அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 17 ஆவலோடும் பரபரப்போடும் அவர் பொன்னுரங்கத்தைக் கேட்டார்: “எதனாலே கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போனாலும் போகலாம்ன்னு சொல்றே?” “காரணம் இருக்குங்க. கனிவண்ணனும் ம.மு.க.விலே என்னை மாதிரியே ஒரு கிங் மேக்கர்! அவன் ஏதாச்சும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருப்பான். உங்க மகளைக் கட்சியிலே சேராமத் தடுக்கப் பார்த்தாங்க. முடியலே. எம்.எல்.ஏ. டிக்கெட் கிடைக்காமத் தடுக்கப் பார்த்தாங்க. அதுவும் முடியலே. எலக்சன்ல ஜெயிக்க விடாமப் பண்ணிடலாம்னு பார்த்தாங்க. பலிக்கலே, ஜெயிச்சாச்சு. மந்திரிப் பதவியும் கிடைக்கப் போகுது. அதுவும் வீட்டு வசதி மந்திரி பதவியே கிடைக்கப் போறது அவங்க எரிச்சலை இன்னும் அதிகமாக்கும்.” “எரிச்சல் அதிகமாகி என்ன செய்ய முடியும்? தோத்துச் செல்லாக் காசாத் தேஞ்சு போனப்புறம் செய்ய என்ன இருக்கு?” “அங்கே தான் ராங் பண்றீங்க. அதாவது தப்புக் கணக்கு போடறீங்க. நான் முன்னாடியே உங்களுக்குப் பல தடவை சொல்லியிருக்கேன். ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயகரமான ஆள்னு.” “ஆமாம், சொல்லியிருக்கே. எனக்கும் நெனைவிருக்கு. ஆனா, இனிமே அவன் நம்மை என்ன பண்ணிட முடியும்?” என்று அநுக்கிரகாவே கேட்டாள். “முடியுங்க! உங்க வீட்டைச் சுற்றி இருக்கிற குடிசைங்களுக்கு அவனே ஆளைத் தூண்டி விட்டு ராத்திரியோட ராத்திரியா நெருப்பு வச்சிட்டு, நீங்க தான் நெருப்பு வைக்க ஏற்பாடு பண்ணினீங்கன்னு துஷ்பிரசாரத்தைக் கிளப்பி, ‘குடிசைகளை அகற்றுவோம் என்று அன்று சொன்னார்கள், இன்று ஜெயித்ததும் செய்து காட்டுகிறார்கள். ஏழை எளியவர்கள் வீட்டுக்குத் தீ வைத்து அழிக்கும் இவர்கள் தான் நாளைய வீட்டு வசதி மந்திரியாம். வீடுகள் பிழைக்குமா? குடிசைகள் தப்புமா? குப்பங்கள் வாழுமா? பரிதாபம்! பரிதாபம்’ - என்று போஸ்டர் போட்டு உங்கள் சான்ஸைக் கனிவண்ணன் முனைந்தால் கெடுக்க முடியும். அது தான் பயமாக இருக்கிறது. எதற்கும் பயப்படாத நானே அவனுக்குப் பயப்படறேன். கனிவண்ணனைக் கட்சியிலேர்ந்து தூக்கினப்புறம் மாம்பழம் கூட நமக்குப் பயப்படுகிறான். வாலாட்டறது இல்லே. ஆனா, கனிவண்ணன் வெளியில் போயிட்டதாலே என்மேலே, அவனைத் தோற்கடிச்ச உங்க மேலே எல்லாம் பயங்கரமான கோபத்தோட இருக்கான். எதுவும் பண்ணுவான். எப்படியும் உங்க சான்ஸைக் கெடுக்கப் பார்ப்பான்.” “இப்படியெல்லாம் கூட வக்கிரமாகச் செய்வாங்களா? உன் கற்பனையா?”
“கற்பனையாவது கத்திரிக்காயாவது? கனிவண்ணனைத் தெரிஞ்சவங்களுக்குத்தான் இது புரியும். நிச்சயமா இப்பிடியெல்லாம் நடக்கும். ஆனா, இதை முந்திக்கிட்டு முறியடிக்க ஒரு வழி இருக்கு.”
