![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 15 வெற்றி ஊர்வலம் முடிந்து அநுக்கிரகா வீடு திரும்பும் போது காலை மணி நான்கு. மகளை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார் முத்தையா. “உடனே போய்ப் படும்மா. ரொம்பக் களைச்சுப் போயிருக்கே. கொஞ்சம் தூங்கு. விடிஞ்சதும் மத்ததைப் பேசிக்கலாம். பொன்னுரங்கம் அன்னிக்கு உறுப்பினர் அட்டையைக் கொடுத்த நல்ல வேளை தான்... நீ ஜெயிச்சாச்சு. அவனுக்கு உன் கையாலே ஸ்வீட் குடு” என்றார். அவள் இரண்டு கைகளாலும் சாக்லேட்டை வாரித் தாராளமாக வனிடம் கொடுத்தாள். பொன்னுரங்கம், “அம்மா எப்பவும் இப்படியே எதையும் கைநிறைய எடுத்துக் குடுக்கிற மாதிரி மகராசியா இருக்கணுங்க” என்று அதை இரு கைகளாலும் வாங்கிக் கொண்டான். முத்தையா அநுவைப் பின் தொடர்ந்து, அவள் காதருகே சென்று, தணிந்த குரலில், “தூக்கம் வரலேன்னா கொஞ்சம் பிராந்தியைக் குடிச்சிட்டுத் தூங்கும்மா. உடம்பு அசதிக்கு இதமா இருக்கும். தூக்கமும் உடனே வரும்” என்றார். “நான் பார்த்துக்கறேன் அப்பா. குட் நைட்” என்று அவள் படுக்கப் போன போது, குட் மார்னிங் ஆகியிருந்தது. அவரும் சிறிது கண்ணயரலாம் என்று தமது படுக்கையறைக்குச் சென்றார். விடிந்து ஆறு ஆறரை மணிக்குப் பொன்னுரங்கம் காலிங் பெல்லை அமுக்கி முத்தையாவை எழுப்பினான். நைட் உடையில் தூக்கக் கிறக்கத்தோடு தள்ளாடி வந்த அவரிடம் “மத்தவங்க போய்ப் பார்க்கிறத்துக்கு முந்தி நாம தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டுறணுங்க. பாப்பாவை எழுப்பிக் குளிச்சு டிரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியாகச் சொல்லுங்க” என்றான் பொன்னுரங்கம். அவன் கையில் பூக் கடையிலிருந்து விசேஷமாகச் சொல்லி வரவழைக்கப்பட்ட ஆளுயர ரோஜாப்பூ மாலை நீட்டாக இலையில் வாடாதபடி பேக் செய்யப்பட்டுத் தயாராக இருந்தது. அநுக்கிரகாவை எழுப்பி, விஷயத்தைச் சொல்லி தயாராகுமாறு முத்தையா துரிதப்படுத்தினார். மறுபடி ஹாலுக்கு அவர் வந்த போது, செய்தித் தாள்களோடு உட்கார்ந்திருந்தான் பொன்னுரங்கம். “போனவாட்டி நூத்தி அறுபது ஸீட்தான் பிடிச்சாரு. இந்த வாட்டி நூத்தி எழுபத்திநாலு ஸீட்ல ஜெயிச்சாச்சு. தலைவர் ரொம்ப மஜாவா இருப்பாரு. பிரமாத மெஜாரிட்டிங்க.” “பலே! பலே! எல்லாம் நம்ம அநு கட்சியிலே சேர்ந்த அதிர்ஷ்டம் தான் பொன்னுரங்கம்.” “ம.மு.க. சரித்திரத்திலேயே இப்பதாங்க அதிக ஸீட் பிடிச்சிருக்கோம்.” “பல தொகுதிங்கள்ளே எதிர்த்தவங்களுக்கு, டெபாஸிட்டே போயிடிச்சுப் போலிருக்கேப்பா?” “பின்னென்ன? பாறையிலே மோதினா என்ன ஆகும்?” என்றவன் இன்னும் அவர் இரவு உடையிலேயே இருப்பதைப் பார்த்து, “என்னங்க? நீங்களும் கிளம்புங்க. தலைவருக்குப் பாப்பா மாலை போடறப்ப நீங்க கூட இருக்கணும். நான் ஒரு காரணத்தோடத்தான் சொல்றேன்” என்றான் பொன்னுரங்கம். “நான் எதுக்குப்பா? நீயும் பாப்பாவும் போயிட்டு வாங்க, போதும்.” “அதெல்லாம் முடியாது. நீங்க வந்தே ஆகணும்.” “நான் வந்து என்ன செய்யப் போறேன்?” “நீங்க வாங்க, சொல்றேன்.” “சரி, நீ இவ்வளவு வற்புறுத்தறப்ப நான் எப்படி மாட்டேன்றது?” முத்தையாவும் தயாரானார். மூவரும் ம.