உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 9 ... 161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, கழுது கண் பனிப்ப வீசும்; அதன் தலைப் புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, 'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! என் மலைந்தனன் கொல் தானே-தன் மலை ஆரம் நாறும் மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே? இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப்
பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது
நக்கீரர்
162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; நகுவை போலக் காட்டல் தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது
கருவூர்ப் பவுத்திரன்
163. நெய்தல்
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந்துறை. வெள் வீத் தாழை திரை அலை நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? தன்னுள் கையாறு எய்திடு கிளவி
அம்மூவன்
164. மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பெளவம் அணங்குக-தோழி!- மனையோள் மடமையின் புலக்கம் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது
மாங்குடிமருதன்
165. குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலைய வீய்ந்தாங்கு, இவள் இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. பின்னின்ற தலைமகள் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும்
நெஞ்சிற்குச் சொல்லியது
பரணர்
166. நெய்தல்
தண் படற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை; ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது
கூடலூர் கிழார்
167. முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் 'இனிது' எனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது
கூடலூர் கிழார்
168. பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன நறுந் தண்ணியளே, நல் மா மேனி; புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் மணத்தலும் தணத்தலும் இலமே; பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது
சிறைக்குடி ஆந்தையார்
169. மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே: பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல எமக்கும் பெரும் புலவு ஆகி, நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. கற்புக் காலத்து தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு
நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம்
வெள்ளிவீதியார்
170. குறிஞ்சி
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- அருவி தந்த நாட் குரல் எருவை கயம் நாடு யானை கவளம் மாந்தும் மலை கெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே. வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
கருவூர் கிழார்
171. மருதம்
காண் இனி வாழி-தோழி-யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட மீன் வலை மாப் பட்டா அங்கு, இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பூங்கணுத்திரையார்
172. நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பளை வாவல் பழுமரம் படரும் பையுள் மாலை, எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் தமியர் ஆக இனியர் கொல்லோ? ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த உலை வாங்கு மிதி தோல் போலத் தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
கச்சிப்பேட்டு நன்னாகையார்
173. குறிஞ்சி
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப் பூண் மணி கறங்க எறி, நாண் அட்டு, பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப, 'இன்னள் செய்தது இது' என, முன் நின்று, அவள் பழி நுவலும், இவ் ஊர்; ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே. குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது
மதுரைக் காஞ்சிப் புலவன்
174. பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார், நத்துறந்து, பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப் பொருளே மன்ற பொருளே; அருளே மன்ற ஆரும் இல்லதுவே. பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
வெண்பூதி
175. நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று, பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி
உரைத்தது
உலோச்சன்
176. குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன் பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, வரை முதிர் தேனின் போகியோனே- ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ? வேறு புலன் நல் நாட்டுப் பெய்த ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே. தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது
வருமுலையாரித்தி
177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் வருவர் கொல் வாழி-தோழி!-நாம் நகப் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அருங் காமம் தண்டியோரே? கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது
உலோச்சன்
178. மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனீர்; நோகோ யானே. கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,
முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது
நெதும்பல்லியத்தை
179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது
குட்டுவன் கண்ணன்
180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, அறை மடி கரும்பின் கண் இடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது
கச்சிப்பேட்டு நன்னாகையார்
|