உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 7 ... 121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல் மைப் பட்டன்ன மா முக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகியாங்கு, நாடன் தான் குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன, என தட மென் தோளே. இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான்
நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக
உணர்ந்து சென்று ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவழி, பின்னர்
அவன் வரவு உணர்த்திய தோழிக்குக் கூறியது
கபிலர்
122. நெய்தல்
பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று, வாழியோ, மாலை! ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே! தலைமகள் பொழுது கண்டு அழிந்தது
ஓரம்போகியார்
123. நெய்தல்
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒர சிறை, கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, இன்னும் வாரார்; வரூஉம், பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே. பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல்
அறிந்த, தலைமகட்குச் சொல்லியது
ஐயூர் முடவன்
124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, ஊர்பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு இன்னா என்றிர் ஆயின், இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத்
தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ
125. நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, உளெனே வாழி!-தோழி!-சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் பறை வலம் தப்பிய பைதல் நாரை திரை தோய் வாங்கு சினை இருக்கும் தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே. வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய்,
தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது
அம்மூவன்
126. முல்லை
"இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் இவணும் வாரார்; எவணரோ?" என, பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் தொகு முகை இலங்கு எயிறு ஆக நகுமே-தோழி!-நறுந் தண் காரே. பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஒக்கூர் மாசாத்தியார்
127. மருதம்
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர், நீ அகன்றிசி னோர்க்கே. பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது
ஓரம்போகியார்
128. நெய்தல்
குணகடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் சேயல் அரியோட் படர்தி; நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகள் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகள் கூறியதூஉம் ஆம்
பரணர்
129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! புலவர் தோழ! கேளாய் அத்தை; மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன்
130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின், கெடுநரும் உளரோ? -நம் காதலோரே. பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; "நீ 'அவர்
பிரிந்தார்' என்று ஆற்றயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து
தூது விட்டுக்கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக!" எனத் தோழி தலைமகளை
ஆற்றுவித்தது; தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம்
ஆம்
வெள்ளிவீதியார்
131. பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஓர் ஏர் உழவன் போல, பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே. வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது
ஓரேருழவனார்
132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையன்; காமர் வனப்பினள்; குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- யாங்கு மறந்து அமைகோ, யானே?-ஞாங்கர்க் கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி தாய் காண் விருப்பின் அன்ன, சாஅய் நோக்கினள்-மாஅயோளே. கழற்றெதிர்மறை
சிறைக்குடி ஆந்தையார்
133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை கிளி குறைத்து உண்ட கூழை இருவி பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என் உரம் செத்தும் உளெனே-தோழி!-என் நலம் புதிது உண்ட புலம்பினானே. வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது
உறையூர் முதுகண்ணன் சாத்தன்
134. குறிஞ்சி
அம்ம வாழி-தோழி!-நம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் கல்பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, நிலம் கொள் பாம்பின், இழிதரும் விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச்
சொல்லியது
கோவேங்கைப் பெருங்கதவன்
135. பாலை
"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என, நமக்கு உரைத்தோரும் தாமே, அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே. "தலைமகன் பிரியும்" என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
136. குறிஞ்சி
"காமம் காமம்" என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. தலைமகன் பாங்கற்கு உரைத்தது
மிளைப்பெருங் கந்தன்
137. பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, நிற் துறந்து அமைகுவென் ஆயின்-எற் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக!-யான் செலவுற தகவே. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது
பாலை பாடிய பெருங்கடுங்கோ
138. குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- எம் இல் அயலது ஏழில் உம்பர், மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. ஊர் துஞ்சிய மரம் பூவின் பாடு கேட்டுத் துஞ்சும் முதல்
நாள் உரியவிடத்தே வந்து தலைவியைக் காணாதவன் மறுநாள் அணிமையில் வந்து
நிற்கத் தலைவி நேற்றிரவு ஈங்கு அவா வந்திலர் என்றாள்
கொல்லன் அழிசி
139. மருதம்
மனை உறை கோழிக் குறுங் கால் பேடை, வேலி வெருகினம் மாலை உற்றென, புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇ பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு இன்னாது இசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. வாயில் வேண்டி புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது
ஒக்கூர் மாசாத்தியார்
140. பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து, ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? பொருள்வயிற் பிரிந்த இடத்து, "நீ ஆற்றுகின்றிலை" என்ற
தோழிக்குத் தலை மகள் சொல்லியது
அள்ளூர் நன்முல்லை
|