“என்ன வழி அது?” “உங்க வீட்டைச் சுத்தி இருக்கிற ஸ்லம் உட்பட எல்லாம் குடிசைப் பகுதிகளிலேயும் நாமே நம்ம ஆளுங்களையும், தொண்டருங்களையும் விட்டு ராப்பகலா அசம்பாவிதம் எதுவும் நடக்காம ரோந்து சுத்தணும். ‘தோல்வி விரக்தியில், தோற்றுப் போனவர்கள் - அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப் போடவில்லையே என்ற ஏமாற்றத்தில் எந்த விநாடியும் உங்க குடிசைகளுக்கு நெர்ப்பு மூட்டலாம். ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. நாங்களும், தொண்டர்களும் உங்களுக்கு உதவிடக் காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் அன்பைப் பெற்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. அநுக்கிரகா’ என்று கையொப்பமிட்டு ஒரு லட்சம் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு முன்கூட்டியே நாம் குடிசைப் பகுதிகளில் வினியோகித்து விட வேண்டும்.” “பிரமாதமான ஐடியா பொன்னுரங்கம்! உடனே ஏழுமலையான் பவர் பிரஸ்ஸுக்குப் போன் போடு. ஏற்பாடு பண்ணிடலாம்” என்றார் முத்தையா. பொன்னுரங்கத்தின் புத்திக் கூர்மைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது என்று அவருக்கு அப்போது தோன்றியது. ‘தோல்வியில் துவண்டோர் துயர் பல புரியக்கூடும்! வெற்றி விளைந்த நல் முத்துக்களே பொறுப்பீர்!’ - என்று தலைப்பிட்டுப் புலவர் எழுதிய துண்டுப் பிரசுரம் அவசர அவசரமாக அச்சிடப்பட்டு, லாரிகள், டிராக்டர்கள், ஜீப்கள் மூலமாக அத்தனை குடிசைப் பகுதிகளிலும் பரப்பப் பட்டு விட்டன. துண்டுப் பிரசுரத்தில் கைகூப்பி வேண்டுவது போன்ற அநுக்கிரகாவின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. தொண்டர் படையும், கட்சி ஊழியர்களும், பொன்னுரங்கத்தின் அடியாட்களும், சைக்கிள் செயின், சவுக்குக் கட்டை, சோடாப்புட்டி சகிதம் குடிசைப் பகுதிகள் முழுவதும் இரவு பகல் பாராமல் ரோந்து சுற்றிப் பாதுகாத்தனர். கனிவண்ணன் சதித் திட்டத்தில் இடி விழுந்தது. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. குடிசைப் பகுதிகள் பத்திரமாகப் பிழைத்தன. அநுக்கிரகாவும், குடிசைப் பகுதிகளுக்கு ஜீப்பில் போய் அடிக்கடி அவர்கள் குறைகளை விசாரித்துச் சரி செய்து வந்தாள். குடிசைகளை அழித்து விடுவாள் என்று சொல்லியே அவள் எதிரிகள் அவளைப் பற்றிப் பிரசாரம் செய்ததால் வேறு வழியின்றி அவள் குடிசைப் பகுதிகளைச் சுற்றிச் சுற்றியே மலர்ந்த முகமும் கூப்பிய கைகளுமாக வலம்வர வேண்டியிருந்தது. மூக்குச் சளி ஒழுகிச் சலைவாய் வடியும் குழந்தைகளை இரு கைகளாலும் வாரி எடுத்து அணைத்து, ‘தமிழ்ச் செல்வி’ என்று பெயர் சூட்ட வேண்டியிருந்தது. அடுத்து பத்து நாட்களுக்குப் பின் கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இருபது கேபினட் ரேங்க் அமைச்சர்களில் அநுக்கிரகாவும் ஒருத்தியாயிருந்தாள். வீட்டு வசதி, தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக நலம் ஆகிய மூன்று துறைகளுக்கும் மந்திரியாக அவள் பதவி ஏற்றிருந்தாள். கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் முடிந்ததும் கட்சித் தலைவரைத் தனியே சந்தித்த போது அவர் அவளுக்குச் சில அறிவுரைகளை கூறினார். அவளுக்கு மட்டுமே பிரத்தியேகமான அறிவுரைகள் அது: “நான் சொல்றதைத் தப்பா நினைக்காமச் சரியாப் புரிஞ்சிக்கணும் அம்மா நீ! உங்க ஃபாதரோட சமஸ்தான அரண்மனையான, ஆவாரம்பட்டு ஹவுஸிலே இனிமே நீ தங்கியிருக்கக் கூடாது. அமைச்சர்களுக்கான வீடுகளிலே ஒண்ணை உனக்கும் ‘அலாட்’ பண்ணச் சொல்றேன். நீ உடனே அங்கே குடியேறிடணும். உன்னோட ‘சோஷலிஸ்டிக் இமேஜ்’ வளரணும்னா ‘மிட்டா மிராசுகளும், அரண்மனைவாசிகளும் மந்திரியாகும் மகத்துவம் பாரீர்’னு இன்னிக்குக் காலம்பற மறவன் குரல்லே உன்னைப் பத்தி எழுதியிருக்கிற மாதிரி இனிமே யாரும் எழுதாமப் பார்த்துக்கணும். ஏழைங்க குடிசைகளை அடுக்கு மாடி வீடாக்கி அளித்தல் மாதிரி முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்ற நீ வேகமாகச் செயல்பட்டு ஏழைகளின் மேலும், குடிசை வாசிகள் மேலும், உன்னிடம் தோற்றுப் போன கனிவண்ணனை விட உனக்குத்தான் அதிக அக்கறை உண்டுங்கிறதை அவசர அவசரமாக நிரூபிக்கணும். நீ ஆவாரம்பட்டு சமஸ்தானத்து உரிமையாளர் சர்.வி.டி. முத்தையாவோட அருமைப் பொண்ணுங்கிறதைப் பாமர ஜனங்கள் மறக்கிற மாதிரி இனிமே நடந்துக்கணும். இல்லாட்டி மிட்டா மிராசுன்னே புலம்பிக்கிட்டிருப்பாங்க. அவங்களை மறக்கடிக்கறாப்பல சமூக நலம், ஸ்லம் கிளியரன்ஸ், தாழ்த்தப்பட்டோர் நலம்னு நீயாக ஓடியாடி அலைஞ்சு பாடுபடணும்மா! உன் பேரை நிஜமாக்குகிற மாதிரி ஏழை பாழைக்கு அநுக்கிரகம் பண்ணணும்.” “நிச்சயமாப் பாடுபடுவேன். என்னை நம்புங்க. உலக பாங்க் உதவியோடு நிறைய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டித் தவணை முறையில் ஏழைகள் பணம் கட்டி விட்டு அடைகிறாற் போல வழி செய்வேன்! உங்க அறிவுரையை மறக்க மாட்டேன்.” “ரொம்பக் கரெக்ட்! நீ பாடுபடறதைப் பார்த்து, ‘ஏழைகளின் ரட்சகி’ன்னு மத்தவங்க கொண்டாடணும்! அநுக்கிரகம் செய்கிற இவளுக்கு அநுக்கிரகான்னு பெயர் வச்சது எத்தினி பொருத்தம்னு ஜனங்க கொண்டாடணும்.” ***** அன்று மாலை அநுக்கிரகா தன் தந்தையிடம் சிறிது நேரம் தனியாகப் பேச வேண்டும் என்றாள். அவள் கேட்ட தினுசைப் பார்த்து முத்தையாவே சந்தேகப்பட்டார். என்னவோ, ஏதோ என்று தயங்கவும் செய்தார். “நீ மினிஸ்டராயாச்சு! நம்ம தோட்டத்திலே போலீஸ் சென்ட்ரி கூடாரம் போட இடம் ஒதுக்கச் சொல்லணும். இங்க வர்ற வழி எல்லாம் ஒரே குப்பையும், குடிசையும், சாக்கடையும், கக்கூஸுமா அசிங்கப்படுத்தியிருக்காங்க. உன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதை எல்லாம் கிளியர் பண்ணிச் சுத்தமாக்கணும். ஒரு மினிஸ்டரோட வீடு - அதுவும் ஹவுஸிங் மினிஸ்டரோட வீடு சாக்கடையும் கொசுவுமா இப்பிடி இருக்கக் கூடாது.” பேசிக் கோண்டே அவளோடு தனியறைக்கு நடந்தார் அவர். ஏ.சி. செய்த அந்த அறையில் அப்போது தந்தையும் மகளும் மட்டுமே இருந்தனர். வேறு ஈ, கொசு கூட கிடையாது. மெல்ல அநுக்கிரகா தொண்டையைக் கனைத்து இருமிக் கொண்டு தொடங்கினாள்: “இனிமே இப்படி ஐம்பது ஏக்கர் நிலத்தில் தோட்டமும் துரவுமா இருக்கிற இந்த ஆடம்பர அரண்மனையிலே நான் உங்களோட சேர்ந்து வசிச்சா நல்லா இருக்காது. ரொம்ப ஆடம்பரமாத் தோணும். அரண்மனைவாசின்னு எதிர்க்கட்சிகள் என்னைக் கிண்டல் பண்ணும்னு சீப் மினிஸ்டரே அபிப்பிராயப்படறாரு. நான் நாளையிலிருந்து கவர்ன்மெண்ட் எனக்கு அலாட் பண்ற வீட்டுக்குத் தனியாக் குடி போகப் போறேன்! நீங்க தப்பா நெனைச்சுக்கக் கூடாது. வழக்கம் போல டிரைவர், சமையலாள், தோட்டக்காரங்க, வேலையாட்கள் எல்லாம் இங்கேயே இருப்பாங்க. உங்களைக் கவனிச்சுப்பாங்க. இந்த அரண்மனைக் கார் கூட எனக்கு வேண்டாம். அரசாங்கக் கார், ஃபோன் எல்லாம் கிடைச்சுரும்.” முத்தையாவுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை அவருக்கு. அவள் மந்திரியாகி அந்த வீட்டில் தங்கப் போவதானால், அந்த வசதிகளும் அந்த வீட்டின் சூழலும், அந்த வீட்டுக்கான சுற்றுபுற வசதிகளும் பெருகும் என்று கனவு கண்டு கொண்டிருந்த அவருக்கு அது எதிரிடையாக இருந்தது. “இப்படி இந்த வீட்டிலே நான் இருக்கிறவரை ஜனங்க என்னை உங்களோட மகளாகவும் ஆவாரம்பட்டு சமஸ்தான இளைய வாரிசாகவும் தான் நினைப்பாங்க. அது எங்க கட்சியோட ‘சோஷலிஸ்டிக் இமேஜைப்’ பாதிக்கும்.” “ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து கல்யாண உத்சவம் பண்றோம்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டோமே, நினைவிருக்கா?” “அதை என் சார்பிலே நீங்களே போய்ப் பண்ணிட்டு வந்துடுங்கப்பா. நானே வந்தால் ‘பெண் மந்திரி திருப்பதியில் சாமி கும்பிட்டார்னு’ பேப்பர்ல போடுவாங்க. ஒரு மாதிரி இருக்கும். நல்லா இருக்காது. தவிர எனக்கு உடனடியா நெறைய வேலை இருக்கு. சிடியிலே ஸ்லம் இருக்கிற ஏரியாக்களிலே எல்லாம் புறம்போக்கு நிலங்களையும் தனியார் நிலங்களையும் நியாய விலையில் அரசே எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து உலக பாங்க் உதவியுடன் ஏழைகளுக்காக நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டப் போறோம். முதல்வர் உடனடியா அதைக் கவனிக்கச் சொல்றாரு.” முத்தையாவுக்கு எலெக்ஷன் சமயத்தில் தன்னைச் சந்திக்க வந்துவிட்டுத் துக்கிரி மாதிரி என்னமோ சொல்லிச் சென்ற அந்த எஸ்டேட் அதிபர் நினைவு வந்தார் இப்போது. “என்னப்பா, பதில் சொல்லாம இருக்கீங்க? என் மேலே கோபமா? என்ன யோசிக்கிறீங்க?” அவர் அவளுக்குப் பதில் சொல்ல வாயைத் திறக்கு முன் வெளியே இருந்து யாரோ உள்ளே வர அனுமதி கேட்டுக் காலிங் பெல்லை அழுத்தினார்கள். அவர் கதவைத் திறந்தார். பொன்னுரங்கம் மலர்ச் செண்டுடன் உள்ளே நுழைந்தான். “மகிழ்ச்சி அம்மா! என் பாராட்டுக்கள். அமைச்சராயிட்டீங்க... இந்த ஏழையையும் ஞாபகம் வச்சிக்குங்க... மறந்துடாதீங்க”என்று சிரித்தபடி மலர்ச் செண்டை அநுக்கிரகாவிடம் நீட்டினான் அவன். முத்தையாவும் அநுக்கிரகாவும் இருந்த முகபாவத்தைப் பார்த்து, “என்னங்க, நான் போயிட்டு அப்புறம் வேணா வரேன். ஏதோ குடும்ப விஷயம் பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு” என்றான். “அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீயும் இரு. இது உனக்கும் தெரிய வேண்டிய விவகாரம் தான் பொன்னுரங்கம்” என்றார் முத்தையா. “என்ன விசயங்க...” அநுக்கிரகா சுருக்கமாக மறுபடி விஷயத்தை விவரித்தாள். பொன்னுரங்கம் அவளுடன் ஒத்துப் பாடினான். “இதிலே பாப்பா செய்யிறதுதாங்க சரி! தலைவர் நாலும் யோசித்துத்தான் இந்த அறிவுரையைச் சொல்லியிருப்பாரு. இந்த வீட்டிலே மந்திரிங்கிற முறையிலே பாப்பா இருந்தா - அரமணைவாசி அரமணைவாசின்னு இதைச் சொல்லியே ஃபியூச்சர் இல்லாம ஒடுக்கிடுவாங்க. இங்கே போக வர வழியும் நல்லா இல்லே. வழியை ஒழுங்கு பண்ணினால் குடிசைவாசிங்க கூப்பாடு போடுவாங்க. ஒழுங்கு பண்ணாட்டி மந்திரிங்கிற முறையிலே பாப்பாவைத் தேடி வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்.” அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |