![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 13 ... 241. குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் கெழுதகைமையின் அழுதன-தோழி!- கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, ஏறாது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடற் கண்ட என் கண்ணே. பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்
242. முல்லை
கானங்கோழிக் கவர் குரற் சேவல் ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் சீறூரோளே, மடந்தை; வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும், சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே. கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச்
சொல்லியது
குழற்றத்தன்
243. நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
நம்பி குட்டுவன்
244. குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- ஓரி முருங்கப் பீலி சாய நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால்
புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின்
அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அரிது. என வரைவு கடாயது
கண்ணனார்
245. நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்ததனினும், நனி இன்னாதே- வாள் போல் வாய கொழு மடல் தாழை மாலை வேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே. வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மாலை மாறன்
246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் இளையரும் மடவரும் உளரே; அலையாத் தாயரொடு நற்பாலோரே. தலைவன் ஓர் இரவு மனைப்படப்பையின் கண் வந்துநிற்க அறியாதாள்
போன்று தலைவி கூறியது
கபிலர்
247. குறிஞ்சி
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; திறவோர் செய்வினை அறவது ஆகும்; கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை வீயா மென் சினை வீ உக, யானை ஆர் துயில் இயம்பும் நாடன் மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே. கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு
உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம்
சேந்தம்பூதன்
248. நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி, ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை குறிய ஆகும் துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனளே. வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது
உலோச்சன்
249. குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் குன்றம் நோக்கினென்-தோழி!- பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது
கபிலர்
250. பாலை
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, இரலை நல் மான் நெறிமுதல் உகளும் மாலை வாரா அளவை, கால் இயல் கடு மாக் கடவுமதி -பாக!-நெடு நீர்ப் பொரு கயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி தெருமரல் உயவே. தலைமகன் பாகற்கு உரைத்தது
நாமலார் மகன் இளங்கண்ணன்
251. முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென, அதன் எதிர் ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன; கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், புது நீர் கொளீஇய, உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. பிரிவிடைத் தோழி, 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று
வற்புறுத்தியது
இடைக் காடன்
252. குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலை, இன்முகம் திரியாது, கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி, 'மடவைமன்ற நீ' எனக் கடவுபு துனியல் வாழ்-தோழி!-சான்றோர் புகழும் முன்னர் நாணுப; பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே? தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு
எம் பெருமாட்டி தீயன் கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி
உரைத்தது
கிடங்கில் குலபதி நக்கண்ணன்
253. பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், விழுமிது கழிவது ஆயினும், நெகிழ்நூல் பூச்சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது
பூங்கண்ணன்
254. பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன; வாரா-தோழி!- துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- 'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினரால்' என, வரூஉம் தூதே. பருவங் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
பார்காப்பான்
255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவ குத்தி, மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச் சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை கண்டனர்-தோழி!- தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம் வெங் காதலர் சென்ற ஆறே. 'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
கடுகு பெருந் தேவன்
256. பாலை
'மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகைப் பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, மான் ஏறு உகளும் கானம் பிற்பட, வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் சொல்லாமுன்னர், நில்லா ஆகி, நீர் விலங்கு அழுதல் ஆனா, தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
257. குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்; அகலினும் அகலாதாகி இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே. வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
உறையூர்ச் சிறுகந்தன்
258. மருதம்
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; அலராகின்றால்-பெரும!-காவிரிப் பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம்
ஆம்
பரணர்
259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? நெஞ்சம் நன்றே, நின் வயினானே. காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகியவழித் தோழி அறத்தொடு நின்று,
'யானே பரிகரிப்பல்' என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது
பரணர்
260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, கன்று இல் ஓர் ஆ விலங்கிய புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத்
தோழி சொல்லியது
கல்லாடனார்
|