![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 10 முதலில் புரியாமல் இருந்த, பிடிக்காமல் இருந்த பல விஷயங்களைப் போகப் போக அநுக்கிரகா புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். விரும்பவும் பிரியப்படவும் கற்றுக் கொண்டாள். ஒரு நாள் பொன்னுரங்கமும் மற்றோர் ம.மு.க. ஊழியரும் வந்து ஒரு திருமணத்துக்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுக்க வேண்டும் என்று அநுக்கிரகாவிடம் கேட்டார்கள். அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. தனகே திருமண வயது தான். ஒன்றிரண்டு அதிகம் கூட ஆகியிருக்கலாம். திருமணமாகாத தான் போய் இன்னொரு திருமணத்திற்கு எப்படித் தலைமை தாங்கி என்ன பேசுவது, எதைப் பேசுவது என்று கூசித் தயங்கினாள். பயமாகக் கூட இருந்தது. அவளைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய்ப் பொன்னுரங்கம் சொன்னான்: “கட்சித் தொண்டரு. ஆசையோட தேடி வந்து நீங்கதான் தலைமை வகிக்கணும்னு கேட்கிறாரு. மாட்டேன்னு சொல்லி அவரை ஏமாத்திடாதீங்க. ஒப்புக்குங்க. ஜனங்களைச் சந்திக்கிற எந்த வாய்ப்பையும் ஒரு அரசியல்வாதி இழந்து விடக் கூடாது. அது கல்யாணமோ, கருமாதியோ, காதணி விழாவோ, மஞ்சக் குளியோ எதுவானாலும் போய் முன்னால் நின்னுடணும்.” “சரி, தலைவரே! நீங்க சொல்றதை ஒப்புக்கறேன். வயசானவளா இருந்தாலாவது ‘மணமக்களுக்கு ஆசீர்வாதம்’னு வாழ்த்திட்டு உட்காரலாம். என்னை மாதிரி ஒரு சின்னப் பொண்ணு இன்னொரு சின்னப் பொண்ணோட கல்யாணத்திலே என்ன பண்ண முடியும்?” “என்ன பண்ண முடியாது? எல்லாம் பண்ண முடியும். சரின்னு சொல்லுங்க. அவன் போய் மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கட்டும்.” பொன்னுரங்கத்தின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் சம்மதித்தாள். திருமணத்துக்கு அழைக்க வந்தவன் மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான். அவன் தலை மறைந்ததும் அவள் பொன்னுரங்கத்தைக் கேட்டாள்: “தலைமை வகிச்சுத் திருமணத்தை நடத்திக் கொடுக்கிறதுன்னா நான் என்ன செய்யணும்?” “ஒண்ணும் பிரமாதமில்லே, ரெண்டு மாலைங்களை எடுத்து மணமக்கள் கையிலே கொடுத்து மாலை மாத்திக்கச் சொல்லணும். அப்பாலே தாலியைத் தருவாங்க. அதைப் பலர் முன்னிலையிலே நீங்க தாம்பாளத்திலே வச்சு நீட்டினா மணமகன் எடுத்துக் கட்டுவார். அப்புறம் மணமக்களை வாழ்த்தி நீங்களும் மத்தவங்களும் பேசணும்! அது ரெண்டு மூணு மணிக்கூறு நீளும்.” “ரெண்டு மூணு மணி நேரமா? அவ்வளவு நேரம் பேச என்ன இருக்கு? மணமக்களை வாழ்த்திட்டு உட்கார வேண்டியதுதானே?” “அதான் இல்லே. சும்மா மணமக்களை ஜாடையா நாலு வார்த்தை வாழ்த்திட்டு, நம்ம அரசியல் எதிரிங்களைச் சாட வேண்டியதுதான். தண்ணிப் பஞ்சம் முதல் அரிசிப் பிரச்சினை வரை எதை வேணும்னாலும் பேசுங்க.” “கல்யாண வீட்டிலே கூடவா?” “கல்யாண வீடோ, இரங்கல் கூட்டமோ, எதிலேயும் கிடைக்கிற வாய்ப்பை விட்டுடக் கூடாது.” குறிப்பிட்ட தினத்தற்கு ராகுகாலத்தில் கல்யாணம் நடப்பது போல நேரம் குறித்திருந்தது. அநுக்கிரகா முன்னாலேயே கல்யாண மண்டபத்துக்குப் போய் விட்டாள். மணமேடைக்குப் பின்னால் போய் அந்தக் குடும்பத் தலைவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று போனவள் அங்கே அம்மி மிதித்து அருந்ததி பார்த்துப் பசு வேளையில் திருமணம் நடந்து கொண்டிருந்தது கண்டு வியப்படைந்தாள். அவளுக்கும் அது பிடித்திருந்தது. “அடடே! வாங்கம்மா. கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதெல்லாம் டத்தோட நல்ல வேளையிலே முடிஞ்சிடணும். அப்பாலே கல்யாணப் பெண்ணையும், புள்ளையையும் மேடைக்கு அனுப்பிடறோம்,” என்றார்கள் அந்தக் குடும்பத்துப் பெண்கள். எல்லா இடங்களிலுமே பதறாமல் நிதானமாகத் தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து கொள்ளும் சாமர்த்தியம் இந்நாட்டின் படிக்காத பெண்களுக்குக் கூட இருப்பதை அவள் கண்டாள். “இது பாட்டுக்கு ஒரு தமாஷுக்கு நடக்குதுங்க. அசல் திருமண நிகழ்ச்சி இனிமே மேடையிலே அம்மா தலைமையிலேதான்,” என்று ஆண்கள் அவளிடம் வந்து கையைப் பிசைந்து அசடு வழிந்தார்கள்; பதறினார்கள். பெண்களோ பயப்படாமல் தயங்காமல் அவள் கைகளிலும் அட்சதையைக் கொடுத்து அவளை முகூர்த்த வேளையில் தாலி கட்டும் போது முறையாக வாழ்த்தும்படி செய்து விட்டார்கள். ‘தாலியைத் தான் இங்கேயே திரை மறைவில் சாஸ்திரோக்தமாகக் கட்டி விட்டார்களே, இனிமேல் மேடையிலே தான் எதை மணமக்கள் கையில் கொடுப்பது?’ என்ற தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் அங்கிருந்த பழுத்த சுமங்கலியான ஒரு மூதாட்டியைத் தனியே கூப்பிட்டு விசாரித்தாள் அநுக்கிரகா. அந்தம்மாள் சிரித்துக் கொண்டே, “கவலைப்படாதீங்க. அதுக்குன்னே தனியாக் கவரிங்லே இன்னொரு தாலி வாங்கி வச்சிருக்கோம். மாப்பிள்ளைக்குக் கட்டிவிடுகிற வேலை கூட இல்லே. செயின்லேயே தாலியை இணைச்சு ரெடியா இருக்கு,” என்றாள். பொன் மணம், கவரிங் கல்யாணம் என்று ஒரே மேடையிலே பின்னும் முன்னுமாக இரண்டு நடப்பது வேடிக்கையாக இருந்தது. அவள் அங்கே இரண்டு மூன்று மணி நேரம் தங்க வேண்டியிருந்தது. அந்த மணமேடை வாழ்த்துரையில் தான் ‘இளஞ்சோழன்’ என்கிற ம.மு.க. கவிஞர் ஒருவர் மணமக்களை அவள் தலைமையில் வாழ்த்திப் பேசும் போது, “அடுத்த தேர்தலில் அநுக்கிரகா அண்ணியார் தான் நமது தொகுதியில் சட்டமன்றத்துக்குப் போட்டியிட வேண்டும். தொகுதியைச் சேர்ந்த கட்சிக் கண்மணிகள் வீட்டுத் திருமணத்துக்குக் கூட வர இயலாதவர்களை இனி நாம் நம் தொகுதிக்குள் நுழையவே விடக்கூடாது. அண்ணியாரைப் பாருங்கள்! அழகுக்கு அழகு! அறிவுக்கு அறிவு! ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலம் படித்த அண்ணியார் இன்று நம் பட்டி தொட்டி மக்களிடம் கூடப் பரிவுடன் பழகுகிறார் என்றால் அதுதானே பண்பாடு,” என்று முழங்கினான். புகழ்மாலை பாடினான். வியந்துரைத்தான். அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆவது பற்றி முதன் முதலாக மேடையில் பிரஸ்தாபித்தது இந்த இளஞ்சோழன் தான். அன்று அந்தத் திருமண வாழ்த்துரையில் அதன் பின் பேசிய அனைவரும் மணமக்களை விட்டு விட்டார்கள். அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் பற்றியே பேசித் தீர்த்தார்கள். “சரித்திரம் படைக்கும் நம் தங்கத் தலைவி, சங்கத் தமிழ்ச் செல்வி, சாதனை அரசிதான் நமது அடுத்த சட்டமன்ற உறுப்பினர். கல்யாண வீட்டில் வைத்து இந்த நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதில் உண்மையிலேயே நான் உவகை மிகக் கொள்கிறேன்,” என்று பொன்னுரங்கமும் முத்தாய்ப்பு வைத்தது போல் பேசினான். நேரம் காலம், சுபம் அசுபத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒரு சமயம் பேசினார்கள். அடுத்த கணமே, ‘கல்யாண வீட்டிலே வைத்து இந்தச் சுப சமாசாரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இது பலிக்கும்,’ என்று சொன்னார்கள். இதெல்லாம் அநுக்கிரகாவுக்குப் புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. மேடையில் இருந்தபடியே இவற்றை ரசித்தாள். அவளை விட வயதானவர்கள் போல் தோன்றிய மணமகளும், மணமகனும் அவள் காலில் விழுந்து கும்பிட்ட போது அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. வாழ்த்து மடல் படிக்கிறேன் பேர்வழி என்று ஒரு விடலைப் பையன் மைக்கைப் பிடித்துக் கொண்டு அறு அறு என்று அறுத்தான். “வாழ்க்கை என்னும் பாலைவனத்தில் பூத்த பன்னீர்ப் பூக்களே! சந்தர்ப்பவாதம் என்னும் சுறா மீனுக்குப் பலியாகிவிடாமல் உங்கள் வாழ்க்கைத் தோணியை முன்னே செலுத்துங்கள்...” - என்று மணமக்களைப் பாலைவனத்தில் வறுத்து அலைகடலில் புரட்டி இன்னும் என்னென்னவெல்லாமோ செய்து சிரமப்படுத்தினான். அவனது வாழ்த்து மடல் முழுவதும் அரை கிராம் அரிசியில் வேக வைத்த பொங்கலுக்குள் ஆறு டன் முந்திரிப் பருப்பும், கிஸ்மிஸும் கொட்டிய மாதிரி அதிக அளவு உருவக உவமைகள் திணிக்கப்பட்டிருந்தன. அளவு கடந்த உவமை உருவக ஈரத்தில் வார்த்தைகள், அவற்றின் மதிப்பு, அர்த்தம் எல்லாமே அழுகி உருக்குலைந்து போயிருந்தன. ம.மு.க. மேடைகளில் பெரும்பாலோர் அப்படித்தான் பேசினார்கள். ஏடுகளிலும் அதே பாணியில் தான் எழுதினார்கள். ஆஸ்தானப் புலவர் கடும்பனூர் இடும்பனார் எவ்வளவோ முயன்று கற்பித்தும் அநுக்கிரகாவுக்கு மட்டும் அடைமொழிகளையும் உவமை உருவகங்களையும் ஓவராகத் தாளித்துக் கொட்டும் அந்த நடை கைகூடி வரவில்லை, பிடிக்கவும் இல்லை. உருவக உவமைகளும், சொல் அடுக்கு வார்த்தை அலங்காரங்களும் இல்லாவிட்டால் மக்கள் முன்னேற்றக் கட்சியில் ரொம்பப் பேச்சாளர்களும் எழுதுபவர்களும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போய் விடுவார்களோ என்று கூட அவளுக்குப் பயமாக இருந்தது. சாதாரணமாகச் சுற்றி வளைக்காமல் எதையும் அவளுக்குச் சொல்ல வரவில்லை. ‘இப்போது மணமக்களைப் பெரியவர்கள் வாழ்த்திப் பேசுவார்கள்,’ என்பதைக் கூட “பட்டுட்டுத்திப் பரிமள கந்தங்கள் பூசிய புன்னகையும் பொன்னகையுமாய்ச் சிட்டுப் போல் இங்கே அமர்ந்திருக்கும் சிங்கார மணமக்களைப் பட்டறிவுமிக்க மூத்தோர் முதியோரும் - பெரியோர் சான்றோரும் வாயார வாழ்த்தி வனப்புறப் பேசி அறிவுரைகள் வழங்கிச் சொற்பொழிவாற்றிச் சிறப்பிப்பார்கள்,” என்றே நீட்டி முழக்கினார்கள். அடைமொழிகளின் அதிகக் கனத்தால் அவை சார்ந்து நிற்கும் வார்த்தைகளின் முதுகு முறிந்து போகிற மொழி நடை எப்படியோ ஒரு தொற்று நோயாக இவர்களிடையே பரவியிருந்தது. அநுக்கிரகா இதைச் சகித்துக் கொண்டாளே ஒழிய ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளூர நகைத்தபடி மேலுக்குச் சில சமயங்களில் தானும் அதே போல் பேசி நடித்தாள். பலரும் பலவிதமாக எழுதவும், பேசவும் உரிமை பெறுவது ஜனநாயகம். எல்லோரும் ஒரே விதமாகப் பேசவும் எழுதவும் நிர்ப்பந்திக்கப் படுவதுதான் சர்வாதிகாரம் என்றால் அத்தகைய சர்வாதிகாரம் ம.மு.க.வில் இருந்தது. ‘சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே!’ என்று அவள் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று பொன்னுரங்கம் வற்புறுத்தினான். கல்யாண வீட்டு வாழ்த்துரைகளில் கூடச் சதை, இரத்தம், எல்லாமே தாராளமாகப் புழங்கின. கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள். கவிஞர் இளஞ்சோழன் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. கனிவண்ணன் திருமணத்திற்கு வராததைக் கண்டித்தும் அடுத்த எம்.எல்.ஏ. வாக அநுக்கிரகா தான் வரவேண்டும் என்பதை ஆதரித்தும் பேசியதால் அடுத்த நாளே இந்தச் செய்தி கனிவண்ணனின் வகையறாவுக்கு எட்டியது. அவர்கள் உடனே ‘மறவன் குரலில்’ இளஞ்சோழனையும், அநுக்கிரகாவையும் ஒரே சமயத்தில் மட்டந்தட்டுகிற மாதிரி ஒரு கட்டுரை வெளியிட்டு விட்டார்கள். அநுக்கிரகா திருமணமாகாத அழகிய இளம்பெண். இளஞ்சோழன் திருமணமான இளம் கவிஞன். இவர்களுக்குள் காதல் அரும்புகிறது என்பது போல் ஒரு கிசுகிசு வெளியிட்டுச் சேற்றை வாரி இறைத்தது மறவன் குரல். கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இளஞ்சோழன் மீது அவதூறு சொல்லி இளஞ்சோழனைப் பார்த்தாலே அநுக்கிரகாவுக்கு வெறுப்பு வரும்படி பண்ணி, இனிமேல் தான் அநுக்கிரகாவைப் புகழ்ந்து பேசினால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பிப்பார்கள் என்று இளஞ்சோழனையும் நடுங்க வைப்பது தான் இந்தக் கிசுகிசுவின் நோக்கமாக இருந்தது. அது ஓரளவு பலிக்கவும் செய்தது. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |