18

     பொன்னுரங்கமும் கை விட்டுவிடவே முத்தையா கதி நிராதரவாயிற்று. மறுநாளே அநுக்கிரகா அரசு அலாட் செய்திருந்த வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். சரிகைப் புடவைகள், பட்டுப் புடவைகள், நகை நட்டு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டாமென்று சொல்லி விட்டாள். எளிய கைத்தறிப் புடவையையே கட்டப் போவதாகக் கூறினாள். அவளுடைய மாற்றம் முத்தையாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

     ஆவாரம்பட்டு ஹவுஸின் முகப்பைத் தவிர மூன்று பக்கமும் காம்பவுண்டுச் சுவரில் சாத்திய மாதிரி இருந்த குடிசைகளை எந்தத் தொந்தரவும் செய்யாமல் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று அநுக்கிரகாவும், பொன்னுரங்கமும் முத்தையாவிடம் மன்றாடி வேண்டிக் கொண்டார்கள். அது மந்திரி வீடாகி விட்டதால் இனிமேல் தங்கள் குடிசைகள் எந்த நிமிஷமும் காலி செய்யப்படலாம் என்று பயந்து செத்துக் கொண்டிருந்த குடிசைவாசிகள் அநுக்கிரகா வேறு அரசாங்க வீட்டிற்குக் குடிபோகப் போகிறாள் என்று தெரிந்ததும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பயம் தவிர்த்தனர். ஆபத்தில்லை என உணர்ந்தனர்.

     ஆவாரம்பட்டு அரண்மனையின் முன் பக்க மைதானமும் சாலையும் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக இருந்தன. மதில் சுவரில் குடிசை போட்டிருந்த சிலர் சுவரேறிக் குதித்துப் பங்களா தோட்டத்துத் தென்னை மரங்களில் தேங்காய் திருடினார்கள். வேறு பல சில்லறைத் திருட்டுக்களும் நடந்தன. இதற்கெல்லாம் விடிவு தேடிப் போய் அங்கே பட்ட அவமானத்தில் தான் மகளை அரசியல்வாதியாக்கினார் முத்தையா. மகளோ தானும் வெகுஜன உணர்வு என்ற வெள்ளத்தில் மூழ்கி விட்டாள். எதிர் நிச்சலிட அவளுக்கும் துணிவில்லை.

     நிதானமாக முத்தையா கணக்குப் பார்த்தார். அநுக்கிரகாவை அரசியலில் உறுப்பினராக்கிய முதல் நாளிலிருந்து மந்திரியாகும் முன் ரோஸ் கார்டன்ஸ் ஓட்டலில் பத்திரிகைக்காரங்களுக்கு விருந்து கொடுத்த செலவு வரை இருபத்து நாலு லட்சத்து மூவாயிரத்து எழுநூறு ரூபாய் அறுபது காசுகள் செலவாகியிருந்தன. ‘இந்தப் பெண்ணை ஏழைகளின் ரட்சகியாக உயர்த்தி விடுவதற்கு இருபத்து நாலு லட்சம் செலவழித்த நான், அன்றே கனிவண்ணனுக்கு வெறும் பிச்சைக்காசான பத்தாயிரம் ரூபாயைத் தூக்கி எறிந்து இந்தக் குடிசைகளைக் காலி செய்து விட்டு, முயன்றிருந்தால் சுற்றியிருந்த புறம்போக்கு நிலங்களையும் ஜாரி பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் சொந்தப் பெண்ணை அரசியலில் இறக்கிவிட்ட என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். தீர்க்க தரிசனம் போல் அந்த எஸ்டேட் ஓனர் அன்றைக்கு, ‘இன்னிக்கு எந்த முதலீடும் இல்லாமே வெறுங்கையோட பாலிடிக்ஸ்ல இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாய்த் திருப்பித் தருது. உங்களை மாதிரியும், என்னை மாதிரியும் வசதியா இருக்கிறவங்களுக்கு அது ‘ஒயிட் எலிஃபண்ட்’. நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காவும் லயபிலிட்டியாகவும் தான் இருக்கும். ஆம் ஐ ரைட்... மிஸ்டர் முத்தையா’ என்று கேட்டது சத்திய வாசகம் போல் இன்று நினைவுக்கு வந்தது அவருக்கு.

     ஒரு வைராக்கியத்தில் அன்றிலிருந்து மகளைச் சந்திப்பதை - அவளது அரசாங்க வீட்டுக்குப் போவதை - பேசுவதை எல்லாமே நிறுத்திவிட்டார் அவர். முரண்டு தான். ஆனால் வைராக்கியமாகத் தொடர்ந்தது.

     இப்படி இத்தனை தண்டச் செலவுகள் ஆன பின்பும் இன்னும் கூட அறுபது எழுபது லட்சத்துக்குச் சொத்து மீதி இருந்தது. சாவதற்கு முன் மிருகங்களுக்கு உதவும் ‘ப்ளூ க்ராஸ்’ நிறுவனத்திற்கு அவ்வளவு சொத்தையும் எழுதி வைத்து விடலாமா என்று கூட எண்ணினார் அவர். ‘மேன் இஸ் ஆன் அன்கிரேட்ஃபுல் எனிமல். எனிமல்ஸ் ஆர் க்ரேட்ஃபுல் தென் மேன்’ என்று விரக்தியாக நினைத்தார். மீனைப் பிடிப்பதற்காகத் தூண்டிலைப் போட்டுத் தூண்டிலே மூழ்கிப் போய் கை நழுவி விட்ட நிலையாயிருந்தது அவருடையது. தன் மகளைப் போல் படித்த பெண்ணே இந்த வேஷம் கட்டியாடும் அரசியலில் ஒரு நடிகையாகிப் போனது அவர் மனத்தை மிகவும் பாதித்திருந்தது. பொது இடங்களில் மகளைப் பார்த்தால் கூட அவர் பேசுவதில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

     மெல்ல மெல்ல இது வெளியே தெரிந்த விரோதமும் ஆகிவிட்டது. ஆவாரம்பட்டு ஜமீன் தாராகிய கோடீசுவரர் தனக்கு விரோதியாகி விட்டார் என்பது கூட அநுக்கிரகாவுக்கு இன்று ஒரு ப்ளஸ் பாயிண்டாகி விட்டது. மகளின் சோஷலிஸ முற்போக்குக் கொள்கைகள் பிடிக்காததால் அவளோடு பேசுவதை நிறுத்தி விட்டார் என்ற விவரம் அவளது இமேஜை வளர்க்கவே உதவியது.

     “ஃபாதர் ரொம்பக் கன்ஸர்வேடிவ். ஃப்யூடல் சொஸைட்டியிலே வளர்ந்து உருவானவர். அதனால எனக்கும் அவருக்கும் ஒத்து வரலே. ஒருத்தருக்கொருத்தர் இப்போ பேச்சு வார்த்தை கிடையாது,” என்றாள் அவள்.

     இந்தச் சண்டை பிரபலமாக வெளியே தெரிந்ததால் ஆவாரம்பட்டு ஹவுஸின் முன்புறம் மைதானத்தில் மேலும் பத்திருபது குடிசைகள் சாலையோரமாகப் புதிதாய் முளைத்தன. அதற்கு ‘அநுக்கிரகா நகர்’ என்று பெரிதாகப் பெயரும் எழுதிப் போட்டிருந்தார்கள். ‘முத்தையா மாளிகையைச் சுற்றி எங்கே எப்படி எத்தனை குடிசை போட்டாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். முத்தையாவுக்கு எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை’ - என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டதால் பங்களாவிற்குள் நுழையக் குறுகலாக ஒரு வழி - ஒரு சிறிய கார் போவதற்குக் கூடச் சிரமமான வழி மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா இடங்களிலும் கெராவ் செய்தாற் போல் குடிசைகள் போட்டுவிட்டார்கள். ஆவாரம்பட்டு மாளிகை தோட்டம் துரவு உள்ளிட்ட பகுதி குடிசைகளின் நடுவே சிறையுண்டது போல் சிக்கியது.

     முத்தையாவும் சோர்ந்து விடவில்லை. வயது எண்பத்திரண்டானாலும் பிடிவாதம் தளராமல், ‘என் வீட்டுக்குள் நுழையப் பாதை இல்லை. உபயோகிக்கச் சுகாதார வசதிகள் இல்லை! ஆகவே கார்ப்பரேஷன் வரியைத் தான் இனிமேல் கட்ட முடியாது’ என்று கோர்ட்டில் வழக்குப் போட்டார்.

     உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கேஸைப் பற்றி எங்கோ சொற்பொழிவில் தன்னைக் கிண்டல் செய்து பேசிய அமைச்சர் அநுக்கிரகாவுக்கும் ‘சப்ஜூடிஸ்’ என்று ஒரு நோட்டீஸ் அனுப்பினார். தாட்சண்யமே காட்டவில்லை.

     முதல் கேஸில் அவருக்குச் சாதகமாக ஹைகோர்ட்டில் தீர்ப்பாயிற்று. அவரது ஆவாரம்பட்டு ஹவுஸிற்கான சாலை, அப்ரோச் ரோடு, பெட்டர்மெண்ட் வசதிகள், சுகாதார ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்து குடிசைகளை அகற்றித் தராவிட்டால் மாநகராட்சி அவரிடம் வரி வசூலிக்க முடியாது என்ற கோர்ட் தீர்ப்பைக் கிண்டல் செய்தும் குடிசைகளை அகற்றியே தீரும் பிடிவாதமான போக்கைக் கண்டித்தும் எங்கோ பேசிவிட்டுத் தான் அநுக்கிரகா வம்பில் மாட்டிக் கொண்டாள். சப்ஜூடிஸ் ஆயிற்று.

     சர்.வி.டி. முத்தையாவுக்கு ஆதரவாகக் கிடைத்த தீர்ப்பை எதிர்த்து மாநகராட்சி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. கனிவண்ணனுக்கு பயந்து தன்னைக் குடிசைவாசிகளின் ரட்சகி என்று காட்டிக் கொள்ளும் சீப் பாப்புலாரிட்டிக்காக மகள் போடும் ஏழை ஆதரவு வேஷம் அவருள் சிரிப்பை வரவழைத்தது. வோட்டுக்காகவும், தேர்தலை நினைத்துமே செயல்படுகிறவர்கள் நீடித்த சமூக நியாயங்களை பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. அந்தக் குற்றம் தம் மகளிடமே இருந்தாலும் விடத் தயாராயில்லை அவர்.

     இந்தச் சமயம் பார்த்து, ‘குடிசை வாழ்வோர் நல்வாழ்வுக்காக எந்தப் புறம்போக்கு நிலம் அல்லது உபரி நிலம், பட்டா நிலம் ஆனாலும், நியாயமான விலை கொடுத்து அதை அரசு எடுத்துக் கொண்டு அடுக்கு மாடி வீடுகள் கட்ட அந்நிலத்தைப் பயன்படுத்தலாம்’ என்ற அவசரச் சட்டம் திடீரென்று கொண்டு வரப்பட்டது. ஓர் இரவில் கவர்னர் உத்தரவாக அது வந்தது.