மு.க. கட்சிக் கொடி கட்டிய காரில் தலைவர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே திருவிழாக் கூட்டம். ஜெயித்த எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் மாலையோடு வந்து காத்திருந்தார்கள். பொன்னுரங்கம் க்ளூ கொடுத்தான். “முதல் மாலை நம்மளுதா இருக்கணும்! நீங்க எதையும் கண்டுக்காதீங்க. பாப்பாவும் நீங்களும் முன்னாடி நடங்க. நான் பின்னாடி மாலையோடு வரேன். காக்க ஆரம்பிச்சோம்னா காக்க விட்டே கொன்னுடுவாங்க. தாய்க் குலம்னால் தலைவருக்குக் கோவம் வராது. யார் தடுத்தாலும் கேட்காமத் துணிஞ்சு உள்ளார பூந்துடுங்க. பாப்பா மாதிரிப் பொண்ணைப் பார்த்தா தலைவரே முக மலர்ந்து போவாரு.” அவன் யோசனைப்படியே பலரும் உள்ளே போகப் பயந்து வெளியே காத்திருந்த போது, அநுக்கிரகாவும், அவரும் துணிந்து தலைவரின் ஏ.சி. அறையில் நுழைந்தனர். பொன்னுரங்கம் மாலையோடு பின் தொடர்ந்தான். அந்தப் பரபரப்பான அரசியல் சூழலிலும், தமிழ்த் தினசரியின் சினிமாப் பகுதியில் ‘குளு குளு ஊட்டியில் கொய்யாக்காய் குப்புசாமி ஜல்சா’ தலைப்பில் மூழ்கியிருந்த தலைவரை ‘வணக்கங்க’ என்ற அநுக்கிரகாவின் குயில் குரல் சுகமாகக் கலைத்துக் கவனத்தை ஈர்த்தது. கொய்யாக்காய்க் குப்புசாமி ஒரு பிரபல காமெடியன். தலைவருக்குப் பிடித்தவர். “வாம்மா! பிரமாதமான ஓட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சிருக்கே. மகிழ்ச்சி,” என்று முகமலர்ந்த தலைவருக்குப் பொன்னுரங்கம் பிரித்துத் தந்த மாலையை அவள் அணிவிக்க முயல, “உன்னை மாதிரிப் பொண்ணு கழுத்திலே மாலை போடறது தமிழ்ப் பண்பு இல்லை,” என்று தடுத்துக் கையிலேயே வாங்கிக் கொண்டார் தலைவர். முத்தையாவை பற்றிச் சொன்னான் பொன்னுரங்கம். “என்னப்பா இது, இவரைத் தெரியாமலா? அந்த நாளிலே ஜஸ்டிஸ் பார்ட்டியிலே பெரிய புள்ளியாச்சே?” முத்தையா அகமகிழ்ந்தார். பூரித்தார். “உங்க தலைமையிலே தொண்டு செய்கிற வாய்ப்பு என் மகளுக்குக் கிடைச்சது என் பாக்கியம்.” பொன்னுரங்கம் கைகட்டி, வாய்ப் பொத்தி, மரியாதையாக மெல்ல ஆரம்பித்தான்: “நம்ம பார்ட்டி சார்பிலே ஜெயிச்சிருக்கிற தாய்க்குலத்திலேயே இவங்க தான் அதிகம் படிச்சவங்க. இள வயசுக்காரங்க, ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்சவங்க.” “அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே. ரொம்ப அழகானதும் இவங்கதாம்ப்பா” என்று சொல்லித் தலைவர் புன்னகை பூத்தார். அநுக்கிரகாவுக்கு முகம் லேசாகச் சிவந்தது. அழகிய முகத்தில் புன்னகை இழையோடியது. தலைவராக அவர்களுக்கு விடை கொடுத்துக் கிளம்பச் சொல்லாவிட்டாலும், வெளியே நிறையப் பேர் காத்திருக்கிறார்களே என்ற உறுத்தலில் அவர்கள் மூவரும் எழுந்து வணங்கி விடைபெற்றார்கள். தலைவர் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு மறுபடியும் கொய்யாக்காய்க் குப்புசாமி செய்தியில் மூழ்கினார். வெளியே காத்திருந்தவர்கள் அநுக்கிரகாவையும், முத்தையாவையும், பொன்னுரங்கத்தையும் பொறாமையோடு பார்த்தனர். “இந்தக் கட்சியிலே பொம்பளைன்னு வந்தா, அவங்களுக்கு எதுவும் உடனே முடியுதுப்பா” என்று அவர்கள் காதில் விழுகிறாற் போலவே ஒருவன் முணுமுணுத்தான். திரும்பிக் காரில் போகும் போது, “நல்ல சகுனம் தெரியுதுங்க, நம்ம பாப்பா மந்திரி ஆகிறது நிச்சயங்க,” என்று உறுதியான குரலில் சொன்னான் பொன்னுரங்கம். “எதை வச்சுச் சொல்றே? மந்திரி பதவியைப் பற்றித் தலைவர் எதுவும் சொல்லலியேப்பா?” “நான் இவங்க தான் நம்ம பார்ட்டியோட பொம்பிளை எம்.எல்.ஏ.க்களிலேயே அதிகம் படிச்சவங்கன்னு சொன்னப்பா அவரு உடனே, ‘அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே! ரொம்ப அழகானதும் இவங்கதாம்ப்பா’ன்னு சிரிச்சிக்கிட்டே ஒரு போடு போட்டாரு பாருங்க. அங்கே தான் இருக்கு சூட்சுமம்! பாப்பாவை அவருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.” “என்னைக் கூட ஞாபகம் வச்சிருக்காரேப்பா! ஜஸ்டிஸ் பார்ட்டியிலே முக்கியப் புள்ளியா இருந்தீங்கன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரே?” “நல்ல ஞாபக சக்திங்க. எதையும் மறக்க மாட்டாரு.” அநுக்கிரகா மட்டும் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். “நீங்க என்னம்மா யோசிக்கிறீங்க? தைரியமா இருங்க. மந்திரிப் பதவி உங்களுக்குத்தான்.” “ஸ்டேட் முழுவதும் ஜெயிச்சவங்க லிஸ்ட்டைப் பார்த்தா, மொத்தம் என்னையும் சேர்த்து ஆறு லேடி மெம்பர்ஸ். அதிலே ரெண்டு பேர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவங்க. மத்த நாலு பேர்ல பார்ட்டியிலே என்னை விட மத்த மூணு பேர் ரொம்ப நாளா இருக்கிறவங்க. சீனியர் மெம்பர்ஸ் - மூணுவாட்டி எம்.எல்.ஏ.யாத் தொடர்ந்து இருந்தவங்க.” “அதனாலே?” “அவங்க மந்திரியாறதுக்குத்தான் பிரைட் சான்ஸஸ் இருக்கு.” “பந்தயம் போடறீங்களா? நீங்கதான் மந்திரியாவுறீங்க.” “கஷ்டம்! நமக்கிருக்கிற ஆசையில் நீங்களாச் சொல்றீங்க தலைவரே!” “பார்த்துட்டே இருங்க! நான் சொன்னதை நிரூபிச்சுக் காண்பிக்கிறேன். நடக்குதா இல்லியா பாருங்க.” பொன்னுரங்கம் உறுதியாகச் சொன்னான். முத்தையாவும் அநுக்கிரகாவும் அதை நம்பவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், பார்ட்டியின் சீனியர் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் போது தன்னை மந்திரியாக்கத் தலைவர் துணிவார் என அநுக்கிரகா நம்பவில்லை. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |