![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 9 எலெக்ஷனுக்கு இன்னும் இரண்டே இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன என்கிற சமயத்தில் திடீரென்று பொன்னுரங்கம் பதற்றமாகவும், பரபரப்போடும் ஆவாரம்பட்டு ஹவுஸைத் தேடி வந்தான். முத்தையாவையும் அநுக்கிராகாவையும் சந்தித்தான். “பேட்டை பேட்டையாக நம்ப ஆளுங்களை எதிர்த்தரப்பு ஆளுங்க பூந்து அடிக்கிறாங்க. இந்த வன்முறையை நிறுத்தக் கோரி வர்ற ஞாயிற்றுக்கிழமை நெல்லுப்பேட்டை மைதானத்திலே உண்ணாவிரதம் இருக்கணும்.” “சரி, செஞ்சிடலாம்... அதுக்கு என்ன ஏற்பாடு?” “நம்ம பாப்பா தான் உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்குது!” “சரி, ஏற்கலாம். எத்தினி நாள் உண்ணாவிரதம்?” “நீங்க ஒண்ணு; காலையிலே 8 மணியிலேர்ந்து மாலை 6 மணி வரை. வெறும் பத்து மணி நேர உண்ணாவிரதத்துக்கே ஆளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. நீங்க என்னடான்னா எத்தினி நாள்னு வேற கேட்டு வயித்தெரிச்சலைக் கெளப்பறீங்க...?” “இன்னிக்கு இந்தத் தேசத்திலே காலைல எட்டு மணிக்கு அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கிற எத்தினியோ பேரு மறுபடி ராத்திரி எட்டு மணிக்குத்தான் கால் வயிற்றுக்குச் சாப்பிட முடியுது. பன்னிரண்டு மணி நேரப் பட்டினியையே அவங்க உண்ணாவிரதம்னு சொல்லிக்கிறதில்லே. நீங்க என்னடான்னா வெறும் பத்து மணி நேரப் பட்டினியை உண்ணாவிரதம்னு போஸ்டர் போடப் போறீங்க.” “ஆமாம். போடப் போறோம். அதுக்கு என்ன? அது தான் அரசியல்.” “ஜமாய்ச்சுத் தள்ளுங்க... அறிவுச் செல்வி அநுக்கிரகா தலைமையில் வன்முறையைக் கண்டித்து உண்ணாவிரதம். போஸ்டர் போட்டுடு. இன்னா செலவாகும்? சொல்லு.” “போஸ்டர் மட்டும் இல்லே சார்! வேற சிலதும் செலவிருக்கு.” “என்னன்னு தான் சொல்லேன்.” “கனிவண்ணன் ஆளுங்க, கல் எறிவாங்க... சாணி அடிப்பாங்க... மாடு பன்னிங்களை அவுத்து விட்டுக் கலாட்டா பண்ணுவாங்க!” “அமைதியா உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கிறவங்களையா அப்படி எல்லாம் கஷ்டப்படுத்துவாங்க?” “எதிரி கோஷ்டியாச்சே, அதனாலே கலாட்டா பண்ணி ‘உண்ணாவிரதம் இருந்தவர்கள் கல்லெறிக்குப் பயந்து ஓட்டமெடுத்தனர்’னு நியூஸ் வர்ற மாதிரிப் பண்ணிடுவாங்க சார்.” “சரி. அதை எப்படிச் சமாளிக்கப் போறே நீ?” “அதைத்தானே இப்போ சொல்லிக்கிட்டிருக்கேன். நாம நம் தரப்பிலே உண்ணாவிரதத்துக்கு உட்கார்த்தரவங்களையே பக்கா ரௌடிங்களாப் பார்த்து உட்கார விட்டோமானால் கவலையே இல்லை.” “என்னப்பா இது? வன்முறையை எதிர்த்து உண்ணாவிரதம்ங்கிறே? அதுக்கு வன்முறை ஆட்களை உட்கார வைக்கணும்னு சொல்றே. ஒரே குழப்பமா இருக்கே?” “குழப்பமாவது ஒண்ணாவது! அதெல்லாம் எதுவுமே இல்லீங்க. எதிரிங்க கலாட்டா பண்ண வந்தால் நாமும் பதிலுக்குத் தயாராயிருக்கணும்னுதான்.” “இப்படிச் செய்யறதுக்குப் பதிலா நீ உண்ணாவிரதத்துக்குள்ளே உட்கார வைக்கப் போற இதே நூறு இருநூறு ஆளுங்களுக்குத் தண்ணி ஊத்திப் பிரியாணி வாங்கிக் கொடுத்து நேரே போய் நம்ம எதிரிங்களை உதைங்கடான்னு சொல்லி ஏவி விட்டுடலாமே?” “கூடாதுங்க. அப்படிச் செஞ்சா நாம எதிர்பார்க்கிற பப்ளிஸிடி கிடைக்காதுங்க. கலாட்டா பண்ணப் போறோம்னு போஸ்டர் போட்டுக்கிட முடியாது. வன்முறையை எதிர்த்து அநுக்கிரகா தலைமையில் உண்ணாவிரதம்னு போஸ்டர் போடலாம். அதாலே தான் இப்படித் தோது பண்ணியிருக்கேன்.” “சரி, செய்! உனக்குப் பணத்தை வாரி இறைச்சிக்கிட்டு இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டித் தூக்கம் வராது.” “கொஞ்சம் நமக்குள்ள ரகசியமா இருக்கிற மாதிரி நீங்க காதும் காதும் வச்ச மாதிரி இதுக்கு நம்ம பங்களாவிலேயே ஒரு உதவி செய்யணும்.” “என்ன செய்யணும்?” “உண்ணாவிரதத்துக்கு உணவு சப்ளை பண்ணணும்.” “என்னது? உண்ணாவிரதத்துக்கு உணவா! வேடிக்கையாய் இருக்கே? விளையாடறியா நீ?” “நிஜமாத்தாங்க. பட்டினியோட எவனும் உண்ணாவிரதத்துக்கு வரத் தயாராக இல்லீங்க. அதுவும் நான் சொல்ற மாதிரி எதிரிங்க தாக்க வந்தா சமாளிக்கிற பலத்தோட ஆளுங்க கிடைக்கணும்னா, கஷ்டப்பட வேண்டியிருக்கு. காலைலே அஞ்சு மணிக்கே இருட்டோட இருட்டா ரெண்டு அவிச்ச முட்டை, ஆறு இட்லி, காப்பி போட்டப்புறம் தான் சாப்பிட்டுட்டுத் தெம்பா உண்ணாவிரத மேடையிலே வந்து உட்காருவாங்க. அம்பது ரூபாவும் ராத்திரி சிக்கன் பிரியாணியோட விருந்தும் போடணும்.” “இதுக்குப் பேர்தான் உண்ணாவிரதமா? பரிதாபம்!” “பின்னென்ன? காந்தியும், விநோபாவுமா பாழ் போறாங்க. கூலிக்குப் பிடிச்சிக்கிட்டு வரவனை எல்லாம் காந்தி மாதிரி பட்டினி கிடக்கச் சொல்ல முடியுங்களா?” “ஒண்ணு மீதம் விடாமல் எல்லாப் பெரிய விஷயங்களையுமே அசிங்கப்படுத்திடுவீங்க போலிருக்கேப்பா?” “என்னா செய்யறதுங்க? கால தேச வர்த்தமானம் அப்படி ஆயிடிச்சுங்களே?” “சர், பணம் என்ன வேணும்னு சொல்லுப்பா.” “ஒரு மூவாயிரம் இருந்தா சமாளிச்சிடலாம். சாப்பாட்டு வகையறாச் செலவு உங்க பக்கம். நீங்க பார்த்துக்கிடணும்.” முத்தையாவுக்கு எரிச்சலாய் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக பணத்தை எடுத்துக் கொடுத்தார். ‘இன்னும் ஏழே ஏழு வாரம். ஒண்ணே முக்கால் மாசம் தான். எலெக்ஷன் முடிஞ்சு அநு எம்.எல்.ஏ ஆன மறுநாளே இந்தப் பொன்னுரங்கம் மாதிரி ஆளுங்களை வீட்டிலே படி ஏறக்கூட விடக்கூடாது. இவங்ககிட்டே மட்டும் மாட்டினோமோ பிளாக்மெயில் பண்ணியே பணம் பறிச்சிடுவாங்க. இனிமே இவங்க சங்காத்தமே ஆகாது’ என்று அப்போது வைராக்கியமாக நினைத்துக் கொண்டார். தன் மகள் எம்.எல்.ஏ. ஆனாலும், மந்திரியானாலும் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகளும், சாக்கடைகளும், குப்பைமேடுகளும் அகன்று பூக்களும், மரங்களுமாக ஒரு பசுஞ்சோலை உருவாகிச் சுத்தமான காற்றும் கண்ணுக்கு இரம்மியமான சூழலும் கிடைக்கப் போவதை எண்ணினார் அவர். ஒரு வகையில் பார்த்தால் இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனமான ஆசைகளாகவும், கனவுகளாகவும் அவருக்கே தோன்றின. இப்படி மகளை அரசியலில் இறக்கி விட்டுவிட்டு அவள் எம்.எல்.ஏ. ஆவாள், மந்திரி ஆவாள் என்ற நைப்பாசையில் போஸ்டருக்கும், பிரியாணிக்கும் இலட்ச இலட்சமாய்ப் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு சீரழிவதை விட அன்றைக்கே அந்தக் கனிவண்ணன் எம்.எல்.ஏ. கிட்டே லஞ்சமாகக் கேட்ட பத்தாயிரம் ரூபாயை மூச்சு விடாமல் ஒரு கவருக்குள் போட்டு அவனிடம் நீட்டியிருந்தால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றி இப்போது ஒரு பூங்கா சிரித்துக் கொண்டிருக்கும். பத்தாயிரம் ரூபாய் பிரச்சினையாய் இருக்கவில்லை. அவன் தன்னைக் காக்கப் போட்டதும், நிறுத்தி வைத்துப் பேசியதும், அவமானப்படுத்தியதும்தான் அவருள் அவனைப் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து முறுக்கேற்றியிருந்தன. இன்னும் அந்த முறுக்குத் தளராமல் தான் உள்ளுக்குள்ளே இருந்தது. பரம்பரை வீராப்பும், தடங்கலற்ற பணவசதியும், நினைத்தது எதுவானாலும் அதை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற அவரது நாட்பட்ட முரண்டும் முத்தையாவை அநுவின் அரசியல் பிரவேசத்துக்காக நிறையச் செலவழிக்கச் செய்திருந்தன. முதலில் அநுக்கிரகா கூட ஒரு மாதிரி தயக்கம் காட்டினாள். அரைவேக்காட்டு ஆட்களையும், ஞான சூனியங்களையும் ‘வணக்கம் தலைவரே!’ என்று விளிக்க வேண்டிய அவமானம் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ம.மு.க.வில் அவளுக்கு இருந்த அறிவுக் கூர்மைக்கும் ஐ.க்யூ. லெவலுக்கும் குறைவான ஆட்களே நிரம்பியிருந்தனர். புத்தியுள்ளவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. மந்தங்களும், மரமண்டைகளும், துதிபாடிகளும், அடிவருடிகளும், விசிலடிப்பவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களும் நிறைந்த ம.மு.க.வில் தனது சுயநலத்திற்காகத் தன்னைத் தந்தை பிடித்துத் தள்ளிவிட்டாரே என்று ஆரம்பத்தில் எரிச்சலாய் இருந்தாலும், புகழ், வாழ்க கோஷம், மாலை மரியாதை, ஆரத்தி சுற்றும் பெண்கள், கைதட்டும் ஜனங்கள் எல்லோருமாகச் சேர்ந்து - எல்லாமாகச் சேர்ந்து அவளுக்கு அதில் ருசி ஏற்படுத்தியிருந்தார்கள். இப்போதெல்லாம் பொதுக் கூட்டம் இல்லாமல், கூட்டத்தைப் பார்க்காமல், கைதட்டலைக் கேட்காமல் அவளால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. சாயங்காலம் ஆனால் ‘பொன்னுரங்கம் எங்கே?’ என்று கேட்க ஆரம்பித்தாள். அவன் வருவதற்கு நேரமானால் காரை அனுப்பி டிரைவரிடம் அவனைக் கூட்டிக் கொண்டு வருமாறு கூறியனுப்பினாள். முத்தையாவே, “நீ எங்கும் போக வேண்டாம் வீட்டோடு இரு, போதும்” என்று கூறினால் கூட இனிமேல் அவள் கேட்க மாட்டாள் போலிருந்தது. பொன்னுரங்கத்தின் மேலும், ம.மு.க. ஆட்கள் மேலும் முத்தையாவுக்குத்தான் வெறுப்பும், சலிப்பும், தட்டினவே ஒழிய, அநுக்கிரகாவுக்குப் பிடிமானமும், பற்றும் அதிகமாகிக் கொண்டிருந்தன. கனிவண்ணனைத் திட்டுகிறேன் பேர்வழியே என்று சுடுசரம் என்ற பத்திரிகைக்காக மாதம் தவறாமல் முத்தையாவிடம் பயங்கரமாகப் பணத்தைக் கறந்தார்கள் பொன்னுரங்கமும், கடும்பனூர் இடும்பனாரும். அதில் ஒவ்வொரு தரமும் முதல் பக்கத்திலிருந்து பதினாறாம் பக்கம் வரை ஐந்தாறு இடங்களிலாவது அநுக்கிரகாவின் புகைப்படத்தைப் பிரசுரித்தார்கள். அறிவுச் செல்லி அநுக்கிரகா, வருங்கால வழிகாட்டி, எதிர்காலத் தலைவி என்றெல்லாம் எழுதி அவளைப் புல்லரிக்க வைத்தனர். ஒரு முறை மனித ரத்தத்தை ருசிப் பார்த்த புலி போல், மேடைப் புகழை ருசி பார்த்த அநுக்கிரகாவும் ஆகியிருந்தாள். அவளால் இப்போது அதை விட முடியவில்லை. “வணக்கங்க அம்மா! எத்தினி நேரமானாலும் நீங்க பேசறதைக் கேட்கத்தான் காத்திக்கிட்டிருக்கோம்” என்று கைகூப்பும் இளைய முதிய பெண்களும், பயபக்தியோடு அவளை வரவேற்கும் கட்சி ஊழியர்களும் அவளை அவற்றிலிருந்து மீளாமல் அழுந்திப் போகும்படி செய்திருந்தனர். நெல்லுப்பேட்டை மைதானத்தில் அவள் உண்ணாவிரதம் இருந்த தினத்தன்று மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும் சில வயதான பெண்மணிகள் அவளுக்கு திருஷ்டி கழித்துச் சுற்றிப் போட்டனர். அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |