![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205. கடவுள்வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி, குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின் நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல், சேவல்அம் கொடியோன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால்-உலகே. பாரதம் பாடிய பெருந்தேவனார்
1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, கழல் தொடி, சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. தோழி, காந்தள் கையுறையை மறுத்தது
திப்புத்தோளார்
2. குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ; பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண்
இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப்
பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம்
பாராட்டியது
இறையனார்
3. குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவின்றே- சாரல் கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. தோழி தலைவனை இயற்பழிக்கத் தலைவி எதிராக இயற்பட மொழிந்தது
தேவகுலத்தார்
4. நெய்தல்
நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே; இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே. தலைவி பற்றிக் கவன்ற தோழிக்குத் தான் ஆற்றியமை புலப்படக்
கூறியது
காமஞ்சேர் குளத்தார்
5. நெய்தல்
அதுகொல், தோழி! காம நோயே- வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், மெல்லம் புலம்பன் பிரிந்தென, பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. பிரிவுத் துயரத்தில் கண் உறங்காமை
நரி வெரூ உத்தலையார்
6. நெய்தல்
நள்ளென்றென்றே, யாமம்; சொல்அவிந்து, இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, நனந்தலை உலகமும் துஞ்சும்; ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. தாமரையில் அமர்ந்த பிரமன் (பிரமனார்) வரைவிடை பொருளுக்காகத்
தலைவன் பிரிந்தான். தலைவி நடு இரவில் உலகுள் அனைவரும் துயிலத் தான்
மட்டும் துயிலாமை பற்றி வருந்தியது
நெய்தல் பதுமனார்
7. பாலை
வில்லோன் காலன கழலே; தொடியோள் மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் யார்கொல்? அளியர் தாமே-ஆரியர் கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, வாகை வெண் நெற்று ஒலிக்கும் வேய் பயில் அழுவம் முன்னியோரே. பாலை கண்டோர் கூற்று
பெரும்பதுமனார்
8. மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் எம் இல் பெருமொழி கூறி, தம் இல், கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை
அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது
ஆலங்குடி வங்கனார்
9. நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளே- மடை மாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய் சாயினளே; பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணம் துறைவன் கொடுமை நம் முன் நாணிக் கரப்பாடும்மே. தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது
சுயமனார்
10. மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; பயறு போல் இணர பைந் தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் காஞ்சி ஊரன் கொடுமை கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
ஓரம்போகியர்
11. பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி, ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது, குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே. தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்
சொல்லியது
மாமூலனார்
12. பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறி, கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; அது மற்று அவலம் கொள்ளாது, நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஓதலாந்தையார்.
13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் நோய் தந்தனனே - தோழி!- பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப்
பிரிய, வேறு பட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது
கபிலர்
14. குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில், "நல்லோள் கணவன் இவன்" எனப் பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே. "மடன்மா கூறும் இடனுமார் உண்டே" என்பதனால் தோழி குறை மறுத்துழி,
தலைமகன், "மடலேறுவல்" என்பதுபடச் சொல்லியது
தொல்கபிலர்
15. பாலை
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் சேயிலை வெள் வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்.
நிற்ப, செவிலித் தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது
ஒளவையார்
16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் பொன் புனை பகழி செப்பம் கொண்மார், உகிர் நுதி புரட்டும் ஓசை போல, செங் காற் பல்லி தன் துணை பயிரும் அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு,
தோழி கூறியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ
17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப; மறுகின் ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே. தோழியற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல்
கூறியது
பேரெயின் முறுவலார்
18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு,
வரைவு கடாயது
கபிலர்
19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர் பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து எல்லுறும் மெளவல் நாறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது
பரணர்
20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து, பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உருவோர் ஆக! மடவம் ஆக, மடந்தை நாமே! செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கோப்பெருஞ்சோழன்
|