமதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல்பொரு சிறு நுரை போல,
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது
கல்பொருசிறுநுரையார்

291. குறிஞ்சி

சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, "அவள் விளி" என, விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது
கபிலர்

292. குறிஞ்சி

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது
பரணர்

293. மருதம்

கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!
பரத்தையிற் பிரிந்த வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கள்ளில் ஆத்திரையன்

294. நெய்தல்

கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉ அணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு
அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
அஞ்சில் ஆந்தையார்

295. மருதம்

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது
தூங்கலோரி

296. நெய்தல்

அம்ம வாழி!-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன்நின்று,
கடிய கழறல் ஓம்புமதி - "தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?" என்றனை துணிந்தே.
பெரும்பாக்கன்

297. குறிஞ்சி

"அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பெருள்" என,
உணர்ந்தேன் மன்ற, அவர் உணரா ஊங்கே.
தோழி வரைவு மலிந்தது
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்

298. குறிஞ்சி

சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது
பரணர்

299. நெய்தல்

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
வெண்மணிப் பூதி

300. குறிஞ்சி

குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, "அஞ்சல்" என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்றுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது
சிறைக்குடி ஆந்தையார்