அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 12 வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளும் முடிந்த பின் பார்த்தால் அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையும் சேர்த்து மொத்தம் நாற்பத்திரண்டு பேர் வேட்பாளராக அபேட்சை மனு கொடுத்திருந்தார்கள். போட்டியிலிருந்து வாபஸ் பெற இன்னும் சில நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அநுக்கிரகாவும் கனிவண்ணனும் தவிர, நாற்பது பேர் அத்தொகுதியின் பல்வேறு சாதிகள், இனங்கள், மதங்களின் சார்பில் நிறுத்தப்பட்டவர்களாகத் தோன்றினர். அதில் முக்கால்வாசிப் பேர் முக்கிய வேட்பாளராகிய அநுக்கிரகாவோ, கனிவண்ணனோ கூப்பிட்டுப் பேசி ஏதாவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு, அப்படிப் பணம் தந்தவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையை விட்டு விட்டு வேட்பு மனுவை வாபஸ் பெறத் தயாராயிருந்தார்கள். அப்படித் தூது சொல்லியும் அனுப்பினார்கள். பேரமும் பேசினார்கள். ஆனால் இதிலும் முத்தையாவுக்குப் பல அந்தரங்கமான சந்தேகங்கள் இருந்தன. தன் மகள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் பேர பேசிப் பணம் பறிக்க வசதியாயிருக்கும் என்று கனிவண்ணனே அவ்வளவு பேரையும் டம்மி வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம். அல்லது பரம இரகசியமாகப் பொன்னுரங்கமே கூட அதைச் செய்திருக்கலாம். வசதியுள்ள குடும்பத்திலிருந்து ஒருத்தர் அரசியலிலோ தேர்தலிலோ குதித்து விட்டால் எப்படிப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள் என்பதை இப்போது அவர் அனுபவபூர்வமாகவே புரிந்து கொண்டிருந்தார். முள்ளில் விழுந்து விட்ட மேல் வேட்டியை முள்ளும் குத்தாமல் வேட்டியும் கிழியாமல் எப்படியாவது திரும்ப எடுத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது முத்தையா இருந்தார். செலவில் அவர் ஒன்றும் கஞ்சன் இல்லை. தாராளமான செலவாளி. தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ ஊர்களில் தர்ம சத்திரங்கள், கோவில்களில் அறக்கட்டளைகள் என்று அந்த ஆவாரம் பட்டு சமஸ்தானத்தின் பேரில் நடந்து வந்தன. வள்ளல் தன்மை ஆவாரம்பட்டு ஹவுஸின் தனித்தன்மை என்றாலும் எவனாவது தன்னை ஏய்த்துப் பணம் பறிப்பதை மட்டும் அவர் விரும்பமாட்டார். இந்த நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் விஷயத்திலும் ஏமாற்றிப் பணம் பறிக்கிற முயற்சியையே அவர் கண்டிருந்தார். கடைசியாக மகளின் வெற்றிக்காக அவரும் விட்டுக் கொடுத்துச் செலவழிக்க வேண்டியதாயிற்று. பொன்னுரங்கம் வந்து வாதாடினான்: “வீணா ஓட்டுச் சிதறிப் போய்க் காரியம் கெட்டுப் போயிடக் கூடாதுங்க. கனிவண்ணனோட ஸ்ட்ரெயிட் காண்டெஸ்ட் ஆக இருந்தால் தான், நம்ம பாப்பாவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம். நாப்பத்திரண்டு அபேட்சகருங்களில் நாற்பது பேர் தலைக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு ஓட்டைப் பிரிச்சுப் புட்டாங்கன்னா, என்ன ஆகும்னே சொல்ல முடியாது.”
