20

     ஃபோன் செய்து அப்பாவிடம் தான் வரப்போவதைச் சொல்லிவிட்டு போவதா அல்லது திடுதிப்பென்று போய் நிற்பதா என்று அநுக்கிரகா யோசித்தாள். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் சொல்லி அவர்களிடம் விட்டால் அரை நொடியில் எல்லா ஏற்பாடுகளும் செக்யூரிட்டி வசதிகளும் செய்து முடித்து, “மினிஸ்டர் வராங்க,” என்று தகவலும் சொல்லிவிடுவார்கள். அதிகார பூர்வமான விசிட்டாயிருந்தால் அப்படிச் செய்யலாம். ஆனால் இதுவோ பிரைவேட் விசிட். இதுவரை அமைச்சரான பின் அவரிடமிருந்து பிரிந்து வந்த பிறகு அவள் அந்த வீட்டுக்குப் போய்த் தந்தையைப் பார்க்கவே இல்லை. முதல் தடவையாகப் போகிறாள். ‘நிர்த்தாட்சண்யமாகச் சொத்து ஒன்றை பிடுங்குவதுதான் பிடுங்குகிறோம். பின்னால் தன்னைத் திட்டாமல் முதலில் பார்த்து ரெண்டு வார்த்தை சமாதானம் சொல்லிவிட்டு வந்துவிடலாம்’ - என்று தான் அவள் ஆவாரம்பட்டு ஹவுஸுக்குப் போக விரும்பினாள். பிரிந்து அரசாங்க வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஃபோனில் கூட அவள் அவரிடம் பேசியதில்லை. இப்போது திடீரென்று பேசினால் அவர் வம்பு பண்ணுவார். அல்லது பேசாமல் ஃபோனை வைத்துவிடுவார். அதனால் முன் தகவல் எதுவும் கூறாமல் அரசாங்கக் காரையும் விடுத்துத் தெரிந்த சிநேகிதி ஒருத்தியின் காரை இரவல் வாங்கி, தானே ஸெல்ஃப் டிரைவிங் செய்து கொண்டு இருட்டிய பின்பு போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்துக் கொண்டாள் அநுக்கிரகா. டிரைவர் என்று யாரையாவது அழைத்துப் போவதன் மூலம் வீண் வம்பும் வதந்தியும் தான் பரவும். அவள் அரசியல் எதிரிகளுக்குத் தெரிந்தால், ‘தந்தையின் நிலத்தை அக்வேர் செய்யும் வகையில் அதிகமான காம்பென்சேஷன் தரச் செய்து உதவவும் யோசனை கூறவும் தான் அவரைக் காணச் சென்றாள்,’ என்று கூடப் பரப்பி விடுவார்கள். அதற்கு அஞ்சியே இரவில் செல்ல முடிவு செய்திருந்தாள். கடமை, மந்திரிப் பதவி, கட்சியின் ஏழை எளியோருக்கு உதவும் சோஷலிஸத் திட்டங்கள் எல்லாவற்றையும் மீறி அநுக்கிரகாவின் உள் மனம் அவளைக் கடுமையாகக் குத்திக் காட்டியது.

     இருக்கிற மாளிகையைச் சுற்றி நுழையவும் வழியின்றிக் குடிசை போட்டதைச் சரி செய்யவே அவளை அவர் அரசியலில் இரங்கச் செய்தார். அவளோ சந்தர்ப்ப நிர்ப்பந்தங்களின் கைதியாகி அவரது ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ நிறைந்த அந்த ஒரு வீட்டையும் எடுத்துக் கொண்டு காம்பன்சேஷன் தர உத்தரவிட்டு விட்டாள். குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாகிவிட்டது. தான் இதைச் செய்யாவிட்டால் தந்தையின் சொத்தைக் காப்பாற்றவே இதைச் செய்யாமலிருந்ததாக எதிர்க் கட்சிகள் தன்னைக் குறை கூறும். ‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்கிற பாணியில் முதலில் தன் தந்தையின் இடத்தையே குடிசைகளை வீடாக மாற்றும் திட்டத்துக்காக எடுத்துக் கொண்டு நஷ்ட ஈட்டுத் தொகை தர உத்தரவிட்டிருந்தாள் அவள்.

     ‘வேறு வழியில்லை! என்னை மன்னியுங்கள்,’ - என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்துவிட வேண்டும் என்று அவள் தானே காரை ஓட்டிக் கொண்டு, அவரைக் காணக் கிளம்பின போது இரவு ஒன்பதே கால் மணி.

     ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பிலும் இப்போது பல குடிசைகள் வந்திருந்தன. அந்த குடிசைகளின் முன்புறம் தெருவிளக்கு ஒளியில், ‘அநுக்கிரகா நகர்’ என்ற போர்டு எழுதியிருப்பதையும் அவள் காரிலிருந்தபடியே பார்த்தாள். அநுக்கிரகா நகர், முதலமைச்சர் நகர் என்று பெயர்களை வைப்பதில் ஒரு தந்திரம் இருந்தது. பேர்களுக்கு அஞ்சி யாரும் வந்து குடிசைகளைக் காலி செய்யச் சொல்ல மாட்டார்கள். அந்தக் குடிசைப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அமையும் தலைவர்களின் பெயர்களையே பார்த்து வைத்தார்கள். ஆவாரம்பட்டு ஹவுஸ் உள்ளே செல்லும் சாலையிலேயே குறுகலான இடைவெளியுள்ள பகுதிதான் மீதமிருந்தது. இராத்திரி நேரமாதலால் ரோட்டிலேயே பாய் விரித்து ஆட்கள் வேறு படுத்திருந்தார்கள். ஆட்கள் மேல் ஏறி விடாமல் காரை மிகவும் மயிரிழையில் செலுத்திக் கவனமாக ஓட்ட வேண்டியிருந்தது. ஏறக்குறைய குடிசைகளால் தர்ணா செய்யப்பட்ட மாதிரி நடுவே சிக்கி இருந்தது ஆவாரம்பட்டு ஹவுஸ். இங்கே கிடந்து இவ்வளவு சிரமப்படுவதற்குப் பதில் கவர்ன்மெண்ட் அக்யுஸிஷனுக்கு இசைந்து காம்பன்சேஷனை வாங்கிக் கொண்டு அதை விற்றுவிட்டு அப்பாவே முந்திக் கொண்டு வேறிடத்தில் குடி போய்விடலாம். கேட்க மாட்டார். அப்பாவுக்கு இது பிரஸ்டிஜ் விஷயம். ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ உள்ள வீடு. இதை லேசில் விட இசையமாட்டார்.

     அவர் ஹார்ன் ஒலியெழுப்ப, கேட்டுக்கு அப்பாலிலிருந்து தோட்டக்கார முனியன் வந்து ஆவாரம்பட்டு ஹவுஸின் பிரதான வாசலைத் திறந்தான். எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டவனாய், “யாரு? சின்னம்மாங்களா? வாங்கம்மா வாங்க... நல்லாருக்கீங்களா?” - என்று வரவேற்றான் முனியன்.

     “அப்பா எங்கே முனியா?”

     “உள்ளே ஹால்லே இருக்காரு.”

     “எப்படி இருக்காரு?”

     “இருக்காரும்மா! யாருட்டவும் ரொம்பப் பேசறதில்லே...”

     அவள் ஹாலுக்குள் நுழைந்த போது ஒரு சோபாவில் சாய்ந்து இன்னொரு சோபாவில் இரு கால்களையும் நெடுங்குத்தாகத் தூக்கி நீட்டியபடி மேலே சீலிங்கில் தேக்குப் பலகை இழைத்து வார்னிஷ் பூசிய விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்ததைக் கவனிக்கவில்லை. அவரது கவனத்தை அவளால் ஈர்க்கவும் முடியவில்லை. கண்கள் என்னவோ நிலை குத்தினாற் போல அலங்கார வேலைப்பாடுகளும், சாண்ட்லியர்களும் நிறைந்த அம்மாளிகையின் விட்டத்திலேயே இருந்தன.

     “உள்ளே வரலாமா அப்பா?”

     பதில் இல்லை. மறுப்பும் இல்லை. அங்கிருந்த தனது படங்களில் தோற்ற மறைவு எழுதியிருந்ததை அவளே பார்த்தாள்.

     “அநு வந்திருக்கேன்ப்பா...”

     வா, என்றோ வரவேற்கும் சாயலிலோ எதுவும் நிகழவில்லை.

     “என் மேலே உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு.”

     இதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

     “என்னை நீங்க பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்! ஐயாம் வெறி ஸாரி டாட். கட்சிக் கொள்கைக்கு நான் கட்டுப்பட வேண்டும். ஐயாம் எ பிரிஸனர் ஆஃப் சர்கம்ஸ்டன்சஸ், இட் வாஸ் அவர் காபினெட் டெஸிஷன்.”

