உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 12 ... 221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன்; பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே. பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி
உரைத்தது
உறையூர் முதுகொற்றன்
222. குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், அண்டும் வருகுவள் போலும்-மாண்ட மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது
சிறைக்குடி ஆந்தையார்
223. குறிஞ்சி
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண் நல்லோர் நல்ல பலவால் தில்ல; தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி, அன்னை ஓம்பிய ஆய் நலம் என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே. வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, 'வற்புறுத்தும்
தோழிக்குக் கிழத்தி கூறியது
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்
224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச் சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா நோயினும் நோய் ஆகின்றே-கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. பிரிவிடை, 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி
உரைத்தது
கூவன் மைந்தன்
225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல, நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் கலி மயிற் கலாவத்தன்ன இவள் ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது
கபிலர்
226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் குருகு என மலரும் பெருந் துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்
227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து, இவண்- தேரோன் போகிய கானலானே. சிறைப்புறம்
ஓத ஞானி
228. நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. 'கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது
செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன் தலை ஓரி வாங்குநள் பரியவும், காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுபமன்னோ! நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. இடைச்ச சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது
மோதாசனார்
230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்- தான் அது துணிகுவனல்லன்; யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி, நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?- வயச் சுறா வழங்கு நீர் அத்தம் தவச் சின்ரைன்ன வரவு அறியானே. வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது
அறிவுடை நம்பி
231. மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, நல் அறிவு இழந்த காமம் வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ
232. பாலை
உள்ளார் கொல்லோ?-தோழி!-உள்ளியும், வாய்ப் புணர்வு இன்மையின் வாரார் கொல்லோ?- மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், துஞ்சும் மா இருஞ் சோலை மலை இறந்தோரே. பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது
ஊண்பித்தை
233. முல்லை
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றி, நிரைகோற் குறுந்தொடி தந்தை ஊரே. பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது
பேயன்
234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார், மயங்கியோரே குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் பெரும் புலர் விடியலும் மாலை; பகலும் மாலை-துணை இலோர்க்கே. பருவ வரவின் கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
மிளைப் பெருங்கந்தனார்
235. பாலை
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் கல் உயர் நண்ணியதுவே-நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு
உரைத்தது
மாயேண்டன்
236. நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய் படு சினை வம்ப நாரை சேக்கும் தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. வரைவிடை வைத்துப் பிரிவான், 'இவள் வேறு படாமை ஆற்றுவி'
என்றாற்குத் தோழி நகையாக உரைத்தது
நரிவெரூஉத்தலையார்
237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் சேய அம்ம, இருவாம் இடையே; மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, கோட் புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது
அள்ளூர் நன்முல்லை
238. மருதம்
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில்வேண்டித் தோழியிடைச்
சென்று, தெளிவிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது
குன்றியன்
239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; விடும் நாண் உண்டோ ?-தோழி!-விடர் முகைச் சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் நறுந்தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. சிறைப்புறம்
ஆசிரியன் பெருங்கண்ணன்
240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, வாடை வந்ததன் தலையும், நோய் பொர, கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி, மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கொல்லன் அழிசி
|