“இதே மாதிரி கனிவண்ணனும் நினைச்சுப் பயப்படணுமே? அவன் எந்தத் தைரியத்திலே மெதப்பா இருக்கான்?”
“இப்படிப் பலபேரை நிறுத்தி ஓட்டுக்களைத் தாறுமாறாப் பிரிச்சு, அதுலே தானே ஜெயிச்சுடலாம்கிற மெதப்பாக் கூட இருக்கும்.” “அப்போ டம்மி கேன்டிடேட்ஸுங்கள்ளாமே கனிவண்ணன் சொல்லி நிற்க வச்சதுன்னா சொல்றே பொன்னுரங்கம்?” “அவன் அப்பிடி எல்லாம் செய்யக் கூடிய ஆளுதாங்க.” “சரி, இப்போ என்ன செய்யணும்கிறே?” “பணத்தைக் கொடுத்துப் ‘போய் ஒழியுங்கடா’ன்னா வாபஸ் வாங்கிடுவாங்க.” “இன்னும் எத்தினி நாள் இருக்கு வாபஸ் வாங்க?” “ரெண்டு நாள் தாங்க இருக்கு! அதுக்குள்ளார முடிக்கணும்.” அடுத்த இரு தினங்களில் ஐந்நூறு முதல் ஐம்பதாயிரம் வரை செலவழித்து, முப்பத்தெட்டுப் பேரை வாபஸ் வாங்க வைத்தார்கள். குறைந்த பட்சத் தொகை ஐந்நூறு. அதிக பட்சத் தொகை ஐம்பதாயிரம். நடுப்பட்டவை பல. இந்த வகையில் சுளையாக ஐந்து லட்சம் செலவாகி விட்டது முத்தையாவுக்கு. இரண்டே இரண்டு பேரிடம் மட்டும் முடியவில்லை. ஏராளமாகப் பேராசைப்பட்டுக் கேட்டார்கள். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர்களை நிராகரித்தார் முத்தையா. ஆக, அநுக்கிரகாவை எதிர்த்துக் கனிவண்ணனும், வேறு இருவரும் சேர்த்துப் போட்டியிட்டனர். கனிவண்ணன் தான் அப்போதைய எம்.எல்.ஏ. என்ற முறையில் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட்டுப் பிரசாரம் செய்தான். மற்றவர்கள் இருவரும் எதுவுமே செய்யவில்லை. உண்மையான கடும் போட்டி என்பது அநுக்கிரகாவுக்கும், கனிவண்ணனுக்கும் நடுவில் தான் இருந்தது. அவர்கள் இருவரும் தான் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். இருவருடைய பிரசார முறையிலும் வித்தியாசம் இருந்தது. கனிவண்ணன் தோற்று விடுவோமோ என்ற பீதியோடும் பரபரப்போடும் அநுக்கிரகாவை மேட்டுக்குடி என்றும் ஏழை எளியவர்களின் பிரச்சினைகளே புரியாத மேல்தட்டு வாசி என்றும் தாறுமாறாகப் பேசினான். கொஞ்சம் ஓவராகக் கூட இருந்தது. அந்தத் தொகுதியிலுள்ள அறுபது குடிசைப் பகுதிகளிலும் “அநுக்கிரகா வந்தால் குடிசைகளையெல்லாம் காலி செய்து ஏழை எளிய மக்களை நடுத் தெருவில் அநாதைகளாக நிறுத்தி விடுவாள்” - என்ற பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. ஆனால் அநுக்கிரகாவோ பொன்னுரங்கமோ கனிவண்ணனைத் தாக்கி எதுவும் பேசாமல் ‘தாங்கள் வென்றால் அந்தத் தொகுதி மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும்’ என்பதை மட்டுமே விவரித்தார்கள். “இதுவரை உங்களை இந்த வசிதிக் குறைவான குடிசைகளிலேயே வைத்து விட்டு உங்கள் பிரதிநிதிகளாகித் தாங்கள் மட்டும் மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழ்பவர்களைப் போல் அல்லாமல் குடிசைகள் உள்ள பகுதிகளில் சுகாதார வசதி குடிநீர் வசதி சாலைகளோடு கூடிய அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு அவற்றை அங்கு முன்பு இருந்த மக்களுக்கே தவணை முறையில் பணம் கட்டி உரிமையாக்கிக் கொள்ளும்படி தரப்போகிறோம். அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் அனைத்து ஸ்லம்களும் இப்படி அடுக்கு மாடி வீடுகளாகக் கட்டப்பட்டு உங்களுக்குக் கிடைக்க அநுக்கிரகாவையே தேர்ந்தெடுங்கள்.” பெருவாரியான பெண்கள் நிறைந்த அந்தத் தொகுதியில் இந்தப் பெருவாரியான பெண்கள் பிரசாரம் நன்றாக எடுபட்டு மக்கள் மனத்தில் பதிந்தது. கனிவண்ணன் பேரையே கூறாமல், “ஆம். குடிசைகளை அகற்றத்தான் போகிறோம். உங்களைத் தெருவில் நிறுத்துவதற்காக அல்ல. மழைக்கு ஒழுகாத வெய்யிலுக்கு வெப்பம் காயாத அழகிய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி, மீண்டும் உங்களுக்கே தருவதற்காகத்தான்” - என்ற பாணியில் எதிர் தரப்பினரின் பொய்ப் பிரசாரத்தை அநு சார்பினர் நாசுக்காக மறுத்தார்கள். கனிவண்ணன் அதுவரை எம்.எல்.ஏ. ஆக இருந்து அந்தத் தொகுதிக்கு எதுவுமே நன்மை செய்யாததாலும், குடிசைப் பகுதிகளுக்குள் எட்டியே பார்க்காததாலும், ஒரு சாதாரண அச்சாபீஸ் பைண்டராக வாழ்ந்த அவன் இன்று உறுப்பினரானதும் மாடி வீடு கட்டிப் பல லட்சம் சேர்த்து வாழ்கிற டாம்பீகத்தைப் பார்த்தும் அத்தொகுதி மக்களே வெறுப்படைந்திருந்தாலும் அவனது அடாவடிப் பிரசாரம் எடுபடவில்லை. தன்னோடு உடன் வரும் நூற்றுக்கணக்கான ம.மு.க. பெண் ஊழியர்களுடன் ஒவ்வொரு குடிசைப் பகுதியாக நடந்தே போய் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தாள் அநுக்கிரகா. அத்தனை பெரிய பரம்பரையில் வந்த புகழ் பெற்ற பணக்காரக் குடும்பத்துப் பெண் ஒரு பவிஷும் பாராமல் தங்களைத் தேடி வந்து வோட்டுக் கேட்டது வாக்காளர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அது தவிரக் கனிவண்ணன் ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற பாணியில் கட்சி டிக்கெட் தனக்கு இல்லை என்று ஆன பின் கட்சியிலிருந்து விலகிச் சுயேச்சையாகப் போட்டியிட்டுக் கட்சியையும், கட்சி வேட்பாளராகிய அநுக்கிரகாவையும் தாக்கியது பலருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு டிக்கெட் கொடுத்தவரை நல்ல கட்சி, வேறொருத்திக்கு டிக்கெட் கொடுத்ததும் மோசமான கட்சி ஆகிவிட்டது என்ற அணுகுமுறை மக்களுக்குக் கனிவண்ணன் மேல் வெறுப்பை அதிகமாக்கியது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, எங்கும் பிரசாரம் தூள் பறந்தது. வன்முறைகள் அதிகமாயின. ஆவாரம்பட்டு முத்தையா பங்களா சத்திரம், சாவடி மாதிரி ஆகிவிட்டது. போஸ்டர்கள், பசை, வராந்தாவிலும் வாசற்பகுதியிலும் தோட்டத்திலும் தாறுமாறாகக் கூட்டம். தினம் மூன்று வேளையும் நூறு இருநூறு பேருக்குச் சாப்பாடு