(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) முன்னுரை பிரியத்துக்குரிய வாசக நண்பர்களே! 'சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதா பாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள், மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்துவிட முடியாதுதான். ஆனால் அப்படிக் குணமுள்ளவர்கள் நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது. ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒரு வகையில் நமது 'சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்' என்றே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான். 'நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்' என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிகையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். அறியாமையும் சுயநலமும் பதவி - பணத்தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பேயாகப் பிடித்து ஆட்டுவதால் நாமும் அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. 'மன்னாரு' மாஃபியா போன்ற மாஃபியாக் கும்பலிலிருந்து சமூகத்தையும், தனி மனிதர்களையும் காப்பாற்றப் பூமியும் சித்ராவும் மட்டுமில்லாமல் நாமும் கூடச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. கதையில் அவர்கள் போராடுகிறார்கள். வாழ்வில் நாம் போராடுகிறோம். வித்தியாசம் அதுவே. சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறிவிட்டது. இனி அவற்றைத் துணிந்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். மனத்தாலும் முடியாத போது - உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே 'பூமி' இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை - மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழ முடியாது. தீரர்களே வாழமுடியும்.
நா. பார்த்தசாரதி
தீபம் சென்னை. 27-8-1983 சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|