![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
1 சுலபாவுக்குக் காரணமே புரியாமல், சலிப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது. எல்லாப் புகழுரைகளும் வர்ணனைகளுமே பொய்யாகவும், புளுகுகளாகவும் தோன்றின. தன்னுடைய காரியதரிசி கொண்டு வந்து கொட்டிய கடிதக் குவியல்களில் ஒன்றிரண்டை எடுத்துப் படித்ததுமே திகட்டியது. அலுப்பூட்டியது. குமட்டிக் கொண்டு வந்தது. ‘அழகுப் பெட்டகமே! ஆரணங்கே! பழகுதமிழே! பைங்கிளியே... உன்னை மணந்து கொள்ளத் துடிக்கிறேன்’ - என்று புலம்பியது முதற் கடிதம். ‘வாழ்ந்தால் வசந்தம், படத்தில் கதாநாயகியாக வந்து கல்லூரி வகுப்பறையில் நீங்கள் நடித்திருக்கும் காட்சி ‘சுபர்ப்’. அந்தக் கல்லூரியில் நான் ஒரு மாணவனாக இல்லையே என்று ஏங்குகிறேன்.’ - என்று எழுதியிருந்தான் அடுத்த இரசிகன். ஏங்கவும், உருகவும், செய்யாத இயல்பான கடிதங்கள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாக் கடிதங்களும் ஏங்கின அல்லது அவளுக்காக உருகின. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் இப்படி நாலைந்து கடிதங்கள் தபாலில் கிடைத்தால் கூடப் போதை - புகழ் மயக்கம் - தலை சுற்றியது. இன்னும் எழுத மாட்டார்களா என்று எதிர்பார்க்கத் தோன்றியது அன்று. இன்றோ மரத்துப் போய்விட்டது. படிக்கப் படிக்க வெறுப்பூட்டியது. முதலில் பீடித்தவனையே தொடர்ந்து பீடிப்பதாலோ என்னவோ புகழும் ஒரு தொற்று நோயாகவே இருப்பது புரிந்தது. ‘எபிடமிக்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பீடிக்கும் கொள்ளை நோய் வகைகளில் முதன்மையானது ‘புகழ்’ என்று அவள் எண்ணினாள். ஒருத்தரைப் பிடித்துப் போய் புகழ ஆரம்பித்தால் கும்பல் கும்பலாகச் சேர்ந்து கொண்டு வந்து புகழ்ந்து தீர்க்கிறார்கள். உதாசீனம் செய்யத் தொடங்கினாலும் அப்படித்தான். வெகுஜனங்களின் உடல் நிலையைப் பாதிக்காமலே அவர்களையும், அவர்களால் புகழப் படுகிறவர்களையும் அவ்வப்போது, பாதிக்கும் நோய்களில் புகழும் பழியும் முக்கியமானவையாயிருந்தன. ஓர் ஆடு போகிற திசையில் கண்களை மூடிக் கொண்டு பின்னால் போகும் ஆட்டு மந்தையைப் போல முதல் நபர் புகழ ஆரம்பித்த ஆளை மூச்சு முட்டும்படி புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த ஆள் கிடைத்தவுடன் முந்திய ஆளை விட்டுவிடுகிறார்கள். புதிய ஆளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்புறம் அந்தப் புதிய ஆள் மாட்டிக் கொள்கிறான். அதிகப் பணமும், வசதிகளும், மரியாதையும் வருகிறவரை ஒவ்வொரு படியாகக் கால் ஊன்றி நடந்து நிதானமாக மேலே ஏற வேண்டியிருக்கிறது. பணம், வசதி, மரியாதை எல்லாம் வந்த பின், விநாடியில் ஐந்து மாடிகளுக்குத் தூக்கிக் கொண்டு போக முடிந்த அசுர வேகமுள்ள லிஃப்ட் கிடைத்து விடுகிறது. லிஃப்ட்டில் ஏறிய பின் மேலே போகச் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏறி நிற்க இடம் கிடைத்தால் போக விரும்பிய உயரத்திற்குப் போய்க் கொண்டே இருக்கிறது, லிஃப்ட். நாமாக நிறுத்த முயன்றாலொழிய அது தானாக நிற்பதில்லை; நிறுத்தப்படுவதுமில்லை. வாழ்வில் கடந்த ஒரு டஜன் வருஷங்களாகப் ‘பிரேக்டவுன்’ ஆகாத ஒரு லிஃப்ட்டில் ‘சுலபா’ இருக்கிறாள். அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க் கொண்டே இருக்கிறது. நிற்கவில்லை. மேலே போவது சலிப்பூட்டி வெறுப்பூட்டி எங்காவது அந்தரத்தில் ‘நின்று தொலைத்தால் கூடத் தேவலையே’ என்று அவளே நினைக்கிற அளவுக்குப் போரடிக்கிற வேகத்தில் அது மேலே மேலே போய்க் கொண்டிருந்தது. நின்றாலும் பிடிப்பதில்லை, நிற்காமலே போய்க் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை; வாழ்க்கையே வேடிக்கைதான். ஓடினால் நிற்க ஆசையாயிருக்கிறது. நின்றால் ஓட ஆசையாயிருக்கிறது. ஓடிக் கொண்டே நிற்க முடிவதில்லை. நின்று கொண்டே ஓட முடிவதில்லை. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடிகிறது. இரண்டும் செய்ய இயல்வதில்லை; தலைதெறிக்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற போது திடுதிப்பென்று நிற்க முயல்வது கூட ஆபத்தானது. வேகத்துக்கு ரோஷம் அதிகம். தன்னிலிருந்து விலகி ஐந்தாம் படையாகிறவனைத் தடுமாறிக் கீழே வீழ்த்திவிட்டுத்தான் அது மேலே நகரும்? வேகத்திலிருந்து விலகி நின்று விட முயலும் போதெல்லாம் குமாரி சுலபா தடுமாறியிருக்கிறாள். தாகத்தால் தவித்து வந்தவருக்கு முதல் நாலைந்து மடக்குத் தண்ணீரைப் பருகுவது போல் தொடக்கத்தில் சில ஆண்டுகள் இந்தப் பணம், வசதிகள், புகழ் எல்லாமே பிடித்திருந்தன அவளுக்கு. “தென்றலே! தேனே! என் கனவுகளில் எல்லாம் நீயே வருகிறாய்! உன்னைக் கனவுகளில் காணும் போதெல்லாம் அப்படியே வாரியணைத்துக் கண்ணாடிக் கன்னத்தில் ஓர் ‘இச்’ பதித்து...” என்று விடலைத் தனமாக எழுதும் நமைச்சல் எடுத்த ஓர் இளம் இரசிகனின் ‘ஏ’ ரகக் கடிதங்கள் கூட அவளுள் கிளுகிளுப்பை ஊட்டிக் கிளரச் செய்த காலங்கள் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் லிஃப்ட்டில், காரில், விமானத்தில் படுவேகமாகப் போகிற ஓர் உல்லாச உணர்வை அவள் அடைந்திருக்கிறாள். மேலே போகிற வேகம் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தன் அழகைப் புகழ்ந்து இப்படி எழுதியிருக்கிற அமெச்சூர் இரசிகர்களுக்குக் கையெழுத்துடன் தன் புகைப்படம் கூட அனுப்பியிருக்கிறாள். அது ஒரு காலம். இப்போது அப்படிப் படங்கள் அனுப்புவதற்கு அவசியமே இல்லை. எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் அவள் படங்கள் இருந்தன. அவள் படம் பிரசுரமாகாத இதழ் அபூர்வம் தான். தற்காலத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமில்லை, மலையாள, தெலுங்கு, கன்னடப் பத்திரிகைகளிலும் இந்திப் பத்திரிகைகளிலும் கூட அவள் படங்கள் வெளி வந்தன. தெலுங்கு அவள் தாய்மொழி. தமிழ்நாடு அவள் பிழைக்க வந்து முன்னேறிய இடம். மலையாளத்திலும், கன்னடத்திலும் பேசி நடிக்கக் கற்றுக் கொண்டாள். இந்தியில் அவள் வாயசைத்தாள். அவளுக்காக வேறு யாரோ பேசினார்கள். அவளோடு ஹீரோவாக நடித்திருந்த சில நடிகர்கள் மார்க்கெட் இழந்து உட்கார்ந்து விட்டார்கள். அவளோ நித்ய கன்னியாக நிலைத்து நின்றாள். அவளுடைய ‘ரேட்’ உயர்ந்து கொண்டே போயிற்று. தன்னோடு ஹீரோவாக நடித்தவர்களின் மகன்களோடும், சிலரைப் பொறுத்தவரை பேரன்களோடும் கூட அவள் கதாநாயகியாக நடித்திருந்தாள். ஓடியாடிக் காதல் செய்திருந்தாள். படங்களில் எத்தனையோ பல நடிகர்களோடு அவள் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அவளைப் பற்றியும் அந்தக் கதாநாயக நடிகர்களைப் பற்றியும் இணைத்துக் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கிசுகிசுக்களாகவே பிசுபிசுத்துப் போயினவே ஒழியச் செய்தியாகவோ, உண்மையாகவோ ஆனதே இல்லை. ‘அவர் இவளைக் காதலிக்கிறார் - விரைவில் திருமணத்தில் முடியலாம். இவள் அவரைக் காதலிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் -’ என்றெல்லாம் கிசுகிசுக்கள் பிரசுரமாகி அவளுடைய கவர்ச்சியையும் மார்க்கெட்டையும் அதிகமாக்கின. வம்புகள் கூட விளம்பரம் ஆயின. ஓர் உண்மை அவளுக்கு நன்றாகத் தெரியும். ஓர் இளம் நடிகைக்கு இலட்சக்கணக்கான இரசிகர்களும் பிரபலமும், கவர்ச்சியும் எல்லாம் திருமணமாகி ஓர் ஆண் பிள்ளையின் தாலிக் கயிற்றால் தொழுவத்தில் கட்டப்படும் வரைதான். ஒருத்தனது தாலிக் கயிற்றால் கட்டப்பட்ட பின் அவள் பலருடைய கனவுலகக் கன்னியாக இருக்க முடியாது. தாலி அவள் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்படுகின்ற மாட்டைப் போல வீட்டுத் தொழுவத்திலே கட்டிப் போட்டு விடவே பயன்படுகிறது. இவை எல்லாம் அவளது கருத்துக்களாக இருந்தன. ஆனால் நாளாக ஆக இக் கருத்துக்களில் சில முற்றிக் காம்பின் பிடி தளர்ந்து உதிர்ந்து விட்டன. சுற்றியுள்ள மனிதர்களின் பொய்கள், புனைவுகள், நடிப்புக்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சுலபாவுக்குள்ளும் சில மாற்றங்கள் உண்டாயின. சிலவற்றில் பிடிவாதங்கள் தானே தளர்ந்தன. வேறு சிலவற்றில் பிடிப்புக்கள் ஏற்பட்டன. தொங்குகிறவன் ஒரு பிடியை விடுவதற்கு முன் வேறொன்றைப் பற்றிக் கொள்ளாமல் முந்திய பிடியை விட முடியாது. அப்படி விட்டால் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகி விடும். சுலபாவுக்கும் பழைய பிடிகளை விட நினைக்கும் போதே புதிய பிடிப்புக்களை யோசித்துத் தேட வேண்டியதாயிருந்தது. அப்படிப் புதியதைத் தேடாமல் பழையதை விட முடியவில்லை. கோடீசுவரர்களாகிய சில தயாரிப்பாளர்கள் அவளை மணந்து கொள்ள ஆசை தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே மணமாகி இருந்தும் கூட முதல் மனைவியை விரோதித்துக் கொண்டு கூட இவளோடு இணையத் துடித்தனர். இவளது சொத்து - எதிர் கால வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தங்கப் பறவையை அதன் பெறுமானத்தையும், விலைமதிப்பையும் கணித்து விட்டு அவர்கள் சிறைப்பிடிக்க ஆசைப்படுவது அவளுக்குப் புரிந்தது. வேறு சில நடிகர்கள், வருகிற பத்து ஆண்டுகளுக்குத் தங்களோடு நடிக்க வகையாக ஒரு கதாநாயகி அகப்பட்டாள் என்கிற நைப்பாசையில் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதன் மூலம் அல்லது கட்டாமலே அவளை மனைவியாக்கிக் கொள்ள முயன்று அவளிடம் தோற்றது தான் கண்டபலன். எல்லாருடைய நைப்பாசையும் தந்திரமும் அவளுக்குப் புரிந்தன. சுற்றிலும் ஒரே பொய்யும் புனை சுருட்டுமாக இருந்ததே ஒழிய நிஜம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தென்படவே இல்லை. வீடு வாசல்கள், தியேட்டர், என்றும் ரொக்கம் என்றும் அவளிடம் பயங்கரமான சொத்துச் சேர்ந்திருந்தது. தன்னை நெருங்குகிறவர்கள் அழகுக்காக நெருங்குகிறார்களா, சொத்துக்காக நெருங்குகிறார்களா என்ற பயம் சுலபாவுக்கு இருந்தது. சந்தேகங்களும் ஏற்பட்டன. எச்சரிக்கையும் ஏற்பட்டது. அது பயமா, தற்காப்பா, என்று அவளுக்கே சமயா சமயங்களில் குழப்பமாக இருந்தது. புகழுரைகளாக வரும் கடிதங்களிலிருந்து நேரில் பேசுகிறவர்கள் வரை யாரையும், எதையும் நம்பி விட முடியாமல் இருந்தது. எதுவரை நிஜம், எதற்கு மேல் பொய் என்று தெரிவது சிரமமாயிருந்தது. எதிர்ப்படும் ஒவ்வொரு புகழ்ச்சியிலும் ஓர் உள்நோக்கம் இருந்தது. அவளுக்கு அநுபவமும், பொறுப்பும் ஏறஏறப் புகழுரைகளை வேர்வையையும் அழுக்கையும் துடைத்தெறிவது போல் மேலாகத் துடைத்தெறியக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அது தவிர்க்க முடியாததாகிப் போயிருந்தது. இளமை அநுபவங்கள் அவளுக்கு அதைக் கற்றுக் கொடுத்திருந்தன. புகழ்ந்து புகழ்ந்தே அவளைச் சீரழித்திருந்தார்கள் பலர். இன்று அது அவளுக்குப் புரிந்தது. சிறு வயதில் அரும்பாக இருந்த போதே அவளைச் சினிமாவில் சேர்த்து விடுவதாகச் சென்னைக்கு அழைத்து வந்து அவளிடம் சொல்லாமலும், அவள் சம்மதத்தைப் பெறாமலும் அவளுக்குத் தெரியாமலுமே அவளை ஒரு விபசார விடுதியில் இருநூற்றைம்பது ரூபாய்க்கு விற்று விட்டுப் போனான் அவள் நம்பிய முதல் மனிதன். குண்டூரிலிருந்து அவள் பட்டினம் கிளம்பிய போது அவள் பெயர் சுப்பம்மா. அவளை ஆசை காட்டி அழைத்து வந்து சந்தையில் மாடு விற்பது போல் விற்று விட்டுப் போன குப்பைய ரெட்டியை அதன் பின் அவள் சந்திக்கவே முடியவில்லை. |