என்று தடபுடல் பட்டது. முத்தையா பொறுமையே உருவாக இருந்தார். சுவரிலோ வாஷ் பேஸினிலோ ஒரு சின்ன அழுக்கைப் பார்த்தால் கூட ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிற அவர் வீடு முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், பசை நாற்றம், கஞ்சி வாடை, லித்தோ சுவரொட்டிகளின் அச்சு வாடை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார். தேர்தல் செலவுகள் கற்பனை செய்ததையும் மீறி இருந்தன. இரண்டு மூன்று பெரிய ஃபிக்ஸட் டெபாஸிட் தொகைகளை எடுத்துக் காலி செய்தும் போதவில்லை. பொன்னுரங்கம் ஏதாவதொரு செலவைக் காட்டித் தினசரி பணம் கறந்து கொண்டேயிருந்தான். “கனிவண்ணன் பத்தாயிரம் வோட்டு வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வுறான். பந்தயம் வேணாக் கட்டிக்கலாம்” என்றான் பொன்னுரங்கம். தளரத் தளர முத்தையாவை இப்படி உற்சாகப்படுத்துவது அவன் வழக்கமாகி இருந்தது. அவரும் உடனே புது உற்சாகத்தோடு அவன் கேட்கிற செலவுகளுக்குப் பணம் கொடுத்தார். ஒரு நிமிஷம் உற்சாகம். அடுத்த நிமிஷமே யாராவது கிளப்புகிற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் தோற்று விடுவோமோ என்ற தளர்ச்சி என்பதாக மாறி நாட்கள் கூடிக் கொண்டிருந்தன. கனிவண்ணனும் தோல்வி பயத்தில் ஏதாவது உளறிக் கொட்டித் தாறுமாறாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு மர்மமான - அச்சிட்ட அச்சகத்தின் பெயரே போடப்படாத துண்டுப் பிரசுரம் தொகுதி முழுவதும் பரப்பப்பட்டது. முத்தையா இருபது ஆண்டுகளுக்கு முன் சூட்டும் டையுமாக லண்டனிலிருந்து திரும்பிய போது ‘குடிசைகள் நகரின் சுகாதாரத்தை எப்படிக் கெடுக்கின்றன?’ என்பது பற்றி நகரின் ஆங்கில தினசரி ஒன்றின் ஆசிரியர் கடிதப் பகுதியில் எழுதியிருந்தார். அந்தப் பழைய கடிதத்திலிருந்து நடுவாக நாலு வாக்கியத்தைத் தமிழ் ஆக்கி, “குடிசைகளும் சாக்கடைகளும் நகரின் புற்றுநோய்ப் பகுதிகள். அவற்றை உடனே அகற்றி நகரின் நுரையீரல்களைக் காப்பாற்றுங்கள் - இப்படிக்கு சர். வி.டி.முத்தையா - அநுக்கிரகாவின் தந்தை” என்று விஷமத்தனமாக ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அதே கடிதத்தில் அதற்கு அடுத்த வாக்கியம், ‘நகரின் குடிசைப் பகுதிகளில் உலக பாங்க் உதவியுடன் சுகாதார வசதியுள்ள வீடுகளை மலிவாகக் கட்டி அவற்றை ஏழை எளியவர்களுக்குத் தவணை முறையில் வழங்கும் ‘ஹவுஸிங் ஸ்கீம்’ ஒன்றை அரசு போட்டுச் செயல்பட வேண்டும்’ - என்றும் முத்தையா எழுதி இருந்தார். பிரசுரத்தில் அந்த வாக்கியத்தை இருட்டடிப்புச் செய்து அவரைக் குடிசைவாசிகளின் பரம வைரியாகச் சித்தரிக்க முயன்றிருந்தார்கள். வேண்டுமென்றே முத்தையாவின் சூட்டு கோட்டு டையுடன் பழைய போட்டோவையும் எங்கோ தேடிப்பிடித்துப் பிரசுரத்தில் அச்சிட்டிருந்தார்கள். அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |