6

     நல்லவேளை, பொன்னுரங்கம் உரிய நேரத்தில் அநுக்கிரகாவை எச்சரித்திருந்தான். இல்லை என்றால் மூக்குச்சளி ஒழுகுகிற அந்த அழுக்குக் குழந்தையைக் கைகளால் வாங்கவே கூசி, ‘நான்ஸென்ஸ்! வொய் ஷுட் ஐ?’ - என்று பொரிந்து தள்ளியிருப்பாள். அவளுடைய பெரிய பலவீனம், பல ஆண்டு ஆங்கிலப் பள்ளிப் படிப்பும் இங்கிலாந்து வாசமும் சேர்ந்து, இன்னமும் கூட உணர்ச்சிகரமான நேரங்களில் ஆங்கிலமே பேச வந்தது. பலவற்றிற்குச் சட்டென்று தமிழ்ச் சொற்களே கிடைக்காமல் திண்டாடினாள் அவள். பல சமயங்களில் இப்படி நேர்ந்தது. புலவரும் பொன்னுரங்கமும் அவள் தந்தையும் அரும்பாடுபட்டு அவ்வப்போது அவளை உஷார்ப்படுத்தித் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். தமிழில் பேசும்படி ஞாபகப்படுத்தினார்கள்.

     “ஐயாம் அஃப்ரைட் டு ஸே” போன்ற டிபிகல் இங்கிலீஷ் பிரயோகங்களும், எதற்கெடுத்தாலும் ‘ப்ளீஸ்’ போடுகிற, ‘குட் யூ ப்ளீஸ்’ ‘வுட் யூ ப்ளீஸ்’ போன்றும் பிரயோகித்தே பழக்கப்பட்ட அவளுக்குக் கையெழுத்துக் கூடப் போட வராத கைநாட்டுப் பேர்வழிகளே அதிகம் நிறைந்த ம.மு.க.வில் பழகுவது தர்மசங்கடமாக இருந்தது. செயற்கையாக ஒட்டிக் கொள்ள முயல வேண்டியிருந்தது.

     ’ப்ளீஸ்’ இணைக்காமல் வெறும் ‘குட் யூ’ ‘கேன் யூ’ மாதிரி மொட்டையாக ஆரம்பித்தாலே ‘குட் யூ ப்ளீஸ்’ என்று திருத்துவதோடு, ‘ப்ளீஸ் கரெக்ட் யுவர் இங்கிலீஷ்’ என்று டெலிஃபோன் ஆப்பரேட்டர்களே ஆங்கிலத்தைத் திருத்தக்கூடிய மொழி நாகரிகம் செழித்த பிரிட்டனில் இருந்துவிட்டு, பழகிவிட்டு, நாகரிகங்களும், இங்கிதங்களும் கிராம் என்ன விலை என்று கேட்கிற மனிதர்கள் மத்தியில் வந்து இங்கே பழகுவது சிரமமாகத்தான் இருந்தது. அவள் ம.மு.க.வில் சேர்வதற்கு முன்பு வரை பழகிய இடங்களும் பழகிய மனிதர்களும் அவளது ‘ஆவாரம் பட்டு ஹவுஸ்’ தரத்துக்கு உயர்ந்த ஜமீன், மிட்டா, மிராசுகளும், பழைய சமஸ்தானங்களைச் சேர்ந்தவர்களுமாக இருந்ததால், தொடர்ந்து இங்கிலாந்தின் சூழலே இங்கும் கிடைத்தது. சமஸ்தானங்கள் தொலைந்து போயும் பழைய பாவனைகளுடனேயே ‘கிளப்’ மீட்டிங்குகளிலும், பார்ட்டிகளிலும், ‘மீட் மிஸ்டர் ராஜ்குமார் - கொட்டாபுரம் பிரின்ஸ்’ என்றும், ‘மீட் மிஸ் அநுக்கிரகா - ஆவாரம் பட்டு யுவராணி’ என்றுமெல்லாம் பழைய ‘ஸ்நாபெரி’யுடன் அறிமுகங்கள் செய்து கொண்டிருந்த இடங்களில் பழகும் போது அவளால் இயல்பாகவே பழக முடிந்தது. ஆண்கள், பெண்கள் எல்லாருடனும் சகஜமாகப் பழக முடிந்தது. ம.மு.க. சூழலில் பழகும் போதுதான் செயற்கையாக அவள் நடிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் மறந்து போய்த் தமிழுக்குப் பதில் ஆங்கிலம் வந்தது. தமிழிலேயே எழுதப் படிக்கத் தெரியாத பொன்னுரங்கத்திடம் போய் ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷில் பேசினால், அவன் பயந்து ஓடாமல் என்ன செய்வான்? ‘ஹவ் ஆர் யூ மிஸ்டர் பொன்னுரங்கம்?’ என்றோ, ‘ஹவ் டூ யூ டூ மிஸ்டர் பொன்னுரங்கம்?’ என்றோ வாய் நுனி வரை வந்து விடுகிற விசாரிப்பைத் தமிழாக்கி அப்புறம் ம.மு.க.வாகக் கொச்சைப்படுத்தி, “இன்னா தலைவரே! சௌக்கியமா?” என்று விசாரிக்க வேண்டியிருந்தது. ஒருமுறை ஓர் எதிர்பாராத இடத்தில் பொன்னுரங்கத்தைச் சந்திக்க நேர்ந்து தன் நினைவே இல்லாதவளாக அவனிடம் போய், “ஹலோ! வாட் ஏ ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ்?” என்று ஆரம்பித்த போது, அவன் மிரண்டு, “இன்னான்றீங்க இப்போ?” என்று பதிலுக்குக் கேட்ட பின்புதான், அநுக்கிரகாவுக்குச் சுய உணர்வு வந்து உறைத்தது. மொழி, மேனர்ஸ், பழக்கம் - இவைகளில் வேறு வேறான உலகங்களில் அவள் பழக வேண்டியிருந்தது. அதில் தடுமாற்றங்கள், குழப்பங்கள் நேர்ந்தன. இரண்டு குதிரைகளின் மேல் ஒரே சமயத்தில் சவாரி செய்வது போலிருந்தது. இருந்தும் முத்தையா உற்சாகமூட்டினார். தைரியப்படுத்தினார். அதனால் எப்படியோ சமாளித்தாள்.

     ஒரு நாள் ம.மு.க. பார்ட்டி ஆபீஸுக்கு ஜீன்ஸ் பனியனுடன் கிளம்பிவிட்ட அவளைத் தடுத்து நிறுத்தி, “அநு, இதெல்லாம் சினிமாவிலே பார்த்தா ரசிப்பாங்க, விசிலடிச்சு வியப்பாங்க. வாழ்க்கையிலே ஒத்துக்க மாட்டாங்க. ஒரே வார்த்தையிலே, ராங்கி பிடிச்சவ, திமிர்க்காரின்னுடுவாங்க. ஜீன்ஸோட போவாதே” என்றார் முத்தையா. ஆரம்பத்தில் இப்படி நிறையத் தவறுகளைச் செய்தாள் அவள். பின்னால் வரவரச் சுதாரித்துக் கொண்டாள். இந்தியாவும், தமிழ்நாடும் அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தன.

     ‘இன்றிருக்கும் மொழி சம்பந்தமான விரோதங்கள் பலதரப்பட்டவை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பிரதேச மொழிகள் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் நடுவிலுள்ள விரோதம்; ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், எந்த மொழியுமே சரியாகத் தெரியாதவர்களுக்கும் நடுவில் உள்ள விரோதம்; இந்தி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் நடுவேயுள்ள விரோதம்; இப்படி விரோதங்களின் பட்டியல் மட்டுமே இருந்ததே ஒழியச் சிநேகிதங்களின் பட்டியலே இல்லாதது துரதிர்ஷ்டமாயிருந்தது. அரசியலில் ஈடுபடுமுன் அநுக்கிரகாவுக்கு முத்தையா இதை விளக்கினார். அவர் விளக்காமல் மீதம் விட்டிருந்தவற்றைப் பொன்னுரங்கம், புலவர் கடும்பனூர் இடும்பனார் போன்றவர்களிடமிருந்து தெரிந்து கொண்டிருந்தாள். தமிழ் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை, ‘நான் தமிழன், தமிழச்சி - என் இரத்தம் தமிழ் இரத்தம் - சதை தமிழ்ச் சதை - நரம்பு தமிழ் நரம்பு - எலும்பு தமிழ் எலும்பு’ என்று பேசியே தமிழ்நாட்டில் காலம் தள்ளிவிடலாம் என்பது புரிந்திருந்தது. அநுக்கிரகா போன்ற தமிழே படிக்காத பெண்ணுக்கு இந்த நிலைமை மிகவும் உதவியாகவும், அநுசரணையாகவும் இருந்தது. அவளுடைய அந்த நெல்லுப்பேட்டை மண்டி மைதானத்துப் பிரசங்கத்துக்கு ஆரம்பம், முடிவு முதலிய பாணிகளைப் புலவரிடம் கேட்டுக் கொண்டு நடுவே பேச வேண்டியதைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள் அவள். ஆனாலும், புலவரோ, பொன்னுரங்கமோ, முத்தையாவோ அவளைக் கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்ட மாதிரி அப்படித் தனியே விட்டுவிடத் தயாராகயில்லை. ஒரு கூட்டுத் தயாரிப்பாகக் கலந்து பேசிப் புலவருடைய கையெழுத்தில் ஒரு முழு நீளப் பேச்சைத் திட்டவட்டமாக அவளிடம் எழுதிக் கொடுத்திருந்தனர். தற்செயலாகப் புரட்டிப் பார்த்து அதில் ஒரிரு வார்த்தைகளைத் தவிர மற்றவை தன் வாயில் நுழைய முடியாத அளவு கடுமையாகவும், பல்லை உடைப்பனவையாகவும் இருப்பதைப் பார்த்துப் பயந்தாள் அநுக்கிரகா.

     “சீவக சிந்தாமணிச் சிங்கமே, சீறி எழு! சிறுத்தையே, பொறுத்தது போதும்! பொங்கி எழு! புறநானூற்றுப் புலியே, புறப்படு! அகநானூற்று யானையே, மதம் கொள்!” என்கிற பாணியில் ஆரம்பமாயிற்று புலவர் அவளுக்குத் தயாரித்திருந்த பிரசங்கம். அநுக்கிரகா புலவரைக் கேட்டாள்:

     “அது சரி, நாம இதை மக்களுக்காக மக்கள் முன்னாலே பேசப் போறோமா, அல்லது சிங்கம், புலி, சிறுத்தை, யானைகளுக்காக ஏதாவது ஜூவிலே போய்ப் பேசப் போறோமா? உங்க பேச்சிலே ஒரு இடத்திலேயாவது, ‘மக்களே!’ ‘ஆண்களே!’ ‘பெண்களே!’ன்னு கூப்பிட மாதிரி வரலீங்களே?”

     “மக்களையே சிங்கம், புலின்னு வர்ணிக்கிறோம். அதான் அர்த்தம்.”

     “இந்த நாட்டிலே இன்னிக்கு மக்கள் யாரும் சிங்கம், புலி மாதிரி இருக்கிறதாத் தெரியலீங்களே. கழுதை மாதிரியில்லே பொறுமையா இருக்காங்க? சுமக்கறாங்க...?”

     அநுக்கிரகாவின் இந்தக் கேள்விக்குப் புலவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அவள் அத்துடன் அவரை விட்டு விடவில்லை. மேலும் விடாமல் துளைத்தாள்.

     “அனிமல் லைஃப் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும் புலவரே. சில புத்தகங்கள் படிச்சிருக்கேன். கிர் ஃபாரஸ்ட் லயன், ஹிமாலயன் டைகர், ராயல் பெங்கால் டைகர், ஆப்ரிகன் ஸஃபாரின்னு எல்லாம்தான் அதிலே வருமே ஒழிய, ‘புறநானூற்றுப் புலி’ன்னு ஒரு வெரைட்டியை நான் கேள்விப்பட்டது இல்லியே? அது என்னங்க அது? கொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்களேன் எனக்கு.”

     விவரம் புரியாமல் தான் அவள் இப்படிக் கேட்கிறாள். ஆனால் புலவருக்கு அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று தோன்றியது. “தமிழ்லே இந்த மாதிரி எல்லாம் ஆவேசமாப் பேசினாத்தான் ரசிப்பாங்க. ஆக்ரோஷமா இருக்கும். கைத்தட்டல் வாங்கலாம்.”

     “பேசற சப்ஜெக்ட் என்னன்னு தெரியாமல், சிங்கமே, புலியே, கழுதையே, கரடியேன்னு மணிக்கணக்கா முழங்கினா எப்படி?”

     “சப்ஜெக்டைப் பத்தி யாரு கவலைப்படறாங்க? சும்மாப் பூப் பூவா வாண வேடிக்கை கணக்கா வார்த்தைகளை அள்ளி விட்டுட்டு ஜால வித்தை பண்ணினா, மூணு மணி நேரம் கூடக் கேப்பாங்க.”

     இப்படிக் கூட்டம் கேட்க வரும் தமிழ் மக்களைப் பற்றிப் புலவர் கூறிய ‘கான்ஸெப்ட்’ அநுக்கிரகாவிற்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது. அதனால் புலவரிடம் அதைப்பற்றி அவளும் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. புலவரும் பேசாமலே விட்டுவிட்டார். ஒன்றை மட்டும் வற்புறுத்தினார்.

     “தந்தி விலாசம் மாதிரி சுருக்னு நம்ம கட்சிக்காரன் அடையாளம் புரிஞ்சுக்கிற எடம் ‘சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களே!’ என்பதுதான். தொடங்கறப்பவும், முடிக்கிறப்பவும் அதை எப்பிடியும் கொண்டாந்துடணும்.” என்றார் புலவர் இடும்பனார்.

     நெல்லுப்பேட்டை மைதானத்துக் கூட்டத்துக்குப் புறப்படும்போது எதற்கும் கையோடு இருக்கட்டும் என்று புலவர் எழுதிக் கொடுத்திருந்த கத்தையை எடுத்து வைத்திருந்தாள் அநுக்கிரகா. வேறு வழியில்லாமல் எதுவும் தோன்றாமல் போனால், அதிலிருந்து கொஞ்சம் படித்து விடலாம் என்று எண்ணினாள். கடைசி பட்சமாகத்தான் அந்த நினைப்பு அவளுக்கு இருந்தது. அது அவளுக்கு முதல் மேடை அநுபவம்.

     அநுக்கிரகாவுக்கு முன்பாகப் பேசிய ஒவ்வொரு பேச்சாளனும் அவளுக்கு முன்பின் அறிமுகமே இல்லாத புது நபர்களாயிருந்தும் அவளை வானளாவப் புகழ்ந்தார்கள். வார்த்தைகள் பைசாவுக்குப் பத்து சதவிகிதம் என்று தாராளமாக வந்தன.

     “அழகே உருவாக, அடக்கமே வடிவாக மேடையில் அமர்ந்திருக்கும் அண்ணி அநுக்கிரகா அவர்களே!” - என்றும்,

     “ஆக்ஸ்போர்டிலே ஆங்கிலத்தை கற்று அறிவு பல பெற்ற அண்ணியார் சேரத் தேர்ந்தெடுத்த இயக்கம், எம் தலைவன் ஏந்திய இயக்கமே!” - என்றும்,

     “மரியாதை மிகு அநுக்கிரகா அண்ணியாரின் பொன்னான திருவடிகளை வணங்கி, என் பேச்சைத் தொடங்குகிறேன்,” - என்றும் விதவிதமாகப் பேச்சுக்கள் அமைந்திருந்தன. கேட்ட வார்த்தைகளின் கனம் தாங்காமல் அவளுக்குத் தலை கனப்பது போலிருந்தது. அது தலைக்கனமா, தலைவலியா என்று இனம் புரியாததாயும் இருந்தது. ஓர் இளைஞன் சற்று அதிகமாகவே சென்று, “அன்னை அநுக்கிரகா தேவி அவர்கள் முன்பு பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்,” - என்று இன்னும் திருமணம் கூட ஆகாத அவளை, அவளே வெட்கப்பட்டுக் கூசும்படி அன்னைப் பட்டமும் தேவிப் பட்டமும் கொடுத்து விளித்தான்.

     கொஞ்சம் எடுப்பான அழகான யார் வந்து நாற்காலியைப் போட்டுக் கொண்டு மேடையில் அமர்ந்தாலும், உடனே அவர்கள் தலைமையை ஏற்று வணங்கி, அடிபணிந்து விட அவர்கள் தயாராயிருந்தார்கள். அவர்களிடையே தன்னைப் போல, அழகும், வசதியும் உள்ள ஒருத்தி தலைவியாக உயர்வது மிக மிகச் சுலபம் என்று அநுக்கிரகாவுக்கே புரிந்தது. வைக்கோல் அள்ளிப் போடுவது போலவும், சாணம் வாரிக் கொட்டுவது போலவும் வார்த்தைகளை மேடையில் வாரிப் போட்டார்களே ஒழிய, அங்கு யாரும் எதற்காகவும் வார்த்தைகளின் அர்த்தம் பற்றியோ கனபரிமாணம் பற்றியோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. முதல் தடவையாக இப்போதுதான் மேடையேறியுள்ள அவளை மேதை என்கிறார்கள். உளறிக் கொட்டிய மற்றொரு பேச்சாளனை நாவேந்தர் நாராயணனார் என்றார்கள். கடுகை மலையாக்கினார்கள். மலையைக் கடுகாக்கினார்கள். மிகைப்படுத்தலும், குறை கூறலும், பயங்கரமான அளவு எல்லை கடந்து போய் இருந்தன. தங்கள் புகழ், தங்களைச் சார்ந்தவர்களின் புகழ் அல்லது, ப்ளஸ் பாயிண்டுகள் கடுகாக இருந்தாலும் மலையாக்கப்பட்டன. தங்கள் எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறும் குறை விமரிசனங்கள் மலையாக இருந்தாலும் கடுகாக்கப்பட்டன. எதிரிகளின் கடுகத்தனை குறைகளை மலையாக்கி விவரிக்கத் தயங்காத கட்சிகள் தங்களது மலையத்தனை குறைகளைக் கடுகுபோல் சுருக்கிக் கொண்டு திருப்திப்பட்டன.

     ஒரு ம.மு.க. உறுப்பினர் என்ற முறையில் அல்லாமல் சாதாரணமாகவே அவளுக்கு இது புரிந்தது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் பாதுகாத்து, தன் எதிரிகளைக் கண்மூடித்தனமாகக் கண்டித்தது. தனக்கு வேண்டியவர்களின் மாபாதகங்களைக் கூட மறைக்கவும் மறக்கவும் உதவியது. தன்னெதிரிகளின் சிறு தவறுகளைக் கூடப் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாகப் பார்க்க முயன்றது. அநுக்கிரகா அந்த மேடையில் அமர்ந்திருந்த போது, இதை மிகவும் நன்றாகவே கண்டு உணர்ந்தாள்.