     இப்போது முதல் முதலாக வாய் திறந்தார் அவர்.

     “பீட்டரைக் கொள்ளையடித்துப் பாலுக்குக் கொடுத்ததாக ஒரு பழமொழி உண்டு.”

     “குடிசைப் பகுதி ஒழிப்புக்காக நாங்க நிலம் கையகப்படுத்திக் கொள்ளணுமே?”

     “யூ காண்ட்! நான் கோர்ட்டிலே வழக்குப் போடுவேன். சேலன்ஞ் பண்ணுவேன்.”

     “அதுக்கு ஆர்டனன்ஸ் போட்டிருக்கோம்ப்பா... சேலஞ்ச் பண்ண முடியாது.”

     “நான் சேலஞ்ச் பண்றேன். ஜெயிக்கிறேன். நீங்கள்ளாம் கவர்மெண்டா நடத்தறீங்க? சும்மா ஓட்டுப் பிடிக்கிற ஸ்டண்டுக்காக என்னென்னமோ பண்றீங்க! அதுக்குப் பேரு அவசரச் சட்டம். தெருவிலே நிற்கிறவனைக் கோபுரத்துக்கு உயர்த்த ஒரு சட்டம். கோபுரத்திலே இருக்கிறவனைக் குப்புறப் பிடிச்சுத் தள்ள ஒரு அவசரச் சட்டம்.”

     “நான் மந்திரிங்கிற முறையிலே இப்போ இங்கே வரலே அப்பா! உங்க மகள் அநுக்கிரகாவாத்தான் வந்திருக்கேன்.”

     அதுவரை அசையாமல் படுத்திருந்த முத்தையா தலையைத் திருப்பி நிமிர்ந்து உறுத்தலாய் அவளைப் பார்த்தார். அப்பப்பா! அவளால் அந்தக் கடுமையையும் சூட்டையும் தாங்கவே முடியவில்லை. நெற்றிக் கண்ணையும் சேர்த்துத் திறந்து மூன்று கண்களாலும் அவர் அவளைப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் அவர் அவளை மரியாதையாகவோ பிரியமாகவோ உட்காரச் சொல்லிக் கூட உபசரிக்கவில்லை. வந்த போதிருந்த அதே கடுமை, அதே சூடு, அதே பாராமுகம், அதே வெறுப்பு, அதே இறுக்கம்.

     “என்ன சொன்னே இப்போ?”

     “மந்திரியா வரலே, உங்க மகளா வந்திருக்கேன்னு சொன்னேன்.”

     “என் மகளா? அப்பிடி யாரும் இப்போ எனக்கு இல்லியே? தேர்தலுக்கு முன்னாடி வரை ‘அநு’ன்னு செல்லமா எனக்கு ஒரு பெண் இருந்தா. அப்புறம் ஒரு எம்.எல்.ஏ. - அநுக்கிரகாங்கிற எம்.எல்.ஏ. - கழுத்து நெறையப் பலிகாடவுக்குப் போட்ட மாதிரி மாலையோட அர்த்த ராத்திரியில் இங்கே ஊர்வலமா வந்தாள். அதுக்கப்புறம் மாண்புமிகு அமைச்சர் அநுக்கிரகான்னு ஒருத்தி இருக்காள்... என் மகள் அநு போயி ரொம்ப நாளாச்சே?”

     “இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா அப்பா? இங்கே சுவரிலே மாட்டியிருக்கிற படத்துக்குக் கீழே எல்லாம் தோற்றம் - மறைவுன்னு கூட எழுதிப் போட்டிருக்கீங்க! யாராவது மூணாவது மனுசங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?”

     “என் மகள் போயிட்டதாக நினைப்பாங்க.”

     “உங்களுக்குப் புத்தி சுவாதீனம் இல்லாமப் போச்சா என்ன?”

     “அப்படித்தான் ஊர்ல பேசிக்கிறாங்க. நீயும் நினைக்கிறே! உண்மையிலே புத்தியே எனக்கு இப்பத்தான் தெளிவாகி இருக்கு.”

     “தப்பா நினைக்காதீங்கப்பா! ஏழைகளுக்காகப் பல அடுக்கு மாடி வீடுகளைக் கட்டறது எங்க தேர்தல் ‘மானிஃபெஸ்டோவில’ நாங்களே சொல்லியிருக்கிற விஷயம்.”

     “தேர்தல் மானிஃபெஸ்டோவில சொல்லியிருக்கிற எல்லாத்தையுமே செய்துடுவீங்களா?”

     “எதைச் செய்யலேன்னு சுட்டிக் காட்டுங்க. உடனே செய்யறோம்.”

     “ரூபாய்க்கு நாலு கிலோ அரிசி அனைவருக்கும் - சம வாய்ப்புன்னெல்லாம் போட்டிருக்கீங்களே, அதெல்லாம் செஞ்சீங்களா? சம வாய்ப்புன்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் நீதான் சொல்லேன். தெரிஞ்சுக்கிறேன்.”

     “ஏழை பணக்காரன்கிற வித்தியாசமின்றி எல்லாருக்கும் நன்மை செய்யறது.”

     “எங்கே அப்பிடிச் செய்யறீங்க...? அப்பன் பணத்திலே இருபத்தைஞ்சு லட்சம் தண்ணியாச் செலவழிச்சு எம்.எல்.ஏ. ஆகி மந்திரியாகி அப்புறம் அந்த அப்பனையே நடுத் தெருவிலே கொண்டாந்து நிறுத்தறதுதான் வித்தியாசமின்றிச் சமவாய்ப்பு அளிக்கிறதாக்கும்?”

     “இங்கே நான் ஒரு சமஸ்தானாதிபதியின் மகள், மேட்டுக் குடியைச் சேர்ந்தவள், குடிசைவாசிகளுக்கு நன்மை செய்ய மாட்டேன்னு முன்கூட்டியே பிரச்சாரம் பலமாக நடந்திரிச்சுங்கிறதாலே இந்த ஆவாரம்பட்டு ஹவுஸை ‘அக்வேர்’ பண்ணி அதன் மூலம் நான் ‘ஏழை பங்காளி’ன்னு மக்களுக்கு நிரூபிக்கணும்னு எங்க தலைவர் அபிப்பிராயப்படறார்.”

     “அதை நீ செயல்படுத்தினியாக்கும்?”

     “ஆமாம்... செஞ்சு தொலைக்க வேண்டியதாப் போச்சு... வேற வழி?... உங்க மகள்ங்கிற முறையில நீங்க என்னை மன்னிக்கணும். கவர்மெண்ட் குடுக்கிற காம்பன்சேஷன்லே வேற வீடு கட்டிக்கலாம். அல்லது எங்கூட வந்து இருக்கலாம்.”

     “நெவர்! நெவர்! இந்த வீட்டை விட்டு நான் வெளியேர்றதா இல்லை. சேலன்ஜ் பண்ணுவேன். ரிட் போடுவேன். ஸ்டே வாங்குவேன். தகராறு பண்ணி மீதி உள்ள சொத்தைப் பூரா இதுக்காகவே செலவழிச்சு இதிலேயே செத்தாலும் சாவேனே ஒழிய - வெளியேறுகிற பேச்சே இல்லை.”

     “இந்த வயசு காலத்திலே அடம்பிடிக்கிறீங்களே, காலம் மாறுகிறது. உங்க எண்ணத்தை மாத்திக்குங்க.”

     “இதிலே உன்னை மாதிரி ஓட்டுத் திருடங்களான அரசியல்வாதிகளோட அட்வைஸ் எனக்குத் தேவை இல்லே.”

     “அப்போ எனக்கு உங்க முடிவான பதில் தான் என்ன?”

     உடனே முத்தையா துள்ளி எழுந்தார். படுக்கை அருகே இருந்த ‘டார்ச்’சைக் கையில் எடுத்துக் கொண்டார்.

     “எங்கூட வா... பதில் சொல்றேன்.”

     அவள் அவரைப் பின் தொடர்ந்தாள்.

     வாசல் கேட் அருகே வந்ததும் டார்ச் ஒளியைப் பாய்ச்சி, “இதுதான் என் பதில்! நல்லாப் பார்த்துக்கோ” - என்றார்.

     அவள் பார்த்தாள். ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக இந்தப் பங்களாவிற்குள் நுழையக் கூடாது.’

     அவள் படித்து முடித்து அவரை நோக்கித் திரும்பியதும், “ஐ ஸே கெட் அவுட்... ப்ளீஸ் கெட் அவுட்” - என்று நிர்த்தாட்சண்யமாக அவளிடம் சொன்னார் முத்தையா.

(முற்றும்)