2

     கடைசியில் முத்தையாவுக்குத்தான் வெற்றி. கனிவண்ணனிடம் பொன்னுரங்கத்திற்கு உள்ள விரோதத்தைப் பயன்படுத்தி எப்படியோ சம்மதிக்க வைத்தார் அவர்.

     “நீ எவ்வளவோ பாடுபட்டு இந்த ஏரியாவிலே கட்சியை வளர்த்தே. அடி வாங்கி உதை வாங்கிக் கைக்காசைச் செலவழித்து நீ எல்லாத்தையும் பண்ணினாப் பிரயோசனம் கிடைக்கிற சமயத்திலே கனிவண்ணன் வந்து பிடிச்சுக்கிட்டான்.”

     “கனிவண்ணன் மட்டுமில்லீங்க. மாம்பழக் கண்ணன் கதை என்னவாம்? பஜார்லே மிளகாமண்டி வச்சிருந்தவன். அதைக் கூடக் கவனிக்காமல் பிஸினஸைத் தம்பி கையிலே விட்டுட்டு இங்கே வந்து செயலாளர் பதவியைப் பிடிச்சுக்கிட்டான்.”

     “ஏம்பா பொன்னுரங்கம், கனிவண்ணன், மாம்பழக் கண்ணன் இதெல்லாம் என்னப்பா பேரு? கனிவே இல்லாதவனைக் கனிவண்ணன்னு கூப்பிடறீங்க? கசப்பே உருவானவனை மாம்பழக் கண்ணன்கிறீங்க?”

     “சும்மா ஒரு பப்ளிஸிட்டிக்காகப் போஸ்டர்லே போடறதுக்கு மஜாவா இருக்கும்னு இவங்களா வச்சுக்கிட்ட பேருங்க; சுடலைமுத்துங்கிற பேரைக் கனிவண்ணன்னு மாத்திக்கிட்டான். மாடசாமிங்கிற பேரு மாம்பழக்கண்ணன் ஆயிடிச்சு.”

     “கனி, பழம்னெல்லாம் ரசமான பேரை வச்சிக்கிட்டுத் தான் ரசாபாசமா நடந்துக்கிறாங்கன்னு சொல்லு!”

     “அதுனாலதான் நான் பேரை மாத்திக்கலீங்க. அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். நம்ம பாப்பா பேரு கொஞ்சம் வாயிலே நுழையாத மாதிரி இருக்குதுங்க. மெம்பர்ஷிப் அட்டை வாங்கறதுக்கு முன்னாடியே மாத்திட்ட நல்லதுங்க. எங்க மாதிரிப் பார்ட்டிகளிலே பேர் தான் ரொம்ப முக்கியங்க.”

     “அரசியல் - அநுக்ரகா - ஆதரவு - எல்லாத்திலேயும் ‘அ’ தானே வருதுப்பா! இந்தப் பேரே போதும், சுருக்கிக் கூப்பிடணும்னா ‘அநு’ன்னு நான் கூப்பிடற மாதிரிக் கூப்பிட்டுக்கலாமே?”

     “இல்லீங்க... வந்து...!”

     “என்னப்பா இது? வந்தாவது போயாவது? அவள் முகராசிக்கே எல்லாம் நடக்கும்பா. பேரை மாத்தி ஒண்ணும் நடக்க வேண்டாம்.”

     “மானா. கானாவே மெம்பர்ஷிப் பத்திக் கேட்டப்போ ‘என்னப்பா பேர் ஒரு தினுசா இருக்கே?’ன்னு சொன்னாருங்க.”

     “அது யாருப்பா மானா, கானா?”

     “அதாங்க செயலாளர் மாம்பழக்கண்ணன்.”

     “இந்தப்பேர் அவம்மா வெச்சது! அவள் இப்போ உயிரோட இல்லை. நான் பண்ணின பாவம் அல்பாயுசாப் போயிட்டாள். அவள் வச்சிட்டுப்போன பேரை மாத்த வேண்டாம்னு பார்க்கிறேன். அதாவது ‘செண்டிமெண்டல் ரீஸன்’ செண்டிமெண்டல்னா உணர்ச்சிமயமானதுன்னு வச்சுக்கயேன்.”

     “சரிங்க. அவங்ககிட்டே சொல்லிப் பார்க்கிறேன், அவங்க கேப்பாங்களோ, மாட்டாங்களோ, எதுக்கும் ஒரு பேரை யோசிச்சு வச்சுக்குங்க.”

     “அநுக்ரகாங்கிற பேரோட அர்த்தம் வர்ற மாதிரி இருக்கணும்பா. அது முக்கியம். வேற அர்த்தம் வர்ற மாதிரிப் பேரு எனக்குப் பிடிக்காது.”

     “அர்த்தம் கிர்த்தம்லாம் நமக்குத் தெரியலீங்க. புலவர் ஒருத்தர் இயக்கப் பேச்சாளரா இருக்காருங்க. அவரை இட்டாந்தாக் கச்சிதமாக பேர் சொல்லிடுவாருங்க.”

     “யாருப்பா அது?”

     “கடும்பனூர் இடும்பனார்.”

     “அவர் பேரே வாயிலே நுழையற மாதிரி இல்லியேப்பா?”

     “குழந்தைகளுக்கு மேடைகளிலே பேர் வைக்கிறதுக்கே எங்க தலைவர் அவரைத்தான் கன்ஸல்ட் பண்ற வழக்கம்.”

     “சரி கூட்டிக்கிட்டு வா, பார்க்கலாம்.”

     பொன்னுரங்கம் சைக்கிளில் போய்ப் புலவரைக் கூட்டிக் கொண்டு வந்தான். அரும்பு மீசையும் கடுகடுப்பான முகமும், குண்டு குண்டு கண்களுமாகத் தரையைப் பெருக்குகிற மாதிரித் தாழ உடுத்திய அரை வேஷ்டியும், மல் ஜிப்பாவும், தோளில் துண்டுமாக ஒரு மத்திய வயது மனிதர் வந்து, “வணக்கங்க”, என்று எதிரே நின்றார்.

     “எங்கே வேலை பார்க்கிறீங்க?”

     “ஆர்.டி.எஸ். மேனிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர்.”

     “உம்மாலே பொதுக் கூட்டங்களுக்கும் போய்க்கிட்டு ஸ்கூல் வேலையையும் எப்படிப் பார்க்க முடியுது?”

     “பகலில் பள்ளி, இரவில் இயக்கம் ஐயா!”

     “சரி! அநுக்ரகாங்கிறதுக்கு வாயிலே நுழையற மாதிரி ஒரு தமிழ்ப் பேரைச் சொல்லும்.”

     “அவ் வடமொழிப் பெயருக்குத் ‘தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் ஆற்றல்’ என்று பொருள் ஐயா!”

     “நீர் சொல்றது ஒரு முழு நீள வாக்கியம். பேருங்கிறது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தையிலே இருக்கணும்! வாக்கியமா இருக்கக்கூடாது.”

     “அருட்செல்வி அல்லது அன்புச்செல்வின்னு வச்சிடலாங்க.”

     “யாரோ ஒரு சாமியார்ப் பொம்பளைன்னு நினைச்சிட போறாங்க.”

     “அப்போ உங்களுக்குப் பிடிக்கிற பேர் எப்படி அமையணும்னு நீங்களாவது ஒரு கோடி காட்டுங்களேன்?”

     “அநுக்ரகாங்கிற பேர் காலஞ்சென்ற என் மனைவி வைத்தது. அதுதான் எனக்குப் பிடிக்குது. பொன்னுரங்கம் தான் அதை மாத்தியாகணும்கிறான்.”

     “மாத்த வேண்டாங்க. அதையே தமிழாக்கி ‘அநுக்கிரகா’ன்னு கூப்பிடுங்களேன்?”

     “ஒரு ‘கி’ போட்டாப் போதுமா?”

     “இலக்கணப்படி போதும்.”

     “சரி, இடும்பனூர் கடும்பனாரே!”

     “பிழை! பிழை! என் பெயர் கடும்பனூர் இடும்பனார்.”

     முத்தையா சிரித்தபடியே பொன்னுரங்கம் ஜாடை காட்டியதைப் புரிந்து கொண்டு ஒரு கவரில் ஐம்பது ரூபாயைச் செருகிப் புலவரிடம் நீட்டினார்.

     “எதுக்குங்க இதெல்லாம்?”

     “அட! சும்மா இருக்கட்டும். வச்சிக்குங்க!”

     புலவர் கவரை வாங்கிக் கொண்டு, வணக்கத்தோடு விடைபெற்றார். “தமிழ்லே பேசக் கத்துக் கொடுக்கவும், இந்த ஆளையே ஏற்பாடு பண்ணிடு பொன்னுரங்கம். இவரை மாதிரி முரண்டு பண்ணாமே வளைஞ்சு கொடுக்கிற ஆள்தான் நமக்குத் தேவை.”

     பொன்னுரங்கமும் சரி என்றான். அரசியல் பிரவேசத்துக்காக அநுக்கிரகாவின் பெயரை மாற்றுவதில்லை என்றும், அவசியமானால் மாம்பழக்கண்ணனுக்கும் ஏதாவது ‘சம்திங்’ கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

     “புலவரு சொல்ற அர்த்தத்தைப் பார்த்தா இந்தப் பேரே அரசியலுக்குப் படு பொருத்தமாக இருக்கும் போலத் தெரியுதேப்பா! ‘தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் சக்தி’ன்னு அநுக்கிராவிற்கு அர்த்தம் சொல்றாரு. அரசியல்லே இப்போ இருக்கிற தீமைகளை விலக்கிப் புதிய நன்மைகளை அருளப் போகிறவள்னு இதற்கே விளக்கம் சொல்லிக்கலாம்” என்று வி.டி.முத்தையா கூறிய வியாக்கியானம் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் பெரிதாக அதெல்லாம் புரிந்துவிட்டதைப் போலத் தலையை ஆட்டி வைத்தான். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவன் கட்சி அலுவலகத்துக்குச் சென்று, மாம்பழக்கண்ணனுக்கு இருநூறு ரூபாய் லஞ்சமும் அநுக்கிரகாவின் உறுப்பினர் விண்ணப்பக் கட்டணத்துக்காக ரூபாய் இரண்டும் கொடுத்து உறுப்பினராக்கியதும், உறுப்பினர் அட்டையை உடனே எழுதி வாங்கி வந்ததும் நடந்து முடிந்த அதிசயங்கள்.

     டென்னிஸ் உடையிலிருந்து புடவைக்கு மாறிய அநுக்கிரகா தன் தந்தையின் முன்னிலையிலே பொன்னுரங்கத்திடமிருந்து உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு, “வெரி கைண்ட் ஆஃப் யூ பொன்னுரங்கம்” என்ற போது, சர்.வி.டி. முத்தையா குறுக்கிட்டு “நன்றின்னு தமிழ்லே சொல்லணும் அநு. பொன்னுரங்கத்திட்டே போய் இங்கிலீஷ்லே சொன்னா எப்படி?” என்று மகளைப் பிரியமாகக் கண்டித்தார்.

     அவளும் உடனே, “நன்றி, பொன்னுரங்கம்” என்று தன்னைத் திருத்திக் கொண்டு சொன்னாள். முத்தையா திருப்திப்பட்டார். அடுத்தவாரமே நெல்லுப் பேட்டை மண்டி மைதானத்தில் நடக்க இருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில் அவள் மேடை ஏறிப் பேச வேண்டியிருக்கும் என்று பொன்னுரங்கம் கூறிய போது அநுக்கிரகாவுக்குப் பயமும் பதற்றமும் ஏற்பட்டன.

     அதைக் கவனித்த முத்தையா, “ஒண்ணும் பயப்படாதே அநு! ஸ்மார்ட்டா இலட்சணமா ஒரு சின்னப் பொண்ணு மேடையேறிச் சுமாராப் பேசினாக்கூட ஆடியன்ஸ் பொறுத்துப்பாங்க. என்னை மாதிரி ஒருத்தன் பிரமாதமாகப் பேசினாலும் சாதிக்க முடியாததை நீ ரெண்டு சிரிப்பிலேயே சாதிச்சுக்கலாம்,” என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.