![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 45
பொன்னிறமான அந்தி நேரத்து மேகங்கள் வானில் மிகவும் அழகாயிருக்கலாம். ஆனால் மண்ணில் இறங்கி மழையாகப் பெய்து மக்களுக்குப் பயன் தரும் ஆற்றல் என்னவோ மின்னி இடித்துப் பொழியும் கார்மேகங்களுக்கே இருக்கிறது. அந்தத் தீவில் அன்று அதிகாலையில் ஆச்சரியங்களே காத்திருந்தன! ஏறக்குறைய அரைக்கிணறு ஆழத்துக்குத் தோண்டியும் பயனில்லை. போலீஸாருக்கு முன் பூமிக்கு அவமானமாகப் போயிற்று. அவன் முந்திய இரவு தன் கண்ணால் கண்டதை விளக்கி ஹோட்டல் அடையாள எழுத்துக்களுடன் கூடிய இரத்தக்கறை படிந்த சட்டையைக் கூடப் போலீஸ் அதிகாரிகளிடம் காண்பித்தான். அங்கேயே பையனின் பிரேதத்தை இடம் மாற்றிப் புதைத்திருக்கலாம் என்றும் வேறு சில இடங்களையும் அகழ்ந்து பார்க்க வேண்டுமென்றும் சொல்லி மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர்கள் அவன் கூறியதை நம்பவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினர். அங்கே முதற் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் ஏற்பட்ட அவநம்பிக்கையே தொடர்ந்தது. முதல் நாளிரவு பூமியும் நண்பர்களும் போய்விட்டுத் திரும்பியபின் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் உஷாராகிவிட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது. காளத்திநாதனைப் பற்றியே இப்போது பூமிக்குச் சந்தேகமாயிருந்தது. கடத்தல்காரர்களையும் சமூக விரோதிகளான மன்னாரு கும்பலையும், ஒழிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாயிருந்த காளத்திநாதனையே இப்போது ஏன் அங்கே காணவில்லை என்பது புரியாத புதிராயிருந்தது. மர்மான முறையில் அவர் தலைமறைவாகியிருந்தார். அன்று காலை பூமியும், போலீஸ் குழுவினரும் எத்தனை வேகமாக அந்தத் தீவில் இறங்கிச் சோதனை செய்தார்களோ அத்தனை வேகமாக விசைப்படகில் கரைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பூமிக்கு எல்லாமே ஒரு ஏமாற்று நாடகம் போலிருந்தது. "மிஸ்டர் பூமிநாதன்! இனிமேலாவது இப்படிப் பொறுப்பற்ற முறையில் வந்து நம்பத்தகாத பெரிய புகார்களைச் செய்யாதீர்கள்! வீண் அலைச்சலும் காலவிரயமும் தான் கண்ட பலன்" என்று போலீஸ் மேலதிகாரி அவனை எச்சரித்து விட்டுப் போனார். பூமி லஸ் முனையில் போலீஸ் லாரியிலிருந்து இறங்கியதும் நேரே சித்ராவின் வீட்டுக்குச் சென்றான். அப்போது காலை பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு முழுவதும் உறங்க முடியாமற் போனதும், சோர்வும், கடைசியாகக் காலையில் அடைந்த பெரிய ஏமாற்றமும் அவனைத் தளரச் செய்திருந்தன. உடல் தான் தளர்ந்திருந்தது. உண்மையைக் கண்டு பிடிக்கவும், நீதி நியாயங்களை நிலை நாட்டவும் தொடர்ந்து இப்படி இன்னும் பல இரவுகள் விழிக்க வேண்டி நேர்ந்தாலும் கவலைப்படக் கூடாது என்று மனம் என்னவோ உறுதியாகத்தான் எண்ணியது. அவன் போனபோது வீட்டுச் சொந்தக்காரருக்கும் சித்ராவுக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரே கூப்பாடு மயம். அவர் இரைய அவள் பதிலுக்கு இரைய நடுவே சித்ராவுடன் தங்கியிருந்த அந்தப் பையனின் தாயும் இரைய அங்கு ஒரே கூச்சலாயிருந்தது. பூமியைப் பார்த்ததும் ஒரு விநாடி பேசுவதை நிறுத்தி மௌனமடைந்த அவர், மறு விநாடி அவனிடமே, "இந்தாப்பா! இது கௌரவமானவங்க குடியிருக்கிற இடம்! கண்ட நேரத்துக்குக் கண்டவங்களோடு வந்து தங்கறது போறதுன்னு இருந்தா இந்த இடம் உங்களுக்கு லாய்க்குப்படாது" என்று கத்தினார். பூமி அவர் பக்கம் திரும்பிப் பதில் சொல்லவே இல்லை. அன்று அதிகாலையில் சித்ராவும் தானுமாக அங்கே வந்தபோது கதவைத் திறந்து விட்ட அவர் ஒரு தினுசாகத் தங்களை முறைத்து ஏளனமாகப் பார்த்ததை நினைவு கூர்ந்தான். கௌரவத்துக்கு மொத்தக் குத்தகை எடுத்திருப்பவர் போல் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அப்போது அவரைப் பொருட்படுத்திப் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. காட்டுமிராண்டித்தனமாகக் கூச்சலிடுபவனுக்கு முன்னால் நாகரிகமானவன் பதில் பேசாமலிருப்பதன் மூலமே தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியும் என்பது பூமியின் கருத்தாயிருந்தது. "போன காரியம் என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தாள் சித்ரா. "அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்! நீயும் இந்தக் கிழவியுமாகச் சேர்ந்து சாமான்களை ஒழித்துக் கட்டி வையுங்கள். நான் போய் ஒரு கை வண்டி பார்த்துக் கொண்டு வருகிறேன். இந்த இடம் இனி நமக்கு வேண்டாம். காலி செய்து கொண்டு எல்லாரும் என் வீட்டுக்கே போய் விடலாம்." இதைக் கேட்டு அவள் மறுத்துப் பேசாமல் சாமான்களை ஒழிக்கத் தொடங்கினாள். பூமி கைவண்டி கொண்டு வருவதற்காகத் தண்ணீர்த்துறை மார்க்கெட் பக்கம் போனான். ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் சித்ரா உடனே தான் சொல்லியபடி கேட்டது அவனை மனம் பூரிக்கச் செய்திருந்தது. அத்தனை சோதனைக்கு நடுவிலும், தான் சொல்லியபடி கேட்க ஒருத்தி இருக்கிறாள் என்பது மனத்துக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. தீவில் அடைந்த ஏமாற்றத்தை அவனே சித்ராவுக்கு விவரித்துச் சொன்னான். அன்று பிற்பகல் இரண்டு மணிக்குள் சித்ராவும், பூமியும், அந்தக் கிழவியும் வீட்டை ஒழித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். பூமி அந்தக் கெட்ட எண்ணம் கொண்ட வீட்டுக்காரரிடம் கணக்குப் பார்த்து அட்வான்ஸில் தங்களுக்கு வரவேண்டிய மீதத்தை வாங்கினான். அன்று பகல் உணவை அவர்கள் பூமியின் வீட்டில்தான் சமைத்துச் சாப்பிட்டார்கள். பகல் மூன்று மணி ஆகிவிட்டது. இதற்கிடையே சித்ராவைத் தனியே அழைத்து மகன் இறந்தது பற்றி அந்தத் தாயிடம் இன்னும் சிறிது நாள் சொல்ல வேண்டாமென்று எச்சரித்து வைத்தான் பூமி. சித்ரா வேறு விதமாக அபிப்பிராயப்பட்டாள். "சொல்லாமல் அவளைச் சித்திரவதை செய்வதை விடச் சொல்லி விடுவதே மேல்." "வேண்டாம் சித்ரா! அவசரமில்லை. இவளுக்கு முன்பே பல காலமாக இந்தப் பெரிய நகரில் நீதி, நியாயம், நேர்மை, ஒழுங்கு, சத்தியம் ஆகிய பல அநாதைத் தாய்மார்கள் தங்கள் வாரிசுகளைக் காணாமல், இழந்து தேடித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும்." அவனுடைய இந்தப் பதிலிலிருந்த நயம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. பூமியே அந்தத் தாயிடம் சென்று, "நான் தாயை இழந்தவன். நீங்கள் மகனை இழந்தவர். இனி எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன். உங்கள் மகன் திரும்ப வந்தாலும் நீங்கள் தொடர்ந்து எனக்கும் தாயாக இருப்பீர்கள்" என்றான். "மகராசனா இரு தம்பி!" என்று அவனை ஆசீர்வதித்தாள் அந்தத் தாய். அவள் குரல் ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் அதில் ஆசி இருந்தது. அவளிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு வெளியே கடற்கரைக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். கடற்கரைக்குப் போகிற வழியில் சித்ரா தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை அவனுக்குத் தெரிவித்தாள். முத்தக்காள் மெஸ்ஸில் வரவு செலவைக் கவனித்துக் கொள்வதற்கு அவள் ஊரிலிருந்து வரவழைத்த பையன் நிறையப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டானாம். இதைச் சொல்லிவிட்டு சித்ரா அப்போது அவனைக் கேட்டாள்: "எவ்வளவு வற்புறுத்தினாலும் அந்த முத்தக்காளுக்கு மட்டும் மறுபடி உதவி செய்யப் போகக் கூடாது..." "சித்ரா! அந்த மனப்பான்மை சரியில்லை. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அதோ வானத்தின் மேற்கு மூலையில் பார்! பொன் நிறத்திலும், செந்நிறத்திலுமாகப் பல மேகக் குவியல்கள், திரள் திரளாக வேறு வேறு நிறம் காட்டி அழகு செய்கின்ற அந்தக் காட்சியை இரசிக்கலாம் ஆனால் அது தாற்காலிகமானது. எந்த வகையிலும், பூமியில் இறங்கி மழையாகப் பெய்ய முடியாதது! மின்னி இடித்துக் கறுத்து இறுதியில் பூமியில் மழையாக இறங்கி மக்களை மகிழ்விக்கும் மழைமேகமாக நான் வாழ விரும்புகிறேன். முத்தக்காள் மறுபடி என்னிடம் உதவி கேட்டு வந்தால் நான் மறுக்க மாட்டேன். அவள் என் உதவியை விரும்பவில்லை என்றால் தலையிடவும் மாட்டேன்." "உங்களிடம் உள்ள பெரிய தொல்லை இது தான். உங்களால் ஒரு போதும் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது." "உலகில் முக்கால்வாசி மனிதர்கள் பிறர் பார்த்து இரசிக்கவும், வியக்கவும், மருளவும் மட்டுமே ஏற்ற சாயங்கால மேகங்களைப் போலத்தான் வாழ்கிறார்கள்! அவர்கள் பிறர் பயன் பெறப் பெய்யும் மழைக் காலத்துக் கார்மேகங்களாக வாழ விரும்புவதில்லை. நான் கார்மேகமாக இருக்கவே விரும்புகிறேன் சித்ரா! நீயும் அப்படி இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்." சித்ரா அவன் விருப்பத்தை மறுத்துச் சொல்லவில்லை. கடற்கரையிலிருந்து திரும்பு முன் பூமி தன் எதிர்காலத் திட்டங்களை அவளிடம் விவரித்தான். இன்னொருவனிடம் லீஸுக்கு விட்டிருந்த தன் ஆட்டோவை இனிமேல் தானே எடுத்து ஓட்டப் போவதாகவும், இரவு நேரங்களில் மாணவர்களுக்குக் கராத்தே கற்றுக் கொடுக்கும் பணியைத் தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவளிடம் விவரித்துக் கூறினான். அவளை ஒரு கேள்வியும் கேட்டான்: "அபாயங்களும் போராட்டங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த என் வாழ்வில் நீ தொடர்ந்து துணையாக வரச் சம்மதிக்கிறாயோ, இல்லையோ, ஆனால் அதற்காக உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்." "ஏற்கெனவே உங்களோடு வந்து விட்டவளைப் புதிதாக வருகிறாயா என்று கேட்பது என்பது என்ன நியாயம்?" "மகிழ்ச்சி! நன்றி" என்று பூமி புன்முறுவலோடு அவளுக்கு மறுமொழி கூறினான். மேலும் சொன்னான்: "சுரண்டல் பேர்வழிகளும், ரௌடிகளும், அதிகார வெறியர்களும், பேராசைக்காரர்களும் இந்த நகரவாசிகளை ஒடுங்கியும், ஒதுங்கியும் வாழுகிற அளவு கோழைகளாக்கி விட்டார்கள்! இனி இவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கச் செய்ய வேண்டும்." "தங்கள் உரிமைகள் என்னென்னவென்றே இன்னும் இவர்களில் பலருக்குத் தெரியாது." "ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் புரியாத மாதிரி அடிமைகளுக்கு உரிமைகள் புரிவதில்லை சித்ரா..." "உரிமை உணர்வும், சுதந்திர எண்ணமும் சொல்லிக் கொடுத்து வரக் கூடியவை இல்லையே? என்ன செய்ய முடியும்?" "அவசியமும், அவசரமும் உண்டானால் அவை தாமே வர முடியும்." கடற்கரை நன்றாக இருட்டியிருந்தது. அலைகளின் ஒளி அந்த இருளுக்குச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தது. "புறப்படலாமா சித்ரா?" அவள் எழுந்தாள். அவன் கையும் அவள் கையும் சுபாவமாக இணைந்தன. அவர்கள் கை கோர்த்து நடந்தனர். முன்பு ஒரு முறை நிகழ்ந்தது போல் கைப்பற்றியதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கச் சொல்லிப் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவில்லை இப்போது. மணற்பரப்புக்கு அப்பால் மேற்கே நகரம் ஒளிமயமாக இயங்கிக் கொண்டிருந்தது. பூமியும் சித்ராவும் இருளிலிருந்து ஒளியை நோக்கிக் கை கோர்த்தபடி இணைந்து நடந்தார்கள். அப்போது கடற்கரை எவ்வளவிற்கு இருண்டிருந்ததோ அவ்வளவிற்கு அவர்கள் இருவர் மனமும் பிரகாசமாயிருந்தது, தெளிவாயிருந்தது. இருளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒளியை நோக்கி, முன்னேறினார்கள் அவர்கள். சென்ற வழியின் இருட்டுக்களை கடந்து இனிமேல் செல்ல வேண்டிய வழியின் வெளிச்சத்தை எதிர்நோக்கி விரைவது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. பூமி அப்போது அவளைக் கேட்டான்: "வீடு வரை நடக்கலாமா? அல்லது ஏதாவது டாக்ஸி, ஆட்டோ... பார்க்கணுமா?" "நீங்கள் கூட வரும்போது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் துணிந்து நடக்கலாம்..." இந்த அர்த்த நிறைவுள்ள வாக்கியத்தை ஒரு புன்முறுவலால் வரவேற்றான் பூமி. அவனது புன்னகை அவளது பதில் புன்னகையைச் சந்தித்தது. (முற்றும்) சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|