19

     நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தனக்குச் சாதகமாகித் தான் எங்கே குடிசைகளைப் பிரித்துப் போட்டுவிடக் கூடுமோ என்ற பயத்தில் தன் மகளும் அரசும் தனக்காகவே அந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ என்று முத்தையாவுக்குத் தோன்றியது.

     வரப்போகிற அடுத்த தேர்தலிலும் அந்தத் தொகுதியிலுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளின் ஓட்டுக்களைக் கவரவே அநுக்கிரகா இந்தத் தந்திரம் செய்வதை அவர் புரிந்து கொண்டார்.

     பொன்னுரங்கமும், தன் மகள் அநுக்கிரகாவும் தன்னை ஏமாற்றிவிட்ட விரக்தியில் கடுங்கோபம் அடைந்த முத்தையா, ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பில், ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று ஜாக்கிரதை என்னும் தலைப்போடு ஒரு போர்டு எழுதி மாட்டியிருந்தார்.

     அநுக்கிரகா மந்திரியாகி அந்த வீட்டை விட்டு வெளியேறி அரசு இல்லத்திற்குப் போன தினத்தன்று ஆத்திரத்தோடு அந்த போர்டை அவர் மாட்டியதைத் தோட்டக்காரனும் டிரைவரும் மற்ற ஊழியர்களும் பார்த்திருந்தனர். யாராவது தெரிந்தவர்கள், உறவினர்கள், “அநு எப்பிடி இருக்கா? எப்போ கல்யாணம்?” என்பது போலவோ வேறு விதமாகவோ அவரிடம் குசலம் விசாரித்தால், “யாரைக் கேட்கிறீங்க? அநுக்கிரகாங்கிற பேரிலே எனக்கு ஒரு மகள் இருந்தாள். ஆக்ஸ்போர்டிலே படித்தாள். படிச்சா... இப்போ அதே பேரிலே ஒரு சீப் பாலிட்டீஷியன் தான் இருக்கான்னும் மட்டும் தெரியும்” - என்பதாக வெட்டினாற் போல் பதில் சொன்னார். ஒரு சாதாரண லாபத்துக்காக ஏழை வேஷம் போடு அரசியல்வாதிகள் அத்தனை பேர் மேலும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. செய்து கொண்ட பிரார்த்தனைப்படி தான் மட்டும் திருப்பதி போய்க் கல்யாண உற்சவத்தை நடத்திவிட்டு வந்தார் அவர். வாக்குறுதியைச் சுலபமாக மறந்து கைவிடுகிற அரசியல்வாதிகளின் பழக்கப்படி ஏழுமலையானுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மகள் மறந்துவிட்டது அவருக்கு விநோதமாகப் படவில்லை.

     தெரிந்த பலர், முத்தையா ஸினிக் ஆகிவிட்டார் என்றார்கள். வேறு சிலர் என்றைக்குமே அவர் ஒரு மாதிரி ‘எக்ஸெண்ட்ரிக்’ தான் என்றார்கள். அநுக்கிரகா அமைச்சரான நாலாவது மாதமோ என்னவோ பொன்னுரங்கமும், புலவர் கடும்பனூர் இடும்பனாரும் ஏதோ ஆண்டு விழா என்று வசூல் நோட்டு இரசீதுப் புத்தக சகிதம் அவரைத் தேடி வந்தார்கள். உள்ளே வந்துவிட்ட அவர்களை “தயவு செய்து கொஞ்சம் எங்கூட வர்ரீங்களா?” என்று எழுப்பி வாசல் கேட் வரை அழைத்துச் சென்று, “பாருங்க! நல்லாப் பார்த்துக்குங்க,” - என்று அங்கே முகப்பில் எழுதி மாட்டியிருந்த, ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே நுழையக் கூடாது,’ என்ற போர்டைக் காண்பித்து விட்டுத் திரும்பிப் பாராமல் உள்ளே போய் விட்டார்.

     “என்னய்யாது? இந்த முத்தையாவுக்குப் புத்தி கித்தி பிசகிப் பைத்தியம் பிடிச்சிருக்கா?” - என்று பொன்னுரங்கம் புலவரிடம் கேட்டான்.

     புலவர் சிரித்தார். “மகள் மந்திரியானதிலிருந்தே இப்படி ஆயிட்டாருன்றாங்க,” என்றார் புலவர்.

     வீட்டில் குடும்பப் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் அநுக்கிரகாவின் பழைய பெரிய படத்துக்குக் கீழே பிரியமுள்ள மகள் அநுக்கிரகா - தோற்றம் என்று அவள் பிறந்த தேதியையும் - தலைமறைவு என்று அவள் எம்.எல்.ஏ. ஆன தேதியையும் எழுதி வைத்திருந்தார். எலெக்‌ஷன் சமயத்தில் எடுத்த அநுக்கிரகாவின் மற்றொரு படத்திற்குக் கீழே நம்பத்தகாத அரசியல்வாதி அநுக்கிரகா - தோற்றம் - எம்.எல்.ஏ. ஆன நாள். மறைவு - இன்னும் மறையவில்லை - என்றும் எழுதியிருந்தார். இதையெல்லாம் ஆவாரம்பட்டு ஹவுஸ் ஊழியர்களே வேடிக்கையாகவும், விநோதமாகவும் நோக்கினார்கள். அவருக்குச் சித்தப் பிரமையோ என்று கூடச் சந்தேகப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அவர் மிகவும் தெளிவாயிருந்தார். பிடிவாதமாயிருந்தார். வைராக்கியமாயிருந்தார். வாய்க்கு வாய் சொன்னார்: “இன்றைய இந்தியாவில் ஏழைகளும் பணக்காரர்களும் அவர்களை வைத்து அவர்களால் அவர்களுக்காகப் பிரச்சினைகளும் அரசியலும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நல்ல மனிதர்கள் இல்லை. அரசியலுக்கு ஏழையும், பணக்காரனும் தேவைப்படலாம். ஆனால் சமூக மேம்பாட்டுக்கு நல்ல மனிதர்கள் மட்டுமே தேவை. மனிதர்களை உருவாக்கும் அரசியலும் அரசியல்வாதிகளும் இன்று இங்கே துரதிருஷ்டவசமாக இல்லை. ஏழைகளை ஏழைகளாகவே வைத்து அரசியல் பண்ணக் கிளம்புகிறவர்களும் பணக்காரர்களைக் கொடியவர்களாகக் காட்டியே பணக்காரர்களையும் மிரட்டி அரசியல் நடத்துகிற கூட்டத்தினருமே இங்கு இருக்கிறார்கள். இது கூடாது” - என்றார்.

     ஆனால் அவர் சொன்னதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதாகி விட்டதால் உளறுகிறார் என்றார்கள். புத்தி தடுமாறிவிட்டது என்றும் கூறினார்கள். “இந்த வயசு காலத்திலே எதுக்குக் கோட்டை கொத்தளம் மாதிரி அத்தனை பெரிய வீட்டிலே தனியாக் கெடந்து சாகறாரு? பேசாம மகளோட போய் மாண்புமிகு அமைச்சரின் தந்தைங்கிற மரியாதையோட அங்கே இருக்கலாமே?”

     “ஈவன் அட் திஸ் ஏஜ் ஹி இஸ் டூ இண்டிபெண்டன்ட்! தட் ஈஸ் த ரியல் பிராப்ளம் வித் ஹிம்.”

     “ரொம்ப முரண்டுக்காரக் கிழவன் ஐயா.”

     இப்படி அவரைப் பற்றிப் பலர் வாயில் பலவிதமான பேச்சுக்கள் கிளம்பின. அநுக்கிரகாவைக் குறை கூறியும் சிலர் கண்டித்தனர். “இவ்வளவெல்லாம் பண்ணி வளர்த்து ஆளாக்கின தகப்பனை தனியே அவள் தவிக்கவிட்டது பாவம் தான்” - என்றார்கள் சிலர்.

     ஆனால் அநுக்கிரகா மட்டும் மனசு கலங்கவோ, உணர்ச்சிவசப்படவோ, சலனப்படவோ செய்யாமல் இருந்தாள். தந்தையிடமிருந்து விலகியும் ஒதுங்கியும் வேறுபட்டுமே இருந்தாள்.

     ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அவளாலேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அமைச்சர் என்ற முறையில் இல்லாவிட்டாலும் அவரது மகள் என்ற முறையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவாவது அப்பாவை நேரில் ஒரு நிமிஷம் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வர எண்ணினாள் அவள். அரசாங்கங்கள், ஆளும் கட்சிகள், எஸ்டாபிளிஷ்மெண்டுகளின் பயங்கர விமர்சகரும், எதிரியுமாகிய அவரை அமைச்சராகிய தான் சென்று பகிரங்கமாகப் பார்ப்பதால் எதுவும் பாதகம் நேர்ந்து தன் பதவிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்று பயந்து கட்சி தலைவரிடம் சொல்லித் தன் தந்தையைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொண்டாள். “எதற்கு இந்தச் சந்திப்பு இப்போது?” என்றார் அவர்.

     அநுக்கிரகா தெளிவாக மறுமொழி கூறினாள்: “நம்ம அவசரச் சட்டத்தின்படி ஸ்லம் கிளியரன்ஸ் திட்டத்தின் கீழ் உலக பாங்க் உதவியோடு அடுக்குமாடி வீடு கட்டும் திட்டத்துக்காக, ‘ஆவாரம்பட்டு ஹவுஸ்’ முழுக்கவும் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே அரசு நிர்ணயிச்ச விலையைக் காம்பென்சேஷனாய்க் கொடுத்துடறோம். அந்த ஒரு காம்பவுண்டிலே மட்டும் முப்பது அடுக்கு மாடி வீடுகள் கட்டலாம். அது சம்பந்தமான நோட்டீஸ் இன்னிக்கு செக்‌ஷன்ல கையெழுத்தாகி அவருக்குப் போகிறது. அவர் என் தந்தை. ஆனாலும் நிர்த்தாட்சண்யமாக அவருடைய சொத்தைத்தான் முதல்லே ‘அக்வேர்’ செய்ய உத்தரவு போட்டிருக்கிறேன். எனினும் தனிப்பட்ட முறையில் அதே வீட்டில் பிறந்து வளர்ந்த அவரது மகள் என்ற முறையில் அவரை நேரில் பார்த்துச் சமாதானம் சொல்ல வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன்.”

     “ஒரு பிரைவேட் விஸிட்டாக் காதும் காதும் வச்சாப்பிலே போயிட்டு வந்துடறது தப்பில்லே! ஆனா அரசு முறையிலே அமைச்சர்ங்கிற ஹோதாவில போவாதிங்க,” என்று அட்வைஸ் செய்தார் முதல்வர்.

     அவளும் அப்படியே செய்வதாகக் கூறி விடைபெற்றாள்.