அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 11 மறவன் குரலில் அநுக்கிரகாவையும் இளஞ்சோழனையும் பற்றி ஒரு மாதிரிக் கட்டுரை வெளிவந்த உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினார் முத்தையா. உடம்பில் கம்பளிப் பூச்சியோ மரவட்டையோ ஊர்ந்து விட்டாற் போன்ற அருவருப்பை உணர்ந்தார் அவர். “எதை வேணாப் பொறுத்துப்பேன். ஆனா இந்த மாதிரிக் கேரக்டர் அஸாஸிநேஷனை மட்டும் என்னால தாங்கிக்க முடியாது பொன்னுரங்கம். எங்க வம்சத்திலே இந்த மாதிரி ஒரு பொம்பளை அவனோட போனா, இவனோட போனான்னு கிடையாது. இந்த ஃபேமிலி லேடீஸ் நெருப்புன்னா நெருப்பா இருக்கறவங்க.” “சும்மா அந்த பேப்பர்காரன் பண்ற வம்பைப் பார்த்து ஆத்திரப்படாதீங்க. எந்தத் தப்புத்தண்டாவும் நடந்துடலே. அந்தப் பையனும் ரொம்ப நல்ல மாதிரி. அவனுக்குக் கண்ணாலம் முடிஞ்சி ரெண்டு பசங்கக்கூட இருக்கு. நம்ப பாப்பா கிட்ட ரொம்ப மரியாதை உள்ள பையன். அவன் பண்ணின ஒரே தப்பு மணவிழாச் சொற்பொழிவிலே, இந்தத் தொகுதியோட சிட்டிங் எம்.எல்.ஏ. கனிவண்ணனைத் தாக்கி, எதிர்காலத்திலே - நம்ம பாப்பா பேரைச் சொல்லி அதுதான் இங்கே சட்டசபைக்கு நிற்கணும்னு ஓப்பனாப் பேசினானே, அதுதான். அதிலே வந்த ஆத்திரத்திலேதான் மறவன் குரல் இப்படித் தாறு மாறா எழுதுது. நாம பதிலுக்கு நம்ம சரத்திலே ஒரு பிடி பிடிச்சோம்னா தானாக் ‘கப் சிப்னு’ மூடிக்குவானுக.” “சுடு சரத்திலே என்னான்னு எழுதப் போறே பொன்னுரங்கம்?” “அதான்... அவன் சொல்றதை மறுத்து எழுதணும்.” “சேத்திலே சகதியிலே கல்லை விட்டெறிஞ்சா நம்ம மூஞ்சியிலியும் தெறிக்கும்னு தெரியுமா?” “தெரியுங்க...” “அப்ப ஒண்ணு செய். இந்த விஷயத்துக்குப் பதிலே சொல்லாமே கனிவண்ணனைப் பத்தி அவனோட லஞ்ச லாவண்ய - ஒழுக்கக் கேடுகளை ஒரு புடிபுடி.” “சரிங்க... அது நல்ல ஐடியா தான்.” “அதோட இன்னொரு விசயம்.”
“என்னங்க...?”
“இன்னும் கொஞ்ச நாளைக்கு அதாவது எலெக்ஷன் முடிஞ்சி அநு ஜெயிக்கிறவரை அந்த இளஞ்சோழனை அநு பேசற மேடைப் பக்கமே அண்ட விடாதே. கொஞ்சம் ஓரம் கட்டி ஒதுக்கிவை.” “நாம வலுவிலே அப்பிடிப் பண்ணினா இல்லாத குத்தத்தை ஒத்துக்கிற மாதிரி ஆயிடாதுங்களா? வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல ஆயிடுமே?” “ஆகாது! நான் சொல்றபடி செய். மறக்கறதுக்கு டயம் கொடுத்தா ஜனங்க எதையும் மறந்துடுவாங்க. அதுக்கு டயம் கொடு.” முத்தையா சொன்னபடியே செய்யப் பொன்னுரங்கம் ஒப்புக் கொண்டான். அடுத்த வாரச் சுடுசரத்திலேயே கனிவண்ணனுக்கு ஆறு ‘சின்ன வீடுகள்’ இருப்பதாகவும் அவன் லஞ்சம் வாங்கியே பல கோடி சேர்த்திருப்பதாக ‘மக்கள் பேசுகிறார்கள்’ என்றும் நெருப்பு நடைக் கட்டுரை ஒன்று வந்தது. அவசியமானால் தொடரும் என்றும் கடைசியில் போட்டிருந்தது. அது பயனளித்தது. மறவன் குரலில் அநுக்கிரகாவைப் பற்றிய கட்டுரையின் சுருதி உடனே மாறியது. இறங்கித் தணிந்தது. ‘குட்டி சமஸ்தானத்து இளவரசியால் குடிசைவாசிகளுக்கு ஆபத்து! அநுக்கிரகா இங்கு எம்.எல்.ஏ. ஆனால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகள் உடனே அகற்றப்பட்டு அந்த இடம் ஆவாரம்பட்டு அரண்மனையோடு சேர்க்கப்பட்டு விடும் என்றும், ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர்.வி.டி.முத்தையாவுக்குக் குடிசைகள், குப்பங்கள் என்றாலே பிடிக்காது என்றும் ஆக்ஸ்போர்டிலே படித்த அவர் மகளுக்கும் ‘ஸ்லம்களை’ ஒழிப்பதுதான் லட்சியம்’ என்றும் பிரசாரத்தில் இறங்கியது. தொகுதியில் உள்ள அத்தனை குடிசைப் பகுதிகளிலும் அநுக்கிரகாவுக்கு ஒரு வோட்டுக் கூட விழாமல் பண்ணிவிட வேண்டும் என்று கனிவண்ணன் முயன்றான். இருவரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தில் இறங்கியிருந்தார்கள். ஒருவர் வாய்ப்பை இன்னொருவர் தடுக்க முயல்வது தெரிந்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் இப்படி இரு கோஷ்டிகளாகிச் சேற்றை வாரி ஒருவர் மேல் மற்றவர் இறைப்பதைக் கட்சித் தலைமையும் கண்டு கொள்ளாமல் இருந்தது. ம.மு.கட்சி டிக்கெட் யாருக்குக் கிடைக்கும் என்பதும் புதிராக இருந்தன. தேர்தல் நெருங்க நெருங்க இது சூடு பிடித்தது. முத்தையா பயந்தார். பொன்னுரங்கம் பரபரப்பின்றி இருந்தான். “ஒண்ணும் பயப்படாதீங்க. இந்த வாட்டி கனிவண்ணனுக்கு நம்ம கட்சி டிக்கெட் கிடைக்காது. பாப்பாவுக்குத் தான் கிடைக்கப் போகுது.” “அது சரிப்பா! டிக்கெட் கிடைச்சா மட்டும் போதுமா? வோட்டு வாங்கி ஜெயிச்சுக் காட்டணுமே? அவன் விடாமே என்னைப் பற்றியும் அநுக்கிரகாவைப் பற்றியும் ஏழைங்களோட எதிரி, குடிசைகளைத் தொலைக்கும் பண முதலைகள்னு பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்கானே?” “அந்தக் கதை எல்லாம் எடுபடாது... ஆனா எலெக்ஷன் முடிகிறவரை நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா நடந்துக்கணுங்க.” “எதிலே கவனமா நடந்துக்கணும்கிறே பொன்னுரங்கம்?” “சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?” “சொல்லு! எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை?” “உங்க பங்களாவைச் சுத்தி இருக்கிற குடிசைங்க, குடிசை வாசிங்ககிட்ட எல்லாம் நீங்க கொஞ்சம் பழகணுங்க.” இதை எதிர்பாராத முத்தையா அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம் கூட வந்தது. “பார்க் ஏற்படுத்தித் தருவதற்காக மாநகராட்சி ஒதுக்கியிருந்த புறம்போக்கு நெலத்தை ஆக்கிரமிச்சுக்கிட்டுக் கள்ளச்சாராயம் காய்ச்சற ஆளுங்ககிட்ட எப்படிக் கனிவா இருக்கிறது? என் வீட்டுக் காம்ப்பவுண்ட் சுவரோரம் பூராக் கக்கூசாவும், சாக்க்டையாவும் ஆக்கிப்பிட்டாங்க. காம்பவுண்ட் சுவத்திலே எல்லாம் கோமணம் கோமணமாக் கட்சிக்கொடி கட்டியிருக்காங்க. வர்ற பாதை எல்லாம் படுத்துத் தூங்கறாங்க. குடிச்சிட்டு இடுப்புத் துணி விலகினது தெரியாம விழுந்து புரள்றாங்க. இதெல்லாம் எப்பிடிப்பா பொறுத்துக்கிறது? நான் அநுவை அரசியல்லே இறக்கினதே இந்த அசிங்கத்தைச் சரிபண்ணத்தானே?” “எல்லாம் சரிங்க. ஆனா இப்ப வேணாம். எலெக்ஷன் முடியட்டும். ‘ஸீட்’டை ஜெயிச்சுக்கிட்டு அரை ‘அவர்லே’ இந்த அசிங்கத்தை எல்லாம் மூலையில் தூக்கிக் கடாசிறலாம்.” “எனக்கு வேஷம் போடத் தெரியாது. தப்பைத் தப்புன்னு பார்த்து நினைச்சுப் பேசிக் கண்டிக்கணும்கிறவன் நான்.” “கொஞ்சநாள் பொறுத்துக்குங்க. இல்லாட்டி மறுபடி கனிவண்ணன் ஜெயிச்சு வந்துருவான்.” வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார் அவர். “நீங்க குடிசைகளைப் பத்தி நினைக்கிறதை எல்லாம் உங்க பாஷையிலே உங்களுக்கு இருக்கிற ஆத்திரம் ஆத்தாமையோட அப்பிடியே வெளியே சொன்னீங்களோ அநுவுக்கு எலெக்ஷன்ல ‘டெபாசிட்’ கூடத் திரும்பக் கிடைக்காது” என்று மீண்டும் வற்புறுத்தி அவரை எச்சரித்து விட்டுப் போனான் பொன்னுரங்கம். முத்தையாவுக்குக் கையாலாகாத கோபம் உள்ளேயே குமுறியது. தாங்கள் பணக்காரர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மையாலேயே நியாயங்களைப் பேசாத பணக்காரர்களும், தாங்கள் ஏழைகள் என்பதாலேயே தாங்கள் பேசுகிற அநியாயங்கள் கூட எடுபடும் என்ற உயர்வு மனப்பான்மையிலுள்ள ஏழைகளும் உள்ளவரை இந்நாட்டில் வெறும் ஏழை பணக்காரர்களும் அவர்களிடையிலான பிரச்சினைகளும், அரசியல்களும் இடைத் தரகர்களும் அரசியல்வாதிகளும் தான் இருப்பார்கள். நல்ல மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. பேதமும் பொறாமையுற்ற மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுகிற எந்த ஏற்பாடும் இன்று இங்கு இல்லையோ என்று கூட முத்தையாவுக்குப் பயமாயிருந்தது. ‘பாப்பு லிஸ்ட்’ போக்கினால் உண்டாகியுள்ள எக்ஸிமா போலப் படைபடையாக அரிக்கிற ‘பாவனா சோஷலிசம்’ வந்தால் தான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கும். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் அசல் சமத்துவம் வந்து விடாமல் கண்ணும் கருத்துமாகத் தடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தன. அநுவைத் தனியே அழைத்துப் பொன்னுரங்கம் வந்து சொல்லிவிட்டுப் போன பிரச்சினையைப் பிரஸ்தாபித்த முத்தையா, மகளின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார். பொன்னுரங்கம் சொன்னதுதான் சரி என்றாள் அநு. “நான் உன்னை இவ்வளவு பணம் செலவழிச்சு அரசியல்லே ஈடுபடச் சொன்னது எதுக்குன்னு தெரியுமில்லே?” “தெரியும். ஆனா இத்தனை தூரம் முன்னேறினப்புறம் தோத்துப் போயிடறது முடியாத காரியம், தேர்தல்லே ஜெயிக்க நியாயம் மட்டும் போதாது, சாமர்த்தியம் வேணும்.” “பணக்காரன் சொல்கிறான்கிறதாலே ஒரு பக்கம் நியாயம் அநியாயமாய் திரிந்து தோன்றக் கூடாது. ஏழை சொல்கிறான்கிறதாலே அநியாயம் நியாயமாத் திரிந்தும் நியாயம் அநியாயமாய்த் திரிந்தும் தோன்றக்கூடாது.” “உங்க கான்ஸெப்ட், ஃபிலாஸஃபி எல்லாம் பிரமாதம் தான் அப்பா! இருந்தாலும் எலெக்ஷன் முடிகிறவரை இதெல்லாம் நாம பேச வேண்டாம். அப்புறம் பார்த்துக்கலாம்.” “பணக்காரன்னா அயோக்கியனாகவும் தான் இருக்கணும்! ஏழைன்னா அவன் யோக்கியனாகவும் ஹீரோவாகவும் தான் இருக்கணும்கிற கொச்சையான குழந்தைத்தனமான தமிழ் சினிமா ‘கான்ஸெப்ட்’டைத் தான் நீயும் நம்பறியா?” “நான் நம்பறேனோ இல்லியா, இப்போ அந்தச் சர்ச்சை எல்லாம் வேண்டாம். எலெக்ஷன் முடியட்டும்.” “நல்லவவா இருக்கிற பணக்காரங்களும், கெட்டவனா இருக்கிற ஏழையும் கூட உண்டுங்கிறதை ஒப்புக் கொள்ள நமக்குத் தெம்பு இல்லை. அதனாலே அப்படிக் கதை எழுத, படம் எடுக்க, நாடகம் போட, பேசப் பயப்படறோம்.” “தேர்தல் முடிஞ்சப்புறம் இதைப் பற்றி விரிவா விமர்சிக்கலாம்!” என்று அநுக்கிரகா தகப்பனாரிடம் விடைபெற்றுக் கொண்டாள். முத்தையாவுக்கு மனத்தில் வேதனையாயிருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார். அன்று மாலையே நல்ல செய்தி கிடைத்தது. கட்சி மேலிடம் கூட அந்த முறை அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்து விட்டதாம். அதனால் ஏமாற்றமடைந்த கனிவண்ணன் கட்சியிலிருந்து விலகி அதே தொகுதியில் சுயேச்சையாக நிற்கப் போகிற தகவலும் மாலைச் செய்தித்தாள்களில் வெளியாகியிருந்தன. கனிவண்ணனைத் தவிர வேறு வேறு தரப்புக்களிலிருந்து இன்னும் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்று தெரியாமலிருந்தது. அதிகப் போட்டி இருக்கும் என்றார்கள். அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |